லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

நானே உரிமையாளர்... நானே பணியாளர்! - மரீன் விஜய்

மரீன் விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
மரீன் விஜய்

ஃபுட் ஆர்ட்

இத்தாலி வகை ரொட்டியான Focaccia பல ஆண்டுகளாக மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவு. அந்த ரொட்டியைக் கலைநயத்துடன் வடிவமைக்கும் மரீன் விஜய்யைச் சந்தித்தோம்.

ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற மரீன், கிராஃபிக் டிசைனர், விளையாட்டு வீராங்கனை எனப் பன்முகத் திறமைகொண்டவர்.

அசைவ உணவுகளில் ஆர்வத்துடன் இருந்த மரீன், விலங்கினப் பாதுகாப்பாளரான பிறகு, 1995-ம் ஆண்டில் தன் 22-வது வயதில் வீகன் (Vegan) ஆக மாறியவர்.

‘`என்னதான் விலங்கினப் பாதுகாப்பாளராகச் செயல் பட்டாலும், அசைவ உணவுக்கான பிரியம் மக்களிடம் இருக்கும்வரை விலங்கினங்களைக் காப்பது கடினம்தான் என்பதை உணர்ந்தேன். எனவே, ‘Mock Meat' (அசைவ உணவின் சுவைக்கு இணையானது) உணவு வகைகள் அவசியம் என்று புரிந்தது. இப்போது நான் நடத்திவரும் வீகன் உணவுக் கடையான ‘கேட்டலிஸ்ட்’டில் நானே உரிமையாளர், நானே பணியாளர். ஒன் உமன் ஆர்மி!’’ என்றவர்,

``Focaccia வகை ரொட்டிகள் சில மால்களில் கிடைக்கும். ஆனால், அவை வடிவமைக்கப்பட்டிருந்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குக் கலையில் நாட்டம் உண்டு. அதனால் நானே கலைநயத்துடன் Focaccia தயாரித்தேன். பெரிய அளவு ரொட்டிக்கு Tapestry என்றும், சிறிய அளவு ரொட்டிக்கு Camio என்றும் பெயரிட்டேன். சிறிய ரொட்டியில் Focaccia Art செய்யப்படுவது இதுவே முதன்முறை. ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டில் இருக்கும் பொருள்களைக்கொண்டே வடிவமைத்தேன். என் வீட்டு மாடித்தோட்டத்தில் உள்ள மணத்தக்காளிக்கீரையை அதற்குப் பயன்படுத்தினேன்.

நானே உரிமையாளர்... நானே பணியாளர்! - மரீன் விஜய்

ரொட்டியைப் பேக் செய்வதற்கு முன்பும் பின்பும் புகைப்படங்கள் எடுத்தேன். பகிரலாமா, வேண்டாமா என்கிற தயக்கத்தோடுதான் சமூக வலைதளங்களில் பகிர்ந்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. சில வெளிநாட்டுக் குழுக்களிலும் இது பகிரப்பட்டிருப்பது கூடுதல் உற்சாகம் அளிப்பதாக இருந்தது'' என்கிற மரீன், இந்தக் கலைநயமிக்க ரொட்டியைத் தயாரிக்கும் வழிமுறைகளையும் பகிர்கிறார்.

Catalyst Focaccia Tapestry

தேவையானவை: சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன் ஆக்டிவ் ஈஸ்ட் - ஒன்றரை டேபிள்ஸ்பூன் மைதா மாவு - இரண்டரை கப் முழு கோதுமை மாவு - ஒரு கப் வீட்டில் இருக்கும் காய்கறிகள், கீரைகள் - தேவைக்கேற்ப ஆலிவ் எண்ணெய் / அரிசி தவிட்டு எண்ணெய் / சூரியகாந்தி எண்ணெய் - தேவையான அளவு மிதமான வெந்நீர் - தேவையான அளவு ஓரிகானோ- அரை டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு ரோஸ்மெரி - அரை டேபிள் ஸ்பூன்.

செய்முறை: அரை கப் மிதமான வெந்நீரில் சர்க்கரை, ஆக்டிவ் ஈஸ்ட் சேர்த்துக் கலக்கவும். நுரைத்து வர 10 நிமிடங்கள் காத்திருக்கவும். அந்த நேரத்தில், மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, அதனுடன் விரும்பினால் ஓரிகானோ, ரோஸ் மெரியைச் சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் ஏற்கெனவே கலந்துவைத்துள்ள ஈஸ்ட் கலவையைக் கலக்கவும். பின்னர், அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு மிதமான வெந்நீரைக் கலந்து, நன்கு பிசைந்து, மிருதுவான மாவாக்கி, 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் மாவை மீண்டும் நன்கு பிசையவும். மிருதுவாகும் வரை பிசையவும். நெகிழ்வாக இருந்தால் சிறிது மாவைச் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம். பின்பு உங்களுக்கு விருப்பமான வடிவில் வடிவமைத்துக்கொண்டு, பேக்கிங் தட்டில் வைத்து, நுனிகளைக் கத்தியால் சீராக்கவும்.

உங்கள் கலைநயத்தைக் காட்டும் வகையில் மாவின் மேல் வடிவமைக்கலாம். வெங்காயம், தக்காளி, கேரட், மணத்தக்காளிக்கீரை, ஆலிவ்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

வடிவமைத்து முடித்த வுடன், மாவின் மேல் வைக்கப்பட்டுள்ள பொருள் களை லேசாக அழுத்தி விட்டு, மாவின் மேல் லேசாக எண்ணெய் தடவவும். பின்னர் அவனில் மிதமான சூட்டில் 60 டிகிரி ஃபாரன்ஹீட் சூட்டில் கீழ்தட்டில் 30 முதல் 45 நிமிடங்கள் வைக்கவும். மீண்டும் கீழ்த்தட்டில் 180 டிகிரி ஃபாரன்ஹீட்டில் 20 நிமிடங்களும், மேல் தட்டில் 5 நிமிடங்களும் வைத் திருக்கவும். மேல்தட்டில் இருக்கும்போது பழுப்பு நிறமாக மாறிவிடும். பின்பு ஆலிவ் ஆயில் அல்லது இத்தாலியன் சீஸனிங் மிக்ஸ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

மரீன் விஜய்
மரீன் விஜய்

உங்கள் திறனை வெளிக்காட்டும் Focaccia-வைப் புகைப்படம் எடுக்கவும். வடிவமைக்கப் பயன்படுத்தும் காய்கறிகள், பேக் (bake) செய்த பிறகு நிறம் மாறலாம், சுருங்கலாம். அதனால் கனமான காய்கறிகளை வைத்து வடிவமையுங்கள். எவ்வாறு வடிவமைக்கப் போகிறீர்கள் என்பதை முன்னரே பேப்பரில் வரைந்து பார்த்துவிட்டால், தயா ரிக்கும்போது மாற்றங்கள் செய்யத் தேவை இருக்காது.''