Published:Updated:

பருப்புத் தேங்காய்

பருப்புத் தேங்காய்
பிரீமியம் ஸ்டோரி
News
பருப்புத் தேங்காய்

பருப்புத் தேங்காய்க்கு என்று தனிப்பட்ட ரெசிப்பி கிடையாது.

ருப்புத் தேங்காய் என்ற பெயரை முதன்முதலில் கேள்விப்பட்டபோது வயது ஆறு. உறவினர்களின் திருமணம் முடிந்து ரயிலில் திரும்பி வந்துகொண்டிருந்தோம். அம்மாவிடம், “அம்மா பசிக்குது” என்றபோது, “பாட்டி பருப்புத் தேங்கா கொடுத்திருக்கா, சாப்டுறியா” என்றாள். “தேங்காய் எல்லாம் வேண்டாம்மா” என்றேன் சலிப்போடு.

“அசடு, பருப்புத் தேங்காய்னா தேங்காய் இல்லடா அம்பி, உனக்கு ரொம்பப் பிடிக்குமே மனோகரம்” என்று சொல்லி அம்மா எடுத்து நீட்டினாள். பழுப்பு நிறத்தில் இருந்த அந்த இனிப்பு முறுக்குப் பந்தைப் பார்க்கும்போதே நாவில் நீர் ஊறியது. ஊர் வரும் வரை தனிஒருவனாக கைகள் ஈரமாகும் அளவுக்கு முழுப் பந்தையும் தின்றுதீர்த்தது வேறு விஷயம்!

பருப்புத் தேங்காய்
பருப்புத் தேங்காய்

அம்மா அவ்வப்போது செய்யும் மனோகரத்தைவிட பருப்புத் தேங்காயாகக் கிடைக்கும் மனோகரம் மிகவும் சுவையாக இருப்பதுபோலவே தோன்றியது. அன்று முதல் பருப்புத் தேங்காய் என்ற சொல்லைக் கேட்டதும் அனைத்துச் சுரப்பிகளும் வேலை செய்யத் தொடங்கிவிடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வயதுக்கு வந்தால் விவரம் தெரியும் என்பார்களே, அது சத்தியம். பருப்புத் தேங்காய் என்றால் மனோகரம் என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு லட்டு, மைசூர்பாகு, நிலக்கடலை, உடைத்த கடலை, பர்பி என எல்லாவற்றிலும் பருப்புத் தேங்காய்கள் செய்வார்கள் என்று அறிந்துகொண்டபோது வாழ்க்கை எவ்வளவு இனிப்பானது என்கிற ரகசியம் புரிந்தது. திருமணம், சீமந்தம் அல்லது வேறு விழாக்களில் சகல சீர்களோடு கண்ணாடி மினுக்கும் கூண்டில் ஒளிரும் பருப்புத் தேங்காயைப் பார்த்தாலே மனம் குதூகலமாகிவிடும். உள்ளே இருப்பது மனோகரமா, கடலையா என்று கணிக்க முயலும். நெருங்கிய சொந்தமாக இருந்தால் வெட்கப்படாமல் கேட்டுவிடுவதுண்டு. அப்படி ஒரு மாமா முறை உறவுக்காரரிடம் கேட்கப் போய் அவர் அம்மாவிடம், `என்ன உங்க பையன் சரியான சாப்பாட்டு ராமனா இருப்பான் போலிருக்கே’ என்று சொல்லி அந்தப் பருப்புத் தேங்காய்களில் ஒன்றை அம்மாவிடம் சுற்றிக்கொடுத்து அனுப்ப முதன்முறையாக என்னைக் கவலையோடு பார்த்தாள் அம்மா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இதற்கெல்லாம் பயந்தால் பருப்புத் தேங்காய் கிடைக்குமா... வீட்டுக்கு வந்ததும் கவரைப் பிரித்தால், நிலக்கடலைப் பருப்புத் தேங்காய். மனோகரம் இல்லையென்றால் அடுத்த சாய்ஸ் நிலக்கடலைதான். ஆனால், என்ன சோகம் என்றால் அதை நியூஸ்பேப்பரில் சுற்றிக் கொடுத்திருந்தார் அந்த மகானுபாவர். சுடச் சுடக் கிளறியதும் பேப்பர் போட்டுச் சுற்றிவிட்டாரோ என்னவோ பருப்புத் தேங்காயோடு நியூஸ்பேப்பர் ‘பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டிருந்தது. ‘இரு வர்றேன்’ என்று சொன்ன அம்மாவுக்காகக் காத்திராமல் பேப்பரைப் பிரித்தால் பாதிப் பேப்பர்தான் வந்தது. மீதிப் பேப்பர் பருப்புத் தேங்காயோடு இருந்தது. நகக்கண்கள் வலிக்க வலிக்கப் பேப்பரைக் கிழிக்க முயன்றும் முழுதாகக் கிழிக்க முடியவில்லை. பிறகென்ன, ஒவ்வொரு வாய்க்கும் ஒருமுறை பேப்பரைக் கடித்துத் துப்ப வேண்டியிருந்தது. சில துண்டுப் பேப்பர்கள் வாய்க்குள்ளும் போய்விட்டன. ஆனால், அதுவும் இனிப்பாகவே இருந்தது!

பருப்புத் தேங்காய்
பருப்புத் தேங்காய்

என் பருப்புத் தேங்காய் பிரியம் சொந்த பந்தங்களுக்கு எல்லாம் தெரிந்த ரகசியமாகி விட்டது. மறக்காமல் ஒரு துண்டு பருப்புத் தேங்காயை உடைத்துத் தந்து விடுவார்கள். அம்மா தலையில் அடித்துக்கொண்டே, `மானம் போறது’ என்பாள் தனியாக.

ஒரு திருமணத்தில் சம்பந்தி வீட்டுக்குக் கொடுக்கவேண்டிய ஒரு பருப்புத் தேங்காயை அம்மாவிடம் சவடாலாக எடுத்துக் கொடுத்து விட்டாள் அத்தைப்பாட்டி. சம்பந்தி மாமி என்ன நினைத்தாளோ, `சாப்டுற குழந்தைகள் இருக்கிறவாளுக்குக் கொடுக்கிறதுதானே நியாயம்’ என்று ஏதோ சொத்தை எழுதிவைத்த பெருமையில் பேசினாள். என்ன வேண்டுமானால் பேசி விட்டுப் போகட்டும்... நமக்கு வேண்டியது கிடைத்ததே என்று புளகாங்கிதப்பட்டுக் கொண்டே வீட்டுக்கு வந்து கவரைப் பிரித்தேன்.

பருப்புத் தேங்காய்
பருப்புத் தேங்காய்

முழு மனோகரம் பருப்புத் தேங்காய். ஆசை எல்லை மீற அதை இரு விரல்களால் கிள்ள முயன்றேன்; முடியவில்லை. பாகு இறுகியிருக்கிறது. பாகு இறுக இறுக சுவையும் அதிகமாகுமே... கிச்சன் மேடையில் பேப்பரை விரித்து பருப்புத் தேங்காயை வைத்து, அம்மா இஞ்சி நசுக்கும் கல்கொண்டு அதில் அடித்தேன். சின்னத் துகள் தெரித்தது. சரி, இனி பலத்தைக் காட்ட வேண்டியதுதான் என்று ஓங்கி அடித்தேன். அவ்வளவுதான், பருப்புத்தேங்காய் எகிறித் துள்ளிக் கொண்டுபோய் அருகில் இருந்த பால் பாத்திர மூடியில் விழுந்து அது கவிழ்ந்தது. பின் அங்கிருந்து உருண்டு ஓடி கிச்சனுக்கு வெளியில் போய் விழுந்தது.

‘இதோடு இவனுக்குப் பருப்புத் தேங்காய் மீதான ஆசையே போய்விட வேண்டும்’ என்று யாரோ சூனியம்வைத்தாற்போல இருந்தது. பால் கொட்டி கிச்சனே களேபரமாகியிருந்தது. அம்மா வருவதற்குள் துடைத்துவிடலாம் என்று எண்ணுவதற்குள் அம்மாவே வந்துவிட்டாள்.

சொல்லாமலேயே சூழ்நிலையைப் புரிந்து கொண்டாள். அடுப்பில் வெந்நீர் வைத்து அதற்குள் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பருப்புத் தேங்காயைப் போட்டாள். பத்து நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து என் முன் கொண்டுவந்து வைத்தாள். பருப்புத் தேங்காய்க்கு வியர்த்திருந்தது. லேசாக உடைத்தேன்; தானாக உடைந்தது.

பருப்புத் தேங்காய்
பருப்புத் தேங்காய்

`கொஞ்சம் பொறுக்கமுடியாதா... அப்படி என்ன நாக்கு கேக்குதோ...’ என்று புலம்பிக்கொண்டே அம்மா நகர்ந்து போனாள். பாகு இறுகியிருந்ததே தவிர சுவைக்கவேயில்லை. கொஞ்சம் தின்றுவிட்டு மிச்சத்தை உள்ளே கொண்டுபோய் வைத்து விட்டேன். அடுத்த கல்யாணம் எப்போ, சுவையான பருப்புத் தேங்காய் எப்போ என்று மனம் பரபரத்தது. அதற்கான நாளும் வந்தது.

அடுத்த ஆறு மாதங்களில் அத்தைக்கு வரன் கூடிவிட்டது. மாப்பிள்ளை வீட்டுக் காரர்களை ரொம்பப் பிடித்துப் போய் விட்டது, எனக்கு மட்டும் கொஞ்சம் கூடுதலாக...

`இதோ பாருங்கோ, எங்க வடஆற்காடு வகையறாவுல கல்யாணத்துல, மாப்பிள்ளை அழைப்புக்கு ஒண்ணு, காசியாத்திரைக்கு ஒண்ணு, முகூர்த்தத்துக்கு ஒண்ணு, நலுங்குக்கு ஒண்ணு, சாந்தி முகூர்த்தத்துக்கு ஒண்ணுன்னு மொத்தமா எல்லாம் சேர்த்து ஒன்பது ஜோடி பருப்புத் தேங்காய் வைக்கணும். அதுல ஒரு கண்டிஷன், ஒருதரவை வெச்ச ஐட்டம் திரும்ப வரக் கூடாது’ என்று அந்த மாமா சொல்லும்போதே அவர் உதடுகள் துடித்தன. மாமாவுக்கு ‘ஹை ஃபை’ சொல்லலாம்போல இருந்தது.

`ஒன்பது அல்ல பத்துக்கூட பண்ணிடலாம். ஆனா, ஒண்ணு மாத்தி வரக் கூடாதுன்னா எப்படி...’ என்று அம்மா புலம்பினாள்.

இது ஒரு சரியான சவாலாகத் தோன்றியது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இவர்கள் இந்த மனோகரம், லட்டு, கடலை என்று பஜனை செய்து கொண்டிருப்பார்கள்... புதுசா ஏதாவது யோசிக்கட்டுமே!

மாமா டர்ன் முடிந்ததும் மாமி, `சாந்தி முகூர்த்தத்துக்கு முந்திரிப்பருப்புப் பருப்புத் தேங்காய்தான் எங்க வழக்கம்’ என்றாள்.

அப்பாவுக்கு `பக்’ என்றிருந்தது.

`முந்திரிப்பருப்புல பருப்புத் தேங்காயா நான் கேள்விப்பட்டதே இல்லை. முந்திரிப் பருப்பு என்ன வெலை விக்கிறது... தெரியாம கேக்குறேன், தம்பதிகள் சாந்தி முகூர்த்துல ஒக்காந்து அதை உடைச்சுதான் தின்னுண்டு ருக்கப் போறாளா’ என்று புலம்பினார்.

ஆனால், கான்ட்ராக்ட் கணேசன் `மிட்டாய், முந்திரி, பாதாம்னு இந்தக் காலத்துல எல்லாத்துலயும் பண்ண ஆரம்பிச் சுட்டா, அதான் அந்த மாமி கேக்குறா... கவலைப்படாதீரும் உம்ம பட்ஜெட்ல முடிச்சுத் தர்றேன் போதுமா’ என்று அப்பாவைத் தேற்றினார்.

கல்யாணம் தடபுடலாக ஒன்பது பருப்புத் தேங்காய்களோடு நடந்து முடிந்தது. நான் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை என்னால் முடிந்த அளவு கவனித்துக் கொண்டேன். அவர்களே, `பலே, சமர்த்தா இருக்கியே’ என்று பாராட்டினார்கள். அதெல்லாம் கட்டுசாதக் கூடை அன்று முறிந்தது.

ஒரு ஜோடி பருப்புத் தேங்காயில் ஒன்று மாப்பிள்ளை வீட்டுக்கு; மற்றொன்று பெண் வீட்டுக்கு. ஒன்பது செட்களையும் வாங்கி வைத்துக்கொண்ட மாமி ஒன்றைக் கூடத் திருப்பித் தரவேயில்லை. தாம்பூலம் வாங்கிக் கொண்டு கிளம்பும் ஆயத்தம் வேறு நடந்து கொண்டிருந்தது. நான் அம்மாவின் காதைக் கடித்தேன்.

`அம்மா, பருப்புத் தேங்காய் ஒண்ணுகூட வரலை...’

அம்மாவும் அதே ரகசியக் குரலில், `கேட்டேண்டா... அவா வழக்கத்துல பிரிச்சுக்கொடுக்கிறது இல்லையாம். ஜோடியைப் பிரிக்கக்கூடாதாம். அப்படிப் பிரிச்சா தம்பதிக்கு ஆகாதுன்னு சொல்லிட்டா’ என்றாள். எனக்கு உலகமே இருண்டுவிட்டது. கண்களில் கண்ணீர் துளிர்த்தது. எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.

`அட அம்பி, என்ன அத்தை பிரிஞ்சு போறான்னு அழறியா... அத்தை எங்க போறா... இங்க இருக்கிற ஆற்காடுக்கு. பஸ் ஏறினா நாலுமணி நேரம். இதுக்குப்போய் அழுவாளா, கண்ணைத் துடை...’ என்று சம்பந்தி மாமியிலிருந்து அனைவரும் வந்து தேற்றினர்.

நிறைய சாமான்கள் வண்டியில் ஏற்ற வேண்டியிருந்தது. நான் நகரவேயில்லை. மற்றவர்கள் ஓடியாடி பொருள்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக ஓர் அட்டைப்பெட்டியை ஏற்றினார்கள். அதில் ‘பருப்புத் தேங்காய்’ என்று எழுதியிருந்தது. என்னால் அதற்குமேல் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அந்த நேரத்தில் வண்டியில் ஏறப்போன அத்தை தனக்காகத்தான் அழுகிறான் என்று சொல்லி அருகில்வந்து சமாதானப்படுத்தி னாள்.

அம்மா, `நா பாத்துக்கிறேன். நீ கிளம்புமா’ என்று சொல்லிவிட்டு, `எதுக்குடா இப்படி ஊரைக் கூட்டுற’ என்று அங்கலாய்த்துக் கொண்டாள்.

காலம் ஓடிக்கொண்டேயிருக் கிறது. அப்போது போலவே இப் போதும் நல்ல பருப்புத் தேங்காய்கள் தாம் என் ஃபேவரைட்!

பருப்புத் தேங்காய்
பருப்புத் தேங்காய்

பருப்புத் தேங்காய் செய்வது எப்படி?

ருப்புத் தேங்காய்க்கு என்று தனிப்பட்ட ரெசிப்பி கிடையாது. எப்படி மனோகரம், கடலை உருண்டை, பர்பி, மைசூர்பாகு எல்லாம் செய்கிறோமோ அதே முறைதான் இதற்கும். உதாரணமாக நிலக்கடலையில் செய்யும்போது கடலையை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரைப் பாகு காய்ச்சி கம்பிப் பதம் வந்ததும் கடலையை அதில் கொட்டிக் கிளற வேண்டும். பின்பு சூட்டோடு கூடுக்குள் கொட்டிவிட வேண்டும். அதற்கு முன்பு கூட்டுக்குள் நன்கு நெய்யை தடவி வைத்திருக்க வேண்டும். இதனால் பாகு கூட்டுக்குள் ஒட்டாது... முழுசாக பருப்புத் தேங்காய் வெளியே வரும். பாகு, கடலை கலந்த கலவையைக் கொட்டியதும் கூட்டை தலைகீழாக நிற்க வைக்க வேண்டும். (சிலர் சிறிய பாத்திரம் ஒன்றில் நுழைத்து வைத்துவிடுவது உண்டு) குறைந்த பட்சம் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் அப்படியே வைத்துவிட்டுப் பின் எடுத்தால் பருப்புத் தேங்காய் உடையாமல் கிடைக்கும்.

பருப்புத் தேங்காய் வகைகள்

1. நிலக்கடலை

2. பொட்டுக்கடலை

3. மனோகரம்

4. தேங்காய் பர்பி

5. லட்டு

6. மைசூர்பாகு

7. முந்திரிப்பருப்பு

8. டிரை ஃப்ரூட்ஸ்

9. மிட்டாய்

இப்படி பல வகைகளில் பருப்புத் தேங்காய்கள் செய்யப்படுகின்றன.