Published:Updated:

வடகம் போடுறேன்... பரண்ல இருந்து வெங்கலப் பானையை எடுத்துக்கொடு!

வடகம்
பிரீமியம் ஸ்டோரி
வடகம்

சுவையோவியம்

வடகம் போடுறேன்... பரண்ல இருந்து வெங்கலப் பானையை எடுத்துக்கொடு!

சுவையோவியம்

Published:Updated:
வடகம்
பிரீமியம் ஸ்டோரி
வடகம்
காலையில் எழுந்திருக்கும்போதே சுளீர் என்று முகத்தில் வெயில் அடிக்கவே அம்மாவுக்குப் பாட்டியின் நினைவு வந்துவிட்டது. இருந்த வரைக்கும் ஒருநாள்கூட சோர்வாக அமர்ந்து பார்த்திராத மனுஷி.

வீட்டின் வராந்தாவில் பாட்டி உட்கார்ந்திருப்பதைப்போலவே தோன்றியது. சந்தோஷம், கோபம், துக்கம் எதுவானாலும் பாட்டி இங்குதான் வந்து தனியாக அமர்ந்து கொள்வாள். அப்புறம் அவளைத் தேடிவந்து விசாரிக்க வேண்டும். அப்படித்தான் பாட்டி ஒருநாள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இங்கு வந்து அமர்ந்துகொண்டாள். அம்மா மாறிமாறி வந்து காரணம் கேட்டுப் பார்த்தாள்.

ம்ஹூம்... அம்மா எம்.ஜி.ஆர் மாதிரி. மூன்று தடவைக்குமேல் முகத்திலடித்தாற்போல பதில் சொன்னால் தயவு தாட்சண்யம் காட்ட மாட்டாள். திருப்பியடித்து விடுவாள். அன்று மாமியாரின் மேல் என்ன கரிசனமோ பதில் பேசாமல் வந்துவிட்டு, அப்பா வந்ததும் ஆரம்பித்தாள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“என்னவாம் உங்க அம்மாவுக்கு... ரெண்டு மூணு நாளா முகத்தைத் தூக்கி வெச்சுக்கிட்டிருக்கா...”

``அது வேற ஒண்ணுமில்லை... வெயில் வீணாப்போறதாம். அதனால `வடகம் போடுறேன்... பரண்ல இருந்து வெங்கலப் பானையை எடுத்துக் கொடு’ன்னா. ‘ஏன் போன மாசம் டாக்டருக்கு வெச்ச செலவு போதாதா’ன்னு கேட்டேன். அவ்ளோதான் கோவிச்சுக் கிட்டா. சரி நீ சாதத்தைப் போடு” என்றார்.

அம்மாவுக்கு ஒரு கணம் மனத்தில் பல்ப் எரிந்தது. போன வாரம் வெறும் வத்தக்குழம்பு வைத்து வடகம் பொரிக்கலாம் என்று டப்பாவைத் திறந்தபோது அதில் தூள்கள்தாம் இருந்தன. சென்ற வருடம் பாட்டி போட்டு நிரப்பிய டப்பா. வரிசையாக நாலு டப்பாக்கள். ஒன்றில் அரிசி வடகம், அடுத்தது ஜவ்வரிசி வடகம், கருவடகம், சேவை வடகம் என்று வரிசையாக 15 நாள்களில் போட்டு நிரப்பப்பட்டவை. அதை ஓர் ஆண்டுக்கு வைத்திருந்ததே சாதனைதான்!

வடகம்
வடகம்

வடகம் இருந்தால் கவலையில்லை... ஒரு ரசமோ, வத்தக்குழம்போ வைத்தால் போதும். எல்லோரும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டுப் போய்விடுவார்கள். அதிலும் மாமியார் செய்யும் வடகம் அத்தனை சுவையாக இருக்கும். வடாமா, குர்குரேயா என்றால் வடகம் என்று கூச்சல்போடுவார்கள் பேரன் பேத்திகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன பிரச்னை என்றால் பாட்டி, இந்த ஒரு வீட்டுக்கு மட்டும் பாட்டி இல்லையே... அப்பாவோடு சேர்த்து பாட்டிக்கு மூன்று பிள்ளைகள். அம்மாவுக்கு இரண்டு நாத்தனார். இருவருக்கும் மூன்று மூன்று பிள்ளைகள். பாட்டியின் வடகப் பங்கு போய்ச் சேராவிட்டால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பாட்டியும் நாலு வீட்டுக்குக் கொடுக்கிறமாதிரிதான் தண்டியாகச் செய்வாள்.

பார்க்க ஈர்க்குச்சிபோல இருக்கும் பாட்டி எப்படித்தான் அந்த மாவைக் கை ஓயாமல் கிளறுவாளோ தெரியாது. வந்த புதிதில் அம்மா, ‘என்கிட்ட கொடுங்க, அதெல்லாம் எனக்குப் பழக்கம்தான்’ என்று வாய்ச் சவடால்விட்டு வாங்கிக் கிளறின ஒரே நிமிடத்தில் முன்கை வலிக்க ஆரம்பித்து விட்டது. கிண்டுவதில் வேகம் குறைய பாட்டி திட்டிக்கொண்டே, ‘கிழிச்ச, கரண்டியக் கொடு, கட்டி கட்டிடப் போகுது’ என்று சொல்லிக் கரண்டியைப் பிடுங்கிக் கிளறினார்.

இப்போது பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை வடகம் போடுவது ஒரு திருவிழாபோல நடக்கும். மார்ச் மாத இறுதியில் பேரன் பேத்திகள் எல்லாம் இங்கு மொத்தமாகக் கூடிவிடுவார்கள். பாட்டி அதற்கு ஒரு வாரம் முன்பே வெண்கலப் பானையை இறக்கித் தேய்த்து வெயிலில் காயவைத்துவிடுவார். அப்பாவின் அலமாரியைத் தோண்டி கொஞ்சம் கிழிந்த பழைய வேட்டிகளை எடுத்து நன்றாகக் கிழித்து, `இதெல்லாம் இனிக் கட்டப்போறியா என்ன...’ என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் அதைத் துவைத்துக் காயப்போட்டு மொட மொடப்போடு மடித்து வைத்திருப்பாள்.

தேவையான அரிசி மாவு, ஜவ்வரிசி மாவு எல்லாம் மெஷினில் திரித்துவைத்துக் கொள்வாள். பேரன் பேத்திகள் வந்த அன்று மொட்டை மாடியைச் சுத்தம் செய்யச் சொல்வாள். மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, கிளற ஆரம்பித்து விடுவாள்.

ஒரு கிலோ அரிசி மாவுக்கு கால் கிலோ ஜவ்வரிசி மாவு சேர்ப்பாள். கால் கிலோ பச்சை மிளகாய் அரைத்தது, மூன்று எலுமிச்சைப்பழங்கள், தேவையான உப்பையும் எடுத்துவைத்துக்கொள்வாள். நன்கு கொதிக்கும் நீரில் மாவைக் கொட்டி கட்டி கட்டாமல் கிளறி இறக்கும் முன்பாக மிளகாய், எலுமிச்சை, உப்பு சேர்த்துப் போட்டுக் கிளறி முடிப்பாள்.

குழந்தைகளை அப்படிச் சொல்லக் கூடாது. என்ன ஆளுக்கு ரெண்டு தின்னுமா... அதுகளுக்குப் போகத்தான் மீதி!
வடகம்
வடகம்

பிள்ளைகள் எல்லாம் காக்காய்களைப் போலச் சுற்றி நிற்கும். சிலதுகள் கையில் சின்னக் கிண்ணங்களோடு நிற்கும்.

“இதோ பார், மேல வந்து வடகம் வைக்கிறவங்களுக்குத்தான் கிண்ணத்துல. மத்தவங்களுக்குக் கிடையாது” என்பாள். எல்லாம் ‘சரி சரி’ என்று சொல்லி வாங்கிக் கொண்டு கிணற்றடிக்கு ஓடிப்போகும்.

அம்மாவுக்கும் அப்படிக் கேட்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால், வெட்கமாக இருக்கும். சின்னதுகளில் யாரேனும் ஒன்றின் கிண்ணத்தைப் பிடுங்கி கொஞ்சம் ருசி பார்த்துக்கொள்வாள்.

நாக்கில் சூடும் காரமுமாகப் பரவும் மாவின் சுவை அப்படியே இழுக்கும். ஏன் இதைக் கஷ்டப்பட்டு வடாமாக்கி அதைப் பொரிச்சு, இப்படியே ஆளுக்கு ஒரு தட்டில் விட்டு சாப்பிட்றலாமே என்று தோன்றும். இரண்டாவது முறை கிண்ணத்தை நீட்டினால் திட்டுவிழும்.

``பச்சையா சாப்பிட அளவிருக்கு. வயித்துக்கு ஆகாது” என்று சொல்லிக் கொண்டே மாடிக்குப் பானையோடு போவாள் பாட்டி.

வேட்டிகளைச் சுருக்கம் இல்லாமல் விரித்து நாலு மூலையிலும் கற்களை வைப்பாள். பின்பு பொறுமையாகச் சின்ன ஸ்பூன் கொண்டு வரிசையாக ஊற்ற ஆரம்பிப்பாள். `நான் வெச்சுத் தர்றேன் பாட்டி’ என்று வாக்குக்கொடுத்த கூட்டத்தில் ஒன்றுகூட அங்கு இருக்காது. அம்மாவும் பாட்டியும் பொறுமையாக ஊற்றுவார்கள்.

அம்மா வைக்கும் வடகம் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவில் இருக்கும். ஆனால், பாட்டி அச்சுபோல வட்ட வட்டமாக இடுவாள். அன்றைக்கு நாள் முழுவதும் பாட்டிக்கு மொட்டை மாடிதான். மாலையில் சூரியன் தணிவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே பாட்டி அனைத்தையும் சுற்றிக்கொண்டுவந்து வீட்டினுள் விரித்துக் காயவைப்பாள். விளையாடிக் களைத்த பிள்ளைகள் எல்லாம் மீண்டும் அந்த இடத்துக்கு வந்துவிடும்.

``எல்லாம் காய்ஞ்சா மாதிரி இருக்கே, பிரிச்சுடலாமா” என்றால்...

``கூடாது, கூடாது. வத்தலுக்கு மூணு காய்ச்சல் கணக்குன்னு சும்மாவா சொல்லி யிருக்காங்க. இன்னிக்கு எடுத்தா உள்ளுக்குள்ளே ஈரம் இருக்கும். பொரிச்சா மொறுமொறுப்பு இருக்காது. மூணே மாசத்துல கெட்டுப்போயிடும்.”

“அதுசரி... ஆனா, இந்தக் காக்காய்கள் அதுவரைக்கும் வெச்சிருக்காதுங்களே” - சொல்வதற்குள்ளாகவே குழந்தைகள் சுற்றிக் கொள்ளும்.

``குழந்தைகளை அப்படிச் சொல்லக் கூடாது. என்ன ஆளுக்கு ரெண்டு தின்னுமா... அதுகளுக்குப் போகத்தான் மீதி. ஏய் பிள்ளைகளா, லேசா தூக்கிக்கிட்டிருக்கும் வடகத்தை மாத்திரம் பிச்சிக்குங்கோ” என்பாள் பாட்டி.

அந்த வடகம்களில் ஈரப்பதம் போயிருக்காது. சுவைக்க பபிள்காம் மெல்வதுபோல இருக்கும். தவறுதலாக முனை காயாது துணியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் வடகத்தைப் பிய்த்தால் துணியோடு சேர்ந்து கிழியும். பாட்டியின் திட்டுக்கும் பிள்ளைகள் ஆளாகும்.

பாட்டி அடுத்த இரண்டு நாள்களும் பொறுப்பாக மாடியில் காயவைத்து எடுத்து வந்து பின்பு பிய்த்து எடுத்து உலர்ந்த டப்பாக் களில் போட்டு அடைத்துவைப்பாள். ஜவ்வரிசி வடகம் தானாகப் பிரிந்துவராது. அதற்குத் துணியின் பின்புறம் தண்ணீர் தெளித்து எடுக்க வேண்டும். அப்படி பாட்டி எடுத்துவைத்த வடகம்தான் ஆண்டு முழுவதும் பயன்படும். என்ன காய்கறி இருக்கிறது என்று யோசிக்காமல் உலை வைத்துவிடலாம். எதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது வடகம். மழைக்காலப் பெரும்பான்மை மாலைப் பொழுதுகளின் ஸ்நாக்ஸ் இதுவே.

அம்மாவுக்கு நினைவுகள் எல்லாம் பாட்டி குறித்தும் வடகம் குறித்துமே இருந்தது. வழக்கமாகப் பாட்டி அமரும் இடத்தில் அமர்ந்துகொண்டாள். உள்ளே வரும்போது அம்மா அமர்ந்திருக்கும் விதமே அப்பாவுக்கு வித்தியாசமாக இருந்தது. என்ன என்பதுபோலவே பார்த்தார்.

“பரண்ல இருந்து வெங்கலப் பானைய இறக்கித் தர முடியுமா...” என்றாள்.

அப்பாவுக்குப் பாட்டியே கேட்பதுபோல இருந்தது.

ஜவ்வரிசி வடகம்

தேவையானவை:

  • ஜவ்வரிசி - கால் கிலோ

  • பச்சை மிளகாய் - 100 கிராம் (விழுதாக அரைக்கவும்)

  • எலுமிச்சை - ஒன்று (சாறு எடுக்கவும்)

  • உப்பு - தேவையான அளவு

வடகம்
வடகம்

செய்முறை:

ஜவ்வரிசியை முதல்நாளே ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் அதைப் பானை அல்லது குக்கரில் வைத்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும். ஜவ்வரிசியின் வெள்ளை நிறம் நீங்கிப் பளபளவென்று ஆகும்வரை வேகவைக்க வேண்டும். எலுமிச்சைச்சாறு மற்றும் பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து அரைத்து மாவோடு நன்கு கலக்க வேண்டும். பின்பு அதைக் கீழே இறக்கி மீண்டும் கிளறி கொஞ்சம் சூடு ஆறியதும் சிறிது சிறிதாகத் துணியில் ஊற்றி எடுக்கவும்.

அரிசி வடகம்

ரிசியை நன்கு மாவாகத் திரித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பங்கு மாவுக்கு ஒன்றரை பங்கு அளவு நீரை முதலில் கொதிக்க வைக்கவும். ஒரு கிலோ மாவென்றால் அதற்கு கால் கிலோ பச்சை மிளகாய் அரைத்து அதில் இரண்டு எலுமிச்சைகளைப் பிழிந்து தேவையான உப்பு சேர்த்து எடுத்து வைத்துக்கொண்டு கொதிக்கும் நீரில் போட்டுக் கிளறி இறக்கிவிட வேண்டும். பின்பு அரிசி மாவை அதில் சேர்த்துக் கிளறி சூடு ஆறியதும் முறுக்கு மற்றும் சேவை அச்சுகளில் பிழிந்து கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism