Published:Updated:

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - தர்பூசணி & கிர்ணி

கிர்ணி
பிரீமியம் ஸ்டோரி
கிர்ணி

சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பாகவே, எகிப்தில் தர்பூசணி பயிரிட்டிருக்கிறார்கள்.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - தர்பூசணி & கிர்ணி

சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பாகவே, எகிப்தில் தர்பூசணி பயிரிட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
கிர்ணி
பிரீமியம் ஸ்டோரி
கிர்ணி
தர்பூசணி குறித்த செவிவழிக் கதை ஒன்றிலிருந்து இந்தக் கட்டுரையைச் சுவைக்க ஆரம்பிக்கலாம்.

கி.மு 2800. அப்போது வியட்நாம் பகுதியை ஆட்சி செய்த அரசரின் பெயர் மூன்றாம் ஹங் வுவோங். அவருக்கு ஆண் வாரிசு கிடையாது. ஒரே ஒரு மகள் மட்டும்தான். எங்கிருந்தோ ஆதரவில்லாமல் வந்த சிறுவன் ஒருவனை அரசர் தத்தெடுத்தார். அவனுக்கு அன் டயெம் என்று பெயர் வைத்தார். பாசத்துடன் வளர்த்தார். புத்திசாலியாகவும் திறமைசாலியாகவும் அன் டயெம் வளர, தன் மகளையே அவனுக்குத் திருமணம் செய்து வைத்தார் அரசர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.

சரித்திர விலாஸ்: இன்றைய மெனு - தர்பூசணி & கிர்ணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன் டயெம் மீது அரசர் காட்டும் பாசம், அரண்மனைக்குள் சில எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை. அன் டயெமை ஒழித்துக் கட்டத் திட்டமிட்டார்கள். ‘அரசரே, உங்க மாப்பிள்ளை சரியில்ல. தலைக்கனம் பிடிச்சு திரியறாரு. உங்களையே சாய்ச்சுட்டு, ஆட்சியை அபகரிக்கத் திட்டம் போடுறாரு’ என்று பற்ற வைத்தனர். ஏதோ மனநிலையில் அரசரும் அதை நம்பிவிட்டார். அன் டயெமை அழைத்தார். ‘நீ திறமையானவன், எந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் தகுதி உள்ளவன் என்று நிரூபித்துக் காட்டு. அதன் பிறகு நான் உன்னை அரசனாக்குகிறேன். இப்போது நீ இந்த நாட்டை விட்டே போக வேண்டும்’ என்று கோபத்துடன் கட்டளையிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அன் டயெம் நாட்டைவிட்டே கிளம்ப, உடன் அவன் மனைவியான இளவரசியும் குழந்தைகளும் ‘நாங்களும் வருகிறோம்’ என்று சேர்ந்து கொண்டனர். அவர்கள் ஏறிய கப்பல் அவர்களை ஆளே இல்லாத தீவு ஒன்றில் இறக்கிவிட்டது.

தீவில் வேட்டையாடி, மீன் பிடித்து, இலைதழைகளைச் சாப்பிட்டு வாழ ஆரம்பித்தார்கள். கோடைக்காலத்தில் தீவு வறண்டு போனது. சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. அவர்கள் வணங்கும் டிராகன் கடவுளிடம் மனமுருக வேண்டினார்கள். அப்போது எங்கிருந்தோ பறந்துவந்த மஞ்சள் நிறக் கடல் பறவைகள், கறுப்பு நிற விதைகளை அங்கே போட்டுவிட்டுச் சென்றன. அன் டயெம் சில விதைகளை எடுத்து சுவைத்துப் பார்த்தான். பின், அவற்றை நம்பிக்கையுடன் மண்ணில் விதைத்தான்.

தர்பூசணி
தர்பூசணி

சில நாள்களில் பச்சைப் பசேல் எனக் கொடிகள் படர ஆரம்பித்தன. அவற்றில் மஞ்சள் பூக்கள் பூத்தன. அடுத்து பச்சைக் காய்கள் காய்க்கத் தொடங்கின. அந்தக் காய்கள் பெரிதாகிக் கொண்டே செல்ல அன் டயெமும் இளவரசியும் ஆச்சர்யத்துடன் கவனித்தனர். அந்தக் காய்களில் ஒன்றைப் பறித்து வெட்டினர். உள்ளே செக்கச் சேவேல் என்று சதைப்பகுதி இருந்தது. எடுத்து சுவைத்துப் பார்த்தனர். அருமையான இனிப்பு. தித்திப்பான சாறு. தாகத்துக்குக் குளுமையாக இருந்தது. ‘கடவுளே உன் கருணைக்கு நன்றி’ என்று வானம் பார்த்து வணங்கினர்.

தீவுக்கு மீண்டும் அந்த மஞ்சள் பறவைகள் வந்தன. பெரிய பழங்களைக் கொத்தித் தின்றன. அப்போது அந்தப் பறவைகள் எழுப்பிய ஒலி ‘Tay qua… Tay qua…’ என்பதாக அன் டயெமுக்குக் கேட்டது. அவர்கள் மொழியில் அதன் பொருள், நீர் நிறைந்த பழம். அன் டயெம், பழத்துக்கு Tay qua என்ற பெயரையே வைத்தார். அவர்கள் அங்கே இந்த தர்பூசணி விவசாயத்தைத் தொடர்ந்து செய்தனர். இந்தப் பழங்கள் குறித்து கேள்விப்பட்டு வியாபாரிகளின் கப்பல்கள் தீவுக்கு வர ஆரம்பித்தன. வியாபாரம் அமோகமாக நடந்தது. ஏகப்பட்ட செல்வங்களைச் சேர்த்தான் அன் டயெம்.

ஒருநாள், தர்பூசணிகளில் அன் டயெம் என்ற தனது பெயரை எழுதினான். பழங்களைச் சேர்த்துக் கட்டி கடலில் தூக்கிப் போட்டான். அவை மிதந்து சென்றன. அரசரின் ஆள்கள் கடலில் அந்தப் பழங்களைக் கண்டெடுத்தார்கள். அன் டயெம் என்ற பெயரைப் பார்த்து, அரசரிடம் பழங்களைக் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். பழத்தைச் சுவைத்துப் பார்த்த அரசர் அகமகிழ்ந்து போனார். ‘என் மாப்பிள்ளை ஏதோ செய்தி சொல்லியிருக்கிறார். உடனே தீவுக்குக் கப்பலை அனுப்புங்கள்’ என்று கட்டளையிட்டார். அன் டயெமும் இளவரசியும் குழந்தைகளும் ஏகப்பட்ட செல்வங்களுடன் ராஜ்ஜியத்துக்கு வந்து இறங்கினர். வாக்கு தவறாத அரசர், அன் டயெமை தன் ராஜ்ஜியத்தின் அடுத்த அரசராக அறிவித்தார் என்பதாக இந்த தர்பூசணி நாடோடிக் கதை முடிகிறது. அன் டயெமுக்கு அதிர்ஷ்டத்தைத் தந்தவை தர்பூசணி விதைகள் என்பதால், இன்றைக்கும் வியட்நாமில் புத்தாண்டின்போது ஒருவருக்கு ஒருவர் தர்பூசணி விதை களைப் பரிசாகக் கொடுக்கும் வழக்கம் தொடர்கிறது.

சரி, வரலாற்றுக்கு வருவோம். சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பாகவே, எகிப்தில் தர்பூசணி பயிரிட்டிருக்கிறார்கள். நைல் நதி ஓரத்தில் தர்பூசணி விவசாயம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அந்தப் பாலைவன ராஜ்ஜியத்தில் முக்கியமான நீர் ஆதாரமாக தர்பூசணிப்பழங்களே இருந்திருக்கின்றன. எகிப்தியர்களே உலகின் முதல் தர்பூசணி விவசாயிகள் என்று சொல்லும் ஆதாரமாக பிரமிடு ஒன்று இருக்கிறது.

கி.மு. 1341 முதல் 1323 வரை எகிப்தை ஆண்ட மன்னர் பெயர் டுடன்காமுன் (Tutankhamun). அவர் இறந்த பிறகு சகல வசதிகளுடன், எகிப்திய முறைப்படி கல்லறை கட்டப்பட்டது. அவர் உடல் ஏகப்பட்ட செல்வங்களுடன் அங்கே வைக்கப்பட்டது. 1922 நவம்பர் 4 அன்று ஹோவர்ட் கார்டர் என்ற பிரிட்டிஷ்காரர் டுடன்காமுனின் கல்லறையைக் கண்டு பிடித்தார். சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்பு இதுதான்.

