Published:Updated:

ரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, வருடம் முழுக்க சென்னையில் ஹலீம் கிடைக்கும் இடம் தெரியுமா?

ஹலீம்

ஆரம்பத்தில் ஹலீம் பற்றி யாருக்கும் தெரியாததால் விற்பனை சுமாராகத்தான் இருந்தது.

ரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, வருடம் முழுக்க சென்னையில் ஹலீம் கிடைக்கும் இடம் தெரியுமா?

ஆரம்பத்தில் ஹலீம் பற்றி யாருக்கும் தெரியாததால் விற்பனை சுமாராகத்தான் இருந்தது.

Published:Updated:
ஹலீம்

ஒவ்வோர் இஸ்லாமியரும் இறைவனை மனதார பிரார்த்தனை செய்து, ஒரு மாதத்திற்கும் மேல் கடும் விரதமிருந்து, இறுதி நாளில் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு இணைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களின் விரதத்தை முடித்துக்கொள்ள அவர்கள் குடிக்கும் நோன்புக் கஞ்சி முதல் சமீபத்தில் தமிழ்நாட்டு நகரங்களில் ட்ரெண்டான ஹலீம் வரை, இஸ்லாமியர்களின் பாரம்பர்ய உணவு வகைகளை தற்போது அனைத்து மதத்தினரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். ரமலான் நேரத்தில் இந்த உணவு வகைகளை ஒன்றிணைத்து 'இஃப்தார் பேக்' எனக் கடைகளில் விற்பார்கள். இதனைத் தேடித்தேடி உண்ணும் மக்களும் உண்டு. லாக் டௌன் காலகட்டத்தில் நோன்பு தினங்களை இஸ்லாமிய மக்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதைப் பற்றி பிரபல யூடியூப் உணவு விமர்சகர் இர்ஃபான் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

Mosque
Mosque

"பொதுவாக எங்களுடைய நோன்பு காலை 4.30-லிருந்து மாலை 7 மணிவரை இருக்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர்கூட குடிக்க மாட்டோம். பிறகுச் சரியாக ஏழு மணிக்கு, பேரீச்சம்பழம் சாப்பிட்டு நோன்பை முடிப்போம். அதன் பிறகு கஞ்சி குடிப்போம். நாள் முழுவதும் தண்ணீர்கூட குடிக்காமல் இருப்பதால், உடலின் வெப்பம் அதிகரித்திருக்கும். அதனைத் தணிக்கும் வகையில்தான் எங்களுடைய மற்ற உணவு வகைகள் இருக்கும். மீண்டும் காலை 3 மணிக்கு, சாப்பாட்டில் பால், வாழைப்பழம் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடும் சஹர் (Sahar) நடைபெறும். இதனைத் தொடர்ந்து எங்கள் விரதம் மீண்டும் ஆரம்பமாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாதாரண நாள்களில் பள்ளிவாசல் சென்று தொழுகையை முடித்த பிறகு இந்த நோன்புக் கஞ்சியைக் குடித்துவிட்டு வீடு திரும்புவோம். அவ்வளவு பசியில் அவர்கள் அன்போடு பரிமாறும் அந்தக் கஞ்சியின் சுவைக்கு நிகர் எதுவும் இருக்காது. ஆனால், இந்த லாக் டௌன் காலகட்டத்தில் எங்களால் பள்ளிவாசல் சென்று தொழ முடியாத நிலையில், வீட்டிலிருந்தபடியே தொழுது, கஞ்சி செய்து குடிக்கிறோம். பள்ளிவாசல் சென்று நேரடியாகத் தொழாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்த நாள்களிலும் சில உணவகங்களில் இஃப்தார் பேக்குகள் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் கடைகளிலும் வாங்கிச் சாப்பிடுகிறோம்."

இர்ஃபான்
இர்ஃபான்

இஃப்தார் பேக்கில் என்னவெல்லாம் இருக்கும்?

பொதுவாகவே இஃப்தார் பேக்குகள் ஒவ்வொரு கடைக்கும் மாறுபாடும். எக்கனாமி, பிரீமியம் என இதனை இரண்டு வகையாகப் பிரித்திருப்பார்கள். இந்த லாக் டௌனில் நான் வாங்கிய இஃப்தார் பேக்கில் பேரீச்சம்பழம், ஜூஸ், நோன்புக் கஞ்சி, ஹலீம், சிக்கன் 65, பிரியாணி, கீர், சமோசா, கட்லெட் உள்ளிட்ட உணவுகள் இருந்தன. ஆனால், வடையும் கஞ்சியும்தான் பக்கா காம்பினேஷன்" என்றவர் வீட்டிலேயே எளிமையான முறையில் நோன்புக் கஞ்சி செய்யும் முறையைப் பகிர்ந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நோன்புக் கஞ்சி ரெசிபி:

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - 1/2 கப்

நறுக்கிய வெங்காயம் - 1 கப்

நறுக்கிய தக்காளி - 1 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி, புதினா - 1 கைப்பிடி

பச்சை மிளகாய் - 4

மட்டன் கைமா - 1/4 கிலோ

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 4 டம்ளர்

தேங்காய்ப்பால் - 1 டம்ளர்

சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா 1 சிட்டிகை

தாளிக்க:

பட்டை, ஏலக்காய், கிராம்பு - 2

வெந்தயம் - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

Kanji
Kanji

செய்முறை:

அரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும். சூடான குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் தாளிப்புப் பொருள்கள் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனோடு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து,அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பிறகு, கொத்தமல்லி, புதினா, கைமா, மஞ்சள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கலந்து விட்டபின், ஊறவைத்த அரிசி, பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடிவிடவும். நான்கு விசில் வரை விடலாம். பிறகு, வேகவைத்த கஞ்சியோடு தேங்காய்ப்பால், சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சிறிதுநேரம் கொதிக்கவிட்டு சூடாகப் பரிமாறலாம்."

கஞ்சியோடு ஹலீம் வியாபாரமும் ரமலான் மாதத்தில் சூடுபிடிக்கும். ஹைதராபாத் பாரம்பர்ய உணவுகளில் ஒன்றான இந்த ஹலீம், கடந்து மூன்று ஆண்டுகளாகச் சென்னையை ஆக்கிரமித்திருந்தது. விரதம் எடுக்கும் இந்த நேரத்தில் ஹலீம் நீண்ட நேரத்திற்குப் பசிக்காமல் வைத்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்த லாக் டௌன் நிலையில் ஹலீம் விற்பனை பற்றி சென்னை சேத்துப்பட்டில் உள்ள அபித் ரெஸ்ட்டாரன்ட் உரிமையாளர் அபித் ஜாஹித்திடம் பேசினோம்.

அபித் ஜாஹித்
அபித் ஜாஹித்

"நாங்கள் 2007-ம் ஆண்டுதான் முதல் முதலில் ஹலீம் உணவை விற்பனை செய்யத் தொடங்கினோம். ஆரம்பத்தில் இந்த உணவைப் பற்றி யாருக்கும் தெரியாததால் விற்பனை சுமாராகத்தான் இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை ரம்ஜான் மாதத்தில் நோன்புக் கஞ்சிதான் அதிகம் சாப்பிடுவார்கள். ஹலீம் ஹைதராபாத் உணவு. எனவே 2007-ல் அங்கிருந்து ஒரு சமையல்காரரை அழைத்து வந்து, ரம்ஜான் மாதத்தில் மட்டும் இந்த உணவைச் செய்து வந்தோம்.

அதனைத் தொடர்ந்து மூன்று வருடங்களில் ஹலீம் உணவு மக்களிடையே பிரபலமானது. தற்போது அந்த ஹைதராபாத் சமையல்காரரை, இங்கேயே வேலைக்கு அமர்த்தி வருடம் முழுவதும் கிடைக்கும் வகையில் ஹலீம் உணவைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

இது ரம்ஜான் ஸ்பெஷல் உணவு என்பதால், சாதாரண நாள்களைவிட ரம்ஜான் மாதத்தில் அதிகளவில் விற்பனை இருக்கும். ஆனால், லாக் டௌன் காரணத்தால் தற்போது, 70 சதவிகித விற்பனை குறைந்து விட்டது. அதாவது, முதலில் ஒரு நாளைக்கு 300 முதல் 400 கிலோ வரை விற்பனை செய்வோம். தற்போது 100 கிலோ வரைதான் விற்பனையாகிறது. தினமும் மதியம் 12.30 முதல் இரவு 8.30 வரை நாங்கள் விற்பனை செய்கிறோம். மாலையில், சிலர் நேரடியாகக் கடைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒரு சில இடங்களுக்கு மாலை 6.30 மணிக்கு மேல் டெலிவரி செய்கிறோம். ஆன்லைனில் தற்போது குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டும் விற்பனை செய்ய அனுமதி. அதிலும் குறைந்த அளவிலேயே ஆர்டர்கள் வருவதனால், உணவு தயாரிப்பதையும் குறைத்து விட்டோம். 250 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இஃப்தார் பேக்குகளை விற்பனை செய்கிறோம்" என்கிறார் அபித் ஜாஹித்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism