Published:Updated:

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - நாஞ்சில் உணவுகள்

நாஞ்சில் உணவுகள்
பிரீமியம் ஸ்டோரி
நாஞ்சில் உணவுகள்

‘நாஞ்சில்’ என்ற சொல்லுக்கு ‘கலப்பை’ என்றோர் அர்த்தம் உண்டு.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - நாஞ்சில் உணவுகள்

‘நாஞ்சில்’ என்ற சொல்லுக்கு ‘கலப்பை’ என்றோர் அர்த்தம் உண்டு.

Published:Updated:
நாஞ்சில் உணவுகள்
பிரீமியம் ஸ்டோரி
நாஞ்சில் உணவுகள்

நாஞ்சில் மலையை எல்லையாகக் கொண்ட நாடு அல்லது நாஞ்சில் மலையை உள்ளடக்கிய நாடு, நாஞ்சில் நாடு. ‘நாஞ்சில்’ என்ற சொல்லுக்கு ‘கலப்பை’ என்றோர் அர்த்தம் உண்டு. கலப்பையின் வடிவத்தில் இந்த மலை அமைந்திருந்ததால் இதற்கு இந்தப் பெயர் உண்டானது என்றும் சொல்கிறார்கள். இந்தப் பகுதிகளில் வயல்கள் அதிகம் என்பதால் கலப்பைகளும் அதிகம். ஆக, கலப்பைகள் அதாவது நாஞ்சில்கள் நிறைந்த நாடு, நாஞ்சில் நாடு எனப் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

முகில்
முகில்

சங்க இலக்கியங்களில் நாஞ்சில் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. `செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!’ - இது புறநானூற்று வரி. சங்க காலத்தில் வாழ்ந்த வள்ளல்களில் ஒருவரான நாஞ்சில் வள்ளுவன் என்பவரை, ஒருசிறைப் பெரியனார் என்ற புலவர் பாடியது. ‘செவ்விய மலைப்பக்கத்தைக் கொண்ட நாஞ்சில் நாட்டின் அரசனே’ என்று பொருள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாஞ்சில் நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவன் ஆய் அண்டிரன். இம்மன்னன் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலோ, அதற்குப் பின்போ நாஞ்சிலை ஆண்டிருக்கக் கூடும். கடையேழு வள்ளல்களுள் ஒருவரான இந்த ஆய் அண்டிரன், நாஞ்சிலை ஆட்சி செய்தது குறித்து புறநானூற்றுப் பாடல் இருக்கிறது. `உயர் சிமைய உழாஅ நாஞ்சிற் பொருந…’ என்ற அந்தப் பாடலைப் பாடியவர் மருதன் இளநாகனார். உயர்ந்த மலைச்சிகரத்தைக் கொண்ட, உழவு செய்யப்படாத நாஞ்சில் என்ற நாட்டின் அரசன் என்று அர்த்தம். இப்படி புறநானூறு சொல்லும் நாஞ்சில் என்பது, இன்றைக்கும் இருக்கின்ற நாஞ்சில் பகுதிகளா அல்லது ஒரு காலத்தில் கடல் கொண்டுபோன குமரிக் கண்டத்திலிருந்த பகுதிகளா என்பதில் சந்தேகம் உண்டு.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - நாஞ்சில் உணவுகள்

குறத்தியறை என்பதே தலைநகர். அதை ஆண்ட மன்னனின் பெயர் நாஞ்சில் குறவன். அவன் ஆண்ட பகுதிகளே நாஞ்சில் நாடு என்பது காலம் காலமாகச் சொல்லப் படும் கர்ண பரம்பரைச் செய்தி. சரி, நாஞ்சில் நாட்டின் எல்லைகள் எவை?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘அன்றைய நிலப்பகுதிகளை வைத்துப் பார்த்தால், கிழக்கே ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கும், மேற்கே பன்றி வாய்க்காலுக் கும், தெற்கே மணக்குடிக்கும், வடக்கே மங்கலம் என்ற குலசேகரத்துக்கும் இடைப் பட்ட பகுதியே நாஞ்சில் நாடு’ என்கிறார் இந்த மண்ணின் எழுத்தாளரான நாஞ்சில் நாடன். அகத்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் சேர்ந்ததே இன்றைய நாஞ்சில் நாடு என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். மாறுபட்ட கருத்துகளும் உண்டு.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - நாஞ்சில் உணவுகள்

நாஞ்சிலின் உணவுக் கலாசாரம் என்பது தென்தமிழகத்தின் உணவுக் கலாசாரமும் கேரளாவின் உணவுக் கலாசாரமும் ஒன்றோடு ஒன்று இயல்பாகக் கலந்தது. பல்வேறு உணவுப் பதார்த்தங்களின் பெயர்களில் மலையாள வாசனையும் கலந்தே இருக்கும். உணவுகளிலும் தேங்காய், தேங்காய் எண்ணெயின் வாசனை தூக்கலாகவே இருக்கும்.

இனிப்பு ஒன்றிலிருந்து தொடங்கலாம்.

முந்திரிக்கொத்து - இது தமிழர்களின் பாரம்பர்ய இனிப்பு. கேரள கலாசாரத்தின் கலப்பைத் தாண்டியும் நாஞ்சில் பகுதிகளில் அதிகம் தயாரிக்கப்படும் இனிப்பாக இப்போதும் இருக்கிறது. வீட்டுக்கு வீடு சாதாரணமாகவே முந்திரிக்கொத்து தயாரிக்கிறார்கள். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்குப் பரிமாறுவதில் இருந்து கல்யாணம் முடிந்து மறுவீட்டுப் பலகாரத்துக்கு ஒரு பெரிய போணியில் (அண்டா) வைத்து மாப்பிள்ளை வீட்டுக்குச் சீராக அனுப்புவது வரை நாஞ்சில் கலாசாரத்தில் முந்திரிக்கொத்துக்கு முக்கிய இடம் உண்டு.

நாஞ்சில் உணவுகள்
நாஞ்சில் உணவுகள்

சிறு பயிறு எனப்படும் பாசிப்பருப்பை வறுத்து உடைத்து, தோல் நீக்கி மாவாகத் திரிக்கிறார்கள். அதில் கருப்பட்டிப் பாகு கலந்து தேங்காய்த்துருவல் வறுத்துப் போட்டு, கறுத்த எள், ஏலக்காய்ப் பொடி சேர்த்து உருண்டையாகப் பிடிக்கிறார்கள். அந்த உருண்டைகளைக் கரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவில் முக்கி, தேங்காய் எண்ணெயில் சுட்டெடுத்தால் முந்திரிக்கொத்து தயார். நாகர்கோயில் பகுதிகளில் முந்திரிக்கொத்து தயாரிப்பு என்பது குடிசைத் தொழிலாகவும் அமோகமாக நடக்கிறது.

நாஞ்சில் பகுதிகளில் வீட்டுக்கு வீடு வாழை மரங்களும், பலா மரங்களும் இருப்பதைக் காணலாம். தினமும் வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைப்பூ என்று ஏதாவது ஒன்று நாஞ்சில் மக்களின் உணவில் சேரும். அதேபோல பலா சீஸன் என்றால் பல்வேறுவிதமான பலா சமையல் களைகட்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வகை வாழைப்பழங்கள் பயிராகின்றன. ஏந்தன், செந்துளுவன், வெள்ளைத் துளுவன், சிறு துளுவன், மட்டி, கருமட்டி, சிங்கன், கூம்பில்லா சிங்கன், கதலி, பாளையங்கோட்டை, ரஸ்தாளி, பூவன், கப்பி, மொந்தன், பேயன், செவ்வாழை, சிறுமலை, கற்பூரவள்ளி, நேந்திரன்… இன்னும் அடுக்கலாம்.

நாஞ்சில் உணவுகள்
நாஞ்சில் உணவுகள்

இதில் கதலியும் நேந்திரமும் நாஞ்சில் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. அவியல் என்றாலே முக்கியமானது வாழைக்காய். நாஞ்சில் சமையலில் அவியல் தனிச்சுவையுடன் இருப்பதற்காக பேயன் வாழைக்காயைச் சேர்த்து சமைக்கிறார்கள். நிறைய காய்கறிகளுடன் துருவிய தேங்காயையும் அள்ளிப் போடுகிறார்கள். தயிரும் சேர்க்கிறார்கள். தேங்காய் எண்ணெய் சேர்த்து அவியலைக் கடைசியாகக் கமகமவெனப் புரட்டி எடுக்கிறார்கள். எனவே இதன் பெயர் `புரட்டு அவியல்’. சில பகுதிகளில் அவியலில் முட்டையும் சேர்க்கப்படுகிறது.

களியக்காவிளை தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மிக அழகான ஊர். இந்த ஊரின் டீக்கடை முதற்கொண்டு பல்வேறு கடைகளில் இலையப்பம் அல்லது இலைப்பணியாரத்தைப் பார்க்கலாம். ஒருவகைக் கொழுக்கட்டையான இதற்கு கேரளாவில் ‘வல்சியம்’ என்று பெயர். வெல்லம், பாசிப்பயறு, அரிசி மாவு அல்லது மைதா, நேந்திரம்பழம், அவல் - இந்தக் கலவையில் உருவாகும் அப்பத்தை, வாழை யிலையில் வைத்து அவித்துத் தயாரிப்பதே இலையப்பம்.

திருக்கார்த்திகைக்கு வீடுகளில் இலையப்பம் செய்கிறார்கள். பச்சரிசி மாவுக்குள் இனிப்பான பூரணத்தை நிரப்பி அதை வாலையிலைக்குள் வைத்து மடக்கி ஆவியில் வேகவைத்து எடுக்கிறார்கள். பலாப்பழம் கொண்டும் இலையப்பம் கமகமவெனத் தயாரிக்கப்படுகிறது.

நாஞ்சில் உணவுகள்
நாஞ்சில் உணவுகள்

முன்பெல்லாம் நாஞ்சில் பகுதியில் வீட்டுக்கு வீடு சம்பா அரிசிதான் புழக்கத்தில் இருந்தது. இட்லி, தோசை என்பன எல்லாம் பண்டிகைப் பலகாரங்கள். வீட்டில் தோசைக்கு மாவு அரைக்கிறார்கள் என்பதையே குழந்தைகள் கொண்டாட்ட மாகப் பார்த்தார்கள். அமாவாசை, பௌர்ணமி, தீபாவளி, கோயில் திருவிழா போன்ற சில குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே தோசையும் இட்லியும் சுடப்பட்டன. அதில் சிறப்பானது கருப்பட்டி தோசை. இன்னொன்று, சினை இட்லி. யார் வீட்டிலாவது சினை இட்லி சுடுகிறார்கள் என்றால் அந்தத் தெருவே மணக்கும்.

அதென்ன சினை இட்லி? இட்லியின் மாவுக்குள் சிறுபயிறு, தேங்காய், சர்க்கரை, ஏலம், சுக்கு போன்றவற்றை எல்லாம் கலந்து உள்ளே வைத்து அவித்தெடுப்பார்கள். கருவுற்றதை, ‘சினை’ என்பார்கள். கருவுற்ற பெண்ணின் வயிறுபோல உப்பிய தோற்றத்தில் இருப்பதால் இதற்கு சினை இட்லி என்று பெயர்.

நாஞ்சில் பகுதியில் காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ (ராச்சாப்பாடு) உளுந்தங்கஞ்சி பருகுகிறார்கள். உளுந்தச்சோறும் அங்கே முக்கியமான உணவு. சென்ற நூற்றாண்டு வரை கஞ்சியே அங்கே பிரதானமான காலை உணவு. எனவே சோறு உண்பதைக்கூட ‘கஞ்ஞி குடி’ என்றே அழைக்கிறார்கள். மீதமாகிய உளுந்தஞ்சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்து மறுநாள் அதை அமிர்தம்போல உண்ணும் பழக்கமும் இருக்கிறது.

நாஞ்சில் உணவுகள்
நாஞ்சில் உணவுகள்

வாழைக்கு அடுத்தபடியாக நாஞ்சில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பழம் பலா. பலாப்பிஞ்சு, பலாக்காய், பலாச்சுளை, பலாக்கொட்டை என அனைத்தையுமே சமையலில் பயன்படுத்துகிறார்கள். ஜனவரி மாதத்தில் பலாப்பிஞ்சுகள் சமையலில் சேருகின்றன. பிப்ரவரியில் பலாக்காய்கள் மணக்கின்றன. மார்ச் தொடங்கி ஜூன் வரை பலாப்பழங்கள் சமையலறையை ஆள்கின்றன.

சக்கை அவியல் – வழக்கமான அவியல் செய்யும் முறைதான். ஆனால், பலாக்காய் களையும் பலா மரத்தின் பூ மடல்களையும் இதற்குள் கூட்டணி சேர்க்கும்போது சக்கை அவியல் தனித்துவச் சுவை பெறுகிறது. சக்கை துவரன் – பலாக்காய் பிஞ்சைக் கொண்டு செய்யப்படும் துவரன். சக்கைப் புளிக்கறி – வத்தலுடன் புளி, தேங்காய், மசாலாப் பொருள்கள் சில சேர்த்து, பலாச் சுளை, பூமடல், பலாக்கொட்டை ஆகிய வற்றையும் கலந்து வைக்கப்படும் கறி. ஆனி, ஆடி மாதங்களில் நாஞ்சில் எங்கும் சக்கைப் புளிக்கறியின் மணத்தை அனுபவிக்கலாம்.

பலாப்பிஞ்சு கொண்டு ஊறுகாயும் செய்து உண்கிறார்கள். பலா சீஸன் உச்சத்தில் இருக்கும்போது, வீடெங்கும் பலாக்கொட்டைகள் இறைந்து கிடைக்கும். அவற்றையும் விட்டுவைப்பதில்லை. அவித்தோ, வறுத்தோ, தீயில் வாட்டியோ உண்கிறார்கள். தவிர, பலாக்கொட்டைகளை நறுக்கி தேங்காய் எண்ணெயில் பொரித்து, அதில் உப்பு, மிளகாய்த்தூள் போட்டு குலுக்கிவைத்தால் மாலை நேரத் தின்பண்டம். பலாக்கொட்டைத் துவரனும் செய்யப்படுவதுண்டு.

சக்கைப்புட்டு, சக்கை அடை, சக்கை அப்பம், சக்கைப் பிரதமன் என்று பலா உணவுகளின் பட்டியல் வெகுநீளம். சக்கைப் பிரதமனில் தேங்காய்ப்பால் சேர்ப்பார்கள். அதற்குப் பதிலாக பசும்பால் சேர்த்துக் கிளறினால் அந்த இனிப்புக்குப் பெயர், சக்கைப் பாலடை.

நெத்திலி மீனுடன் பலாச்சுளைகளையும் சேர்த்து வைக்கப்படும் அவியலின் பெயர், சக்கை நெத்தோலி. அதுவே அளவில் சிறிய கூனி மீன் என்றால் அதில் பலாச்சுளைகளையும் பொடிதாக நறுக்கிப்போட்டு சக்கைக் கூனி என்ற துவரன் வைக்கிறார்கள்.

அடுத்து ரசவடை. தென்னிந்தியாவில் ரசவடை என்பது பரவலான உணவுதான். ஆனால், நாஞ்சில் ரசவடை தனித்துவமானது. இங்கே காலை, மதியம், இரவு என்று எல்லா நேரங்களிலுமே ரசவடை கிடைக்கிறது. பொதுவாக ரச வடை என்றாலே ரசத்தில் ஊறவைத்துத் தரப்படும் மெதுவடைதான். மீந்துபோகும் வடைகளை ரசத்தில் போட்டுக் கொடுப்பார்கள். நாஞ்சில் பகுதியில் ரசவடைக்கென்றே பிரத்யேகமான பருப்பில் வடைகள் தயாரிக்கப்படுகின்றன. அது பட்டாணிப் பருப்பு. நாஞ்சில் பகுதியில் முக்குப்பருப்பு (Yellow Split Peas) என்கிறார்கள். அதைப் பக்குவமாக ஊறவைத்து, பதமாக அரைத்து, வடை சுடுகிறார்கள். நாஞ்சில் பக்குவத்தில் செய்யப்பட்ட காரம் தூக்கலான மிளகு ரசத்தில், வடைகளையும் போட்டுச் சற்றே கொதிக்கவிட்டு ரசவடை தயாரிக்கப்படுகிறது. இரண்டு மணி நேரங்கள் ஊறவைத்த பிறகு சாப்பிடும் ரசவடையின் சுவையில் சொர்க்கத்தைக் காணலாம்.

அந்தக் காலத்திலிருந்தே நாஞ்சில் பகுதியில் மரச்சீனிக்கிழங்கு விளைச்சல் அதிகம். ஆனால், அப்போதெல்லாம் அதை யாரும் சீண்டவில்லை. அதை உண்பது கௌரவக் குறைச்சலாகக் கருதப்பட்டது. எதுவுமே இல்லாத ஏழைகள்தாம் மரச்சீனிக்கிழங்கை உண்டார்கள். 19, 20-ம் நூற் றாண்டில் நிகழ்ந்த பஞ்சங்களின்போது வேறு எதுவும் கிடைக்காததால் மரச்சீனிக் கிழங்கும் மக்களின் பொதுவான உணவாக மாறிப்போனது.

நாஞ்சில் மக்கள் நேந்திரம்பழம் உண்ணாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவு இங்கே நேந்திரம் விரும்பப்படுகிறது. டீக்கடைகளில் காலையிலேயே நேந்திரம்பழங்கள் மாவில் முக்கியெடுக்கப்பட்டு எண்ணெய்ச் சட்டியில் பொரித்தெடுக்கப்படுகின்றன. நேந்திரம்பழ இனிப்பு பஜ்ஜி போன்ற இந்த பதார்த்தத்தின் பெயர், பழம்பொரி. தவிர, நேந்திரம்பழத்தை சிப்ஸ் தொடங்கி பாயசம் வரை பலவிதங்களில் சமைக்கிறார்கள். ஏத்தங்காய், ஏத்தம்பழம் என்று நேந்திரம் அழைக்கப்படுவதுண்டு.

தக்கலையில் ஏத்தங்காய் உப்பேரி பிரபலமானது. சர்க்கரை, வெல்லம் இரண்டையும் சம அளவில் கலந்து காய்ச்சிய பாகில் சுக்கு, ஏலக்காய், நெய் சேர்க்கிறார்கள். துண்டு துண்டாக நறுக்கிய நேந்திரத்தின் மீது பாகுக்கலவையை ஊற்றிப் பதமாகக் கிளறி, அதில் கிராம்பும் மிளகும் கலந்து நிழலில் காய வைக்கிறார்கள். இதுதான் உப்பேரி. ஆறு மாதங்கள் வரை கெடாது. ஓணம் விருந்து முதல் கல்யாண விருந்து வரை பரிமாறப்படும் இந்த உப்பேரி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிறது.

நாஞ்சிலின் மார்த்தாண்டம் கேரள பாணி உணவுகளுக்குப் பெயர் பெற்றது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் மார்த்தாண்டம் புளிச்சேரி என்ற கேரள வகைக் குழம்பு. நாம் செய்யும் மோர்க்குழம்பு போன்றது. ஆனால், புளிச்சேரிக்குப் பிரதானமானது அன்னாசிப்பழம், வெண்பூசணி. இந்தக் கூட்டணிக்குப் பதிலாக மாங்காய் - வெண்டைக்காய் கலப்பிலும் புளிச்சேரி தயாரிக்கப்படுகிறது.

சாம்பாரில் இரண்டு வகை. கொத்தமல்லி, மொளவாத்தல் என்ற மிளகாய் வற்றல், வெந்தயம், சீரகம் எல்லாம் வறுத்து இடித்த அல்லது திரித்த மசாலாவைக் கொண்டு செய்யப்படுவது கறுத்த சாம்பார். அதிலேயே தேங்காய் அரைத்துவிடப்பட்டால் அதற்கு அங்குள்ள மக்கள் வைத்துள்ள பெயர், வெள்ளை சாம்பார். வத்தக்குழம்புக்கு இங்கே தீயல் என்ற பெயர் உண்டு. சில கிராமங்களில் தீயல் சாதம் செய்யப்படுவதுண்டு. கட்டுச்சாதமாகவோ, மறுநாளின் தேவைக்காகவோ விரவப்படும் சாதம் இது. மொச்சை, முருங்கைக்காய், கொண்டைக் கடலை எல்லாம் சேர்த்துத் தயாரித்த தீயலை, நல்லெண்ணெய் விட்டு சாதத்துடன் பிசைந்து வைத்து விடுவார்கள். மறுநாள் சாப்பிடும் போது அதன் ருசி அலாதியானது.

நார்த்தை இலையை உலர வைத்துச் செய்யும் தவண்பொடி, திரளி இலை கொழுக்கட்டை, நாஞ்சில் மிளகுத் தீயல், வாழைப்பூ வடை, மண் சட்டியில் செய்யப்படும் மீன் குழம்பு, குமரிக்கடல் கிராமங் களின் விதவிதமான மீன், கருவாட்டுச் சமையல் என்று நாஞ்சில் சிறப்பு உணவுகளின் பட்டியல் வெகு நீளம்.

நாஞ்சில் பகுதிகளில் கல்யாண வீடுகளில் சரியான முறையில் பரிமாறவில்லை என்றால், கோபத்தில் விசுக்கென்று எழுந்து போகிறவர்கள் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் மருமக்கள் வழி மான்மியம் வழிவந்தவர்களாக இருக்கக்கூடும். சென்ற நூற்றாண்டு வரை நாஞ்சில் நாட்டில் நிலவிவந்தது மருமக்கள் வழி சொத்துரிமை முறை. அதனால் விளைந்த தீங்குகளை, பாதிக்கப்பட்ட ஒரு பெண் புலம்பலுடன் பாடுவதுபோல அமைந்ததுதான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய மருமக்கள் வழி மான்மியம் நூல். அதில் சில வரிகள் மட்டும்.

தின்பவ னெல்லாம் தின்பான் போவான்

திருக்கணங் குடியான் தெண்ட மிறுப்பான்!

அவியல் பொரியல் துவையல் தீயல்

பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி

சாம்பார் கூட்டுத் தயிர்ப்புளி சேரி

சேனை எத்தன் சேர்த்தெரி சேரி

பருப்பு பப்படம் பாயசம் பிரதமன்

பழமிவை யோடு படைப்புப் போட.

எத்தனை நாளைக் கெங்களால் ஏலும்?

அரசனும் கூட ஆண்டி யாவனே!

நாஞ்சில் நாடும் ஔவையாரும்!

நாஞ்சில் நாட்டுக்கும், ஆத்திச்சூடி அருளிய ஔவையாருக்கும் பல நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. நாஞ்சில் நாட்டில் கிழக்கு எல்லையில் முப்பந்தரம் என்ற முப்பந்தல் என்கிற இடம் இருக்கிறது. இந்த இடத்தில்தான், ஔவையார் பாரி மன்னனின் மகள்களான அங்கவை, சங்கவைக்குத் திருமணம் செய்து வைத்த தாகச் சொல்லப்படுகிறது. திருமணத்துக்கு சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர் களையும் அழைத்த ஔவையார், மூவேந்தர் களுக்கும் தனித்தனியாக மூன்று விதமான பந்தல்கள் போட்டு ‘ராஜ மரியாதை’ செய்தார். அதனால்தான் ‘முப்பந்தல்’ என்ற பெயர் அமைந்ததாகச் சொல்கிறார்கள்.

ஒளவையாரம்மன் நோன்பு

`தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்…’ இது புறநானூற்றில் இடம்பெற்றுள்ள ஔவையார் பாடிய பாடல். நாஞ்சில் வள்ளுவனை, ‘பெரிய பெரிய பலா மரங்களை உடைய நாஞ்சில் நாட்டின் மன்னன்…’ என்று பாடுகிறார். ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் இருந்த ‘வரகுண பாண்டிமங்கலம்’ என்ற ஊர், ஔவையார் இட்ட சாபத்தால் அழிந்துபோனதாக ஒரு கதை உண்டு. இப்படி நாஞ்சிலுக்கும் ஔவையாருக்கும் பல தொடர்புகள் சொல்லப்படுகின்றன. அதனால்தான் இங்கே மட்டும் ஔவையாருக்கு மூன்று கோயில்கள் இருக்கின்றன.

குறத்தியறை என்ற ஊரில் குடைவரைக் கோயில் ஒன்று. முப்பந்தலில் ஓர் ஔவையாரம்மன் கோயில். சந்தைவிளை அருகே நெல்லியடி ஔவை கோயில். இந்த இடத்தில் இருந்துதான் ஔவையார் இவ்வுலகி லிருந்து அவ்வுலகுக்குச் சென்றார் என்று நம்பப்படுகிறது. இதனால்தான் நாஞ்சில் மக்கள் மத்தியில் குழந்தைகளுக்கு ‘ஔவை’ என்ற பெயர் வைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.

ஒளவையாரம்மன் நோன்புக்கு, சர்க்கரைக் கொழுக்கட்டை தயாரித்து வழிபாடு செய்யும் வழக்கம் இப்போதும் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism