Published:Updated:

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - முருங்கை

முருங்கை
பிரீமியம் ஸ்டோரி
முருங்கை

முருங்கை என்பது வெறும் மரமல்ல; வீட்டிலேயே இருக்கும் வைத்தியர்.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - முருங்கை

முருங்கை என்பது வெறும் மரமல்ல; வீட்டிலேயே இருக்கும் வைத்தியர்.

Published:Updated:
முருங்கை
பிரீமியம் ஸ்டோரி
முருங்கை
உலகத்தில் சில தாவரங்கள் மட்டுமே அவற்றின் ஒவ்வொரு பாகமும் பலன் தரக்கூடிய வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று முருங்கை. தமிழகத்தின் வீடுகளில் அதிகம் காணப்படும் மரம் என்றே இதைச் சொல்லலாம்.

யார் வீட்டில் முருங்கை மரம் நிற்கிறதோ, அவர்கள் குடும்பத்தை நோய் சீக்கிரம் அண்டாது என்று நம் முன்னோர் சொல்வார்கள். ஏனென்றால், முருங்கை என்பது வெறும் மரமல்ல; வீட்டிலேயே இருக்கும் வைத்தியர். இது மறுக்க முடியாத நிஜம்!

Moringaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த முருங்கையின் தாவரவியல் பெயர், Moringa Oleifera. பல வகைகளில் பயன் தரும் முருங்கைக்கு நம் சித்த மருத்துவம் கொடுத்திருக்கும் பெயர் `பிரம்ம விருட்சம்.’ `எளியவர்களின் கற்பகத்தரு’ என்று தமிழ் இலக்கியம் முருங்கையைக் கொண்டாடுகிறது. சகல சத்துகளும் கொண்ட இயற்கை டானிக் என்று அறிவியல் வியக்கிறது.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - முருங்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொள்ளை நோய்க் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ள முருங்கையை உணவில் சேருங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்பேர்ப்பட்ட முருங்கையின் பூர்வீகம் நமது இந்தியாதான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே முருங்கை மரங்கள் இமயமலையின் தென்பகுதி அடிவாரங்களில் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். வட இந்தியாவின் பல பகுதிகளிலும், தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும், இலங்கையிலும், ஆசியக் கண்டத்தின் சில பகுதிகளிலும் பண்டைக் காலம் முதற் கொண்டே காணப்பட்ட தாவரம் முருங்கை. வறண்ட கண்டமான ஆப்பிரிக்காவிலும் முருங்கை ஆதித் தாவரமாகத்தான் கருதப்படுகிறது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில் முருங்கை குறிப்பிடப்பட்டிருக்கிறது. Sigru, Haritashaka, Bahulachada, Shobhanjana, Tiksnagandha - இவையெல்லாம் முருங்கையைக் குறிக்கும் சம்ஸ்கிருதச் சொற்கள். இந்தியில் முருங்கை Shajoma, Mungna ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. கன்னடத்தில் நுக்கே, மலையாளத்தில் முரிங்கா, தெலுங்கில் முனகா அகு. டிரம்ஸ் வாசிக்கும் குச்சி போல முருங்கைக்காய் இருப்பதால் ஆங்கிலத்தில் Drumstick ஆனது. Moringa, Horseradish Tree ஆகிய சொற்களும் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

முருங்கை
முருங்கை

11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னனான வீரசோழன் காலத்தில் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கண நூல் வீரசோழியம். எழுதியவர் புத்தமித்தரர். அவரது கூற்றுப்படி முருங்கா என்பது சிங்களச் சொல். அதிலிருந்துதான் முருங்கை என்ற தமிழ்ச்சொல் வந்தது என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு மாற்றுக் கருத்தை நம் தமிழ் ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். நம் தமிழ்க்குடிகள் உணவாகப் பயன்படுத்திய வற்றுள் முருங்கை முதன்மையானது. முருங்கை என்ற வார்த்தையே அதற்கு ஆதாரம். ‘முரி’ என்றால் ஒடிதல் என்று அர்த்தம். முருங்கு என்றால் ஒடிப்பது என்று பொருள். முருங்கும் கிளைகளைக் கொண்ட மரம், முருங்கை. அதாவது, எளிதில் ஒடியக்கூடிய கிளைகளைக் கொண்டதே முருங்கை மரம். ஆக, ‘முருங்கை’ என்ற தமிழ்ச் சொல்லே எல்லாவற்றுக்கும் அடிப்படை. இதிலிருந்தே, Moringa என்ற தாவரவியல் சொல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தமிழறிஞர்களின் வாதம்.

முருங்கை
முருங்கை

தமிழ் இலக்கியங்களிலும் முருங்கை மணம் வீசுகிறது. முருங்கை சங்க காலத் தாவரமாகக் கருதப்படுகிறது. அதற்குப் பல மேற்கோள்களைச் சொல்ல முடியும்.

சுரம்புல் லென்ற வாற்ற வலங்குசினை

நாரின் முருங்கை நவிரல் வான்பூச்

சூரலங் கடுவளி யெடுப்ப…

இது அகநானூற்றுப் பாடல். `பொலிவற்ற பாதைகளை உடைய வறண்ட நிலத்தில், முருங்கை மரத்தில் ஆடும் கிளைகளிலுள்ள வெண்மையான பூக்களைச் சுழற்றியடிக்கும் கடுமையான காற்று மேலெழும்புகிறது’ என்பது இந்த வரிகளுக்கான அர்த்தம். இது பாலைத்திணையில் வரும் பாடல். நீரெல்லாம் வற்றிப்போய், நிலமெல்லாம் வெடித்துக்கிடக்கும் அந்த வெப்பக் காட்டில், முருங்கை மட்டும் பூத்து நிற்கிறது. ஏனென் றால், எந்த வறட்சியான சூழ்நிலையிலும் காய்ந்துபோகாமல் பசுமையாக இருக்கக்கூடியது முருங்கை என்கின்றனர் தாவரவியலாளர்கள். அதைத்தான், நம் சங்கப் புலவர்கள் அன்றே பாடி வைத்திருக் கின்றனர்.

நெடுங்கான் முருங்கை வெண் பூத் தாஅய்…

இதுவும்கூட முருங்கையின் வெண்ணிறப் பூக்கள் பற்றிச் சொல்லும் அகநானூற்று வரிதான். சங்க இலக்கியமான குறிஞ்சிப் பாட்டில் கபிலர் வரிசைப்படுத்தும் தாவரங் களின் பட்டியலில் முருங்கை மரமும் இடம்பெற்றிருக்கிறது. தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், தங்களது படை வீரர்களுக்கு முருங்கைக்கீரையை முக்கியமான உணவாகக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் வீரர்களுக்கு உடல் வலிமை கிடைத்ததோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருந்தது. அவர்கள் முழு உத்வேகத்துடன் போர் புரிந்தனர் என்று தமிழ் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

கி.பி 10-ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட, பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களின் தொகுப்பாகிய நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முருங்கை குறித்த மேற்கோள் இருக்கிறது.

நின்ற பிரானே நீள்கடல் வண்ணா.

நீயிவள் தன்னை நின் கோயில்,

முன்றி லெழுந்த முருங்கையில்

தேனா முன்கை வளைகவர்ந் தாயே.

இதன் பொருள், `திருமலையில் நின்றருளும் பிரானே! பெரிய கடல்போன்ற வடிவையுடையவனே! தன் கோயில் முற்றத்தில் வளர்ந்திருக்கும் முருங்கை மரத்தின் தேனை எளிதாகக் கவர்வதைப் போல, நீ - இப்பெண்களினுடைய முன் கையிலுள்ள வளையல்களை எளிதாகக் கைக்கொண்டாயே’ என்பதுதான்.

முருங்கை, இந்தியாவின் இமயமலை அடிவாரப் பகுதிகளில் இருந்துதான் ஆப்கானிஸ்தானுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் பரவியதாகச் சொல்லப் படுகிறது. இன்றைக்கு முருங்கை ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளிலும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், சீனா, ஜப்பான் தவிர்த்து ஆசியாவின் பிற பகுதிகளிலும், சில லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், கரிபீயன் தீவுப் பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.

முருங்கை
முருங்கை

முருங்கை, எல்லாவிதமான மண்ணிலும் வளரக்கூடியது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. சுமார் 30 அடி உயரம் வரை வளரும். முருங்கை மரத்தின் ஒரு கிளையை ஒடித்து, மண்ணில் நட்டு, அதன் மேல் முனையில் சாணத்தை அப்பி வைத்து விட்டால் போதும். அந்த மரத்துண்டே, வேர்பிடித்து, கிளை பரப்பி வளர ஆரம்பித்துவிடும். வேகமாக வளரும் முருங்கை மரம், ஆறே மாதங்களில் காய் கொடுக்க ஆரம்பித்துவிடும். நல்ல வளமான ஒரு முருங்கை மரம், வருடத்துக்கு 200 முதல் 400 முருங்கைக்காய்கள் வரை கொடுக்கக் கூடியது.

உலக அளவில் அதிகமாக முருங்கை பயிரிடும் நாடு சந்தேகமே இல்லாமல் இந்தியாதான். நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் டன் முருங்கை விளைவிக்கப்படுகிறது. அதிக அளவில் முருங்கை விளைவிக்கும் மாநிலம் ஆந்திரம். இரண்டாம் இடத்தில் கர்நாடகம். தமிழகத்துக்கு மூன்றாவது இடம். ஆனால், அதிக ரகங்களில் முருங்கை பயிரிடப்படும் மாநிலம் என்றால் அது தமிழகம்தான். இங்கே யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை உள்ளிட்ட சில முருங்கை வகைகள் வளர்க்கப்படுகின்றன.

முருங்கை உணவு கலாசாரம்

முருங்கைக்காயை வைத்து நாம் பொதுவாகச் செய்வது சாம்பார், அவியல், பொரியல், குழம்பு. முருங்கைக் கீரை என்றால், சூப், பொரியல், அடை... இன்னும் சில பதார்த்தங்கள்.

முருங்கை
முருங்கை

வங்கதேசத்திலும் சாம்பார், குழம்பு, பருப்பு என்று சமையலில் முருங்கைக்காய் சேர்த்துக்கொள்கிறார்கள். முருங்கைக் காயைக் கொண்டு குருமா, கட்லெட் ஆகியன தயாரிக்கிறார்கள். கம்போடியாவில் Daum m’rum என்று அழைக்கப்படும் முருங்கைக்காயைக் கொண்டு விதவிதமாகச் சமைக்கிறார்கள். முருங்கையிலை கொண்டு தயாரிக்கப்படும் Korko என்ற சூப்பை எல்லோருடைய வீட்டிலும் சுவைக்கலாம்.

கொள்ளை நோய்க் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக்கொள்ள முருங்கையை உணவில் சேருங்கள்!

மாலத்தீவுகளில் மீனுடன் முருங்கையிலை, மற்ற மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு பதார்த்தம் பிரபலமானது. ரமலான் நோன்புக்காலத்தில் மாலத்தீவு வாழ் இஸ்லாமியர், அதிகாலையில் நோன்பு திறக்கும்போது சாதத்துடன், முருங்கையிலை சூப் சேர்த்து சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். முருங்கையிலை தூவப்பட்ட ஆம்லெட் அவர்களது விருப்பத்துக்குரிய உணவு.

ராஜஸ்தானிலும் குஜராத்திலும் முருங்கைக்காய், காரசாரமான குழம்பு வகைகளில் சேர்க்கப்படுகிறது. பஞ்சாபிலும் பாகிஸ்தானிலும் முருங்கைப்பூக்கள் சமையலில் அதிகம் சேர்க்கப்படுகிறது. நாம் வாசனைக்கு கறிவேப்பிலையைச் சேர்த்து தாளிப்பதுபோல, வடஇந்திய மக்களில் சிலர் முருங்கையிலையைச் சேர்த்துத் தாளிக்கிறார்கள். சில வடமாநிலங்களில் முருங்கையிலை சேர்த்து பக்கோடா செய்கிறார்கள்.

‘தாய் கறி’ - இது தாய்லாந்தின் முக்கியமான, பாரம்பர்யமான குழம்பு வகை. இறைச்சி அல்லது மீனுடன் தேங்காய்ப்பால், பூண்டு, வெங்காயம், பிற மசாலாக்கள், காய்கறிகளுடன் சமைக்கப் படும் இந்தக் கறியில் முருங்கைக்காயும் முக்கியமானதாகச் சேர்க்கப்படுகிறது.

முருங்கை
முருங்கை

Tinola - இது பிலிப்பைன்ஸில் செய்யப்படும் சூப் மாதிரியான குழம்பு வகை. இதில் சிக்கனுடன் முருங்கை யிலையைச் சேர்த்துச் சமைக்கிறார்கள். Marungay என்று அவர்களால் அழைக்கப்படும் முருங்கையிலை, அங்கே எல்லாவிதமான சூப்களிலும் குழம்புகளிலும் பெரும்பாலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

உலகின் சில பகுதிகளில் இயற்கை எரிவாயு தயாரிக்கவும் முருங்கையிலை பயன்படுத்தப்படுகிறது. முருங்கை விதைகளில் இருந்து Ben Oil எடுக்கப்படுகிறது. பல காலத்துக்குக் கெட்டுப்போகாத இந்த எண்ணெயை பர்ஃப்யூம் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

நம் பேச்சு வழக்கில் ஏகப்பட்ட முருங்கைப் பழமொழிகளும் இருக்கின்றன. ‘மாடு - வீட்டுக்குச் செல்வம்; முருங்கை - தோட்டத்துக்குச் செல்வம்’, ‘முருங்கை பருத்தால் தூணாகுமா?’, ‘வெந்து கெட்டது முருங்கை - வேகாமல் கெட்டது அகத்தி.’ இதன் பொருள், முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துகள் நமக்குக் கிடைக்காது. அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்துகள் கிடைக்காது.

‘பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டுவருவான்’ என்று கிராமத்தில் சொல்வார்கள். இதன் பொருள், நோயாளி பத்தியமாகச் சாப்பிட்டு குணம் பெற வேண்டும் என்பதற்காக முருங்கைக்காய் வாங்கிவரப் போனவன், மிகவும் தாமதமாக நோயாளி இறந்துபோன மூணாவது நாளில் பால் தெளிக்க அகத்திக்கீரை வாங்கி வந்தானாம்.

பொதுவாகக் கிணற்றுப் பக்கமாக முருங்கை மரம் நட்டு வைத்திருப்பார்கள். முருங்கை மரத்தின் வேரானது, கிணற்று நீரின் மட்டம் வரை நீண்டு சென்று, அந்த நீரில் இருக்கும் தீமை பயக்கக்கூடிய கழிவு களை உறிஞ்சி எடுத்துவிடும் என்பதே அதற்குக் காரணம்.

இறுதியாக இரண்டு பழமொழிகள். ‘பேய்க்கு வாக்கப்பட்டால் முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும்’, ‘மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொண்டது’. நிஜமாகவே முருங்கை மரத்தில் பேய் இருக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. சரி, முருங்கைக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்?

மரம் ஏறி விளையாடுவதென்பது அன்றைக்குச் சிறுவர்களின் பொதுவான வழக்கம். முருங்கை மரம் அதிக வலுவில்லாதது. எளிதில் முறிந்து விடும். அதில் சிறுவர்கள் ஏறி, மரம் முறிந்து கீழே விழுந்தால் அடி பலமாக இருக்கும் அல்லவா? அதனால்தான் நம் முன்னோர், பூச்சாண்டி காட்ட முருங்கை மரத்தில் கற்பனையாகப் பேயை உட்கார வைத்தார்கள். மற்றபடி முருங்கை மரத்துக்கும் பேய்க்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது!

மருத்துவத்தில் முருங்கை

முருங்கை மரத்தில் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்களைக் கொண்டவை. அதாவது உச்சி முதல் பாதம் வரை முருங்கை, ‘ஆல் இன் ஆல் ஆரோக்கிய ராஜா’தான்! அகத்தியர் குணவாகடம் நூலில் வரும் பாடல்களே அதற்கான உதாரணம்.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்

அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்

ஒருங்கையக லாககற் புடைவா ணகையே

முருங்கையின் பூவை மொழி.

முருங்கைப்பூவைப் பற்றிய பாடல் இது. முருங்கைப் பூவினால் பித்தம், பசியின்மை நீங்கும். கண்களுக்குக் குளிர்ச்சி உண்டாகும். ஆண்களுக்குத் தாது உற்பத்தி பெருகும் என்பது பாடலுக்கான பொருள். இதயத்துக்கு வலுவூட்டும் சக்தியும் முருங்கைப் பூவுக்கு உண்டு.

செரிமந்தம் வெப்பந் தெறிகுந் தலைநோய்

வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும் - மறமே

நெருங்கையிலை யொத்தவிழி நேரிழையே - நல்ல

முருங்கை யிலையை மொழி.

இது முருங்கைக்கீரை பற்றிய பாடல். முருங்கையிலையானது, மந்தம், உடல்சூடு, கண் நோய், மயக்கம், தலைவலி போன்றவற்றை நீக்கக் கூடியது. உடலுக்கு வலிமை சேர்த்து ரத்தசோகையைப் போக்கக்கூடியது. வயிற்றுப் புண்ணை ஆற்றக்கூடியது. குறிப்பாக, குழந்தை பெற்றெடுத்த பெண்கள், தாய்ப்பால் ஊற உணவில் முருங்கைக்கீரை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் வழக்கம்.

முருங்கை
முருங்கை

முருங்கைக்கீரையில் கேரட்டைவிட வைட்டமின் ஏ அதிகம். ஆரஞ்சுப்பழத்தைவிட வைட்டமின் சி அதிகம். பசலைக்கீரையைவிட இரும்புச்சத்து அதிகம். பாலைவிட கால்சியம் அதிகம். வாழைப்பழத்தைவிட பொட்டாசியம் அதிகம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கிறார்கள். முருங்கைப்பிஞ்சும் மருத்துவக் குணம் கொண்டதுதான். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், கால்சியத்தை அதிகரித்து எலும்பை, எலும்பு மஜ்ஜைகளை வலுவாக்கவும் முருங்கைப் பிஞ்சு உதவுகிறது.

100 கிராம் முருங்கைக்காயில் 88.2 கிராம் நீர்ச்சத்து உள்ளது. வறட்சியான பகுதிகளில்கூட, அதிக அளவு நீர் தேவைப்படாமல் வளரும் முருங்கையில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பது இயற்கையின் வரம்தான். தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ்,சோடியம், துத்தநாகம், மக்னீஷியம் போன்ற தனிமச் சத்துக்களும், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற உயிர்ச்சத்துகளும் முருங்கைக்காயில் இருக்கின்றன. முருங்கைக்காயானது மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். சளியைப் போக்கும். இந்த முருங்கைக்காயின் முற்றிய விதைகள்தாம், இயக்குநர் கே.பாக்யராஜ் பிரபலப்படுத்திய சமாசாரத்துக்கு உரியது. முருங்கைக் காம்பு, முருங்கை மரப்பட்டை, முருங்கை மரத்தில் வரும் பிசின், முருங்கை வேர் என்று ஒவ்வொன்றுக்குமே சித்த மருத்துவப் பலன்கள் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism