Published:Updated:

``கேரளாவிலிருந்து வந்து தமிழகத்திலும் டிரெண்டான ஃபுல்ஜார் சோடா’’ - வீட்டிலும் செய்யலாமே!

சு.சூர்யா கோமதி

முக்கிய நகரங்களில் மட்டுமே ஃபுல்ஜார் சோடா கிடைக்கிறது என்பதால், அந்த அனுபவத்தை எல்லோருக்கும் கிடைத்திருக்க வாய்பில்லை!``

ஃபுல்ஜார் சோடா
ஃபுல்ஜார் சோடா

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு அடுத்தபடியாகக் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஹாட் என்ட்ரி கொடுத்து வரவேற்பைப் பெற்றிருக்கிறது ஃபுல்ஜார் சோடா சேலஞ்ச். வழக்கமாக ஜூஸ் குடிக்கும் க்ளாஸ் ஒன்றில் சோடாவை நிரப்பி, பச்சை மிளகாய், புதினா, இஞ்சி கலவை நிரம்பிய இன்னொரு சின்ன க்ளாஸை சோடா நிறைந்த க்ளாஸுக்குள் வைக்கிறார்கள். காரம், புளிப்பு இனிப்பு என தனிச்சுவையுடன் க்ளாஸ் முழுவதும் பொங்கி வரும் சோடாவை முழுவதுமாக ஒரே மூச்சில் குடித்து முடிக்க வேண்டும் என்பதுதான் இந்த சேலஞ்ச்.

சோடா
சோடா

கேரளாவில் ரம்ஜான் சமயத்தில் அதன் ஸ்பெஷலாகக் களமிறங்கிய இந்த ஃபுல்ஜார் சோடாவை அங்கு இருக்கும் செலிபிரிட்டிகள் தாங்கள் குடிப்பது போன்று வீடியோவாக எடுத்து தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட, தமிழ்நாட்டிலும் பரவியது ஃபுல்ஜார் சோடா வைரல். தற்போது தமிழ்நாட்டில் செலிபிரிட்டிகள் முதல் சராசரி மக்கள் வரை. ஃபுல்ஜார் சோடா சேலஞ்சை முயன்று அதன் வீடியோவைத் தங்கள் பக்கத்தில் பதிவு செய்துவருகின்றனர்.

முக்கிய நகரங்களில் மட்டுமே ஃபுல்ஜார் சோடா கிடைக்கிறது என்பதால், அந்த அனுபவத்தை எல்லோருக்கும் உருவாக்கித்தரும் நோக்கத்தோடு வீட்டிலேயே ஃபுல் ஜார் சோடா செய்ய கற்றுத்தருகிறார் சமையற்கலை நிபுணர் சரஸ்வதி அசோகன்.

ஃபுல் ஜார் சோடா குடிக்கும்போதும், புரை ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.
சரஸ்வதி அசோகன்.

ஃபுல்ஜார் சோடா :

தேவையானவை :

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளாய் - 3

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

புதினா- ஒரு கைப்பிடி அளவு

உப்பு - 1 டீஸ்பூன்

சோடா- ஒரு பெரிய க்ளாஸ் அளவு

தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதை - ஒரு டீஸ்பூன்

செய்முறை : ஸ்டெப் - 1 :

இஞ்சி, பச்சை மிளகாய், புதினா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் சப்ஜா விதை, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். இதை ஒரு சிறிய கண்ணாடி க்ளாஸில் ஊற்றவும்.

ஸ்டெப் - 2 :

பெரிய க்ளாஸ் முழுவதும் சோடாவை நிரப்பி ஏற்கெனவே கலந்து வைத்துள்ள இஞ்சிக் கலவை நிரம்பிய க்ளாஸ்ஸை இதன் உள்ளே இடவும்.

பொங்கி வரும் ஃபுல்ஜார் சோடா குடிக்கத் தயார்.