Published:Updated:

காலை உணவைச் சிறப்பாக்கும் `மல்டி மில்லட்' பான் கேக்! #HealthyRecipe

சிறுதானியங்களால் செய்யப்படும் ஆரோக்கியமான காலை உணவு.

Millet pan cake
Millet pan cake

அமெரிக்காவின் பாரம்பர்ய உணவான பான் கேக் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகத் தோன்றிய உணவு என்று கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் மிகவும் பழைமையான காலை உணவாக பான் கேக் உள்ளது. அதன் பாரம்பர்யத்தை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 26-ம் தேதி பான் கேக் தினமாக கொண்டாடப்படுகிறது. பான் கேக் என்பது தட்டையாக இருக்கும் ஒரு வகை கேக். பொதுவாக மைதா, சர்க்கரை, முட்டை, பால் சேர்த்து தயாரிக்கப்படும்.

American Pan cake
American Pan cake
Pixabay

அமெரிக்காவில் தோன்றியதாக இருந்தாலும், நமது பாரம்பர்ய உணவுப் பொருள்களிலும் சுவையிலும் பான் கேக்கைத் தயாரிக்க முடியும். சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் `சேவரி மல்டி மில்லட் பான்கேக்' ரெசிபியை அளிக்கிறார் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதா.

தேவையான பொருள்கள்:

சிறுதானியக் கலவை - ஒரு கப்

யோகர்ட் - 1/2 கப்

துருவிய கேரட், புரோக்கோலி (சேர்த்து) - 1/4 கப்

எள் - ஒரு டேபிள்ஸ்பூன்

Sanjeeta
Sanjeeta

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

இஞ்சித் துருவல் - 1/2 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* சிறுதானியங்களைக் கழுவி, சுத்தமான நீரில் இரவு முழுக்க ஊறவிடவும் சோளம், கம்பு, தினை, பார்லி போன்ற தானியங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

* ஊற வைத்த நீரை வடித்துவிட்டு, அதனுடன் யோகர்ட் சேர்த்து நைஸான மாவாக அரைத்துக்கொள்ளவும்.

* மாவைப் பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிளகுத்தூள், இஞ்சித் துருவல், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால், சிறிதளவு நீர் சேர்த்துக்கொள்ளலாம்.

Millets
Millets

* தவாவைச் சூடாக்கி, ஒரு கரண்டி மாவு ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விடவும்.

* பான் கேக்கின் மீது கேரட் துருவல், புரோக்கோலி துருவல், எள் சேர்க்கவும்.

* மிதமான தீயில் 1- 2 நிமிடங்கள் வேகவிடவும். பேன் கேக்கைத் திருப்பிப்போட்டு, ஒரு நிமிடம் வேகவிடவும். இதேபோல் மீதமுள்ள மாவிலும் பான் கேக்குகள் செய்துகொள்ளவும்.

* ஹெர்ப்டு காட்டேஜ் சீஸ் ஸ்பிரெட், புதினா - கொத்தமல்லி சட்னி அல்லது குளிர்ந்த யோகர்ட் ராய்த்தாவுடன் பரிமாறவும்.