Published:Updated:

என் சமையலறையில்... அந்த முக்கியமான விஷயம்தான் லவ்!

அனுஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
அனுஹாசன்

சமையல் சந்தோஷத்தைத் தரக்கூடிய ஒரு விஷயம்

என் சமையலறையில்... அந்த முக்கியமான விஷயம்தான் லவ்!

சமையல் சந்தோஷத்தைத் தரக்கூடிய ஒரு விஷயம்

Published:Updated:
அனுஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
அனுஹாசன்

விதவிதமான உணவுகள், வித்தியாசமான செய்முறைகள் என்று குக்கரி நிகழ்ச்சிகளில் அதிரடி காட்டிவரும் அனுஹாசன், இப்போது ஜே.எஃப்.டபிள்யூ பத்திரிகையின் ‘கெட் செட் குக்’ குக்கரி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். ‘அவள் கிச்ச’னுக்காக அவரின் சமையல் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்...

நீங்கள் முதன்முதலில் சமைத்த தருணம்?

அப்போ எனக்கு ஒன்பது வயசிருக்கும்.எங்க வீட்டுக் கொல்லையிலதான் மொதல்ல சமைச்சேன். அம்மாகிட்ட அடம்பிடிச்சி வீட்டுக்குப் பின்னாடி எனக்காகவே ஒரு செங்கல் அடுப்பு கட்டினேன். அப்போவெல்லாம் ‘ருக்மிணி குக்கர்’ ரொம்ப ஃபேமஸ். வெண்கலத்துல பெரிய பானை மாதிரி இருக்கும். கல் அடுப்பு, ருக்மிணி குக்கர்... இதையெல்லாம் வெச்சு நான் செஞ்ச வெஜிடபிள் புலாவ்தான் என் சமையலுக்கான பிள்ளையார் சுழி. என் அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. எப்பவும் ஏதாவது ஒரு புது ரெசிப்பி செய்துட்டே இருப்பாங்க. அவங்களோட கைப்பக்குவம் கொஞ்சம் கொஞ்சமா எனக்கும் வந்திருக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அனுஹாசன்
அனுஹாசன்

யாரோட சமையல் ரொம்பப் பிடிக்கும்?

சாப்பாட்டுல உப்பு, காரம் இதை யெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான விஷயத்தைச் சேர்த்தாதான் அதோட ருசி அதிகரிக்கும். சப் நமக்காக ஆசையா யாரு சமைச்சாலும் அந்த டேஸ்ட் வேற மாதிரி இருக்கும். அதனால எனக்காக அன்பா யாரு சமைச்சுக்கொடுத்தாலும் விரும்பிச் சாப்பிடுவேன். எங்க குடும்பத்துல அம்மா, பெரியம்மா ரெண்டு பேரோட சமையலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

வீட்டுச் சமையலில் பிடித்த உணவுகள்?

பெரியம்மா ஒரு தக்காளித் தொக்கு பண்ணுவாங்க... அவ்ளோ ருசியா இருக்கும். நான் ஸ்கூல் படிக்கும்போது எனக்கு லஞ்ச் எப்போதும் தயிர்சாதமாதான் இருக்கும். அதனாலேயே எனக்கு அது பிடிக்காது. ஆனா, எங்க பெரியம்மா பண்ற தக்காளித் தொக்கு இருந்தா பிடிக்காத தயிர்சாதம்கூட உள்ளே இறங்கிடும். அவ்ளோ ருசியா இருக்கும். அடுத்தது எங்க அம்மா செய்யுற கத்திரிக்கா கறி. நிறைய பேருக்கு கத்திரிக்காய்னாலே பிடிக்காது. எங்க அம்மா கத்திரிக்கா கறி பண்ணும்போது கொஞ்சம் அதிகமா கொழம்புப்பொடி, மல்லிப்பொடி போட்டு, தாளிச்சிக்கொட்டின கடலைப்பருப்போட சேர்த்து ருசியா செய்வாங்க. எவ்ளோ வச்சாலும் சாப்பிட்டுட்டே இருப்பேன்!

அனுஹாசன்
அனுஹாசன்

ரசித்துச் சாப்பிடும் வெளி உணவுகள்?

சமீபத்துல என்னை ரொம்பவே கவர்ந்தது பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ். இது பெரிய ஹோட்டல் இல்ல... ரொம்ப சிம்பிளாத்தான் இருக்கும். ஆனா, அந்த மெஸ் நடத்துறவங்களோட குடும்பத்தினரே அங்கே சமைக்கிற காரணத்தால வீட்டுல சாப்பிடுற மாதிரியே அவ்ளோ ருசியா இருக்கும். அடுத்தது ஆவின் பால்கோவா. ஒவ்வொரு முறையும் அதே மாதிரி ருசியை பால்கோவால எப்படிக் கொண்டு வர்றாங் கன்னு தெரியல. அப்புறம், ஹைதராபாத் ஸ்வீட்ஸும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

நீங்கள் சமைக்கும் உணவுகள் எந்த ஸ்டைலில் இருக்கும்?

நான் பொதுவாவே தமிழ்நாட்டு உணவுகளைவிட வெஸ்டர்ன் உணவுகளைத்தான் நிறைய சமைப்பேன். மெக்ஸிகன், யுரோப்பியன், சைனீஸ் உணவுகள் சமைக்க சுவாரஸ்யமா இருக்கும். எப்போதும் ஏதாவது புதுசா ட்ரை பண்ணிட்டே இருப்பேன். என்ன தோணுதோ அதைச் சமைப்பேன். சில நாள்களுக்கு முன் ஏதாவது சமைக்கணும்போல இருந்தது. வீட்டுல இருந்த பனீர், காலிஃபிளவர், தக்காளி, வெங்காயத்தை மட்டும் வெச்சி புதுசா ஒரு டிஷ் செஞ்சேன். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாத்தையும் எண்ணெயில வதக்கிட்டு, அதுகூட பனீர், காலிஃபிளவர் சேர்த்துக் கிளறி கொஞ்சம் மல்லிப்பொடி, மிளகு, உப்பு போட்டு வேகவெச்சு, கடைசியா ஒரு எலுமிச்சைப்பழத்தைப் பிழிஞ்சுவிட்டு இறக்கினேன். ரொம்ப டேஸ்ட்டா இருந்தது. இதுல என்ன பிரச்னைன்னா, இது மாதிரி நான் அப்பப்போ கண்டுபிடிக்கிற ரெசிப்பியைத் திரும்ப பண்ணச் சொன்னா தெரியாது. திடீர்னு தோன்றதைப் பண்றதால அப்படியே மறந்துடுவேன். பொதுவா டேஸ்ட்டியா சமைப்பேன். ஆனா, ஒரு ரெசிப்பியைக் கொடுத்து ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணணும்னு சொன்னா அது என்னால முடியாது.

ஏதாவது டயட் ஃபாலோ செய்கிறீர்களா?

சின்ன வயசுலேருந்தே எனக்கு கார்போ ஹைட்ரேட்ல விரும்பம் இருந்ததில்ல. சாதம் சாப்பிடமாட்டேன்னு சொன் னேன்னா எங்கம்மா ஒரு கப்ல பருப்பு, ஒரு கப்ல காய்கறி, ஒரு கப்ல தயிரைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்லிடுவாங்க. நானும் சாப்பிட்டுடுவேன். அதுவே பழகிட்டதால இப்பவும் கார்போஹைட்ரேட் நிறைய எடுத்துக்கிறது இல்ல. காய்கறி, கீரை நிறைய சாப்பிடுவேன். பிரியாணி கொடுத்தா எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடுவேன். மத்தபடி அதிக நார்ச்சத்து, புரதம் உள்ள உணவுகளை எடுத்துப்பேன். சமீபத்துல, சாப்பாட்டுல சர்க்கரையை நீக்கியிருக்கேன். எனக்கு தைராய்டு இருக்கிறதால, இந்த முன்னெச்சரிக்கை முடிவு.

உங்களைப் பொறுத்தவரையில் சமையல் என்றால் என்ன?

சிலர் சமையலை ஒரு கலையாகப் பார்க்கலாம். சிலருக்குச் சமையல் அறிவியலா இருக்கலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் சமையல் சந்தோஷத்தைத் தரக்கூடிய ஒரு விஷயம். எனக்குச் சாப்பிடுறதும் பிடிக்கும், சமைக்கிறதும் ரொம்பவே பிடிக்கும். அதனாலேயே தொடர்ந்து சமையல் செய்யறேன். தொடர்ந்து செய்வேன்