டுடன்காமுன் கல்லறையில் ஏகப்பட்ட சிலைகள், செல்வங்கள், கலைப்பொருள்கள், ஆயுதங்களுடன் கார்டர் கண்டெடுத்த ஒரு முக்கியமான விஷயம், தர்பூசணி விதைகள். அதுவும் மூவாயிரம் ஆண்டு பழைமையான விதைகள். மன்னருக்குப் பிடித்தமான உணவுப் பொருள்களைக் கல்லறையில் வைப்பது எகிப்தியர்களது வழக்கம். இந்தக் கண்டுபிடிப்பின் மூலமாக எகிப்திய மன்னர்களது விருப்ப உணவாக தர்பூசணி இருந்தது நிரூபிக்கப்பட்டது.

கிர்ணி
கிர்ணி

எகிப்து வழியே ஆப்பிரிக்கக் கண்டத்தின் பிற நாடுகளுக்கும், மத்தியத் தரைக்கடல் நாடுகளுக்கும் தர்பூசணி பரவியிருக்கலாம். கி.மு நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் தர்பூசணி விவசாயம் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. காடெல்லாம் ஆயிரக்கணக்கில் தர்பூசணி விளைந்து கிடந்தால் அதில் கசப்பானதைக் கண்டுபிடிப்பது எப்படி? அதற்கு ஆப்பிரிக்கப் பழங்குடிகள் ஒரு வழிமுறை வைத்திருந்தார்கள். தர்பூசணியில் சிறுதுளை போட்டு உறிஞ்சிப்பார்த்து இனிமையாக இருந்தால் பறித்துக்கொள்வார்கள். கசந்தால் அப்படியே விட்டு விடுவார்கள். அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது, நீர்த்தேவைக்காக ஏகப்பட்ட தர்பூசணிப்பழங்களை எடுத்துக்கொண்டு போகும் வழக்கம் இருந்திருக்கிறது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆசியக் கண்டத்துக்குள் தர்பூசணி நுழைந்தது கொஞ்சம் தாமதமாகத்தான். கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சீனாவில் தர்பூசணி பயிரிடப் பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 13-ம் நூற்றாண்டில், வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெர்பெர் இனத்தவர்களின் ஐரோப்பியப் படையெடுப்பு மூலமாக, அந்தக் கண்டத்தில் தர்பூசணி தனது ராஜ்ஜிய எல்லையைப் பரப்பிக்கொண்டது.

கி.பி 1615-ல் ஜெ.மரியானி என்பவர் Dictionary of American Food and Drink என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் Watermelon என்ற சொல் முதன்முதலாக இடம்பெற்றது. 16-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு வந்த பிரெஞ்சுக்காரர்கள் மூலமாக அங்கே தர்பூசணி பரவ ஆரம்பித்ததாக நம்புகிறார்கள். 1629-ல் அமெரிக்காவின் மாசாசூஸெட்ஸில் பிரிட்டிஷார் அமைத்த காலனிக்கு ஆப்பிரிக்க அடிமைகள் கொண்டு வரப்பட்டனர். அவர்களே தர்பூசணி விதைகளை எடுத்துவந்து அமெரிக்காவில் முதன்முதலாகப் பயிரிட்டதாக உணவு வரலாற்று ஆய்வாளரான ஜான் ஈகெர்டன் சொல்கிறார். காலனிகள் அமைக்கக் கொண்டு செல்லப்பட்ட அடிமைகளாலேயே உலகமெங்கும் தர்பூசணி பரவியது என்பது ஈகெர்டனின் உறுதியான கருத்து.

இப்போது உலகத்தில் அதிக அளவில் தர்பூசணி பயிரிடும் நாடு சீனா. அதிக அளவில் தர்பூசணி இயற்கையாகவே விளையும் கண்டம் ஆப்பிரிக்காதான்.

ஒரு தர்பூசணியில் 92 சதவிகிதம் நீர் இருக்கிறது. அளவு, வடிவம், உள்ளே இருக்கும் சதையின் நிறம், விதைகளின் நிறம், மேல்தோலின் நிறம்... இதையெல்லாம் கொண்டு உலகில் சுமார் 1,200 வித மான தர்பூசணிகள் விளைவதாக வகைப்படுத்தி யிருக்கிறார்கள். Carolina Cross, Yellow Crimson, Orangeglo, Moon and Stars, Melitopolski, Densuke Watermelon – இவை உலக அளவில் அதிகம் விளையும் சில வகை தர்பூசணிகளின் பெயர்கள்.

விதையே இல்லாத தர்பூசணியை உருவாக்கும் முயற்சி 1940-லேயே ஆரம்பித்து விட்டது. வழக்கமான விஷயங்களையே மாற்றி யோசித்துச் செயல்படுத்தும் ஜப்பானியர், கனசதுர வடிவத்தில் தர்பூசணி உருவாக்கியிருக்கிறார்கள். அந்த மாற்று வடிவ தர்பூசணிக்கு உலகின் பல பகுதிகளில் வரவேற்பு இருக்கிறது. காதலர் தின வேளைகளில் இதய வடிவிலான தர்பூசணிகளை உருவாக்கியும் ஜப்பானியர் அசத்தியிருக்கிறார்கள்.

தர்பூசணியைக்கொண்டு ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுச் சம்பவம் உண்டு. மாசிடோனிய மன்னர் பிலிப் அவையில் கவர்னர் டொமஸ்தனிஸ், அரசியல் விவாதம் ஒன்றைக் கிளப்பினார். பலரும் விவாதத்தை வளர்க்க, அவை சூடானது. ஒரு கட்டத்தில் டொமஸ்தனிஸின் அனல் வார்த்தைகளைப் பொறுக்க முடியாமல் அவையில் இருந்த ஒருவர், தர்பூசணியை ஒன்றைக் கையில் எடுத்து டொமஸ்தனிஸை நோக்கி வீசினார். அது அவரது காலடியில் விழுந்து உடைந்தது. டொமஸ்தனிஸ் அலட்டிக்கொள்ளாமல், உடைந்த தர்பூசணியின் ஒரு பாதியைக் கையில் எடுத்தார். அதன் சதைப் பகுதிகளை பிய்த்துப் போட்டார். அந்த ஓட்டை ஹெல்மெட் போல தலையில் மாட்டிக் கொண்டார். ‘மாசிடோனிய மன்னர் பிலிப்புடன் சண்டை போடும்போது என் பாதுகாப்புக்கு இது தலைக்கவசமாக உதவும்’ என்று டொமஸ்தனிஸ் சொன்னதும், அனலாக இருந்த அவை அப்படியே கலகலவென்று மாறிப்போனது.

தர்பூசணியை அப்படியே உண்பதுபோக, ஜூஸ், சாலட், ஐஸ்க்ரீம் ஆகிய வடிவங்களில் நாம் பயன்படுத்துகிறோம். ரஷ்யர்கள் தர்பூசணிச் சாற்றைக்கொண்டு சிரப் தயாரிக்கிறார்கள். அதிலிருந்து இனிப்பூட்டிகள் தயாரிக்கிறார்கள். பீரும் தயாரித்து அருந்துகிறார்கள். ஆசியாவின் பல பகுதிகளில் தர்பூசணி விதைகளை வறுத்து உண்ணும் வழக்கம் இருக்கிறது. சிப்ஸ் போல வறுத்த தர்பூசணி விதைகளைக் கொறிப்பது சீனர்களது வழக்கம். தர்பூசணி தோல்கொண்டு ஜாம் தயாரிக்கவும் செய்கிறார்கள்.

அமெரிக்கர்கள் தர்பூசணி விதைகளை விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால், தர்பூசணி தோலைக்கொண்டு இனிப்பு / கார ஊறுகாய் தயாரிக்கிறார்கள். இராக், எகிப்து மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் நாம் தினமும் வாழைப்பழம் உண்பதுபோல தர்பூசணியைச் சாப்பிடுகிறார்கள். தர்பூசணி விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை சமையலுக்கும் உபயோகிக் கிறார்கள். விதைகளை சூப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆப்பிரிக்காவின் வறட்சியான பிரதேசங்களில் வாழும் பல்வேறு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நீர் ஆதாரமே தர்பூசணிதான்.

தர்பூசணி, Cucurbitaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. Citrullus Vulgaris என்பது தர்பூசணியின் தாவரவியல் பெயர்.

தர்பூசணி தினம்

ல்கேரியாவின் பெட்ரெவென் (Petrevene) என்ற ஊர்க்காரர் களுக்கும், அதன் அருகில் இருக்கும் டோடொர்சீன் (Todorichene) என்ற

ஊர்க்காரர்களுக்கும் நிலத் தகராறு. அந்த நிலம் எந்த ஊருக்குச் சொந்தம் என்று பஞ்சாயத்து வளர, பெரியவர் ஒருவர் தீர்ப்பு சொன்னார். ‘ரெண்டு ஊர்க்காரங்களுக்கும் நிலத்தை சரிபாதியா பிரிச்சுக் கொடுக்கறேன். விவசாயம் பண்ணுங்க. இதுக்கு மேல பிரச்னை பண்ணாதீங்க!’

தர்பூசணி
தர்பூசணி

நாட்டாமையின் தீர்ப்புக்கு இரு ஊர்க்காரர்களும் தலை வணங்கி னார்கள். டோடொர்சீன் ஊர்க்காரர்கள், தங்கள் பகுதி நிலத்தில் கோதுமை போட்டார்கள். பெட்ரெவென் ஊர் இளவட்டங்கள், கோதுமை பயிரிட முடியாததால் தர்பூசணி பயிரிட்டார்கள். அதுவரை அவர்கள் தர்பூசணி பயிரிட்டதே இல்லை. அது அமோகமாக விளைந்தது. பலரும் தேடி வந்து தர்பூசணியை வாங்கிச் சென்றார்கள். அந்த ஊரின் முக்கியமான விளைபொருளாக தர்பூசணி மாறிப்போனது. இந்தச் சம்பவம் 1936 ஆகஸ்ட் மாதத்தில் நடந்ததாகச் சொல்கிறார்கள். எனவே, பல்கேரியர்கள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் கடைசிக்கு முந்தைய சனிக்கிழமையை Watermelon Day என்று கொண்டாட ஆரம்பித்தார்கள். அந்த வழக்கம் தொடர்கிறது.

வாங்குவது எப்படி?

முழு தர்பூசணியைத் தூக்கிப் பார்க்கும்போது அது அதிக எடையுடையதாகத் தெரிய வேண்டும். பழம் முழுக்க ஒரே பச்சையாக இல்லாமல், ஒரு பகுதியில் கொஞ்சம் மஞ்சள், வெள்ளை கலந்து இருக்க வேண்டும். அதுதான் இயற்கையான சூரிய வெளிச்சத்தில் பழுத்த நல்ல பழம். அப்படிப்பட்ட தர்பூசணியை வாங்கினால் அது அதிக இனிப்புடன், நிறைய நீருடன் அருமையாக இருக்கும்.

தர்பூசணி, கிர்ணி
தர்பூசணி, கிர்ணி

விளைந்த கிர்ணியை லேசாகக் கீறிப் பார்த்தாலே அதில் நல்ல நறுமணம் வந்தால் அது பழுத்துவிட்டது என்று அர்த்தம். அதேபோல நன்கு பழுத்த கிர்ணி எடை அதிகமானதாக இருக்கும். அப்படிப்பட்டதை உடனே வாங்கலாம்.

கிர்ணிப்பழம்

கிர்ணிப்பழம் - இதுவும் Cucurbitaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தர்பூசணியின் சொந்தக்காரப்பழம்தான். இதன் தாவரவியல் பெயர் - Cucumis melo. கிர்ணியின் ஆங்கிலப் பெயர் MuskMelon. Musk என்ற பாரசீக வார்த்தைக்கு நறுமணம் என்று அர்த்தம். Melon என்ற பிரெஞ்சுச்சொல், Melopepo என்ற பழைய லத்தீன் வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு இனிப்பான, சதைப்பற்றுள்ள உருண்டையான பழம் என்று அர்த்தம்.

Cantaloupe என்பது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் விளையும் ஒருவகை கிர்ணி. இதன் தாவரவியல் பெயரும் Cucumis meloதான். இதில் இரண்டு முக்கிய ரகங்கள் உள்ளன. Cucumis melo reticulatus - வலைப்பின்னல் போன்ற அமைப்பு கொண்ட மேல்தோலை உடைய பழம். இது வடஅமெரிக்காவில் அதிகம் விளையக்கூடியது. Cucumis melo cantalupensis - மேல்தோலில் நீளவாக்கில் அமைந்த பச்சை நரம்புகள் போன்ற கோடுகளைக் கொண்டது. இது ஐரோப்பிய நாடுகளில் அதிகம் விளையக்கூடியது.

கிர்ணி
கிர்ணி

கிர்ணிப்பழத்தின் பூர்வீகமாகக் கருதப்படுவது பண்டைய பாரசீகம். சில ஆய்வாளர்கள் அர்மேனியா என்று வாதிடுகிறார்கள். பாரசீகத்திலிருந்து இந்தியாவுக்கும், அர்மேனியா வழியாக மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கும் எகிப்துக்கும் சில 1,000 நூற்றாண்டுகளுக்கு முன்பே கிர்ணியின் பரவல் நடந்திருக்கலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

கி.மு 2400-ஐச் சேர்ந்த எகிப்தின் பழைமையான ஓவியம் ஒன்றில் கிர்ணிப்பழம் வரையப்பட்டிருக்கிறது.

கி.மு 2047-ல் வாழ்ந்த பண்டைய சுமேரிய ராஜ்ஜியத்தின் அரசரான யுர்-நம்மு (Ur-Nammu) என்பவர் தன்னுடைய தோட்டத்தில் கிர்ணிப்பழங்களை விளைவித்திருக்கிறார். பண்டைய சுமேரிய அரசன் குறித்த செவிவழிக் கதைகளை, பாடல்களைத் தொகுத்து உருவாக்கப்பட்ட பழம்பெரும் இதிகாசமான கில்காமெஷில் வாசனை மிகுந்த கிர்ணிப்பழங்கள் குறித்தும் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கி.மு 15-ம் நூற்றாண்டில் எகிப்தில் அடிமையாக இருந்தவர்கள், அங்கே கிர்ணிப்பழங்களை உண்டதாக பைபிள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. பண்டைய அசிரியர்கள் விரும்பி உண்ட பழமாக கிர்ணி இருந்திருக்கிறது.

கி.மு 721-ல் பாபிலோனிய அரசராக இருந்த இரண்டாம் இட்டினா (Marduk-apla-iddina II), தனது உணவில் தினமும் கிர்ணிப்பழங்களைச் சேர்த்துக் கொண்டார். கிர்ணிப்பழ விதைகளை வறுத்து, கொறிப்பது என்பது மத்திய கிழக்குப் பகுதி மக்களின் விருப்பத்துக்குரிய தின்பண்டமாக இருந்திருக்கிறது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே கிரேக்கர்கள் கிர்ணிப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானிய தத்துவஞானியான பிளினி தி எல்டர், ‘உருண்டையான, வெள்ளரி போன்ற கொடியில் தொங்காமல், தரையில் படர்ந்து கிடக்கிற பழம். இனிமையான, நல்ல மணத்துடன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது’ என்று கிர்ணி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கி.பி நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்ட அபிசியஸ் (Apicius) என்ற ரோமானிய சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தில் கிர்ணிப்பழம் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.

பண்டைய சீன மருத்துவத்திலும் கிர்ணி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பண்டைய சீனாவின் ஹன் சாம்ராஜ்ஜியத்தை கி.மு இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் லி காங் (Li Cang). இவரது ஆட்சிக் காலத்தில் அரண்மனைத் தோட்டங்களில் கிர்ணிப்பழங்கள் விளைந்திருக்கின்றன. அரண்மனை உணவில் கிர்ணி முக்கிய உணவாகவும் இடம்பெற்றிருக்கிறது. அதை உறுதிப்படுத்தும்விதமாக ஒரு முக்கிய ஆதாரமும் சீனாவில் கண்டெடுக்கப்பட்டி ருக்கிறது. அரசர் லி காங்கின் மனைவியான ஸின் ஜூய் (Xin Zhui) கல்லறை, கி.பி 1972-ல் தோண்டியெடுக்கப்பட்டது. அப்போது அரசியின் சவப்பெட்டியிலும், உடலின் வயிற்றுப்பகுதியிலும் கிர்ணிப்பழ விதைகள் கண்டெடுக்கப்பட்டன.

13-ம் நூற்றாண்டு மொராக்கோ தேசத்துப் பயணியான மார்க்கோபோலோ, ஆப்கானிஸ்தானின் ஸிபர்கான் நகரத்துக்கு வந்தபோது அங்கே கிர்ணிப்பழங்களைக் கண்டுள்ளார். ‘உலகத்தின் மிகச் சிறந்த பழங்கள் அவை. அவற்றை துண்டு துண்டாக வெட்டி வெயிலில் உலரவைத்துள்ளனர். அவை உலர்ந்து தேனைவிட இனிமையான சுவைக்கு மாறும்போது அவற்றை சந்தைக்குக் கொண்டு சென்று விற்கிறார்கள்’ என்று அவர் குறிப்பு எழுதியுள்ளார்.

அரேபிய வியாபாரிகள் மூலமாகத்தான் கிர்ணிப்பழ விதைகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. கி.பி 14-ம் நூற்றாண்டில் இத்தாலியர் அதிகம் விளைவிக்கும் பழமாக, விரும்பிச் சாப்பிடும் பழமாக கிர்ணி இருந்திருக்கிறது. 15-ம் நூற்றாண்டில் ஸ்பெயினின் சில பகுதிகளிலும் கிர்ணி விவசாயம் நடைபெற்றிருக்கிறது. 15-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸின் அரசனாக இருந்த எட்டாம் சார்லஸ்தான் வட ஐரோப்பாவிலும், மத்திய ஐரோப்பிய நாடுகளிலும் கிர்ணியைக்கொண்டு சென்றதாக வரலாற்றுக் குறிப்பொன்று சொல்கிறது.

வடஅமெரிக்கக் கண்டத்தில் கிர்ணி பரவக் காரணம் கொலம்பஸ்தான். 16, 17-ம் நூற்றாண்டில் வடஅமெரிக்கக் கண்டத்தில் பல இடங்களில் கிர்ணி கொஞ்சம் கொஞ்சமாகப் பரவியது. அதே காலகட்டத்தில்தான் தென்அமெரிக்கக் கண்டத்திலும் கிர்ணி பரவியது.

ஒரு கிர்ணியில் 60 சதவிகிதம் நீர் உள்ளது. இது உடலின் நீர்வேட்கையைத் தணிக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு கிர்ணி நல்ல நிவாரணி. பொதுவாக கிர்ணி, பழச்சாறு வடிவில் அதிகம் பருகப்படுகிறது. அடுத்ததாக சாலட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ஜாம், பழக்கூழ், ஐஸ்க்ரீம், டெஸர்ட் போன்றவையும் தயாரிக்கப்படுகிறது. சில நாடுகளில் வேறு சில மூலிகைகளுடன், உணவுப் பொருள்களுடன் கிர்ணிப்பழத்தையும் சேர்த்து சூப் தயாரிக்கிறார்கள்.

கடைசியாக ஒரு சுவாரஸ்யமான விஷயம். 16, 17-ம் நூற்றாண்டுகளில் பிரான்ஸ், இத்தாலி விவசாயிகளிடையே யார் அதிக சுவையான கிர்ணிப்பழங்களை விளைவிக்கிறார்கள் என்பதில் கடும்போட்டி நிலவியது. பிரான்ஸில் வாழ்ந்த சார்லஸ் எஸ்டியென் என்பவர் தனது புத்தகத்தில் கிர்ணி விவசாயம் குறித்து வேடிக்கையாக இப்படிச் சொல்லியிருக்கிறார்.

‘சிலர் அதிக சுவையான கிர்ணியை விளைவிக்கும் ரகசியம் என்னவென்றால், அவர்கள் அந்தத் தாவரத்துக்கு நீர் பாய்ச்சும்போது தேனையும் கலந்து பாய்ச்சுகிறார்கள்!’

கிர்ணி தினம்

லகில் கிர்ணியை அதிகம் நேசிக்கும் மக்கள் என்றால் துர்க்மெனியர்தாம். மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானில் Turkmenbashi Melon என்ற கலப்பின கிர்ணி வகை அதிகம் விளைவிக்கப்படுகிறது. உள்ளேயும் வெளியேயும் வெளிர் மஞ்சள் நிறத்தைக்கொண்ட, அசத்தும் நறுமணமும் அபார சுவையும் நிறைந்த அளவில் பெரிய பழம் அது. ‘துர்க்மென்பாஸி கிர்ணி எங்கள் மண்ணுக்கு இறைவன் கொடுத்த வரம். இது சொர்க்கத்திலிருந்து வந்த பழம். உலகின் அதீத சுவையான பழம், அதிக நறுமணம் கொண்ட பழம். இதுவே எங்கள் தேசத்தின் பெருமைக்குரிய அடையாளம்!’ என்று துர்க்மெனியர் அந்தக் கிர்ணியை ஏகத்துக்கும் புகழ்கிறார்கள். ஆண்டுதோறும் Melon Day என்ற பெயரில் துர்க்மென்பாஸி கிர்ணிக்கான தேசிய தினம் கொண்டாடுகிறார்கள். அப்போது பாடல், நடனம், கிர்ணிப்பழ விருந்து என்று அமர்க்களப்படுத்துகிறார்கள்.