Published:Updated:

காலை, மதிய, இரவு உணவு... இப்படி இருக்க வேண்டும்!

உணவில் உள்ள இனிப்பான பண்டங்கள் மற்றும் கறிகளை முதலிலும், கசப்பு சுவையுடைய பண்டங்களை இறுதியிலும், மற்ற சுவைகளைக் கொண்ட உணவுகளை இடையிலும் உண்ண வேண்டும்.

இன்று நாம் நமக்குப் பிடித்த உணவை உண்கிறோம். ஆனால், உணவை சரியான முறையில் உண்கிறோமா? சித்த மருத்துவர் S. செந்தில் கருணாகரன், உணவு உண்ண வேண்டிய முறை பற்றிச் சொல்கிறார் கேளுங்கள்.

சித்த மருத்துவர் S. செந்தில் கருணாகரன்
சித்த மருத்துவர் S. செந்தில் கருணாகரன்

'' 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்ற திருமூலர் வாக்கில் தொடங்கி 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்ற பழமொழி வரை அனைத்தும் உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் பெறப்படும் உடல்நலத்தையும் எடுத்துரைப்பதாகவே உள்ளன. இரண்டடிக் குறள், 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்' என்கிறது. முன்பு உண்ட உணவு செரிமானம் ஆகிவிட்டது என்பதை அறிந்து பசி எடுத்த பின், அடுத்த வேளை உணவு உட்கொள்ள வேண்டும்; அவ்வாறு உண்டால், ஒரு மனிதனின் உடலுக்குத் தனியாக மருந்து என எந்தவொரு தேவையும் இருக்காது, அந்த உணவே மருந்தாகும் என்று சொல்கிறது திருக்குறள்.

முறையான உணவை, சரியான நேரத்தில், சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம். உணவு உட்கொள்ளும் முறைகள் பற்றி 'ஆசாரக்கோவை' என்ற தமிழ் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புகள் பற்றிய விளக்கங்களைப் பார்ப்போம்.

ஆசாரக்கோவை பாடல்களும் அதன் விளக்கங்களும்!

Food
Food

1. கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;

சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்; இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று! - (பாடல் 23)

கருத்துரை

சாப்பிடும்போது சாய்ந்து படுத்துக்கொண்டோ, நின்றுகொண்டோ சாப்பிடக்கூடாது. விரும்பிய உணவாக இருந்தாலும் வயிறு புடைக்க உண்ணக்கூடாது. வெட்ட வெளியில் நின்று உண்ணக்கூடாது. அதேபோல் கட்டில் மேல் அமர்ந்தும் உண்ணக்கூடாது.

மருத்துவரின் விளக்கம்

சாப்பிடும்போது சம்மணமிட்டு அமர்ந்து, உட்கார்ந்திருக்கும் நிலைக்கு சிறிது கீழே உண்ணும் பாத்திரத்தை வைத்து உண்ண வேண்டும். இந்த பொசிஷனே உணவு இரைப்பைக்குத் தடையின்றிச் செல்ல ஏதுவானது.

கொரோனாவால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்னை... தீர்வு என்ன? #ExpertExplains

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப,

மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக,

துய்க்க, முறை வகையால், ஊண் - (பாடல் 25)

கருத்துரை

உணவில் உள்ள இனிப்பான பண்டங்கள் மற்றும் கறிகளை முதலிலும், கசப்பு சுவையுடைய பண்டங்களை இறுதியிலும், மற்ற சுவைகளைக் கொண்ட உணவுகளை இடையிலும் உண்ண வேண்டும்.

மருத்துவரின் விளக்கம்

நாம் உண்ணும் உணவில் அறுசுவை கூறுகளும் இருப்பது மிகவும் அவசியம். இனிப்புப் பண்டங்களை முதலில் எடுத்துக்கொள்ளும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும், செரிமானம் தூண்டப்படும். இந்தச் செயல்கள் உண்ட உணவு நன்கு செரிமானமாகி அடுத்த வேளை பசியெடுக்க உதவும். கசப்பான பொருள்களை உண்ட பிறகு மற்ற பொருள்களை உண்ணுவது சிரமம். ஆதலால் கசப்புச் சுவையை கடைசியில் உண்ண வேண்டும். இதற்கிடையில் மற்ற புளிப்பு, துவர்ப்பு மற்றும் உவர்ப்பு சுவையுடைய பொருள்களை உண்ணலாம்.

Food
Food
Pixabay

காலை உணவின் முக்கியத்துவம்

காலை உணவு என்பது அந்த நாளில் உடல் இயங்குவதற்கான சக்தியை அளிக்கக்கூடிய மூலப்பொருள். இரவு உணவு முடிந்து தோராயமாக 7 மணி நேர உறக்கத்துக்குப் பின் காலை உணவை எடுத்துக்கொள்ளத் தயாராகிறோம். இந்த, நீண்ட இடைவெளிக்குப் பின் உடல் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, நமது சீரண உறுப்புகள் உணவைப் பெற்று ஜீரணித்து சக்தியை உடலுக்கு அளிக்கத் தயாராக இருக்கும். மேலும் உடலுறுப்புகள் மற்றும் மூளை இயங்க குளுக்கோஸ் மிகவும் அவசியம். இந்தக் குளுக்கோஸ் காலை உணவிலிருந்து உடலால் உட்கிரகிக்கப்படும். ஒருவேளை காலை உணவைச் சாப்பிடாமல் விட்டால், மூளை தனது ஆற்றலை இழந்து சோர்வடையும்.

தொடர்ந்து காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு சர்க்கரைநோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, காலை உணவைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்புத்திறனைக் குறைத்து COVID-19-க்கு வழிவகுக்கும் புகைப்பழக்கம்!

காலை உணவு எப்படி இருக்க வேண்டும்?

எளிதில் செரிமானமாகி உடலுக்கு நன்கு சக்தி அளிக்கக்கூடிய மிதமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இட்லி, கஞ்சி வகைகள், நீராகாரம், ஆவியில் வேகவைத்த உணவுகள் சிறந்தவை.

புளிப்புச் சுவையுடைய பழங்களைத் தவிர மற்ற பழங்களை காலையில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் புளிப்புச் சுவையுடைய பழங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால் அவை வயிற்றுப்புண்ணை உண்டு பண்ணும் வாய்ப்புண்டு. அல்சர் இருப்பவர்கள் வாழைப்பழம், இளநீர், டீ மற்றும் காஃபி ஆகியவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

food
food

பிறவேளை உணவுகள்

மதிய உணவு என்பது இனிப்பு, பழங்கள், காய்கறிகள், பருப்பு சாம்பார், ரசம் மற்றும் மோர் என்ற வரிசையில், நிறைவான உணவாக இருப்பது அவசியம்.

இரவு உணவும், காலை உணவைப்போல எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருக்க வேண்டும். உணவுக்குப் பின் சிறிய நடைப்பயிற்சி சிறந்தது. இரவு உணவுக்குப் பின் டீ, காபி போன்ற பானங்களைத் தவிர்ப்பது நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை தரும்.

பிற பொதுவான ஆலோசனைகள்

உணவு உட்கொள்ளும் அரைமணி நேரம் முன்பு டீ அல்லது காபி போன்ற எந்த ஒரு பானத்தையும் அருந்தக் கூடாது. அதேபோல், உணவு அருந்திய பின் ஒரு மணி நேரம் இடைவெளி விட்ட பிறகு இதுபோன்ற பானங்களை அருந்த வேண்டும்.

இன்று பலர் அறுசுவைகளில் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடைய உணவுகளை உண்பதில்லை. இது முற்றிலும் தவறு. அவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவை நன்கு மென்று, கூழாக்கி உமிழ்நீருடன் சேர்த்து விழுங்க வேண்டும். உணவு உண்ணும்போது இடையிடையே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும். விருப்பமான உணவாக இருந்தாலும், வயிறு நிறைய உண்ணாமல் முக்கால் வயிறு அளவிற்கு உண்பதே நலம்'' என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு