Published:Updated:

கோலி சோடாவும் நெய் இட்லி சாம்பாரும்!

கோலி சோடாவும் நெய் இட்லி சாம்பாரும்
பிரீமியம் ஸ்டோரி
News
கோலி சோடாவும் நெய் இட்லி சாம்பாரும்

நெய் என்று பார்த்த உடனேயே நாவில் எச்சில் ஊறச் செய்யும் அற்புத உணவு நெய் இட்லி சாம்பார்!

மாத்தி யோசி

சென்னைக்கே உரிய தனித்துவமான உணவுகள் சில உண்டு. அவற்றில் ஒன்று சாம்பார் இட்லி. தென் மாவட்டங்களி லிருந்து சென்னைக்கு வருகிற பலரும் தட்டு நிறைய சாம்பாரில் மிதக்க விடப்பட்ட இட்லிகளைக் கண்டு வியந்து ரசித்து ருசித்து, அதன் சுவையில் மயங்கிய அனுபவத்தைப் பெறுவது வழக்கம். கடந்த இருபது ஆண்டுகளில் மினி இட்லி, சாம்பார் இட்லி, பொடி இட்லி என்று பல்வேறு பரிமாணங்களில் இட்லி, நகரத்தின் உணவு வரிசையில் முக்கிய இடம் பிடித்தது. அதிலும் நெய் இட்லி சாம்பார், இட்லிப் பிரியர்களின் விருந்தாகவே மாறியது. குழித் தட்டில் ஊற்றப்பட்ட கெட்டியான சாம்பாரில் மிதக்கும் இட்லிகள், அவற்றின்மேல் ஊற்றப்படும் நெய் என்று பார்த்த உடனேயே நாவில் எச்சில் ஊறச் செய்யும் அற்புத உணவு நெய் இட்லி சாம்பார்!

நெய் இட்லி சாம்பார்
நெய் இட்லி சாம்பார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு காலத்தில் சென்னையில் பல கடைகளில் நல்ல நெய் இட்லி சாம்பாரை ருசிக்க முடிந்தது. இப்போதோ அந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. நல்ல தரமான நெய் இட்லிக்கு மனம் ஏங்கிக் கொண்டிருந்தபோதுதான் `நெய் இட்லி சாம்பார்’ என்ற ஃபுட் டிரக் குறித்துக் கேள்விப்பட்டோம். பரபரப்பான கீழ்ப்பாக்கம் பகுதியில் ஈகா திரையரங்கத்துக்கு அருகில் செல்லும் சாலையில் 200 மீட்டர் பயணித்தால் டிரைவ் இன் உணவக வளாகம் ஒன்று இருக்கிறது. உண்மையில் சைவ உணவுப் பிரியர்களுக்கான சொர்க்கம் அந்த இடம் என்றே சொல்லலாம். பல்வேறு மாநில சிறப்பு உணவுகள் வழங்கும் உணவு டிரக்குகள் அங்கே அணிவகுத்திருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மாலை 6 மணிக்கு உயிர்பெறும் இந்த வளாகம் நள்ளிரவுவரை உயிர்ப்போடு இயங்குகிறது. பிற பகுதியில் இருப்பவர்கள் மாலையில் தேடிவந்து உண்கிறார்கள். சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் இரவு 9 மணிக்குமேல் பொடிநடையாக வந்து உண்டு செல்கிறார்கள். அந்த இடத்தில் இருக்கும் அமைதியும் விசாலமான வெற்றிடமும் நகரத்தின் மத்தியில் இருக்கிறோம் என்ற நினைவே எழாதபடிக்கு நம்மை உணவோடு ஒன்றி உண்ண வைக்கிறது.

ஆதித்யா சிவாபிங்க்
ஆதித்யா சிவாபிங்க்

இந்த வளாகத்தில்தான் உள்ளது நெய் இட்லி சாம்பார் உணவு வண்டி. அங்கு சென்று நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். நம்மோடு கை குலுக்கியவர் ஆதித்யா சிவாபிங்க் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆதித்யா சிவாபிங்க் வேறு யாருமல்ல... தமிழ்த் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை யைக்கொண்டு அனைவர் மனத்திலும் நீங்கா இடம்பிடித்த தேங்காய் சீனிவாசனின் பேரன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜினீயரிங் பட்டதாரியான ஆதித்யா பட்டப்படிப்பை முடித்த கையோடு திரைத்துறையிலும் அடியெடுத்திருக்கிறார். `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, `காலா’, `பேட்டை’, `தர்பார்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் ஆதித்யா, திரைத்துறையில் தனக்கான இடத்தை உறுதிசெய்யும் முயற்சி யில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இடையே தன் மற்றொரு விருப்பமான உணவுத் துறையிலும் கால் பதித்திருக்கிறார்.

‘எப்படி இப்படி மாறுபட்ட துறையில்...’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.

கோலி சோடாவும் நெய் இட்லி சாம்பாரும்
கோலி சோடாவும் நெய் இட்லி சாம்பாரும்

“நான் உணவுப் பிரியன். நல்ல உணவுகளைத் தேடித் தேடி உண்பவன். ஆனால், இட்லி எனக்கு மிகவும் பிடித்தமான உணவு அல்ல. எப்போதாவது சாப்பிடுவதோடு சரி. ஒருமுறை தனியார் உணவு விடுதி ஒன்றில் நண்பர் ஒருவர் வித்தியாசமாகத் தோற்றமளித்த உணவு ஒன்றை சுவைக்கச் சொன்னார். அந்தச் சுவை என்னை மிகவும் கவர்ந்தது. அது என்ன என்று கேட்டபோது, ‘பொடி இட்லி’ என்றார். உடனே அம்மாவிடம் வந்து அது குறித்து விசாரித்தேன். பின்பு இட்லியின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அம்மா ஒருநாள் சாம்பார் இட்லி செய்துகொடுத்தார். அதன் சுவை இட்லி குறித்த என் கருத்தை மாற்றியே விட்டது. உணவுத்துறையில் கால்பதிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாகி, `இட்லிக் கடைதான் வைக்க வேண்டும்’ என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன்.

சென்ற வருடம் நானும் என் நண்பன் அஸ்வினும் சேர்ந்து இந்தக் கடையைத் தொடங்கினோம். கடைக்கு ‘நெய் இட்லி சாம்பார்’ என்றுதான் பெயர் வைத்தோம். அதையே எங்களின் அடையாள உணவாக வும் ஆக்கினோம். சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்களில் சிலர் வந்து உண்டுவிட்டு, ‘இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று சுவையான இட்லி சாம்பார் சாப்பிட்டி ருக்கிறேன்’ என்றார்கள். அதுதான் எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி.

வந்தவர்கள் மீண்டும் மீண்டும் வர ஆரம்பித்தனர். டிரக்கை நகரின் பல பகுதிகளிலும் கொண்டு சென்று நிறுத்தி மக்கள் சுவைக்க வழி செய்தோம். மயிலாப்பூரில் மக்கள் அமோக ஆதரவு கொடுத்தனர். உடனடியாக மயிலாப்பூரில் ஒரு கிளை தொடங்கினோம்.

உணவின் சுவையைக் கண்ட அக்ரோபாலிஸ் நிறுவனத்தினர் அவர்களின் அலுவலகத்துக்குள் ஒரு கடையைத் தொடங்கச் சொன்னார்கள். நாங்கள் எதிர்பாராத அளவுக்கு மக்களின் ஆதரவு குவியத் தொடங்கியது. ஒரே ஆண்டில் மூன்று கிளைகள்கொண்ட சங்கிலித் தொடர் உணவகமாக மாறிவிட்டோம்.

இட்லிதான் முக்கிய உணவு என்பதால் அதில் பல வெரைட்டி செய்ய ஆரம்பித்தோம். பொடி இட்லியை பூண்டு, எள், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய நான்கு சுவைகளில் தரத் தொடங்கினோம். மினி இட்லிகளைக் கடாயில் இளம் சூட்டில் லேசாகப் பொரித்தெடுத்து அதில் வாடிக்கையாளர் கேட்கும் பொடியைத் தூவித் தருகிறோம். கூடவே இரண்டு விதமான சட்னி, சாம்பார். இவைதவிர ஃபில்டர் காபி மற்றும் கோலி சோடா. மயிலாப்பூர் கடையில் தோசையும் கிடைக்கும்.

நல்ல சுவையான உணவு கொடுத்தால் வாடிக்கையாளர்கள் எப்படி மகிழ்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டால் போதும். அந்தப் போதையே இந்தத் தொழிலில் இன்னும் ஆர்வத்துடன் உழைக்கும் உத்வேகத்தைத் தரும்” என்று வெற்றி சூத்திரம் சொல்கிறார் ஆதித்யா.

ஒரு பிளேட் எள் பொடி இட்லியும் நெய் இட்லி சாம்பாரும் ஆர்டர் செய்தோம். சில நிமிடங்களில் சூடாகப் பரிமாறினார்கள். அவர் சொன்னது 100 சதவிகிதம் உண்மை என்பது அவற்றின் சுவையில் தெரிந்தது. இட்லிப் பிரியர்கள் ஒருமுறையேனும் நெய் இட்லி சாம்பாருக்கு விசிட் செய்யலாம்!