Published:Updated:

மாவடு

மாவடு
பிரீமியம் ஸ்டோரி
மாவடு

ஆண்டு முழுவதும் அம்மா போடும் மாவடு கெட்டுப்போவதேயில்லை

மாவடு

ஆண்டு முழுவதும் அம்மா போடும் மாவடு கெட்டுப்போவதேயில்லை

Published:Updated:
மாவடு
பிரீமியம் ஸ்டோரி
மாவடு
ரயிலடியும் சந்தையும் சேரும் இடத்தில்தான் அவர் மாவடு விற்றுக்கொண்டிருந்தார்.

வழக்கமான இந்தப் பாதையில் இப்படி அவர் விற்பதைப் பலமுறை பார்த்திருந்தபோதும், இன்று ஏனோ புதிதான ஒரு காட்சியைக் காண்பதுபோல இருந்தது. கொஞ்சம் அவரை நெருங்கிவந்து, “படி எவ்ளோ...” என்றேன்.

முசல் பிடிக்கும் நாயை... இல்லையில்லை மாவடு வாங்கும் ஆளை முகத்தைப் பார்த்தே கண்டுபிடிப்பவர் போல மேலும் கீழுமாகப் பார்த்தார்.

“படி 150...”

“என்னது, 150 ஆ...”

“எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற, லாஸ்ட்டா மாவடு எப்போ வாங்கின...”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேங்காய் வாங்க வரும் கவுண்டமணியிடம், ‘என்ன உள்ளே இருந்துட்டு வந்தியா...’ என்று ஒரு வியாபாரி கேட்கும் காட்சி நினைவுக்கு வந்தது. பேசாமல் நடையைக் கட்டினேன்.

மாவடு படி 150 ரூபாய்... இதே சந்தையில் அம்மா வுடன் வந்து மாவடு வாங்கிய நாள்கள் நினைவில் பசுமையாக இருக்கின்றன.

மாவடு
மாவடு

“இதோ பாருப்பா, வருஷா வருஷம் நீ இப்படி விலையைக் கூட்டிக்கிட்டே போனா, நாங்க எப்படி வாங்கறது...”

“மாமி, மாமாவுக்கு என்ன மாமாங்கத்துக்கு மாமாங்கமா சம்பளம் கூடுது...”

“இந்தப் பேச்சுக்கெல்லாம் ஒண்ணும் கொறைச்சல் இல்ல... முடிவா என்ன சொல்ற காம்பு வெச்சது, படி 10 ரூபாய்க்குப் போடு...”

“கட்டுப்பிடியாகாது, காம்பு வெக்காதது 10 ரூபா, வெச்சது 15 ரூபா.”

“காம்பு வெச்சது நீ ஒரு படி போட்டா அசல்ல அரைப்படிதான் இருக்கும்.”

“அதான் காம்பு வெக்காதது 10 ரூபாய்க்கே தர்றேனே, ஏன் காம்பு வெச்சதுதான் வேணும்னு அடம்பிடிக்கிற...”

“ஏன் உனக்குத் தெரியாதா, காம்பு வடு ஒரு வருஷமானாலும் வெடுக்குனு இருக்கும்.’’

“தெரிதுல்ல, அப்போ அதுக்கான காசைக் கொடு.”

அவன் எவ்வளவு பேசினாலும் அம்மா சலிக்காமல் பேசி, வேண்டும் விலைக்கு வாங்கிக்கொண்டு வந்துவிடுவாள். ஓரளவுக்கு மேல் அம்மாவிடம் யாரும் பேரம் பேச மாட்டார்கள்.

“பிள்ளகுட்டிங்க வெச்சிக்கிறவங்க, என்னத்தை பேரம்பேச...” என்று சொல்லிக் கொண்டே அம்மா கேட்கும் விலைக்கு இறங்கி வந்துவிடுவார்கள்.

மாவடு
மாவடு

அம்மாவுக்கும் வேறு வழியில்லை. பிப்ரவரி இறுதி - மார்ச் முதல் வாரத்தில் போடும் இந்த மாவடுவை வைத்து ஓர் ஆண்டையே ஓட்டிவிடுவாள். மேலும், வீட்டில் எல்லோருமே ஊறுகாய் பைத்தியங்கள்!

அப்பாவுக்கு சாம்பார் சாதம் போடும்போதே ஊறுகாய் வேண்டும். தட்டில் அம்மா சூடாக சாதமும் சாம்பாரும் பரிமாறி பொரியலை வைத்து விட்டு சமையற்கட்டுக்குள் போய்விட்டால் போதும்... அப்பா சன்னமாகக் குரல்கொடுப்பார். அம்மாவுக்குச் சத்தம் புரியாது.

“என்ன வேணும்...”

நான் சும்மா இருக்காமல், ‘அப்பாவுக்கு ஆகுபெயர் வேணுமாம்...” என்பேன்.

``அது என்னடா ஆகுபெயர்..” என்றபடி அம்மா வெளியே வருவாள்.

மாவடு
மாவடு

“அதுதாம்மா, மூன்றுகாலத்துக்கும் பொருந்துகிற பெயர், நேத்துதான் ஸ்கூல்ல சொல்லிக்கொடுத்தாங்க... ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய், ஊறுகாய்!”

``அதானே, அந்த ஊறுகாய் இல்லைன்னா இறங்காதே...” என்றபடி உள்ளேயிருந்து நார்த்தங்காயைக் கொண்டுவந்து போடுவாள்.

``நேத்து மாவடு வாங்கினாப்ல இருந்ததே...”

“சரிதான், அது ஊறவேண்டாமா, வேணும்னா அப்படியே கொண்டுவந்து போடவா...” என்று கிண்டல் செய்யும் தொனியில் கேட்பாள்.

பள்ளிக்கூடம்விட்டு வீட்டுக்கு வரும் போதே எங்களுக்கெல்லாம் நல்ல பசியிருக்கும். மாதத் தொடக்கத்தில் அம்மா பட்சணங்கள் செய்துவைத்திருப்பாள். சில நாள் பூரி, சப்பாத்திகூடக் கிடைக்கும். தேதி இருபதைத் தாண்டினால், அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போகும். அப்படி ஒரு மாதக் கடைசி நாளில் அம்மா சூடாக சாதம் பிசைந்துபோட்டாள்.

மாவடு
மாவடு

நாலு பேரையும் உட்காரவைத்து கைபொறுக்கும் சூட்டில் பிசைந்துபோட்ட உணவு. அப்படி ஒரு சுவை. மறுநாள் நான் பள்ளிக்குக் கிளம்பும்போதே, “அம்மா இன்னிக்கு சாயங்காலமும் நேத்து பண்ணின சாதம் பண்றியா...” என்று கேட்டேன்.

“நீ கேக்கவே வேண்டாம். ஒண்ணாம் தேதி வரைக்கும் அதே சாதம்தான்” என்று சொல்லிச் சிரிப்பாள்.

ஒரு நாள் அம்மா அந்த சாதத்தைக் கிளறும்போது பார்த்தேன்.

ஆவிபறக்கும் சாதத்தில் நான்கு தேக்கரண்டி நல்லெண்ணெயை விட்டாள். பின்பு கைவிரல்களில் பாதி மறையும் அளவுக்குக் கல் உப்பைப் போட்டாள். பின்பு மாவடு ஜாடியைச் சாய்த்தாள். அதிலிருந்த தெளிவை அரை டம்ளர் அளவுக்கு சாதத்தில் ஊற்றிப் பிசைந்தாள். எனக்குப் பிரியமான சாதம் ரெடி.

ஆண்டு முழுவதும் அம்மா போடும் மாவடு கெட்டுப்போவதேயில்லை. ஆனால், பக்கத்து வீடுகளிலிருந்து வந்து சில பெண்கள் அம்மாவிடம் குறைபட்டுக்கொள்வார்கள்.

“போன வருஷம் மாசில போட்டது வைகாசி லேயே பூசணம் பிடிச்சுப்போச்சு. இத்தனைக்கும் சுத்தமாத்தான் வெச்சிருந்தேன். உங்க கைமணத்துக்குக் கெட்டுப்போகாது. கொஞ்சம் வந்து கலந்து தாங்களேன்” என்பார்கள்.

மாவடு
மாவடு

“இதுல கைமணத்துக்கு என்னடி இருக்கு? ஒரு படிக்கு கால்படி மிளகாய், கால்படி மஞ்சள், கடுகு சேர்த்து அரைச்சு எடுத்துக்கிட்டு அதுல மாவடுவைக் கொட்டிக் கிளறணும். அதுமேல ரெண்டு குழி ஸ்பூனால விளக்கெண்ணெய்விட்டு ரெண்டு குலுக்குக் குலுக்கினா ஆச்சு!”

“அதெல்லாம் தெரியும்... ஒவ் வொரு வருஷமும் அப்படித் தானே போடுறேன். ஆனாலும் சரிவரலை. எல்லாம் ரெடியா இருக்கு. கொஞ்சம் வந்து கலந்து கொடுத்துட்டுப் போங்களேன்” என்பார்கள்.

அம்மா சிரித்துக்கொண்டே போய் செய்து கொடுத்துவிட்டு வருவாள். இதுபோக அம்மா ஊறுகாய் போடும்போதெல்லாம் தெருவில் அத்தனை வீட்டுக்கும் சாம்பிள் போகும். சில நேரம் சில பெண்கள் சாய்ந்த தலையுடன் அம்மாவிடம் சின்ன கிண்ணத்தோடு வந்து நிற்பார்கள்.

“இந்த மனுஷனுக்கு நாக்கு நாலுமுழம். விவஸ்தையே இல்லாமல் அவங்க வீட்டு மாவடு நல்லாயிருக்கும். ரெண்டு கேட்டு வாங்கிட்டுவான்னு தொரத்துறார்” என்று சிணுங்கிக்கொண்டே கேட்பார்கள்.

“அதனால் என்ன, அவன் என்கூடப்பொறந்த பொறப்புமாதிரி உரிமையா கேக்கறான். உனக்கென்ன கொடு கிண்ணத்தை...” என்று வாங்கி ரெண்டு கேட்டவளுக்குக் கிண்ணம் நிரம்ப கொடுத்தனுப்புவாள்.

அப்பா இதைப் பார்த்தால், “பேஷ் பேஷ், பேசாம ஊறுகாய் வியாபாரம் ஆரம்பிச்சுடலாம் போல இருக்கே...” என்று கிண்டல் செய்வார். அம்மா அதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டதேயில்லை.

ஏப்ரல் மாதம் மாவடு என்றால் மே மாதம் ஆவக்காய். காலம்பூரா எப்போது கிடைத் தாலும் கிடாரங்காய், நார்த்தங்காய் என சமையலறையின் ஒருபக்க அலமாரி முழு வதும் ஊறுகாய் ஜாடிகளாகவே இருக்கும்.

அம்மா காலமாகிவிட்ட பின்பு ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் ஊறுகாய் இல்லாத தட்டு மனதுக்கு வேதனை அளிக்கும். உண்மையில் அம்மாவுக்காக ஏங்குகிறோமா அல்லது ஊறுகாய்க்காகவா என்று கொஞ்சம் உள்ளுக்குள் சந்தேகம் வரும். அப்படி ஏங்கிக்கொண்டிருக்கிற காலத்தில்தான் எனக்குப் பெண்பார்க்க ஆரம்பித்தார்கள்.

பெண்பார்க்கப் போன இடத்தில், ‘பொண்ணு ஏதோ தனியாகப் பேசணுமாம்’ என்று சொல்ல, கொஞ்சம் நடுக்கத்தோடே அவர்கள் காட்டிய வழியில் சென்றேன். அந்தக் காலத்து வீடு... ஹாலைக் கடந்து, இடப்புறம் இருந்த அடுப்படியைக் கடந்து... இல்லை இல்லை... அப்படியே ஒரு கணம் நின்று அடுப்படிக்குள் நோட்டம் விட்டேன். சமையலறை வாஸ்துபடி எக்ஸாஸ்ட் ஃபேனிலிருந்து எண்ணெய் வழிந்து சுவர் முழுக்கப் பரவியிருந்தது. இரண்டு பக்கமும் அலமாரிகள். ஒருபக்கம் முழுக்க பிளாஸ்டிக் பாட்டில்கள். மறுபக்கம் முழுக்க ஊறுகாய் ஜாடிகள். மனம் பரபரத்தது. அதற்குள் முன்னே நடந்துசென்ற பெண் திரும்பிப் பார்த்தாள். நான் மறுபடி அவள் பின் சென்று கொல்லைப் புறம் போனோம்.

“இல்லை, அப்பா, போன மாசமே அந்த எக்ஸாஸ்டை மாத்தி வெள்ளையடிக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தார்...” - அவள் எதையோ சமாளிக்க முயன்றாள். ஆனால் அதெல்லாம் யாருக்கு வேணும்!

“உனக்கு ஊறுகாய் பிடிக்குமா...” என்றேன்.

உலகத்திலேயே முதன்முறையாகப் பெண் பார்க்க வந்த இடத்தில் இப்படி ஒரு கேள்வியை எந்த மடையனும் கேட்டிருக்க மாட்டான்.

“ஓ, ரொம்பப் பிடிக்கும், மாவடு, ஆவக்காய், மாகாளி எல்லாம் பிடிக்கும்.”

“உனக்கு அதெல்லாம் செய்யத் தெரியுமா...”

அவள் முகம் மாறிவிட்டது.

“நான் நல்லா சாப்பிடுவேன். ஆனா, செய்யத் தெரியாது. அம்மா நல்லா செய்வா. கிச்சன்ல பார்த்திருப்பீங்களே, எவ்ளோ ஜாடின்னு...”

‘எந்தக் கோயிலுக்குப் போனாலும் சாமி ஒண்ணுதான், எந்த வீட்டுக்குப் போனாலும் தாயி ஒண்ணுதான்’ என்னும் பாரதிராஜா சினிமா வசனம் நினைவுக்கு வந்தது. எந்த அம்மா போட்ட ஊறுகாய்தான் சுவையில்லாமல் இருக்கும்!

விறுவிறு என வெளியே வந்து யாரிடமும் கலந்துகொள்ளாமல், “எனக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்கு” என்று சொன்னவனை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்!

மாவடு

மாவடு தயாரிக்க...

என்னென்ன தேவை?

மாவடு - ஒரு கிலோ உப்பு - 100 கிராம் (கல் உப்பாக இருந்தால் நல்லது) மிளகாய்ப்பொடி - 50 கிராம் கடுகுப்பொடி - 25 கிராம் மஞ்சள்பொடி - 25 கிராம் விளக்கெண்ணெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மாவடுவை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதில் உப்பு, மிளகாய்ப்பொடி, கடுகுப் பொடி, மஞ்சள்பொடி ஆகியன போட்டு நன்றாகக் கலக்கவும். அதன் மேல் 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு குலுக்கி வைக்கவும். சில நாள்களில் மாவடு நன்கு நீர்விட்டு ஊறி சுவையாகத் தயாராகிவிடும்.

- மாலதி, நங்கநல்லூர்