Published:Updated:

மதுரைத் தெருக்களின் வழியே - 5: உணவு பற்றிய பேச்சுகள்!

மதுரை உணவு

சங்க காலத்தில் இனிப்பு அடை, மோதகம் விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என்று அறிய முடிகின்றது.

மதுரைத் தெருக்களின் வழியே - 5: உணவு பற்றிய பேச்சுகள்!

சங்க காலத்தில் இனிப்பு அடை, மோதகம் விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என்று அறிய முடிகின்றது.

Published:Updated:
மதுரை உணவு

‘எல்லாம் யோசிக்கும்வேளையில் உண்பதும் உறங்குவதுமாய் முடியும்’ என்ற தாயுமானவரின் பாடல் வரிகள், அர்த்தம் பொதிந்தவை; எல்லாக் காலகட்டங்களுக்கும் ஏற்புடையவை. பூமியில் மனித இருப்பின் ஆதாரமான வயிற்றுக்குள் ஏதாவது திணிக்கப்பட வேண்டியது, இயற்கை தரும் நெருக்கடி. பண்டைக்காலத்தில் உணவு தேடி மனிதர்கள் இடம்விட்டு இடம் பெயர்ந்த செயல்தான், சமூக வளர்ச்சியில் முக்கியமான அம்சம். புலம் பெயர்ந்து வேறு நிலப்பகுதிக்குப் பயணித்ததில் உணவு தேடல் முக்கிய நோக்கமாக இருந்தது. சங்க இலக்கியமான புறநானூற்றில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், வள்ளலான சிறுகுடி கிழான் பண்ணன் பற்றிப் பாடியுள்ள பாடல் வரிகள் பசியை நோயாகச் சித்திரித்துள்ளன.

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய;

பாணர் ! காண்கிவன் கடும்பினது இடும்பை;

யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன

ஊணொலி அரவந் தானும் கேட்கும்;

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி

முட்டை கொண்டு வற்புலம் சேரும்

சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்

சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்

இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்

மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்

பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ? கூறுமின் எமக்கே!

புறநானூறு
புறநானூறு

‘பாணரே! இந்த இரவலனது சுற்றத்தாரின் வறுமையைக் காணுங்கள். பழ மரத்திலே பறவையினம் ஒலித்தாற்போல ஊண் உண்பார் ஆரவாரம் கேட்கும். எறும்புகள் முட்டைகளைக்கொண்டு மேட்டுநிலத்தை நோக்கிப் போவதுபோலப் பெரிய சுற்றத்தோடுகூடிய பிள்ளைகள், கையிலே சோறு பெற்றுக்கொண்டு போவதைக் காண்போம். பசியும், வழிநடை வருத்தமும் வாட்டுகின்றன. அவை கண்டும் கேட்டும் தெளியவும் பசிநோய் தீர்க்கும் மருத்துவன் இல்லம் பக்கமோ தூரமோ என்று உங்களைக் கேட்கின்றோம்; சொல்லுங்கள். அந்தப் பண்ணன் இவ்வுலகிலே நெடுங்காலம் வாழ்வானாக! சங்க காலம் பொற்காலம் என்று கட்டமைக்கப்பட்டுள்ள புனைவைப் புறநானூற்றுப் பாடல் தகர்த்துள்ளது. சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை காப்பியத்தில் பசியை நோயாகக் கருதி, அதைப் போக்கிடும் வழியாக அட்சயப் பாத்திரத்தைக் கண்டறிந்துள்ளார், பசித்திருக்கிறவர்களுக்கு உணவு வழங்குவதை அறமாகக் கருதி, உணவு வழங்கிட முன்வந்த வள்ளலார், தமிழர் வரலாற்றில் தனித்துவமானவர். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார், பசியைப் போக்கிட முயன்ற பசிப்பிணி மருத்துவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கி.பி. 14-ம் நூற்றாண்டில் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் பன்னிரு ஆண்டுகளாக மழை பொழியாமல் பெரும் பஞ்சம் நிலவியதால் அங்கு வாழ்ந்த மக்கள் தமிழக நிலப்பரப்புக்குப் புலம்பெயர்ந்ததாகச் செவி வழிக் கதைகளும் நாட்டார் கதைப் பாடல்களும் பதிவாக்கியுள்ளன. 1877ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் காலனியாதிக்க ஆட்சியின் மோசமான பொருளாதாரக் கொள்கை காரணமாகச் சென்னை மாகாணத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தினால் உணவு இல்லாமல் பட்டினியால் ஒரு கோடி மக்கள் இறந்தனர். ’சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்’ என்ற பாரதியாரின் பாடல் வரிகள் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானவை.

கிராமப்புறத்தில் விவசாயம் செய்து உணவினை உற்பத்தி செய்வதுதான், பண்டைய தமிழ்நாட்டில் முதன்மையான தொழில். சமூகப் பொருளியல், அரசியல் சூழல் காரணமாக ஒரே இடத்தில் பெருந்தொகையினர் பல்லாண்டுகள் வாழ நேரிட்டபோது ‘நகரம்’ உருவானது. இத்தகைய நகரங்களில் பல, காலப்போக்கில் அழிந்துவிட்டன என்றாலும், மதுரை நகரம் இரண்டாயிரமாண்டுகளைக் கடந்த பின்னரும் தனக்கான அடையாளத்துடன் இன்றும் உயிர்த்துடிப்புடன் விளங்குகிறது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் தொடங்கி, சுல்த்தான், தெலுங்கு பேசும் நாயக்கர் எனப் பலரின் ஆளுகைக்குட்பட்டிருந்தபோதிலும், போர்களின் பேரழிவுகளிலிருந்து ‘மதுரை’ தப்பியது பேரதிசயம்தான். கிராமப்புறங்களில் வாழ வழியின்றி, வறுமை, பஞ்சம் காரணமாக மதுரையை நோக்கிப் புலம் பெயர்ந்த எளிய மக்களுக்கு அங்கே வேலையும் உணவும் தொடர்ந்து கிடைத்திருக்க வேண்டும். வரலாற்றுச் சுவடுகள் தோய்ந்த மதுரை நகரின் தெருக்களில், நம்பிக்கையுடன் இன்றும் பலர் அலைந்துகொண்டிருக்கின்றனர். அடுத்தவேளை உணவுக்கான உத்திரவாதம் தேடித்திரியும் மக்களின் கனவு, ‘உணவு’ அன்றி வேறு என்ன?

மதுரை உணவு
மதுரை உணவு
சங்க இலக்கியமான ‘மதுரைக் காஞ்சி’ சித்திரிக்கும் தூங்கா நகரமான மதுரை, இன்றளவும் குதூகலத்துடன் இரவில் கண் விழித்திருக்கிறது. மதுரை நகரில் கிடைக்கும் உணவுகள் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. மதுரைக் காஞ்சி நூலில் இரவுவேளையில், இரண்டாம் சாமத்தில், மதுரை நகரின் நிலை பற்றிய விவரிப்பில் இடம் பெற்றுள்ள ‘உணவு வணிகர்’ குறித்த காட்சிகள் முக்கியமானவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை

அயிர் உருப்பு அற்ற ஆடு அமை விசயம்

கவவோடு பிடித்த வகை அமை மோதகம்

தீஞ்சோற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க

(மதுரைக் காஞ்சி, பா. வரிகள்: 624 - 627)

சங்க காலத்தில் இனிப்பு அடை, மோதகம் விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என்று அறிய முடிகின்றது.

தமிழகத்தில் சோற்றை விற்பது, நாயக்கர் காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தமிழறிஞர் தொ. பரமசிவம் கருதுகின்றார். நாயக்கர் மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட சத்திரங்களில் வழிப்போக்கர்களுக்கு உணவு கிடைத்தது. தமிழகக் கிராமங்களைப் பொறுத்தவரையில் நாற்பதுகளில்கூடப் பெரிய அளவில் உணவு விற்கப்படவில்லை. சோற்றை விற்பது பாவம் என்று கருதப்பட்டது. அறுபதுகளில் வெளியே இருந்து கிராமங்களுக்கு வருகின்ற வழிப்போக்கர், அன்னக் காவடி, சாமியார், குறி சொல்கிறவர், பூம்பூம் மாட்டுக்காரர், பிச்சைக்காரர் போன்று யார் வந்து உணவு கேட்டாலும் ‘இல்லை’ எனக் குடியானவர்கள் சொல்ல மாட்டார்கள். ‘உலை இப்பத் தான் வைத்திருக்கு’ என்று சொல்கிற கிராமத்துப் பெண்கள், தங்கள் குடும்பத்தினர்க்கு ஆக்குகின்ற உணவில் சிறிய அளவைப் பிறருக்கு மகிழ்ச்சியோடு தந்தனர்.

இட்லியும் அசைவக் குழம்புகளும்
இட்லியும் அசைவக் குழம்புகளும்

பெரும்பான்மையான விளிம்புநிலையினர் மூன்று வேளைகளும் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானியங்களில் இருந்து தயாரான கூழ், களி போன்ற உணவுகளைச் சாப்பிட்டனர். அரிசிச் சோறு என்பது, விசேஷ நாள்களில் பொங்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்தினர் தோசை, இட்லி போன்ற பலகாரங்களைத் தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் சமைத்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை நகரின் பரப்பு விரியத் தொடங்கியது. பேருந்துகள் இயக்கப்பட்டபோது, கிராமத்தினர் பல்வேறு அலுவல்களுக்காக அதிக எண்ணிக்கையில் மதுரைக்கு வரத் தொடங்கினர். சித்திரைத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக மாட்டு வண்டிகளில் வந்த கிராமத்தினர், புளியோதரை போன்ற கட்டுச்சோற்றைக் கொண்டுவந்து மரத்தடிகளில் அமர்ந்து சாப்பிட்டனர். அரசு அலுவல்கள் காரணமாகவும், பொருள்களை வாங்குவதற்காகவும் மதுரை நகரத்துக்கு வந்து செல்கின்றவர்களின் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதுடன், ஆதாயம் பார்ப்பதற்காகவும் சிலர் உணவகங்களைத் தொடங்கினர். சாப்பாட்டுக் கடைக்கு வெளியே பளபளவென விளக்கப்பட்ட பெரிய பித்தளை அண்டாவை வைத்து, அதன்மீது திருநீற்றுப் பட்டை அடித்து நடுவில் குங்குமப் பொட்டு வைத்திருந்தால், அங்கே உணவு கிடைக்கும் என்று அர்த்தம். எழுபதுகளில்கூட யானைக்கல் பகுதியில் இத்தகைய உணவகங்கள் இருந்தன.

‘கிளப்புக் கடை’ என அறுபதுகளில் சொல்லப்பட்ட உணவகங்களில் வழங்கப்பட்ட ருசியான உணவை நாடிச் சென்றவர்கள் ஒருபுறம் இருந்தனர். வீட்டில் சாப்பிடாமல், கிளப்புகளில் சாப்பிட்டுக்கொண்டு திரியும் சோக்காளிகளைக் கேவலமாகக் கருதும் போக்கு, இன்னொருபுறம் நிலவியது. ‘எங்காவது ஏதாச்சும் ஊச கிடைக்காதா எனப் பொறக்கித் திங்கத் தேடி அலையுது’ என ஹோட்டலில் விரும்பிச் சாப்பிடுகிறவர்கள்மீது வசைச் சொற்கள் ஏவி விடப்பட்டன. உயர்சாதியினர், கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர்கள் ஹோட்டலில் சாப்பிட மாட்டார்கள் என்று நம்பினர். சாதி ஆசாரம், ஹோட்டலில் சாப்பிடுவதனால் கெட்டுவிடும் என்ற நம்பிக்கை நிலவியது.

ஊத்தப்பம்
ஊத்தப்பம்

’பிராமணாள் காபி கிளப்’ என்ற பெயர்ப்பலகை தொங்க விடப்பட்ட உணவகங்களில் சைவ உணவுகள் கிடைத்தன. ஐம்பதுகளில் சாதிப் பெயரில் ஹோட்டல் நடத்தக் கூடாது எனப் பெரியார் போராட்டம் நடத்தினார். அதற்குப் பின்னர் அத்தகைய பெயர்ப் பலகைகள் நீக்கப்பட்டன.

பெரும்பாலான உணவகங்களைக் கர்நாடகா மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்தைச் சார்ந்த பிராமணர்கள் நடத்தியதால், உடுப்பி ஹோட்டல் என்ற பெயர் தமிழகமெங்கும் பிரபலமாக விளங்கியது. ரவா தோசை, பொங்கல் போன்ற உணவுகள் உடுப்பி ஹோட்டல்களில் பிரபலமாக விளங்கின.

பெரு வியாதிஸ்தர்கள் உள்ளே நுழையக்கூடாது என்ற அறிவிப்புப் பலகை எழுபதுகளில்கூட சில ஹோட்டல்களின் முன்னால் தொங்கியதைப் பார்த்திருக்கிறேன். பெரு வியாதிஸ்தர் என்பது தொழு நோயாளியைக் குறிக்கும்.

‘புயலிலே ஒரு தோணி’ நாவலில் மதுரையில் உணவு விற்கப்பட்ட கடைகளைப் பற்றி ப. சிங்காரம் நுட்பமாக விவரித்திருப்பார். எண்பதுகளின் நடுவில் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, நேதாஜி சாலை, மாடர்ன் ரெஸ்டாரெண்டில் கடந்த நாற்பது வருடங்களாக ‘டிபன்’ சாப்பிடுவதாகச் சொன்னார். அவரைப் போன்று பலரும் அந்த உணவகத்தின் நிரந்தர வாடிக்கையாளர் என்று கூறியவர், “மதுரை நகரின் ஹோட்டல்களைப் பற்றித் தனியே புத்தகம் எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கு” என்றார். அவருடைய வழியில் என் பார்வையில் மதுரை நகரத்து உணவு, உணவகங்கள் பற்றிக் குறுக்குவெட்டாக விரிகின்றன பதிவுகள்.

எனது பள்ளிப்பருவத்தில்-அறுபதுகள்- காலேஜ் ஹவுஸ் மிகப் பிரபலம். இன்று எத்தனையோ ஆடம்பர வசதிகளுடன் டவுன் ஹால் ரோட்டில் தங்கும் விடுதிகள் வந்துவிட்டாலும், ‘அங்கு போய்த் தங்குவது பாதுகாப்பானது’ என்று குடும்பத்துடன் தங்குகிறவர்கள் உள்ளனர். அந்த விடுதியுடன் சேர்ந்துள்ள உணவகத்தில் காபி, டிபன் சாப்பிட எழுபதுகளில் காத்திருக்க வேண்டிய நிலை. அங்கு சாப்பிட்டுவிட்டு, கிராமத்திற்குப் போய் ‘காலேஜ் ஹவுஸ்’ல சாப்பிட்டேன் எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள். எங்கள் ஊரான சமயநல்லூரில் இருந்து எட்டு மைல் தொலைவில் இருக்கிற மதுரை நகருக்குப் போய் காலேஜ் ஹவுஸில் காபி குடிச்சிட்டு வந்தேன் என்று பெருமை பேசும் கிராமத்து மைனர்கள் இருந்தனர்.

மதுரை கறித்தோசை
மதுரை கறித்தோசை

எழுபதுகளில் மதுரை ரயில்வே நிலையத்திற்கு எதிராக மங்கம்மா சத்திரம் கட்டடத்தில் நடைபெற்ற ‘அன்னபூரணா’ உணவகம் சாம்பார் இட்லிக்குப் பிரபலம். கிராமப்புறத்திலிருந்து மதுரைக்கு ரயிலில் பயணித்துப் படிக்க வரும் மாணவர்கள் பிளேட்டில் இரு இட்லிகள் முழுக்கச் சாம்பாரைக் கொட்டிக் குழப்பிச் சாப்பிட்டனர்.

எண்பதுகளில் மதுரை, டவுன் ஹால் சாலைக்கு அருகில் தங்கம் தியேட்டர் செல்லும் வழியில் இருந்த கணேஷ் மெஸ், மதிய உணவைத் தரமாகவும் சுவையாகவும் குறைந்த விலையில் வழங்கியது. அதுபோன்ற சைவ உணவகம் இப்பொழுது எதுவுமில்லை. உணவகம் நடத்திப் பொருள் சம்பாதிப்பது நோக்கம் என்றாலும் வாடிக்கையாளர்களின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்பட்ட உணவக உரிமையாளர் போற்றுதலுக்குரியவர்.

டவுன் ஹால் ரோட்டில் காலேஜ் ஹவுஸ் விடுதிக்கு எதிரில் அமைந்திருந்த சுல்த்தானியா ஹோட்டல் மட்டன், பிரியாணி, பரோட்டா போன்ற உணவு வகைகளை வழங்கியது. அங்கு சாப்பிடவெனத் தனி ரசிகர் குழாம் இருந்தது. தனிப்பட்ட சுவையுடன் உணவை வழங்கிய அந்தக் கடையின் தோற்றம் கம்பீரமானது. அங்கு வழங்கப்பட்ட அசைவ உணவுகள் மாட்டுக் கறியில் சமைக்கப்பட்டவை என்ற பேச்சு அரசல்புரசலாக நிலவியது தனிக்கதை. இரவில் இரண்டு மணி வரையிலும் திறந்திருந்த சுல்த்தானியா ஹோட்டலில் அமர்ந்து எழுத்தாளர் ஜி. நாகராஜன் தனது சிறுகதையை வாசித்திட அவருடைய நண்பர்கள் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்போம் என்று என் பேராசிரியர் பால் மோகன் ராய் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஜி. நாகராஜன் ஒரு சிறுகதையை வாசித்து முடிப்பதற்குள் இரு தேநீர்க் கோப்பைகள் காலியாகிவிடும் என்பது கூடுதல் தகவல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism