Published:Updated:

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்

கொங்கு ஸ்பெஷல்

நெல்லுச்சோறு பழந்தமிழர்களின் அன்றாட உணவாக இருக்கவில்லை. அது பண்டிகைக்கால உணவாகத்தான் இருந்திருக்கிறது.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்

நெல்லுச்சோறு பழந்தமிழர்களின் அன்றாட உணவாக இருக்கவில்லை. அது பண்டிகைக்கால உணவாகத்தான் இருந்திருக்கிறது.

Published:Updated:
கொங்கு ஸ்பெஷல்
கொங்குநாட்டுச் சமையல் என்பது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊர்களின் கைமணமும், உணவுக் கலாசாரமும் ஒன்றிணைந்தது.

மானாவாரி நிலங்களால் நிறைந்தது கொங்கு மண்டலம். மழையால் கிடைக்கும் நீரைக் கொண்டு சாகுபடி செய்யும் புன்செய் நிலங்களால் நிறைந்தது. மழை பொய்த்தது என்றால் விளைச்சல் இல்லை. எனவே கம்பு, கேழ்வரகு, சோளம், குதிரைவாலி போன்ற புன்செய் பயிர்களைத்தான் அந்தக் காலத்தில் இந்த மண்டலத்தைச் சார்ந்த விவசாயிகள் பயிரிட்டிருக்கிறார்கள்.

இங்கே சமதள நிலங்கள் குறைவு. மேடும் பள்ளங்களும் கொண்ட நிலங்களே அதிகம். எனவே, நன்செய்ப் பயிரான நெல் அதிக அளவில் பயிரிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனில் இங்கே வாழ்ந்த கொங்கு முன்னோர்களின் அன்றாட உணவாக என்ன இருந்தது? அவர்கள் தினமும் நெல்லுச்சோறு சாப்பிடவில்லையா?

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இல்லை. நெல்லுச்சோறு பழந்தமிழர்களின் அன்றாட உணவாக இருக்கவில்லை. அது பண்டிகைக்கால உணவாகத்தான் இருந்திருக்கிறது. ‘ஆஹா… இன்னிக்கு நெல்லுச்சோறு சாப்பிடப்போறோம்டோய்’ என்று எப்போதாவது சந்தோஷம் கொடுக்கும் உணவாகத்தான் அது நினைவுகளில் கமகமத்திருக்கிறது. அரிசிச்சோறு நம் தினசரி உணவாக மாறியது சென்ற நூற்றாண்டில்தான்.

அன்றைக்கு, கொங்கு மக்கள் உண்டவை எல்லாமே எளிய உணவுகள்தாம். அவர்கள் நிலத்தில் என்ன விளைந்தனவோ, அந்தப் பருவத்தில் சூழலில் என்ன காய்த்தனவோ, அவற்றைக்கொண்டு சமைத்துச் சந்தோஷ மாகச் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந் திருக்கிறார்கள். அதிலும் சமைப்பதற்கென்று மெனக்கிட்டு தனியாக நேரம் ஒதுக்கவும் இல்லை. ஆடு மாடுகளை கவனிக்கும்போதும், மற்ற விவசாய வேலைகளைச் செய்யும் போதும், இடையிடையே சமையலும் செய்து கொண்டார்கள். சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, சாமை, வரகரிசி, கொள்ளு - இவையே கொங்கு முன்னோர்களின் அன்றாட உணவாக இருந்திருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்ற நூற்றாண்டில், நெல்லுச்சோறு என்பது தினசரி உணவு ஆனபோதும்கூட, ஒரு நாளைக்கு ஒரு வேளை சமைப்பதே கொங்கு மக்களின் வழக்கமாக இருந்தது என்று இந்த மண்ணின் எழுத்தாளர் பெருமாள் முருகன் குறிப்பிடுகிறார். சாயங் கால வேளையில் சுடச்சுட சோறாக்குவார்கள். இரவு அதைச் சாப்பிட்டு விட்டு, உப்பு, கஞ்சித்தண்ணீர் எல்லாம் ஊற்றிவைத்துக் கொள்வார்கள். மறுநாள் காலையில் எழுந்து, அந்தப் பழைய சாதத்தின் நீராகாரத்தைப் பருகுவார்கள். சாதத்தைச் சாப்பிடுவார்கள். அதிலும் மீதி இருப்பதை மதிய உணவாக தூக்குவாளியில் எடுத்துக்கொண்டு, வேலைக்குக் கிளம்பி விடுவார்கள். இப்படியாக ஒரு வேளை சமையல் என்பது தான் கொங்கு மக்களின் வழக்கமாக இருந்திருக்கிறது.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்

சாதத்துடன் குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் சமைத்தார்கள். இது எல்லோரும் சமைப்பதுதானே என்று தோன்றும். அன்றைய கொங்கு மக்கள் குழம்பு அல்லது ரசம் அல்லது கூட்டு அல்லது பொரியல் மட்டும் சமைத்தார்கள். குழம்பு வைத்தால் அது மட்டும்தான். தொட்டுக்க கூட்டோ, பொரியலோ கிடையாது. ரசம் வைத்தாலும் அது மட்டும்தான். சில நேரம் குழம்பு, ரசம் இரண்டுமே வைக்காமல் கூட்டு மட்டும் சமைத்தார்கள். அதையே சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டுக் கொண்டார்கள். சாதம் வடிக்கும் கஞ்சி அதிகமாக இருந்தால் குழம்போ, ரசமோ, கூட்டோ எதுவுமே கிடையாது. அந்தக் கஞ்சியையும் சோற்றையும் கலந்து கூடுதலாக உப்புப்போட்டு, ‘கஞ்சியும் சோறும்’ என்று சொல்லி ரசித்துச் சாப்பிட்டுவிட்டு வேலையைப் பார்க்கக் கிளம்பினார்கள்.

காய்கறிக்கும் அதிகம் மெனக்கிட்ட தில்லை. அப்போதைக்குக் கையில் கிடைக்கும் கீரையைச் சேகரித்து மடியில் கட்டிக்கொள்வார்கள். இரவில் கீரையைக் கடைந்து குழம்புவைத்துக் கொண்டார்கள். இப்படியாக அன்றைய கொங்கு சமையல் மிகவும் எளிமையானதாகவே இருந்தது.

அரிசீம் பருப்பும்

பாரம்பர்ய கொங்கு சமையலின் எளிமைக்கு என்றைக்கும் உதாரணமான பதார்த்தம், ‘அரிசீம் பருப்பும்.’ ஈரோடு, கரூர், கோவை, சத்தியமங்கலம், திருப்பூர், நாமக்கல் என்று கொங்கு மண்டலத்தின் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். அங்கே வேலைக்கோ, பள்ளிக்கோ செல்பவர்களின் டிபன் பாக்ஸைத் திறந்து பாருங்கள். பத்தில் ஏழு பேராவது நிச்சயம் ‘அரிசீம் பருப்பும்’தான் வைத்திருப்பார்கள்.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்

அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைக்கும் இந்த எளிய உணவுக்குக் கொங்கு மக்கள் உயிரையே கொடுப்பார்கள் என்று சொல்வது நிச்சயம் மிகையில்லை. தக்காளி, வெங்காயத்துடன் தாளித்து, அளவாகத் தண்ணீர்வைத்து, உப்பு, காரம், மஞ்சள் பொடியுடன் களைந்த அரிசியையும் பருப்பையும் சேர்த்து வேகவைத்தால் ‘அரிசீம் பருப்பும் சோறு’ தயார். இது பொதுவான செய்முறை. பொதுவாக துவரம்பருப்பைத்தான் உபயோகிக்கிறார்கள். சிலர், மொச்சை அல்லது காராமணியும் சேர்த்துக் கொள்கிறார்கள்.

சூடான அரிசீம் பருப்பும் சோற்றில் நெய் சேர்த்துச்சாப்பிட்டால் அபார ருசி. ஆறிப்போன அரிசீம் பருப்பும் சோற்றில், தயிர் சேர்த்துச் சாப்பிட்டால் அற்புதமான சுவை. அதைச் சமைத்த பாத்திரத்தில் அடிப்பகுதியில் லேசாகப் பிடித்ததுபோல இருப்பதையும் விரும்பி உண்கிறார்கள். அதை ‘தீவல்’ என்கிறார்கள். அந்தக் காலத்தில் சம்பந்தம்பேசி எல்லாம் முடிவானதும், சம்பந்தி வீட்டுக்காரர்கள் வந்தவர்களுக்கான விருந்தாக இந்த ‘அரிசீம் பருப்பும் சோறு’தான் சமைத்துப் போட்டிருக் கிறார்கள். இப்போதும் சிலர் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

சந்தகை

இடியாப்பத்தின் சற்றே மாறுபட்ட வகைதான் இந்த சந்தகை அல்லது சந்தவை. பேச்சு வழக்கில் - சந்தெக. புழுங்கல் அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து, கல் உப்பு போட்டு அரைக்க வேண்டும். மாவைப் புளிக்க வைக்காமல், அப்படியே இட்லி தட்டில் ஊற்றி வேகவைக்க வேண்டும். சந்தகம் என்றால் இடியாப்பம். சந்தகை என்றால் இடியாப்பம் பிழியும் உலக்கு அல்லது நாழி. அந்தக் காலத்தில் மரத்தாலும் இரும்பாலும் ஆன பெரிய அளவு நாழிகள் புழக்கத்தில் இருந்தன. அதில் மாவு பிழியும் அளவுக்கான பலம் அந்தக் காலப் பெண்களுக்கு இருந்தது.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்

சந்தகையை மூன்று விதங்களில் சாப்பிடலாம்.

வெல்லப்பாகில் தேங்காய், ஏலக்காய் எல்லாம் போட்டு தயாரிக்கும் இனிப்புக் கரைசலை ஊற்றிச் சாப்பிடலாம். இதில் எள், பொட்டுக்கடலைகூட சேர்ப்பார்கள். இதுதான் கொங்கு பகுதியின் பாரம்பர்ய சந்தகை சைடிஷ்.

வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொத்தமல்லி, மஞ்சள்தூள், எண்ணெய், எலுமிச்சைச்சாறு சேர்த்து, தாளித்து கார சந்தகையாகச் சாப்பிடலாம். எலுமிச்சைக்குப் பதிலாக, புளிக்கரைசல் அல்லது தக்காளியும் உபயோகப்படுத்தப்படுவது உண்டு.

மூன்றாவது எளிமையான வழி. தேங்காய்த் துருவல், சர்க்கரை, நெய் போட்டு கிளறிச் சாப்பிடலாம். கொங்குப் பகுதியில் காலை விருந்துக்குச் சென்றால், காலை சிற் றுண்டிக்குக் கண்டிப்பாக சந்தகை இருக்கும். திருமணம் முடிந்து மாப்பிள்ளை, முதன் முதலாகப் பெண் வீட்டுக்குப் போகும்போது சந்தகைதான் செய்து பரிமாறுகிறார்கள்.

உப்பிட்டு

‘உப்பிட்டு’ என்றால் போளி. கொங்கு மக்களில் சிலர் ‘ஒப்புட்டு’ என்றும் அழைக்கிறார்கள். பருப்புப்போளியை ஆந்திர மக்களும் உப்பிட்டு என்றே அழைக்கிறார்கள். ஆந்திராவின் ஆதி இனிப்பு இந்த போளி. விஜயநகரப் பேரரசு காலத்தில் கொங்கு மண்டலத்தில் பரவி வாழ்ந்த தெலுங்கு பேசும் மக்கள் மூலமாக இந்த உப்பிட்டும் இங்கே பரவியிருக்கலாம். இங்கே ஒரு குறிப்பு. கர்நாடக மாநிலத்துக்குச் சென்று ‘உப்பிட்டு’ என்று கேட்டால் உப்பு, காரத்துடன் உப்புமாதான் கிடைக்கும். அங்கே இந்த போளியின் பெயர் ‘ஒப்பட்டு’.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்

இந்த உப்பிட்டு செய்வதற்கான மூலப் பொருள் மைதா. சுதந்திரத்துக்கு முன்பு இந்த மைதாவை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்துகொண்டிருந்தார்கள் என்று ஒரு செய்தி உண்டு. அதனால் அதற்கு ‘அமெரிக்கன் மாவு’ என்று ஒரு பெயர் இருந்தது. பின் பேச்சு வழக்கில் அது ‘மரிக்கன் மாவு’ என்று மாறிப்போனது. மரிக்கன் மாவும் வெல்லமும் கலந்து செய்யப்படும் இந்த ‘உப்பிட்டு’, கொங்கு மண்ணின் பாரம்பர்ய இனிப்புகளில் ஒன்று.

கொங்கு மண்டல போளியான ‘உப்பிட்டு’க்குப் புகழ்பெற்ற ஊர் பொங்கலூர். கோயம்புத்தூரில் இருந்து கரூர் போகும் வழியில், பல்லடம் தாண்டி அமைந்திருக்கும் ஊர். பொங்கலூரில் தெருவுக்குத் தெரு உப்பிட்டு இனிப்புக் கடைகள் இருக்கின்றன. தேங்காய் உப்பிட்டு, பருப்பு உப்பிட்டுத் தயாரிப்பு குடிசைத் தொழில் போல நடக்கிறது. பல பெண்களின் வாழ்வாதாரமாக உப்பிட்டு விளங்குகிறது.

பேனியன்

மைதா மாவு கொண்டு செய்யப்படும் இனிப்பு. மாவுடன் நெய், டால்டா, எண்ணெய், பொடி பண்ணிய சர்க்கரை சேர்த்து பொரித்தெடுக்கப்படும் இனிப்பு. கொங்கு மண்டலத்தில் வாழும் இஸ்லாமியர்கள் வீடுகளில் பேனியன் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, தாராபுரம் பக்கம் உள்ள இஸ்லாமியர்கள் வீடுகளுக்குச் சென்றால் நிச்சயம் பேனியன் சுவைக்கலாம்.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்

கெடா விருந்து

கொங்கு மண்டலத்தின் ருசியான சிக்கன் என்றால் அதற்குப் பள்ளிப்பாளையம்தான் பிரபலம். பிச்சுப்போட்ட கோழியும், நாட்டுக்கோழி சூப்பும் பல இடங்களில் கமகமக்கின்றன. ‘சேலம் நாட்டுக்கோழி வறுவல்’ தனித்துவமான சுவை கொண்டது. பொள்ளாச்சி பக்கம் சென்றால் அங்கு ‘பொள்ளாச்சி ஈரல் மசாலா’ மற்றும் ‘பொள்ளாச்சி மட்டன் குழம்பு’ ஆகியன பிரசித்திபெற்றவை.

கொங்கு மண்டலத்தில் தொழிற்சாலைகள் அதிகம். அங்கே ஆண்டுதோறும் `கெடா விருந்து’ பரிமாறும் கலாசாரமும் இருக்கிறது. இந்த கெடா விருந்தில் பரிமாறப்படும் அசைவ உணவுகளைச் சமைப்பதற்கென்றே பிரத்யேக சமையற்கலைஞர்கள் இருக்கிறார்கள். தவிர, கொங்குப் பகுதியில் கெடா விருந்து உணவகங்களையும் நாம் பார்க்கலாம். தோட்டம் அல்லது பண்ணை களுக்கு நடுவில் இத்தகைய கெடா விருந்து உணவகங்கள் அமைந்துள்ளன.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்

கொங்கு மண்டலத்துக்கும் கடலுக்கும் சம்பந்தமே கிடையாது என்பதால், கடல் உணவுகள் இங்கே அவ்வளவாகச் சிறப்புப் பெறவில்லை. கொங்கு அசைவ சமையலில் பொதுவாகக் காரத்துக்கு மிளகையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். பழைய புளி உபயோகிக்காமல், புதிய புளியை உபயோகிக்கும் வழக்கமும் இங்கே இருக்கிறது. சைவ உணவுகளில் புளி சற்றே தூக்கலாக இருக்கும். பொதுவாக உணவில் அதிகம் காரம் இருக்காது. தேங்காய் எண்ணெய் அதிகம் சேர்ப்பார்கள். தேங்காய்க்குப் பதிலாகக் கொப்பரைத் தேங்காயைச் சேர்ப்பது கொங்கு மக்களின் வழக்கம். காய்கறிக் கூட்டுகளில் பால் சேர்க்கிறார்கள். கொள்ளு மசியல், கொள்ளு ரசம் போன்றவை கொங்கு கிராமப்புறங்களில் அடிக்கடி சமைக்கப்படுகிறது. சோளமும் கம்பும் இன்றும் கொங்கு மக்களின் அன்றாட உணவில் இடம்பெற்றிருப்பது ஆரோக்கியமான விஷயம்.

பெரும்பாலான கொங்கு பாரம்பர்ய உணவுகள் எளிதில் செரிமானம் ஆகக்கூடியவையே.

கொங்குக் குறிப்புகள்

‘கொங்கு’ என்ற சொல்லுக்கு தேன், சர்க்கரை, கள், வாசனை என்று பல அர்த்தங்கள் உண்டு. ‘தமிழ் மண்டலம் ஐந்து’ - இது திருமூலரின் திருமந்திரம் சொல்லும் வரி. அதாவது பண்டைய தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகள் போல, தொண்டை நாட்டையும், கொங்கு நாட்டையும் தனி நாடுகளாகக் கொண்டிருந்தது என்று இதன் மூலம் அறியலாம்.

எது கொங்கு நாடு? வடக்கே பெரும்பாலையையும், தெற்கே பழநிமலைத் தொடர்களையும், மேற்கே வெள்ளியங்கிரி மலையையும், கிழக்கே குளித்தலையையும் எல்லைகளாகக்கொண்டது கொங்கு நாடு என்று கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டலச் சதகத்தில் ஒரு பாடல் செய்தி சொல்கிறது.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்

சங்க இலக்கியங்கள், கொங்கு குறுநில மன்னர்கள், கொங்கர்களின் கால்நடை வளம், அவர்களது போர்த்திறமை பற்றிய பல செய்திகளைச் சொல்கிறது. கி.பி 1550 நேரத்தில் விஜயநகரப் பேரரசின்கீழ் இந்த கொங்கு நாடு இருந்தது. 17-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மதுரை நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது அவர்கள் ஆட்சி செய்வதற்கு வசதியாக கொங்கு நாட்டை 24 பாளையங்களாகப் பிரித்து நிர்வகித்தனர் என்பது வரலாற்றுச் செய்தி.

சரி, இன்றைய கொங்கு மண்டலம் எது?

கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், நீலகிரி மாவட்டம், ஈரோடு மாவட்டம், நாமக்கல் மாவட்டம், சேலம் மாவட்டம், தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகள், திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகள், கரூர் மாவட்டத்தின் சில பகுதிகள் - இவைதாம் இன்றைய கொங்கு நாட்டிலுள்ள மாவட்டங்கள்.

கொங்கு மக்களுக்கு தங்கள் மண்மீது பாசம் ரொம்பவே அதிகம். அதனால் எதனோடும் ‘கொங்கு’ என்னும் வார்த்தையை இணைத்துக் கொள்வார்கள். நெல் அளக்கும் நாழியை ‘கொங்கு நாழி’ என்கிறார்கள். நெல் புடைக்கும் முறத்தை ‘கொங்கு முறம்’ என்கிறார்கள். தவிர, கொங்குத் தமிழுக்குத் தனித்துவமான இனிமை உண்டு. கொங்கு மண்ணின் வளத்தை, பெருமையைச் சொல்லும் ஒரு பழமொழி என்றைக்கும் பொருத்தமானது.

‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும் - கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்.’

கொங்கு கமகம!

லகப்புகழ் ஊத்துக்குளி வெண்ணெய் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்ததுதான். திருப்பூருக்கு அருகில் அமைந்திருக்கும் ஊத்துக்குளி மக்களின் பரம்பரைத் தொழிலே கறவை மாடு வளர்ப்புதான். ஊரின் பொருளாதாரமே பால், வெண்ணெய், நெய்யை நம்பித்தான் இருக்கிறது. மற்ற ஊர்களில் தயாரிக்கப்படும் வெண்ணெயில், ஒரு கிலோவை உருக்கினால் சுமார் 750 கிராம் நெய் கிடைக்கும். ஆனால், ஒரு கிலோ ஊத்துக்குளி வெண்ணெயை உருக்கினால் சுமார் 850 கிராம் வரை நெய் கிடைக்கும். ஊத்துக்குளி வெண்ணெய் போட்ட `பட்டர் பொங்கல்’ இங்கு மட்டுமே கிடைக்கிறது.

பருப்பு வடை மற்ற இடங்களில் புழக்கத்தில் உள்ளதென்றால், கொங்குப் பகுதியில் புழுங்கல் அரிசியும் துவரம்பருப்பும் கொண்டு செய்யப்படும் அரிசி வடை பிரத்யேகமானது. இதற்கு தக்காளி ரச அடி வண்டலையும் தயிரையும் தொட்டுச் சாப்பிடுகிறார்கள்.

அடை போன்று கொங்கு சமையலில் கார தோசை புகழ்பெற்றது. இதற்குத் தொட்டுக்க சுட்ட கத்திரிக்காய் துவையல் பரிமாறுகிறார்கள். தக்காளி தோசையும் பலருக்குப் பிரியமானது. மஞ்சள் பூசணி, பிஞ்சு புடலை, பீர்க்கங்காய், சேனைக்கிழங்கு போன்றவையெல்லாம் சேர்த்து அரைக்கப்படும் பாரம்பர்ய கொங்குச் சட்னிக்குப் பெயர், தொப்பைச் சட்னி.

அரிசி வடாம், கொங்கு மக்களுக்குப் பிடித்த விஷயம். தவிர, வெள்ளைச் சோளத்தைக்கொண்டு ‘சோள வடாம்’ தயாரிக்கிறார்கள்.

மஞ்சள் பூசணி, சேனைக்கிழங்கு, பீர்க்கங்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கத்திரிக்காய், அவரைக்காய் என்று கலவையான காய்கறிகளைச் சேர்த்து குழம்பு ஒன்று வைக்கிறார்கள். அதில் மொச்சையோ, கொண்டைக்கடலையே சேர்ப்பது அவரவர் விருப்பம். இந்தக் கொங்குக் குழம்பின் பெயர் கலவைக்காய் குழம்பு.

கொங்கு சமையலின் தனித்துவம் சொல்லும் ஒரு குழம்பு, முருங்கைக்காய் கூட்டுச்சாறு. எளிமையான இன்னொன்று, சின்ன வெங்காயக் குழம்பு. பச்சை மிளகாய்க் குழம்பு என்றும் ஒன்று உண்டு. எல்லாமே புளி சேர்த்துத் தயாரிக்கப்படுபவை.

பச்சரிசி மாவுடன் வெல்லப்பாகு சேர்த்து தயாரிக்கப்படும் அப்பம் போன்ற இனிப்பின் கொங்குப் பெயர் கச்சாயம். இதை நெய்யில் பொரித்தெடுத்தால் சிறப்பு. கச்சாயத்தைத் தேங்காய்த் துருவல் மற்றும் வாழைப்பழத்துடன் சேர்த்து உண்கிறார்கள்.

அச்சு முறுக்கு என்றாலே இனிப்புதான். கொங்குப் பகுதியில் ஊறவைத்த பச்சரிசி யுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு எல்லாம் சேர்த்து அரைத்து கார அச்சு முறுக்கு சுடுகிறார்கள். தட்டையின் கொங்குப் பெயர், தட்ட வடை.