Published:Updated:

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - பலா

பலா
பிரீமியம் ஸ்டோரி
News
பலா

சுளைகள் உருவாகும் பருவத்தில் இருக்கும் பலாக்காயையும் இலங்கை மக்கள் சமைக்கிறார்கள்.

காட்டுப்பகுதி ஒன்றில் கனகன் என்பவன் வசித்து வந்தான். அவனுக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் முத்தரசி. இளையவள் இடும்பி. அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறை தெரியாமல் இருக்க, முத்தரசி தன் வீட்டின் முன்பு ஒரு பலாக்கன்றை நட்டு வளர்த்து வந்தாள். அது வளர்ந்து, பூத்து, காய்த்து, பழுத்து, சுவையான பழங்களைக் கொடுக்க ஆரம்பித்தது. முத்தரசி அந்த மரத்தைத் தன் குழந்தைபோல கவனித்துக் கொண்டாள்.

முத்தரசி மீதே கணவன் அதிகம் அன்பு காட்டுகிறான் என்று இடும்பிக்குக் கோபம். ஆகவே, முத்தரசியை ஏதாவது ஒரு விதத்தில் துன்பத்துக்கு ஆளாக்கத் திட்டமிட்டாள். கனகனும் முத்தரசியும் வீட்டில் இல்லாத ஒருவேளையில் அந்த பலா மரத்தை வெட்டி வீழ்த்தினாள். ஏதுமறியாதவள் போல வீட்டுக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - பலா

வீடு திரும்பிய முத்தரசியும் கனகனும் வீழ்ந்துகிடந்த பலா மரத்தைப் பார்த்து அதிர்ந்து நின்றனர். தன் குழந்தை போன்று வளர்த்த மரத்தை இந்த நிலையில் பார்த்ததும் முத்தரசி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித் தாள். கனகனால் அவளைச் சமாதானப்படுத்த முடியவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்போது ஔவைப் பாட்டி அங்கே வந்தாள். ஔவையைப் பார்த்ததும் கனகனும் முத்தரசியும் தங்கள் சோகத்தை எல்லாம் சட்டென்று விழுங்கிக்கொண்டு, அந்த மூதாட்டியை வரவேற்றார்கள். வீட்டுக்குள் அமரவைத்து நல்ல உணவு கொடுத்து உபசரித்தார்கள். ஔவைக்கு வயிறும் மனமும் நிறைந்தது. அந்த இருவரின் கண்களில் தேங்கிக்கிடந்த வாட்டமும் புரிந்தது.

ஔவைப் பாட்டி, வெளியில் வந்தாள். வீழ்ந்து கிடந்த பலா மரத்தைப் பார்த்தாள். தன்னுடைய வலிமையான தமிழ் கொண்டு, உரத்த குரலில் பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தாள்.

கூரியவாளால் குறைபட்ட கூன்பலா

ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய்ச் - சீரிய

வண்டுபோல் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப்

பண்டு போல் நிற்கப் பணி

- இப்படி ஔவை பாடப்பாட, வெட்டப்பட்டு வீழ்ந்த மரம் மீண்டும் உயர எழுந்து நின்றது. புதிய பூக்களைப் பூத்தது. காய்த்தது. உடனே பழுத்த பழங்களையும் தந்தது. கண்முன்னே இப்படி ஓர் அதிசயத்தைத் தன் தமிழால் நிகழ்த்திய ஔவையின் காலில் கனகனும் முத்தரசியும் விழுந்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஔவை பாடிய (பலா) பாடல் ஒன்றின் பின்னணியில் நடந்ததாகச் சொல்லப்படும் கதை. சங்க காலப் புலவராகக் கருதப்படும் ஔவையார் வாழ்ந்த காலத்துக்கு முன்பிருந்தே பலா, தமிழுடன் தமிழர்களின் வாழ்வுடன் இணைந்த பழமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆக, பலா நம் தமிழ் மண்ணைப் பூர்வீகமாகக்கொண்ட மரம் என்று சொல்லலாமா?

பலா
பலா

அப்படியும் சொல்லலாம். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது என்றும் சொல்லலாம். கொஞ்சம் பரந்த மனப்பான்மையுடன் தெற்காசியாவைப் பூர்வீகமாகக்கொண்ட மரம் என்றும் சொல்லலாம். மேற்குத் தொடர்ச்சி மலைகள்தாம் ஆதியில் பலா விளைந்த பூர்வீகப் பகுதி என்பது சில தாவரவியலாளர் களின் கருத்து.

ஏறக்குறைய 6,000 ஆண்டுகளாக இந்திய மண்ணில் பலா விளைந்து கொண்டிருக்கிறது. பொதுவாக ஈரப்பதம் அதிகமிருக்கும் பூமத்திய ரேகைப் பகுதிகளில் பலாவின் விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பலா மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆனால், நம் தமிழ் இலக்கியத்தில் உள்ள பலாவுக்கான பழைமையான குறிப்புகள் போன்று வேறு எதிலும் இல்லை என்பது உறுதி.

மன்றப் பலவின் மாச்சினை மந்தி

இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்...

- இவை புறநானூற்று வரிகள். ஊர்ப் பொதுவிடத்தில் இருந்த பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் குரங்கு, அந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த மத்தளத்தை, பலாப்பழம் என்று நினைத்துத் தட்டியது என்பது இதன் சுருக்கமான பொருள்.

பலா
பலா

பலா குறித்து சங்க இலக்கிய உதாரணங்கள் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம். நிலத்தின் அமைப்பு, செழிப்பு, வளமை இதையெல்லாம் விவரிக்க சங்க இலக்கியப் புலவர்கள் எல்லோரும் தம் சொற்களில் பலாவைத்தான் சுமந்து கொண்டு திரிந்திருக்கிறார்கள். பலா குறித்த அதிக பாடல்களைக் கொண்டிருப்பது சிற்றிலக்கியமான குற்றாலக் குறவஞ்சி. குற்றாலத்தில் வீற்றிருக்கும் குற்றாலநாதர் கோயிலின் தல விருட்சமே பலா மரம்தான். அந்தப் பழைமையான பலா மரத்தில் காய்க்கும் பலாச்சுளைகள் ‘லிங்க’ வடிவத்தில் இருக்குமென்பதை, ‘சுளையெலாஞ் சிவலிங்கம்’ என குற்றாலக் குறவஞ்சிக் குறிப்பிடுகிறது. இந்த மரத்தில் வருடம் முழுவதும் பலா காய்க்கிறது. அதை யாரும் பறிப்பதில்லை.

கீட்பலவும் கீண்டு கிளைகிளையின்

மந்திபாய்ந்து உண்டு விண்ட

கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவன்

உண்டுகளும் குறும்பலாவே.

- இது தேவாரத்தில் இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தர் எழுதிய திருக்குறும்பலாப்பதிகத்தில் இடம் பெற்றுள்ள அடிகள். பெண் குரங்குகள் பலா மரத்தின் மீது ஏறிப் பழங்களை விண்டு உண்கின்றன. உண்ணும்போது பழங்களும் சுளைகளும் தவறிக் கீழே விழுந்துவிடுகின்றன. ஆண் குரங்குகள் அவற்றை மகிழ்வோடு எடுத்து உண்டு இன்புறுகின்றன என்பதே இந்தப் பாடலின் பொருள் சுருக்கம். சம்பந்தர் மட்டுமே இறைவனைப் பற்றி மட்டும் பாடாமல், பலா மரத்துக்கென ஒரு பதிகமும் பாடியிருக்கிறார்.

பலா
பலா

சரி, இலக்கியத்திலிருந்து வரலாற்றுக்கு வருவோம். பலா, கி.பி முதலாம் நூற்றாண்டில் நம் மண்ணிலிருந்து ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வியாபாரத் தொடர்புகள் மூலமாகப் பரவியதாக நம்பப்படுகிறது. 16-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த போர்ச்சுக்கீசியர், இதை ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். கி.பி 1782-ம் ஆண்டில் இது கரீபியன் தீவு நாடான ஜமைக்காவுக்குப் பரவியது.

