Published:Updated:

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு : கரும்பு

ஆஸ்திரேலியாவின் தலைக்கு மேலே, இந்தோனேஷியாவுக்குக் கிழக்கே அமைந்துள்ள தீவு

பிரீமியம் ஸ்டோரி

ரும்பு - பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களின் உணவோடும் உணர்வோடும் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் புல்வகைத் தாவரம். நெல் போலவே கரும்பும் நன்செய் பயிர். வெப்பமண்டலப் பகுதிகளில் நன்கு விளையக்கூடியது. உலகின் முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றான கரும்பின் பூர்வீகம் எது?

ஆஸ்திரேலியாவின் தலைக்கு மேலே, இந்தோனேஷியாவுக்குக் கிழக்கே அமைந்துள்ள தீவு, பப்புவா நியூ கினியா. இங்கே சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கரும்பு விளைந்து வருவதாகவும், இங்கிருந்துதான் கரும்பு மற்ற தெற்காசிய நாடுகளுக்குப் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு : கரும்பு

கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 3,000 ஆண்டு களுக்கு முன்பு, பண்டைத் தமிழகத்தைச் சேர்ந்த இளவரசன் ஒருவன், பப்புவா நியூ கினியா தீவுகளுக்கு அருகிலுள்ள சாலமன் தீவுகளுக்குச் சென்றான். அப்போது அவன் அங்கே காடுகளில் விளைந்து கிடந்த உயரமான புல்வகைகளைப் பார்த்து வியந்தான். அதைச் சுவைத்துப் பார்த்து, அதன் இனிமையில் மயங்கி மகிழ்ந்தான். அந்தத் தாவரத்தைப் பயிரிடும் முறையைத் தெரிந்துகொண்டான். நம் மண்ணுக்குக் கொண்டுவந்து பயிரிட்டான். இப்படித்தான் தமிழகத்துக்குக் கரும்பு வந்தது என்றொரு செவிவழிக் கதை உண்டு. இதற்கு முறையான ஆதாரம் கிடையாது.

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு : கரும்பு

கடையேழு வள்ளல்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர் அதியமான் நெடுமான் அஞ்சி. இந்த அதியமானின் முன்னோர்களில் ஒருவரே கரும்பை நம் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் என்கிறது புறநானூறு.

அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்

அரும்பெறல் மரபிற் கரும்பி வட்டந்தும்

நீரக விருக்கை யாழி சூட்டிய

தொன்னிலை மரபின் நின் முன்னோர்...

`தேவர்களிடம் வேண்டி வணங்கி பெறு தற்கரிய அமிழ்தம் போன்ற கரும்பை விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்குக் கொண்டுவந்தவர்கள் உன் முன்னோர்’ என்று அதியமானின் பரம்பரை குறித்துப் புகழ்கிறது இந்தப் புறநானூற்றுப் பாடல்.

`கடல் கடந்து சென்று, கரும்பைத் தன் ராஜ்ஜியத்துக்குக் கொண்டுவந்தவர்களின் வழித்தோன்றல் நீ’ என்று புறநானூற்றின் இன்னொரு பாடல் அதியமானைப் புகழ் கிறது. ஆக, கரும்பை நம் மண்ணுக்குக் கொண்டுவந்தவர்கள் அதியமானின் முன்னோர் என்பதற்குத் தக்கச் சான்றுகள் இருக்கின்றன.

சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியில் சில கரித்துண்டுகள் கிடைத்துள்ளன. அவை கரும்பை எரித்ததனால் உருவானவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வேதங்களில் கரும்பானது Ikshu என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதத்தில் அமைந்த ஆயுர்வேத மருத்துவ முறைகளை விளக்கும் சம்ஹிதைகளில், கரும்பைக் குறிக்க Ikshu என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கி.மு 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் எழுதிய மஹாபாஷ்யாவில் Sharkara என்ற சம்ஸ்கிருத வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கிறது. சர்க்கரை என்ற வார்த்தையின் மூல வார்த்தை அதுவே.

Sugarcane
Sugarcane

கி.மு 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஷ்ருதா, தான் எழுதிய சம்ஹிதையில் 12 வகையான கரும்புகள் குறித்து எழுதியிருக்கிறார். கி.மு 3-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சரஹா, தான் எழுதிய ஆயுர்வேதக் குறிப்புகளில் Guda என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறார். அதன் பொருள், வெல்லம்.

கி.மு 326-ல் அலெக்ஸாண்டர், இந்தியா வின் மீது படையெடுத்து வந்தபோது, அவருடைய தளபதி கிரெடே, கரும்பைப் பார்த்து அசந்து போனார். ‘தேனீக்கள் இல்லாமலேயே தேனைச் சேகரிக்கும் அதிசயப் புல்’ என்று அவர் கரும்பை வர்ணித்தார். இங்கே முதன்முதலாக சர்க்கரையைச் சுவைத்த அலெக்ஸாண்டர், அதை ‘இனிக்கும் உப்பு’ என்று வர்ணித்தார். கிரேக்கர்கள் கரும்பையும் சர்க்கரையையும் இங்கிருந்து எடுத்துச் சென்றார்கள் என்கிறது வரலாறு.

Sugar
Sugar

முகம்மது அல்-இட்ரிஸி, இத்தாலியில் பிறந்த அரேபிய அறிஞர். கி.பி 1080-ல் பஞ்சாப்புக்கு வந்த இவர், அங்கே கரும்புகள் மிகுதியாக விளைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள் ளார். 13-ம் நூற்றாண்டில் கேரளாவுக்கு வந்த மொராக்கோ தேசப் பயணி இபின் பதூதா வும், கேரளாவின் கரும்பு வளம் பற்றி வியந் திருக்கிறார். முகலாயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு வந்த பிரெஞ்சு சுற்றுப் பயணியான பிரான்கோயிஸ் பெர்னியர், வங்கப் பகுதியில் தான் பார்த்த செழுமை யான கரும்புத் தோட்டங்கள் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். இப்படி கி.மு தொடங்கி கி.பி வரை இந்தியாவுக்கு வந்து சென்ற அயல்தேசப் பயணிகள் பலரும் கரும்பு பற்றிய ஏகப்பட்ட குறிப்புகளை எழுதிச் சென்றுள்ளார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரும்பும் தமிழர்களும்

‘கரு’ என்றால் உயரமான அல்லது மேடான என்று பொருள். உயரமாக வளரக்கூடிய, கருமையான புல். அதாவது கரும் + புல் = கரும்புல், அதுதான் ‘கரும்பு’ என்று ஆனது. கரும்பு என்பதற்கு இனிமை என்ற பொருளும் உண்டு. நம் இலக்கியங்களில் கரும்பு குறித்து பாடப்பட்ட, கரும்பை உவமையாகக்கொண்டு இயற்றப்பட்ட பல பாடல்கள் இருக்கின்றன. கரும்பு என்பது அடிப்படை உணவு கிடையாது. எனில், அதைக்கொண்டு சங்க கால மக்கள் என்ன செய்தார்கள்? அப்போதே கரும்பின் சாற்றைப் பிழிந்து எடுக்கும் ஆலைகளை அமைத்தார்கள். அந்தச் சாற்றைக் கொண்டு கருப்புக்கட்டி, கற்கண்டு, சர்க்கரை எல்லாம் தயாரித்தார்கள் என்று பல பாடல்கள் செய்தி சொல்கின்றன.

Sugarcane
Sugarcane

`மழை விளையாடும்’ என்று தொடங்கும் பெரும்பாணாற்றுப்படை பாடல் விவரிக்கும் காட்சி இனிமையானது. தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்று வரும் பாணன் ஒருவன், வழியில் எதிர்ப்படும் இன்னொரு பாணனிடம், `யாழி தாக்கியதால் அச்சத்தில் நடுநடுங்கிப் பிளிறும் யானைகளின் பிளிறல் போல, அங்கே கரும்பு அறைக்கும் எந்திரங்கள் பெரும் இரைச்சலிடுகின்றன. நீர் அங்கே சென்றால், எந்திரங்களால் பிழியப்பட்ட கரும்புச் சாற்றை வயிறு முட்டக் குடிக்கலாம். அப்புறம் அங்கே ஆலைகளில் சாற்றைக் காய்ச்சி, கட்டியாகச் செய்த கருப்புக்கட்டியை அளவில்லாமல் உண்ணலாம்’ என்று சொல்கிறார்.

`பெருஞ்சேரல் இரும்பொறையை மற்ற மன்னர்கள், சிற்றரசர்கள் எல்லாம் வணங்கி, அடிபணிந்து நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவன், அவர்களை ஆலையில் கரும்பை அரைப்பதுபோல நசுக்கி விடுவான்’ என்கிறது பதிற்றுப்பத்தில் ஒரு பாடல். சங்க காலத்தில் தமிழகத்தில் நெல்லும் கரும்பும்தான் முதன்மை யான பயிர்களாக இருந்தன என்பதைப் பல பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. அதனால்தான் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாளில் நெல்லும் கரும்பும் முக்கியமான பயிர்களாக இன்றும் இருக்கின்றன. அந்த நெல்லிலிருந்து கிடைக்கக்கூடிய அரிசியும், கரும்பிலிருந்து கிடைக்கக்கூடிய வெல்லமும் கலந்து சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து சூரியனுக்குப் படைக்கப்படுகிறது.

பண்டையத் தமிழர்கள் கரும்பைக்கொண்டு வேலி அமைத்து பயிர்களைக் காத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு மிகுதியாகக் கரும்பு விளைந்திருக்கிறது. தவிர, இப்போதெல்லாம் விசேஷ வீடுகளில் வாழை மரம் கட்டுவது போல, அந்தக் காலத்தில் வாழையும் கரும்பும் கட்டி அலங்காரம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.

`சோழ வள நாட்டில், பெண்கள் உரலில் தானியங்களை இடிப்பதற்கு உலக்கைக்குப் பதிலாக கரும்பைப் பயன்படுத்தினார்கள். அவ்வளவு திரட்சியான கரும்பு அங்கே விளைந்தது’ எனச் சொல்கிறது ஒரு சங்க இலக்கியக் குறிப்பு. `சேற்றுக்குள் சிக்கிய தேரின் சக்கரத்தை நெம்பித் தூக்கிவிட கரும்பைப் பயன்படுத்தி னார்கள்’ என்கிறது அகநானூறு.

`கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின...’ - கரும்புச் சாற்றை விற்கும் கடைகள் அப்போதே வீதிக்கு வீதி இருந்திருக்கின்றன. அந்தக் ‘கருப்பஞ்சாற்றை’ மக்கள் விரும்பி வாங்கிப் பருகியிருக்கிறார்கள் என்று பெரும்பாணாற்றுப்படை செய்தி சொல்கிறது. புளிக்க வைக்கப்பட்ட கருப்பஞ் சாறு மது, நல்ல மதிப்புடைய பண்டமாற்றுப் பொருளாகவும் இருந்திருக்கிறது.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லம், தமிழர்களின், இந்தியர்களின் தொன்மையான உணவுப்பொருள். சுஸ்ருதா தனது சம்ஹிதையில் வெல்லத்துக்கு வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். கி.மு 4-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம், கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள் களைப் பட்டியலிட்டிருக்கிறது. அதன்படி, Phanita என்பது அடர்த்தியான கரும்புச்சாறு. Guda என்றால் வெல்லம். Sharkara என்றால் சர்க்கரை. Matsyandika என்றால் படிகமாக்கப் பட்ட சர்க்கரை. Khand என்பது அரைக்கப் பட்ட சர்க்கரை.

கி.மு 5-ம் நூற்றாண்டில் இந்தியர்கள் கரும்பைப் பிழிந்து, அதன் சாற்றைக் கொதிக்கவைத்து, உலர்த்தி ‘கண்டு’ என்ற சர்க்கரைக் கட்டிகளைத் தயாரித்து, கடல் கடந்து வணிகம் செய்திருக்கிறார்கள். பழைமையான புத்த மத நூல்களில் கரும்பைப் பிழியும் எந்திரங்கள் குறித்த பதிவுகள் இருக்கின்றன. இந்தியாவுக்கு வந்த சீன புத்த பிட்சுகள், இந்தச் சர்க்கரைக் கட்டிகளை சீன தேசத்துக்குக் கொண்டு சென்று அறிமுகப்படுத்தியாகச் சீன வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. கி.பி 627-ல் இந்தியாவுக்கு வந்த சீனர்களின் குழுவினர், ஹர்ஷர்களின் ராஜ்ஜியத்தில் சர்க்கரைத் தயாரிப்பைக் கற்றுக்கொண்டு திரும்பிச் சென்றனர் என்கிறது இன்னொரு வரலாற்றுக் குறிப்பு.

கி.மு-விலேயே தமிழர்கள் உணவில் இனிப்புக்கான சேர்மானமாக, தேனைத் தவிர, வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, இலுப்பைப்பூ சர்க்கரை ஆகிய வற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பல காலமாக தெற்கு ஆசியா தவிர உலகின் மற்ற நாடுகளில் மக்கள் இனிப்புக்கான சேர்மானமாகப் பயன்படுத்தியது தேனைத்தான். கி.பி 8-ம் நூற்றாண்டில்தான் அரேபிய வணிகர்கள், இந்தியாவிலிருந்து சர்க்கரையைக் கொண்டு சென்றார்கள். மத்திய தரைக்கடல் நாடுகள், மெசபடோமியா, எகிப்து, வடஆப்பிரிக்கப் பகுதிகளுக்கு அரேபியர்கள் மூலமாகவே சர்க்கரை பரவியது.

இயற்கையான கரும்புச் சாற்றிலிருந்து, எந்தவித ரசாயனமும் கலக்காமல் காய்ச்சித் தயாரிக்கப்படும் நாட்டுச் சர்க்கரையும் வெல்லமும் ஆரோக்கியத்தின் நண்பன். வெல்லத்தில் நார்ச்சத்து உண்டு. வெல்லம், நம் உடம்புக்குள் உணவுக்குழாய், வயிறு, நுரையீரல் போன்ற உறுப்புகளைச் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அதனால்தான் நம் முன்னோர் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் உண்ணும் வழக்கம் வைத்திருந்தார்கள். செரிமானத்துக்கான அமிலங்களைத் தூண்டும் வேலையை வெல்லம் செய்கிறது. இதில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகமுண்டு. இது ஒவ்வாமைக்கு எதிரானது. அதாவது, ஆன்ட்டி அலர்ஜிக். பித்தத்தைப் போக்கக் கூடியது.

ஆனால், சென்ற நூற்றாண்டில் வெள்ளைச் சர்க்கரையே நல்ல சர்க்கரை என்று நம் மீது இனிமை யாகத் திணிக்கப்பட்ட சீனி, நம் ஆரோக்கியத்தின் எமன். தயாரிப்பின் போதே வெள்ளைச் சர்க்கரை யிலுள்ள அனைத்து சத்துகளும் அழிக்கப்படுகின்றன. அதுபோக, நாம் உட்கொள்ளும் சர்க்கரை, உடம்பிலுள்ள சத்துகளை ஈர்த்துக் கொள்கிறது.

அழுத்தமாகச் சொல்ல வேண்டு மென்றால், புகையிலைப் பொருள் களைவிட ஆபத்தானது இந்தச் சீனி. நீரிழிவை மட்டுமல்ல, மூட்டு பிரச்னைகள், இதயநோய், சிறுநீரக நோய் முதற்கொண்டு புற்றுநோய் பாதிப்பு வரை உருவாக்கும் தன்மை கொண்டது இந்த வெள்ளை எமன்.

சுதந்திரத்துக்காக ‘வெள்ளையனே வெளியேறு!’ என்று முழக்கம் எழுப்பிய நாம், இப்போது ஆரோக்கியத்தின் அவசியம் கருதி ‘வெள்ளைச் சர்க்கரையே வெளி யேறு’ என்று கோஷம் எழுப்பினாலும் தப்பே இல்லை!

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு : கரும்பு

கரும்புக் கடி!

  • தெலுங்கு பேசும் மக்களின் திருமணங்களில் ஒரு சடங்கு உண்டு. மணமக்கள் எதிரெதிரே நின்று கொண்டு, ஒருவர் தலை மீது மற்றொருவர் வெல்லத்தை வைத்து வணங்குகிறார்கள். நம் மக்கள், ஓர் அச்சு வெல்லத்தையோ அல்லது மண்டை வெல்லத்தையோ பூஜையில் பிள்ளை யாருக்குப் பதிலாக வைத்து வணங்கும் வழக்கமும் இருக்கிறது.

  • புத்த மதத்தில் அனுமதிக்கப்பட்ட இனிப்பாக வெல்லம் இருக்கிறது. வேறெந்த இனிப்பையும் சேர்த்துக்கொள்ளாத பர்மாவின் புத்தத் துறவிகள், கரும்புச் சாற்றிலிருந்து இயற்கையாகத் தயாரிக்கப்படுகிற வெல்லத்தை மட்டும் சேர்த்துக்கொள்கிறார்கள். அதனால் பர்மாவில் வெல்லத்துக்கு Monk’s Candies என்றொரு பெயருண்டு. தவிர, பர்மியர்களும் வெல்லத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வதால் இதற்கு ‘பர்மியர்களின் சாக்லேட்’ என்ற செல்லப் பெயரும் உண்டு.

  • உலகத்திலேயே கரும்பு உற்பத்தியில் உச்சத்தில் இருக்கும் நாடு பிரேசில். இரண்டாவது இடம் இந்தியாவுக்கு. சீனா, தாய்லாந்து, பாகிஸ்தான் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

  • உலகில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான சீனி, கரும்பிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. கரும்பிலிருந்து சாறு பிழிந்தபின் உண்டாகும் சக்கையும் வீணாவதில்லை. இது காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது. பிரேசிலில் எத்தனால் தயாரிக்க, கரும்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கசப்பு அத்தியாயம்

டந்த ஏழு நூற்றாண்டுகளில் உலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட பொருள்கள் மூன்று. மிளகு, கரும்பு, பட்டு. உலகில் அடிமை வாணிபத்தை உச்சம் பெறச் செய்த பொருள் என்றால் அது கரும்பும் அதன்மூலம் கிடைத்த சர்க்கரையும்தான். இனிமையான சர்க்கரைக்குப் பின்னால், பெரும் கசப்பான வரலாறு உண்டு.

இயற்கை வளத்தில் குறைந்த ஐரோப்பிய நாடுகள், பல்வேறு விதமான உணவுப் பொருள்களின் தேவைக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்தன. அங்கே குறைந்த அளவில் இறக்குமதி செய்யப்பட்ட கரும்புச் சர்க்கரையை பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்க முடிந்தது. விலையும் அதிகம். விதிக்கப்பட்ட வரியும் அதிகம். எனவே பிரிட்டிஷார் சர்க்கரையை ‘வெள்ளைத் தங்கம்’ என்றே அழைத்தார்கள்.

கி.பி. 1492-ல் ஸ்பெயின் சார்பாக கொலம்பஸ், இந்தியாவை வந்தடைவதற்கான புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதற்காகக் கிளம்பினார். வழி தவறி, அமெரிக்கக் கண்டத்துக்கு அருகிலுள்ள கரீபியன் தீவுகளில் காலடி எடுத்து வைத்தார். அங்கே கரும்பு விளைச்சல் அதிகம். கொலம்பஸ் கண்களில் கரும்பு, தோகை விரித்தாடியது. கரும்பை ஐரோப்பியக் கண்டத்துக்கு அப்படியே எடுத்துச்சென்று விளைவிக்க முடியாது. அதற்குரிய சீதோஷ்ண நிலை தேவை. தவிர, உடல் உழைப்பும் அதிகம் தேவை. ஐரோப்பியர் களுக்கு முதுகு வளையாது. ஆனால், சர்க்கரைக்கு நாக்கு தவித்தது. அந்தச் சூழலில் ஒரு கொடூர யோசனை செயற்படுத்தப்பட்டது.

ஐரோப்பியர், ஆப்பிரிக்க மக்களை அடிமை களாக வாங்கி அமெரிக்கக் கண்டத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கே அடிமைகள் மூலம் கரும்பு, புகையிலை, பருத்தி போன்றவற்றை விளைவித்து, ஐரோப்பியக் கண்டத்துக்கு எடுத்துச் சென்றனர். விளைவித்த பொருள்களைக் கொண்டு ஆடைகள், சர்க்கரை, ரம் போன்ற பல பொருள்களைத் தயாரித்து ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே சந்தைப்படுத்தினர். அதில் கிடைக்கும் லாபத்தைக்கொண்டு, இன்னும் அதிக அளவில் ஆப்பிரிக்க அடிமைகளை வாங்கினர்.

11-ம் நூற்றாண்டில் தொடங்கி சுமார் 300 வருடங்கள், அடிமைகளை மூலதனமாகக் கொண்ட இந்த Triangular Trade நடந்தது. 18-ம் நூற்றாண்டில் பிரிட்டன், ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து வருடத்துக்கு சுமார் 50,000 அடிமைகளைக் கப்பல் மூலம் கொண்டு சென்றனர் என்றொரு குறிப்பு உண்டு. அந்த நூற்றாண்டில் உலகில் நடந்த பல போர்களுக்குக் ‘கரும்பு’தான் மூலக் காரணமாக அமைந்தது.

இந்தப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த முக்கியக் காரணிகளில் ஒன்று, சர்க்கரை வள்ளிக்கிழங்கு. 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வள்ளிக்கிழங்கிலிருந்து சர்க்கரை தயாரிக்கலாம் என்று தெரிந்துகொண்ட ஐரோப்பிய நாடுகள் அந்தப் பணியில் தீவிரம் காட்டின. ஆப்பிரிக்க அடிமைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை கிடைக்க ஆரம்பித்தது. காரணம், அப்போது பிரிட்டன் இந்தியாவில் வலுவாகக் காலூன்றி இருந்தது. ஆப்பிரிக்க அடிமைகளை விலைக்கு வாங்குவதைவிட, குறைவான செலவில் இந்தியர்களை ‘ஒப்பந்தத் தொழி லாளர்கள்’ என்ற பெயரில் பயன்படுத்த பிரிட்டிஷ் அரசு சதித் திட்டமிட்டது.

இந்தியர்கள் ஊர், பெயர் தெரியாத ஏதோ ஓர் இடத்தின் கரும்பு, தேயிலை, புகையிலை, பருத்தித் தோட்டங்களில் அடிமையாக வேலை பார்க்க நிர்பந்திக்கப்பட்டனர்.

இந்த விதத்தில் தோட்டத் தொழிலாளர்களாக உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வதைபட்டதில் தமிழர்களே அதிகம். தெற்கு ஆசியாவுக்குச் சொந்தமான பயிரை, ஐரோப்பியர்களின் தேவைக்கு விளைவிக்க, தெற்காசிய மக்களே அடிமைகளாக நாடு கடத்தப்பட்டது வரலாற்றின் துயரம்.

மொத்தத்தில் கரும்பு இனித்தாலும் வரலாறு கசக்கவே செய்கிறது.

அஸ்கா

Sugar என்ற வார்த்தையின் மூலம் என்ன? Sharkara என்ற சம்ஸ்கிருத வார்த்தையே அரபு மொழியில் Sukkar என்று ஆனது. பின் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றபோது, இத்தாலியர் அதை Zucchero என்றழைக்க ஆரம்பித்தார்கள். அதுவே பழைய பிரெஞ்சில் Sukere என்று மாறியது. பின் ஆங்கிலத்தில் Sugar என்றழைக்கப்பட்டது. Sugar-ஐத் தரும் பிரம்பு போன்ற தாவரம் என்பதால் Sugarcane என்ற பெயர் கரும்புக்கு அமைந்தது. வெள்ளைச் சர்க்கரையைக் குறிக்கும் இந்தி வார்த்தைதான் Chini. நம் பேச்சு வழக்கிலும் ‘சீனி’ என்கிறோம். ‘அஸ்கா’, ‘அஸிகா’ என்று சில வட்டார மக்கள் சர்க்கரையைச் சொல்கிறார்கள் அல்லவா... அந்த வார்த்தையின் மூலம் எது?

ஆசியாவின் முதல் சர்க்கரைத் தொழிற் சாலையின் பெயர், ASKA. கி.பி 1824-ல் ஒடிசாவில் `அசிகா’ என்ற நகரத்தில் மின்சின் சாகேப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இதே தொழிற்சாலை 1948-ல் `பின்னி அண்டு கோ’வால் The Aska Sugar Works and Distillery Ltd என்ற பெயரில் மெட்ராஸில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தமிழக மக்களின் நாக்கில் ‘அஸ்கா’ என்ற சொல் ஒட்டிக்கொண்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு