Published:Updated:

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: சீஸ்

நீண்ட பயணங்களின்போது, உணவாகப் பாலை எடுத்துக்கொண்டு செல்வது கற்கால வழக்கம்.

பிரீமியம் ஸ்டோரி

சீஸ் தோசை, சீஸ் மசால் தோசை, சீஸ் இட்லி, சீஸ் பணியாரம், சீஸ் அடை, சீஸ் ஊத்தப்பம், சீஸ் புட்டு என்று இன்றைக்குத் தென்னிந்திய உணவுக் கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்துவிட்டது சீஸ். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சீஸ் என்பது உணவுத் தயாரிப்பின் அடிப்படை பொருள். அங்கே அதன் சந்தை மிகப்பெரியது. உலகமயமாக்கலின் விளைவாக, இன்றைய சர்வதேச உணவுக் கலாசாரத்தில் சீஸ் என்பது தவிர்க்க முடியாத ஒரு பொருளாக வியாபித்து நிற்கிறது. ஆம், `சீஸ் இன்றி அமையாது நவீன உணவு’ என்றே சொல்லலாம். ஆனால், சீஸின் வரலாறு மிக மிக மிகப் பழைமையானது.

முகில்
முகில்

புதிய கற்காலம் என்றழைக்கப்பட்ட கி.மு 7000 காலகட்டத்தில், யாரோ ஒரு முகமறியா, பெயர்தெரியா பிரகஸ்பதி, Cheese என்ற பாலாடைக்கட்டி போன்ற ஒன்றைக் கண்டுபிடித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எப்படி?

நீண்ட பயணங்களின்போது, உணவாகப் பாலை எடுத்துக்கொண்டு செல்வது கற்கால வழக்கம். அப்படி ஒரு நாடோடி, ஒரு பை நிறைய பாலை எடுத்துக்கொண்டு, ஒட்டகம் மீதேறி பாலைவனத்தில் பயணம் செய்தார். அந்தப் பை மாட்டுத்தோலால் ஆனது. அதுவும் மாட்டின் வயிற்றுப் பகுதியைச் சேர்ந்த தோலால் உருவாக்கப்பட்ட பை. பயணத்தின் இடையே அந்த நாடோடிக்குப் பசி, தாகம் எடுத்தது. எனவே, பையைப் பிரித்தார். உள்ளே ஊற்றிவைக்கப்பட்ட பாலைப்பார்த்த அவருக்குப் பயங்கர ஆச்சர்யம். திரவ வடிவ பால், வேறு வடிவில் மாறிப்போயிருந்தது. அதாவது பையின் கழுத்துப் பகுதியில் அரை திட நிலையில் பசை மாதிரியான பொருள் சேர்ந்திருந்தது. மீதமிருந்த பாலும் சற்றே நிறம் மாறியிருந்தது.

அந்தப் பசை போன்ற பொருளை எடுத்துச் சுவைத்துப் பார்த்த நாடோடி, குஷியானார். இதுவரை அவர் அறிந்திராத சுவை. மீதிப் பாலையும் எடுத்துச் சுவைத்துப் பார்த்தார். அதுவும் வேறு சுவையில் நன்றாகவே இருந்தது. உலகின் முதல் சீஸ் – இதுபோன்ற ஒரு நாடோடிப் பயணத்தில்தான் எதேச்சையாக உருவாகியிருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது. ஏனென்றால், பாலூட்டிகளின் - குறிப்பாக கன்றுகளின் வயிற்றுப் பகுதியில் ரெனெட் (Rennet) என்ற நொதிகளின் கலவை உண்டு. அம்மாவிடம் குடிக்கும் பாலைச் செரிக்க இந்த நொதிகளின் கலவை, கன்றுக்குட்டிகளுக்கு உதவுகிறது. பாலில் இருந்து கொழுப்பு நிரம்பிய தயிரையும் மற்ற சத்துகள் நிரம்பிய திரவத்தையும் தனியாகப் பிரித்தெடுக்கும் திறன் ரெனெட்டுக்கு உண்டு. இன்றைக்குக்கூட சீஸ் தயாரிப்பில் ரெனெட் பயன்படுத்தப்படுகிறது.

நாடோடி கொண்டுசென்ற மாட்டின் வயிற்றுப்பகுதி தோலால் ஆன பையில் இருந்த ரெனெட் என்கிற நொதிகளின் கலவைதான், அந்தப் பாலில் வேதியியல் மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. ஒட்டகம் நடக்க நடக்க, பை குலுங்கக் குலுங்க, சூரியனின் வெப்பமும் சேர்ந்து சீஸும் திரவமும் தனித்தனியாகப் பிரிந்திருக்கிறது. இதை வேதியியல்பூர்வமாக மனிதன் புரிந்துகொண்டது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான். ஆனால், பாலிலிருந்து இதுபோல சுவையான சீஸ் தயாரிக்கலாம் என்பதை அனுபவபூர்வமாக கி.மு ஏழாம் நூற்றாண்டிலேயே மனிதன் தெரிந்துகொண்டான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கண்டத்தில், இன்ன ராஜ்ஜியத்தில், இந்தப் பெயர்கொண்ட ஊரில், இன்னார்தான் சீஸ் தயாரிக்கும் வித்தையை உருவாக்கினார் என்று உறுதியாகச் சொல்லும் வரலாறெல்லாம் கிடையாது. ஏனென்றால், பால் என்பது உலகின் பொதுவான உணவு. கால்நடை வளர்ப்பு, உலகின் பொதுத்தொழில். அதனால் பல்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு தேசங்களில், வேறு வேறு மனிதர்கள் பாலில் இருந்து பாலாடைக் கட்டியைப் பிரித்தெடுக் கும் வித்தையைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.

சீஸ்
சீஸ்

கி.மு எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோமர் எழுதிய மகா காவியமான ஒடிஸியில், `சைக்ளோப்ஸ்’ என்ற நெற்றியில் ஒற்றைக்கண்கொண்ட அரக்கன், ஆட்டுப் பாலிலிருந்து சீஸ் தயாரித்து சேகரித்து வைத்ததாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கி.மு நான்காம் நூற்றாண்டில் சுமேரியர்கள், பாலிலிருந்து சீஸ் போன்ற பொருள்களைப் பிரித்தெடுத்து உண்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கி.மு 2000 ஆண்டைச் சேர்ந்த எகிப்தின் பழைமையான கல்லறை ஓவியங்களில் சீஸ் தயாரிப்பது போன்ற ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. ஆதி எகிப்தில் சீஸ் என்பது கடவுளுக்கான, மிகவும் புனிதமான பொருளாக மதிக்கப் பட்டிருக்கிறது. அதனால் சீஸ் தயாரிக்கும் வித்தையை மதகுருமார்கள் மட்டுமே தெரிந்துவைத்திருந்தார்கள். அதை ரகசிய மாகப் பாதுகாக்கவும் செய்தார்கள்.

ரோமானிய சாம்ராஜ்ஜியத்திலும் கிரேக்க சாம்ராஜ்ஜியத்திலும் சீஸ் என்பது வசதிமிக்கவர்களின் உணவாகத்தான் கருதப் பட்டது. கிரேக்கப் புராணங்கள், கிரேக்கக் கடவுளான Aristaeus என்பவரே சீஸைக் கண்டுபிடித்தவர் என்று சொல்கிறது. ரோமானியர் சீஸ்களை வேறு வேறு விதங்களில் தயாரிக்க முடியும் என்று அதை அடுத்த கட்டத்துக்குக்கொண்டு சென்றார்கள். ரோமானியர்களின் சமையலறையில் சீஸ் தயாரிப்பதற் கென்றே, Caseale என்று ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமின் வரலாற்றாளரான ப்ளினி எழுதிய `நேச்சுரல் ஹிஸ்டரி’ என்ற நூலிலிருக்கும் குறிப்பின்படி, சீஸ் ஐரோப்பா வின் பல பகுதிகளிலிருந்தும் ரோம் நகரத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டது தெரியவருகிறது. விதவிதமான சீஸ்களை சுவை பார்ப்பது என்பது அங்கே கௌரவத் துக்குரிய, செல்வாக்கை வெளிக்காட்டும் விஷயமாகக் கருதப்பட்டது.

பாலிலிருந்து சீஸைப் பிரித்து, அழுத்தம் கொடுப்பதன் மூலமாக, சீஸ் கட்டிகளாகச் சேகரிக்கும் தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்களும் ரோமானி யர்களே. அங்கிருந்தே ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கும் இந்தத் தொழில்நுட்பம் பரவியது. பிறகு, ஐரோப்பிய மக்களின் அடிப்படை உணவாக ரொட்டியும் சீஸும் மாறிப்போனது. ஆனால், சீஸைக் கெட்டுப்போகாமல் நீண்ட நாள்களுக்குப் பாதுகாப்பது எப்படி என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான், சீஸைப் பல நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் நுட்பத்தை, ஐரோப்பிய மதகுருமார்கள் கண்டுபிடித்தார்கள். அதில் ஒரு நுட்பம்தான் உப்பு சேர்த்து சீஸ் தயாரிப்பது. பலவிதமான சுவைகளில் வகை வகையான சீஸ்களைத் தயாரித்ததும் மதகுருமார்களே.

இரண்டாம் பிலிப் அகஸ்டஸ் - பிரான்ஸின் முதல் மன்னர், 12-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸை ஆட்சி செய்தவர். நவார்ரெ என்ற ராஜ்ஜியத்தைச் சேர்ந்த Blanche என்ற அரச குடும்பத்துப் பெண், மன்னர் பிலிப்பைக் கவருவதற்காக 200 டின்களில் சீஸ் அனுப்பிவைத்திருக்கிறார் என்று செய்தி உண்டு. 15-ம் நூற்றாண்டில் பிரான்ஸின் ஆர்லியன்ஸை ஆண்ட மன்னர் சார்லஸ், தன் அரண்மனையைச் சேர்ந்த ராஜ குடும்பத்துக்குப் பெண் களுக்கெல்லாம் கிறிஸ்துமஸ் பரிசாக விதவிதமான சீஸ்களைக் கொடுத்திருக்கிறார். கி.பி 1643-ல் பிரான்ஸுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே நடந்த போரில் பிரான்ஸ் வென்றது. வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரெஞ்சு வீரர்களுக்கெல்லாம் சீஸ் வழங்கப்பட்டது. 1792, செப்டம்பர் 21 அன்று மரணமடைந்த பிரான்ஸ் மன்னர் 16-ம் லூயிஸின் கடைசி ஆசை என்ன தெரியுமா? Brie என்ற மென்மையான வகை சீஸ் சாப்பிட வேண்டும். அந்தச் சுவை நாக்கில் இருக்கும்போதே இறந்துபோக வேண்டுமென்பதுதான். இப்படி சீஸ் என்பது மேன்மைக்குரிய பொருளாக எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கிறது என்பது வரலாறு சொல்லும் உண்மை.

Cheese என்ற சொல்லின் மூலம், பழைய லத்தீன் வார்த்தையான Casues. அதே வார்த்தை நவீன லத்தீனில் Casein என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள், ‘நொதிக்கச் செய்தல்’ அல்லது `புளிக்கச் செய்தல்’. இதையே பழைய ஆங்கிலத்தில் Cese என்று சொல்லியிருக்கிறார்கள். ஜெர்மன் மொழியில் Kase என்று சொல் கிறார்கள். ரோமானியர் போர்களுக்குச் செல்லும்போது சீஸைக் கையோடு எடுத்துச்செல்வதுபோல, கடினமான சீஸ் கட்டிகளாகத் தயாரித்தார்கள். அதற்கு அவர்கள் வைத்த பெயர் Caseus formatus. `வார்த்தெடுக்கப்பட்ட சீஸ்’ என்று அர்த்தம்.

13-ம் நூற்றாண்டில், பிரான்ஸின் டெசெர்வில்லெர்ஸ் நகரத்தில், பெண்கள் எல்லாம் சேர்ந்து சீஸுக்கான கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பித்தார்கள். உலகின் முதல் சீஸ் கூட்டுறவுச் சங்கம் இதுதான். அப்போ தெல்லாம் சீஸ் தயாரிப்பு என்பது பெண்களுக்கான பண்ணைத் தொழில். ஐரோப்பிய தேசங்கள் எங்கும் பெண்கள் குடிசைத் தொழில் போல சீஸ் தயாரிப்பு மூலம் வெற்றிகரமாகப் பணம் சம்பாதித்தார்கள். 18, 19-ம் நூற்றாண்டுகளில் உலகின் முதல் தொழிற்புரட்சி நடந்தபோது, எங்கெங்கும் இயந்திரங்கள் கால் பதித்த வேளையில், சீஸும் பெண்களின் கையிலிருந்து இயந்திரங்களின் கைகளுக்கு இடம் மாறியது.

கி.பி 1815-ல் சுவிட்சர்லாந்தில் உலகின் முதல் சீஸ் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. இது மிகச்சிறிய தொழிற்சாலை. கி.பி 1851-ல் ஜெஸே வில்லியம்ஸ் என்ற பிரெஞ்சு பண்ணைக்காரர், நியுயார்க்கில் மிகப்பெரிய அளவில் சீஸ் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார்.

சீஸ் மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பில் மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி, 19-ம் நூற்றாண்டில் பிரான்ஸின் விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டரால் ஏற்பட்டது. கறந்த பாலையோ, சுத்தமான கள்ளையோ நீண்ட காலத்துக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்று தெரியாமல் காலம் காலமாக உலகமே தவித்துக்கொண்டிருந்தது. வேதி நொதித்தல் நிகழ்வு நடக்கும்போது அதில் நுண்ணுயிர்களின் பங்கு இருப்பதை பாஸ்டர் கண்டுபிடித்தார். `பாலைக் குறிப்பிட்ட வெப்பத்தில் சூடாக்குவதால், அதில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கலாம். அதேநேரம் பிற ஊட்டச்சத்துகள் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்தால் பால் எளிதில் கெட்டுப் போகாது’ என்ற பாஸ்டரின் அவசியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே வைக்கப்பட்டது. Pasteurization. இதற்குப் பிறகு சீஸ் தயாரிப்பில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. எளிதில் கெட்டுப்போகாத சீஸ் கட்டிகள், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்ய ஆரம்பித்தன. இரண்டாம் உலகப் போர் நேரத்தில் சீஸின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, பண்ணையில் சீஸ் தயாரிப்பு என்பது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. சீஸ் தொழிற் சாலைகள் பெருகின.

சீஸ்
சீஸ்

ஆசிய மக்களைப் பொறுத்தவரையில் சீஸ் என்பது சற்றே அந்நியமான உணவுப் பொருள்தான். சென்ற நூற்றாண்டு வரையில் பால், மோர், தயிர், வெண்ணெய், நெய் அளவுக்கு சீஸ் இங்கே உபயோகத்தில் இல்லை. இப்போதுதான் சீஸும் அவசிய உணவுப் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.

Sani, Bai ஆகிய இனத்தைச் சேர்ந்த சீனர்கள் மட்டும், பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் ரஷன் (Rushan) என்ற வகை சீஸைத் தங்களது அடிப்படை உணவுப் பொருளாக வைத்திருந்தார்கள். இந்த ரஷன் சீஸுக்குப் பழைமையான வரலாறு உண்டு. ரஷன் சீஸ் தயாரிப்பு முறையைப் பின்பற்றிதான் மங்கோலியர்களும் திபெத்தியர்களும் சீஸ் தயாரிக்கிறார்கள்.

காலனி ஆதிக்கக்காலத்தில்தான் சீஸ், இந்தியாவுக்குள் எட்டிப்பார்த்தது. ரொட்டியும் சீஸும் இல்லாமல் ஐரோப்பியருக்குச் சாப்பாடு இறங்காதே! ஆனால், இங்கே அதிக அளவில் பயன்பாட்டில் இருந்தது வெண்ணெய். ஐரோப்பியருக்கு வெண்ணெய் என்பது புதிதான ஒன்றாகத் தெரிந்தது. அவர்கள் பல நேரங்களில் நெய்யைக்கூட வெண்ணெய் என்றே நினைத் தார்கள். பல குறிப்புகளில் butter என்று அவர்கள் குறிப்பிட்டது, நெய்யைத்தான்.

சரி, வெண்ணெய்க்கும் சீஸுக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்?

பாலை பாக்டீரியா மூலம் நொதிக்கச் செய்து, அதிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது சீஸ். பாலை அல்லது தயிரைக் கடைந்து, அதில் கிடைக்கும் க்ரீம் கொண்டு தயாரிக்கப்படுவது வெண்ணெய்.

The moon is made of a greene cheese. இது கி.பி 1546-ல் ஜான் ஹேவுட் என்ற ஆங்கில எழுத்தாளர் சொன்ன புகழ்பெற்ற வாசகம். அதாவது சீஸால் ஆனது நிலா. இங்கே greene என்பது நிறத்தைச் சொல்லவில்லை. புதிய, ஃப்ரெஷ்ஷான சீஸ் என்று பொருள் தருகிறது. நிலவில் பாட்டி உட்கார்ந்து வடை சுடும் கதை நமக்குரியதுபோல, மேற்கத்திய நாட்டுக் குழந்தைகள் சீஸைக் கொண்டுதான் நிலவைச் செய்திருக்கிறார்கள் என்று நம்பினார்கள். நம்பிக்கொண்டிருக் கிறார்கள். பல மொழிகளில் பாரம்பர்யக் கதைகளில் சீஸினால் ஆன நிலா என்பது இடம்பெற்றிருக்கிறது. 2002-ம் ஆண்டில், நிலா, சீஸினால் ஆனது என்று நாசாவால் நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்று பரபரப்பாகச் செய்தி பரவியது. அன்றைய தேதி, ஏப்ரல் 1.

உலகப்புகழ் பெற்ற சீஸ் வகைகள்

Mozzarella: உலக அளவில் எல்லோரும் அதிகம் விரும்பும், அதிக அளவில் சுவைக்கும், நம்பர் ஒன் சீஸ் இது. பூர்வீகம் இத்தாலி. அங்கே எருமைப் பாலில் பாரம்பர்ய முறைப்படி தயாரிக்கப்படுகிறது. இன்று பீட்சாவின் டாப்பிங்குக்குத் தக்காளி எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு மோஸரெல்லா சீஸும் அவசியம். 16-ம் நூற்றாண்டு சமையல் புத்தங்களிலேயே இந்த சீஸ் குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தாலியருக்கு மட்டுமல்ல, அமெரிக்கர் களுக்கும் மிகவும் பிடித்த சீஸ் இதுவே. மோஸரெல்லா சீஸிலேயே எருமைப் பாலில் தயாரித்தது, பசும்பாலில் தயாரித்தது, அதிக ஈரப்பதம் இல்லாதது என்று சில வகைகள் இருக்கின்றன. கொஞ்ச காலத்துக்கு வைத்து உபயோகிக்கும்படியான மோஸரெல்லா சீஸ்கள் கிடைக்கின்றன. ஆனால், இத்தாலியர் அன்றன்றைக்குத் தயாரிக்கப்பட்ட மோஸரெல்லா சீஸைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இது ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

சீஸ்
சீஸ்

Gouda: இதுவும் மிகவும் பழைமையான, பாரம்பர்யம்கொண்ட டச்சு நாட்டு சீஸ். ஹாலந்தைச் சேர்ந்த பண்ணைக்காரர்கள் இந்த சீஸை அறிமுகம் செய்தார்கள். அவர்கள் இதை Gouda என்னும் டச்சு நகரத்துக்கொண்டு சென்று விற்றார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் காலை 10 மணி முதல் 12.30 வரை அங்கே இந்த சீஸ் வியாபாரம் நடந்தது. நம்மூர் மாட்டுச் சந்தையில் துணிக்குள் விரலைப் பிடித்து விலை பேசுவதுபோல, அங்கே Handjeklap என்ற பேரம் பேசும் முறையைக் கையாண்டார்கள். சந்தையெங்கும் கிலோ கணக்கில் சீஸ் கட்டிகள் குவித்துவைக்கப்பட்டிருக்கும். அதை வாங்க வருபவர்கள் சுவை பார்ப்பார்கள். பிடித்திருந்தால் கைகளைத் தட்டி ஒரு விலையைச் சத்தமாகச் சொல்வார்கள். வியாபாரியும் பதிலுக்குக் கைகளைத் தட்டி, தனது விலையைச் சத்தமாகச் சொல்வார். இப்படிச் சில பல கைதட்டல்களுக்குப் பிறகு சீஸ் வியாபாரம் நடக்கும். Gouda நகர சீஸ் சந்தை இப்போது இல்லையென்றாலும், அந்தப் பெயரே இந்த சீஸுக்கு நிலைத்துவிட்டது.

Brie: இது பிரான்ஸ் தேசத்தின் பாரம்பர்ய சீஸ். பசும்பாலில் தயாரிக்கப்படுவது. இதில் பல வகைகள் இருக்கின்றன. இருந்தாலும் பாரீஸ் நகரின் Meaux என்ற இடத்தில் தயாரிக்கப்படும் Brie சீஸ்தான் பாரம்பர்யமானது. எட்டாம் நூற்றாண்டிலிருந்தே இங்கே இது தயாரிக்கப்படுகிறது. Brie de Meaux என்று பிரான்ஸில் அழைக்கப்படும் இந்த சீஸுக்கு இன்னொரு சிறப்புப் பெயர் - King of Cheese.

சீஸ்
சீஸ்

Monterey Jack: பசும்பாலில் தயாரிக்கப்படும் வெளிர் மஞ்சள் நிற அமெரிக்கன் சீஸ். 1915-ல் கலிஃபோர்னியாவின் Monterey நகரத்தைச் சார்ந்த டேவிட் ஜேக் என்ற வியாபாரி, இந்த சீஸை அறிமுகப்படுத்தினார். குறுகிய காலத்திலேயே இது மக்கள் மத்தியில் புகழ்பெற்றது. எனவே Monterey Jack என்ற பெயரே இதற்கு நிலைத்துவிட்டது.

Cheddar Chesse: இங்கிலாந்தின் சோமர்செட்டைச் சேர்ந்த Cheddar நகரத்தைப் பூர்வீகமாகக்கொண்ட சீஸ் இது. பிரிட்டிஷார் அதிகம் விரும்பிச் சுவைப்பது. அங்கே சந்தையில் சுமார் 51 சதவிகிதம் இதுவே விற்பனையாகிறது. ரெனெட் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வெளிர் மஞ்சள்நிற சீஸ், உலக அளவில் விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

சீஸ்
சீஸ்

சீஸ் டேட்டா!

  • British Cheese Board சொல்லும் தகவலின்படி, இன்றைக்குப் பிரிட்டனில் சுமார் 700 வகையான சீஸ்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இத்தாலியிலும் பிரான்ஸிலும் சுமார் 400 விதமான சீஸ்கள் கிடைக்கின்றன. அமெரிக்காவில் சுமார் 300 விதமான சீஸ்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.

  • உலக அளவில் அதிகம் சீஸ் உற்பத்தி செய்யும் நாடு பிரிட்டன்தான் (ஆண்டு ஒன்றுக்கு சுமார் 9 மில்லியன் டன்). அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

  • அமெரிக்காவின் வருடாந்திர பால் உற்பத்தியில், மூன்றில் ஒரு பங்கு பால், சீஸ் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் சீஸின் பெரும்பகுதி, பீட்சா தயாரிக்கவும், பர்கர் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

  • உலகில் அதிகம் சீஸ் உண்பவர்கள் டென்மார்க்கைச் சேர்ந்தவர்களே. அடுத்தடுத்த இடங்களில் ஐஸ் லாந்துக்காரர்களும் ஃபின்லாந்துக் காரர்களும் இருக்கிறார்கள்.

  • பசும்பாலைக்கொண்டு சீஸ் தயாரிப்பதில் ஜெர்மனிக்கே முதலிடம். தெற்கு சூடானில் வெள்ளாட்டுப்பால் சீஸ் அதிகம் தயாரிக்கப்படுகிறது. கிரீஸில் செம்மறியாட்டுப்பால் சீஸ் பிரபல மானது. எருமைப்பால் சீஸ் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எகிப்து.

  • உலக அளவில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட வகைகளில் சீஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு