லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

வீட்டிலேயே ஹோட்டல் சுவை... #HowToMakeAtHome

வடகறி
பிரீமியம் ஸ்டோரி
News
வடகறி

- ஆர்.எல்

மீண்டும் ஊரடங்கு... நிறைய கட்டுப்பாடுகள்... ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி... அதிலும் பெரும்பாலான உணவகங்களில் குறிப்பிட்ட அயிட்டங்கள் மட்டுமே கிடைக்கின்றன. அடிக்கடி ஹோட்டலில் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு இது கொஞ்சம் சிரமமான காலகட்டம்தான். அதற்கென்ன... உங்கள் விருப்ப உணவுகளை ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் என்கிறார் செஃப் வினோத்குமார்.

பலருக்கும் விருப்பமான பிரபல ஹோட்டல் ரெசிப்பிகளின் செய்முறைகளை இந்த இதழில் ஆங்காங்கே கொடுத்திருக்கிறார்.

 வினோத்குமார்
வினோத்குமார்

வடகறி

தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - 2, கிராம்பு - 2, பிரியாணி இலை - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே ஹோட்டல் சுவை...
#HowToMakeAtHome

செய்முறை: பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சிறிய வடைகளாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்துப் பொன்னிற மாக வதக்கவும்.

தக்காளியை தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்துச்சேர்க்கவும். பின்னர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் தயாராக உள்ள வடைகளை சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

பேபிகார்ன் ஃப்ரை

தேவையானவை: பேபிகார்ன் – கால் கிலோ, எலுமிச்சைப்பழச் சாறு – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – தேவைக்கேற்ப, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், கடலைமாவு, அரிசிமாவு – தலா ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம், பெரிய தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2 மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தேவைக்கேற்ப, தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், செட்டிநாடு மசாலாத்தூள் (டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவை யான அளவு

வீட்டிலேயே ஹோட்டல் சுவை...
#HowToMakeAtHome

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொதிக்கவைத்து, கழுவிய பேபி கார்னை 2 நிமிடங்கள் போட்டு பின் தண்ணீரை வடிகட்டவும். கார்னை நீளவாக்கில் வெட்டவும்.

ஒரு தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி – பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபிகார்ன், சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறிக் கொள்ளவும். பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுத்து தனியே வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மீதமுள்ள இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, மீதமுள்ள மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், செட்டிநாடு மசாலாத்தூள், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி, பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்க வும். இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, இறக்கும்போது கொத்தமல்லி, வறுத்த கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைடிஷ்.

டிபன் சாம்பார்

தேவையானவை: பாசிப்பருப்பு - கால் கப், தக்காளி - 2, கேரட் - ஒன்று, கத்திரிக்காய் - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று, கீறிய பச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப), புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் - 10, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெல்லம் - ‍‍சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - ஒரு கப், தனியா (மல்லி) - ஒரு கப், சீரகம் - ‍ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ‍- 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வெந்தயம் - ‍ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, பெருங்காயம் ‍- சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், தண்ணீர் - அரைப்பதற்குத் தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

வீட்டிலேயே ஹோட்டல் சுவை...
#HowToMakeAtHome

செய்முறை: கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். புளியைத் தண்ணீ ரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி அதனுடன் மஞ்சள்தூள், பெருங் காயத்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள வற்றைச் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வறுத்து அரைத்த விழுது, காய்கறிகள், புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். கடைசியாக வெல்லம், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

வத்தக்குழம்பு

தேவையானவை:

சுண்டைக்காய் வற்றல் – கால் கப், நல்லெண்ணெய் ‍– 100 மில்லி, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், மல்லித்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு – கால் டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 12, புளித்தண்ணீர் – சிறிதளவு, பூண்டு – 6 பல், உப்பு – தேவையான அளவு.

வீட்டிலேயே ஹோட்டல் சுவை...
#HowToMakeAtHome

செய்முறை:

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து வறுக்கவும். பிறகு அதனுடன் சின்ன வெங்காயத்தை முழுதாகச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும். அதனுடன் சுண்டைக்காய் வற்றல் சேர்த்து பிறகு மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க்கவும். கறிவேப்பிலை மற்றும் புளிக்கரைசல் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு போட்டுக் கொதிக்க விடவும். குழம்பு பத்து நிமிடங்களுக்கு நன்றாகக் கொதித்தால்தான் அது கெட்டியாகி எண்ணெய் தளர்ந்து சாப்பிடும் பதத் துக்கு வரும். பிறகு எடுத்துப் பரிமாறவும்.

பனீர் பட்டர் மசாலா

தேவையானவை: பனீர் - 200 கிராம், பச்சை பட்டாணி - அரை கப், வெண்ணெய் - 100 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, பால் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் (அ) கெட்சப் - ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மேத்தி ‍ - ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - 5, உப்பு - தேவையான அளவு.

வீட்டிலேயே ஹோட்டல் சுவை...
#HowToMakeAtHome

செய்முறை: முதலில் பனீரை தேவை யான அளவில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், ஏலக்காய், தக்காளியை வேகவைத்து நன்கு அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பால், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தக்காளி சாஸ் ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு உருக்கி, அதில் அரைத்த கலவை, இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு பச்சை வாடை போகும்வரை வதக்கவும். கலந்து வைத்த கலவையை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கடைசியாக பனீரை போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். கஸ்தூரி மேத்தி, வெண்ணெய் போட்டு மூடிவைக்கவும். சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்.