உலகமெங்கும் பார்த்தால் பலாவுக் கென தனியாகத் தோட்டம் வைத்து விவசாயம் செய்பவர்கள் குறைவே. காபி, மிளகு, ஏலக்காய் போன்ற பணப்பயிர்த் தோட்டங்களின் துணைப்பயிராகவே வளர்க்கப் படுகிறது. தவிர, வீட்டுத் தோட்டங் களில் பலா விரும்பி வளர்க்கப்படுகிறது.

உலகத்தில் அதிக அளவில் பலா பயிரிடப்படும் நாடுகள் தாய்லாந்து மற்றும் வியட்நாம். இந்த நாடுகள் பலாப்பழங்களைப் பதப்படுத்தி, கேன்களில் அடைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும், வடஅமெரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், ஒடிசா, அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் விளைவிக்கப்படுகிறது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை வாழை, மாம்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் விளைவிக்கப்படுவது பலாதான். இந்தியாவில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பலா மரங்கள் இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

பலாவின் உணவுக் கலாசாரத்துக்கு வரலாம். நம்மவர்களுக்குப் பெரும்பாலும் பலாவைப் பழமாக உண்பதில்தான் ஆர்வம். ஆனால், இலங்கை மக்கள், பலாக்காயையும் விருப்பத்துடன் சமைத்து உண்கிறார்கள். பலாப் பிஞ்சை சிங்களத்தில் ‘பொலஸ்’ என்று சொல்கிறார்கள். அதாவது உள்ளே சுளைகள் எதுவும் உருவாகாத பலாப் பிஞ்சை, கறி சமைத்து உண்கிறார்கள். இலங்கையில் சாதாரண உணவகங்களில் இருந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை இந்த பொலஸ் கறி மிகவும் பிரபலம்.

சுளைகள் உருவாகும் பருவத்தில் இருக்கும் பலாக்காயையும் இலங்கை மக்கள் சமைக்கிறார்கள். சுளைகள் நன்கு முற்றி, பழுப்பதற்கு முந்தைய நிலையில் சமைக்கப் படுவது ‘பலாக்காய் கறி’ என்று சொல்லப்படுகிறது.

இலங்கையில் வீட்டுக்கு வீடு பலா மரங்களைப் பார்க்கலாம். ஒரு வீட்டில் நான்கைந்து பலா மரங்கள் இருந்தால் அவர்களது வீட்டைப் பஞ்சமே அண்டாது என்று அங்கே சொல்வார்கள். காரணம், கி.பி 1977-ம் ஆண்டு இலங்கையில் கடும் பஞ்சம் உண்டானது. அப்போது இலங்கை மக்களுக்குக் கிடைத்த, அந்த மக்களின் உயிரைக் காப்பாற்றிய ஒரே உணவு, வீட்டுக்கு வீடு விளைந்து கிடந்த பலாக்காய்களும் பழங்களுமே.

உலகில் பலாவை அதிகமாகச் சமைக்கும் நாடு பிலிப்பைன்ஸ். அந்த நாட்டு மக்கள் சைவம், அசைவம், இனிப்பு என பலாவை வைத்து அதிகமான பதார்த்தங்களைச் செய்கிறார்கள். அதில் முக்கியமானது, Ginataang Langka. இதில் Langka என்றால் பலா. பலாக்காயும் தேங்காய்ப்பாலும் சேர்த்து சமைக்கப்படும் கறி இது. மீனோ, இறாலோ சேர்த்து இந்தக் கறியின் சுவையைக் கூட்டுகிறார்கள். பிலிப்பைன்ஸின் எல்லா உணவகங்களிலும் இந்தக் கறி கிடைக்கும்.

`Halo-Halo’ - இதுவும் பிலிப்பைன்ஸ் பதார்த்தம் தான். பலாப்பழம் கொண்டு செய்யப்படும் டெசர்ட். சிறு துண்டுகளாக்கப்பட்ட பலாப்பழம், ஐஸ்கட்டி, வேகவைக்கப்பட்ட பீன்ஸ் விதைகள், இனிப்பூட்டப்பட்ட கொப்பரைத் தேங்காய், சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட வாழைப்பழத் துண்டுகள், மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சீஸ், ஐஸ்கிரீம் இன்னும் சில பல விஷயங்கள் சேர்த்துத் தயாரிக்கப்படுவது. ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகனிடம் ஏதாவது காரியம் சாதிக்க வேண்டுமென்றால், Halo-Halo வாங்கிக் கொடுத்தால் போதும். காரியம் நடந்துவிடும் என்பார்கள்.

கேரளாவில் சக்கை (பலா) சமையல் பதார்த்தங்கள் அதிகம். சக்கை எரிசேரி, சக்க புளுக்கு, சக்கை உலர்த்தியது, சக்கை தோரன், சக்கை வெவிச்சது, சக்கை பாயசம், சக்கை நெய் அப்பம், சக்கை அல்வா என்று பலவிதங்களில் பலாவைக் கொண்டாடு கிறார்கள். தெற்காசிய நாடுகளில் மட்டும் தான் பலா விதவிதமாகச் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. தவிர, உலகமெங்கும் இது ஐஸ்க்ரீம், ஜெல்லி, மில்க் ஷேக், டெசர்ட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

பலாவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. நம் முன்னோர், உடல் அசதியைப் போக்கி, புத்துணர்ச்சி பெற பலாப்பழத்துடன் கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டிருக்கிறார்கள். உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற, பலாப்பழத்துடன் கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து உண்டிருக்கிறார்கள்.

பலா இலையையும் சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பலாப்பழத்தைவிட காய்க்கு அதிக மருத்துவ குணம் உண்டென்று சித்த மருத்துவம் சொல்கிறது. ஆனால், பலாக்காயைப் பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். நன்றாக வேகவைத்து, காரம், புளி எல்லாம் சேர்த்து முறையாகச் சமைத்த பின்பே சாப்பிட வேண்டும். இது குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.

பலாக்கொட்டையில் புரதச்சத்து அதிகம். தெற்காசிய மக்கள் அதை விரும்பி உண்கிறார்கள். குறிப்பாக, ஜாவா தீவு மக்கள், பலாக்கொட்டையைச் சீவி, உப்பு, காரம் சேர்த்து வறுத்து ‘சிப்ஸ்’ போல சாப்பிடுகிறார்கள்.

பற்கள் உறுதி பெற, ஈறுகள் வலிமை பெற, தேகம் பலம் பெற, வைட்டமின் சத்துகள் உடலில் சேர, சருமம் பொலிவு பெற, தொற்றுநோய்க் கிருமிகள் அண்டாமல் இருக்க என்று பலாவின் பலன் பட்டியல் பெரியது.

ஆகாத விஷயங்களையும் சொல்ல வேண்டுமல்லவா... அருமையாக இருக்கிறதென்று அள்ளி அள்ளித் தின்றால் பலா, வயிற்றைப் பதம் பார்த்துவிடும். தவிர, நீரிழிவு, ஆஸ்துமா தொல்லை உடையவர்கள் எல்லாம் பலாவைத் தள்ளிவைப்பது அவர்களுக்கு நல்லது.

இறுதியாக ஒரு விஷயம். பலாவுக்கு ஆங்கிலத்தில் Jack Fruit என்று எப்படி பெயர் வந்தது... யார் அந்த ஜேக்... அவருக்கும் பலாவுக்கும் என்ன சம்பந்தம்... இப்படி கேள்விகள் எழலாம்.

போர்ச்சுக்கீசியர்கள் 16-ம் நூற்றாண்டில் கேரளாவுக்கு வணிகம் செய்ய வந்தபோது, அந்த மண்ணில் விளைந்த பலாப்பழங்களை ருசித்திருக்கிறார்கள். மயங்கிக் கிறங்கியிருக் கிறார்கள். என்ன பழம் இது என்று கேட்டிருக்கிறார்கள். மலையாள மக்கள் ‘சக்கைப் பழம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘சக்கை’ என்ற சொல்லை போர்ச்சுக்கீசியர்கள் Jaca என்ற வார்த்தையாகப் புரிந்துகொண்டு, அப்படியே குறிப்பிட ஆரம்பித்தார்கள். அதுவே பின்பு ஆங்கிலத்துக்கு மாறியபோது, Jack Fruit என்றானது.

கார்சியா டி ஓர்டா என்ற போர்ச்சுக்கீசிய இயற்கை ஆர்வலர், கி.பி. 1563-ம் ஆண்டு எழுதிய Coloquios dos simples e drogas da India என்ற புத்தகத்தில் Jack Fruit என்னும் ஆங்கில வார்த்தையை உபயோகித்திருக் கிறார்.

மற்றபடி, பலாவுக்கும் உலகில் பிறந்த எந்த ‘ஜேக்’குக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்பதே உண்மை!

பலே பலா கணக்கு!

ரு பலாப்பழத்தை வெட்டிப் பார்க்காமலேயே அதனுள் எத்தனைச் சுளைகள் இருக்கும் என்று கண்டறிய ஒரு சூத்திரத்தை நம் முன்னோர் பாட்டாகவே பாடியிருக்கிறார்கள். பழந்தமிழ் நூலான கணக்கதிகாரத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது.

பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு

சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி - வருவதை

ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே

வேறெண்ண வேண்டாஞ் சுளை.

அதாவது, பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் இருக்கும் சிறிய முள்களைத் துல்லியமாக எண்ணிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்கி, வரும் விடையை ஐந்தால் வகுக்கக் கிடைக்கும் விடை பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கை. எண்ணிப் பார்க்கவே வேண்டாம் என்பதே இந்தப் பாடல் சொல்லும் செய்தி.

பலா
பலா

உதாரணமாக, பலாப்பழ காம்புக்கு அருகிலிருக்கும் சிறிய முள்களின் எண்ணிக்கை 120 என்று வைத்துக் கொள்வோம்.

120 X 6 = 720

720-ஐ 5-ல் வகுக்க, விடை 144.

இதுவே சுளைகளின் எண்ணிக்கை என்பது நம் முன்னோர் நிரூபித்துக்காட்டிய வெற்றிச் சூத்திரம். எனக்கு நம் எள்ளு கொள்ளுத் தாத்தாக்கள் மீது சந்தேகமில்லை. உங்களுக்குச் சந்தேகமிருந்தால், உடனே ஒரு முழுப்பலாவை வாங்கிச் சோதித்து விடுங்கள்!

சுவைக்கக் கொஞ்சம் சுளைகள்!

  • முக்கனிகளில் இரண்டாவது கனியான பலாவுக்கு சக்கை, பலவு, பலாசம், வருக்கை, ஏகாரவல்லி எனப் பல பெயர்கள் உண்டு.

  • பலா மரம், அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது. விதை மூலமாக வளர்க்கப்படும் ஒரு பலாமரம், சுமார் மூன்றிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் பூத்து, காய்க்கத் தொடங்குகிறது. நன்கு வளர்ந்த ஒரு பலா மரத்திலிருந்து ஆண்டுக்கு 100 முதல் 150 பழங்கள் வரை கிடைக்கும்.

  • தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் வீணை செய்ய பலா மரம் பயன்படுத்தப் படுகிறது. வியட்நாமில் புத்தர் சிலைகள் செய்ய பலாக்கட்டைகளையே பயன்படுத்துகிறார்கள்.

  • பங்களாதேஷின் தேசியப் பழம் பலா. கேரள மாநில அரசின் பழமும் பலாதான்.

  • பலாவின் நறுமணம் நம்மில் பலருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் பலரும் பலாவின் மணத்தை முற்றிலுமாக வெறுக்கின்றனர். அவர்களுக்கு அந்த மணம் ஆகவே ஆகாது.