Published:Updated:

மொராக்கோவின் கூஸ்கூஸ்... இத்தாலியின் ரிசோட்டா... மனம் மயக்கும் மதிய உணவுகள்!

ஸ்பெயின் நாட்டில், லன்ச் நேரத்தின்போது தமது ஊழியர்கள் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காக, 2 மணி முதல் 4 மணி வரை பெரும்பாலான கடைகள் மூடப்படுகின்றன.

1

சாம்பார், ரசம், காரக்குழம்பு, அப்பளம், பொரியல், கூட்டு, மோர் என மதிய உணவென்றால், மணமணக்கும் பெருவிருந்து நமக்கு. ஒன்றிரண்டு ஐட்டம் குறைந்தாலும் பரவாயில்லை என மீல்ஸை ஃபுல் கட்டு கட்டுகிறவர்கள் நாம். ஆனால், அதெல்லாம் ஒரு வசந்த காலம். இன்றைய பரபரப்பு வாழ்க்கையில், ஆற அமர சாப்பிட நேரமில்லாமல் போய்விட்டது. உலகத்தையே புரட்டிப் போடுவதாக நினைத்துக்கொண்டு, நாம்தான் உணவிற்கான முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டோம்.

ஆனால், உலகில் பல நாட்டினர் உணவு, ஓய்வு, தூக்கம் ஆகிய மூன்று விஷயங்களில் எவ்வளவு விலை கொடுத்தாலும் சமரசம் செய்துகொள்வதில்லை. அவரவர் உணவுப் பழக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப, மதிய உணவிற்கு அப்படியொரு மரியாதையைச் செய்கின்றனர். உண்பதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கி, விரும்பிய உணவுகளை ரசித்து உண்கின்றனர். லன்ச் டைம் மெனு என்பது சைவம், அசைவம் காய்கறி, பழங்கள் அனைத்தும் கலந்து, சத்தும் சுவையும் நிறைந்ததாக இருக்கிறது. அதைப் பற்றி தெரிந்துகொள்வதே சுவாரஸ்யம் அல்லவா...

2
Risotto

டேஸ்ட்டி ரிசோட்டோ- இத்தாலி!

ஐரோப்பிய நாடுகளில், மதிய உணவை தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உண்பதை வழக்கமாகக்கொண்டுள்ளனர். குறிப்பாக, இத்தாலியில் மதியம் 1 மணிக்கு தொடங்கும் லன்ச் டைம், மாலை 4 மணி வரை நீடிக்கிறது. போர்க்கில் தயாரிக்கப்படும் சலுமி எனும் ஸ்டார்ட்டரில் இவர்களின் லன்ச் தொடங்கி, இரண்டு கோர்ஸ்களில் நிறைவடைகிறது. பிரைமோ பியாட்டோ என்றழைக்கப்படும் முதல் கோர்ஸில் பாஸ்தா, ரிசோட்டோ மற்றும் சூப் சாப்பிடுகின்றனர்.

அதைத் தொடர்ந்து, செகண்ட் பியாட்டோ என்ற இரண்டாவது கோர்ஸில், கடல் உணவு அல்லது இறைச்சியை சாப்பிடுகின்றனர். அவற்றுடன் சாலட்டையும் சேர்த்துக் கொள்வதுண்டு. கேக், ஐஸ்கிரீம் போன்ற டெசர்ட் உணவுகள், பழங்களும் இத்தாலி லன்ச் மெனுவில் உள்ளன. இத்தாலியில் பாஸ்தா மற்றும் அரிசி உணவுகள் மிகவும் பிரபலமானவை. லஸாக்னா , ஸ்பகெட்டி, புசுல்லி, லிங்குவின் ஆகிய பாஸ்தா, நூடுல்ஸ் உணவுகள் சாஸ், காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. அரிசி, பட்டர், ஒயின், சீஸ் மற்றும் ஸ்டாக் கொண்டு சமைக்கப்படும் ரிசோட்டோ, இத்தாலியின் அற்புதமான உணவு வகை.

3
Paella

சுவையின் பேரின்பம் பேல்லா - ஸ்பெயின்!

ஸ்பெயின் மக்களுக்கு, பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை மதிய உணவு நேரம். இவர்களின் மதிய உணவு மெனு, சூப் அல்லது சாலட்டில் தொடங்குகிறது. அவற்றைத் தொடர்ந்து இறைச்சி அல்லது மீன் உணவை சாப்பிடுகின்றனர். டெசர்ட்டாக பழங்கள் அல்லது பேஸ்ட்ரி மெனுவில் இடம்பெற்றுள்ளன. இதற்குப் பின்னர், காபி அல்லது தங்களின் பாரம்பர்ய மதுவை அருந்துகின்றனர். ஸ்பெயின் உணவில் பிரட் மற்றும் ஒயின் முக்கிய இடம்பிடிக்கிறது. அசைவத்தில் இறைச்சி மற்றும் பறவைகளை விரும்பி உண்கின்றனர். கடல் பகுதிகளில் மீன் மற்றும் கடல் உணவுகளை அதிகம் சமைக்கின்றனர். இவை அல்லாமல் சீஸ், முட்டை, பீன்ஸ், ரைஸ், நட்ஸ் மற்றும் பிரெட் ஆகியவை இவர்கள் அதிகம் சாப்பிடும் உணவுகள்.

ஸ்பெயினில், பேல்லா எனும் லன்ச் உணவை விரும்பி உண்கின்றனர். இந்த உணவு, கடலில் கிடைக்கும் ஷ்ரிம்ப், நண்டு, லாப்ஸ்டர் ஆகியவை மூலம் தயாரிக்கப்படுகின்றன. அரிசி முக்கிய மூலப்பொருளாகவும், அதனுடன் காய்கறிகள், வெங்காயம், பூண்டு, ஒயின், சாப்ரான், சாசேஜ், சிக்கன் சேர்த்து பேல்லா தயாரிக்கப்படுகிறது. லன்ச் நேரத்தின்போது, தமது ஊழியர்கள் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காக, 2 மணி முதல் 4 மணி வரை பெரும்பாலான கடைகள் மூடப்படுகின்றன என்பது கூடுதல் தகவல்.

4
Couscous

நா ஊறவைக்கும் கூஸ்கூஸ் - மொராக்கோ!

அதிகாலையில் காலை உணவு. சிறிது நேரத்திற்குப் பின்னர் இரண்டாவது பிரேக் பாஸ்ட், நண்பகலில் மதிய உணவு, மாலை நேரத்தில் டீ மற்றும் பிரெட், இரவு டின்னர் என்று ஐந்து முறை உண்பது மொராக்கோ மக்களின் பழக்கம். பிரெட் இல்லாமல், கூஸ்கூஸ், பீப், மட்டன், லாம்ப், டிஜீன், சாலட் மற்றும் மின்ட் டீ ஆகியவை மதிய உணவில் இடம்பிடிக்கின்றன.

அதேபோல், கடல் உணவும் மொராக்கோ மக்களின் விருப்பமான மதிய உணவே. காய்கறிகளுடன் பீப், சிக்கன் போன்ற இறைச்சிகள் சேர்த்து குறைந்த வெப்பத்தில் மெதுவாக வேகவைக்கப்படும் உணவு, டிஜீன் என்று அழைக்கப்படுகிறது. ரவையில் தயாரிக்கப்படும் கூஸ்கூஸ் எனும் மதிய உணவு, மொராக்கோ உள்ளிட்ட வடக்கு ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலம்.

5
Bento box

ஜப்பான் ஸ்பெஷல் பென்டோ பாக்ஸ்!

ஜப்பானின் பாரம்பர்ய சமையலில் அரிசி உணவுகளும் சூப் வகைகளும், கடல் உணவுகளும் பிரதானம். சாஷிமி மற்றும் சுஷி வகை ஜப்பான் உணவு கலாசாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யாக்கிடோரி எனப்படும் கிரில்டு இறைச்சிகளும் மதிய உணவில் அதிகம் பரிமாறப்படுகின்றன.

ஜப்பானில் மதிய உணவு என்றாலே பென்டோ பாக்ஸ் நினைவுக்கு வரும். சாதம், கர்ரி வகை, நூல்டுஸ், போர்க் பன், சாஷிமி போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்து பரிமாறப்படுவது தான் பென்டோ பாக்ஸின் ஸ்பெஷல்.

பிரியாணி 10 ரூபாய்… பரோட்டா 1 ரூபாய்… பெரியகுளத்தை ஆச்சர்யப்படுத்திய ஹோட்டல்!

இறைச்சி, காய்கறி, காளான், முட்டை, டோபு ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் ஜாப்பனீஸ் ஹாட் பாட் ஜப்பானின் லன்ச் டைம் ஹிட். சோயா சாஸினால் தயாரிக்கப்பட்ட சூப்களில், சிக்கன் மற்றும் காய்கறிகளுடன் பரிமாறப்படும் தோரி சுகி நேப் அனைவராலும் விரும்பப்படுகிறது. இதில், சிக்கனுக்குப் பதிலாக போர்க் சேர்க்கப்பட்டால், புட்டா சுகி நேப். சீனர்களைப் போல ஜப்பானியர்களும் நூடுல்ஸ் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

6
ChickenPho Soup

வியட்நாமின் சுவைமிகு 'போ' சூப் !

வியட்நாமின் வடக்கு, மத்திய, தெற்கு என முன்று பகுதிகளிலும் விதவிதமான உணவு பாரம்பரியத்தை காணமுடியும். பகுட்டே அல்லது பான் மி  வியட்நாமில் வழக்கமான உண்ணப்படும் மதிய உணவு. ஸ்ப்ரிங் ரோல்ஸ், நூடுல்ஸ், சூப், சாதம், கிரில்டு செய்யப்பட்ட இறைச்சி போன்ற உணவு வகைகளை உள்ளடக்கியது பகுட்டே. உணவு தயாரிப்புகளில் பிஷ் சாஸ், ஷிரிம்ப் பேஸ்ட், சோயா சாஸ், அரசி, மூலிகைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. வியட்நாமின் சூப் வகையான ‘போ’ மதிய உணவுப் பட்டியலில் ரொம்பவே பிரபலம். பன் சா, போர்க்  பேட்டீஸூடன்  சேர்த்து தயாரிக்கப்படும் நூடுல் சாலட், கார்லிக் பீப், லெமன் ஷிரிம்ப்,  சிக்கனை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்படும் சாலட் வகைகள் அனைத்துமே வியட்நாமின் லஞ்ச் மெனுவில் புகழ்பெற்றவை.

வியட்நாமின் ரெஸ்டரன்ட்களில் உடல் ஆரோக்கியத்தினை பேணுவதற்காக உணவிற்கு முன்பு, ஒரு பிளேட்டில் மூலிகைகளைப் பரிமாறும் வழக்கம் உண்டு. பீப்,  நூடுல்ஸ், மூலிகைகள், ஸ்ப்ரவுட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் பான் போ சாவோ சாலட், வியட்நாம் கிரீன் பப்பாயா சாலட், அரிசியில் தயாரிக்கப்படும் பான் வியட்நாம் போன்ற உணவுகள் வியட்நாம் லஞ்ச்சில் நிச்சயம் சுவைக்க வேண்டியவை.

7
Empanada

அர்ஜென்டினா மக்களின் ஃபேவரைட் எம்பநடா!

அர்ஜென்டினாவில் மதிய உணவு இடைவேளை நண்பகலில் தொடங்கி, இரண்டு மணி வரையிலும் நீடிக்கிறது. இங்கு போர்க், முட்டை, காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாண்ட்விச்சுகள் மற்றும் இறைச்சி, கடல் உணவுகள், காய்கறிகளால் ஸ்டஃப்டு செய்யப்பட்ட எம்பநடா ஆகியவற்றை மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். சிக்கன், பீப், பாஸ்தா, சால்ட், ஒயின் என்று லன்ச் மெனுவில் பல வகையான டிஷ்களை சுவைக்கலாம். இங்கு பீப் வகைகள் தேசிய உணவாக உள்ளன.

பார்பெக்யூ முறையில் சமைக்கப்படும் பீப் உணவான அசடோ, பெரும்பாலான மக்களால் மதிய உணவுகளிலும், பார்ட்டிகளிலும் உண்ணப்படுகிறது. மெயின் கோர்ஸ் உணவான பர்ரில்லடாவை, ஸ்டீக் இறைச்சிகளைக்கொண்டு, கிரில்டு செய்து பரிமாறுகின்றனர். போர்க், பீப், சீஸ், காய்கறிகளைக்கொண்டு ஸ்டஃப்டு செய்யப்படும் எம்பநடா, அர்ஜென்டினாவின் மதிய உணவுகளில் மிகவும் பிரபலமானது. பாஸ்தா, பீட்சா போன்ற உணவுகளும் இவர்களுக்கு பிடித்தமானவைதான்.