Published:Updated:

`அசைவத்துல 30 வகை; விரும்பி சாப்பிட வெளியூர்ல இருந்து வருவாக!'- இது சின்னமனூர் `ஜோதிஸ் ஹோட்டல்' ருசி

அசைவம்

``ஃபிரஷ்ஷான நண்டு, மீனை எல்லாம் ஆத்துலயும் வயல்கள்லயும் பிடிக்க சம்பளத்துக்கு ஆள்விட்ருக்கோம். வயல்நண்டு சாப்பிடவே எங்க கடையைத் தேடி நிறைய பேர் வர்றாக. சாப்பாடு அன்லிமிட்டட்தான், போதும்னு சொன்னாலும் விடமாட்டோம். மத்த கடைகளவிட எங்க கடையில ரேட்டும் ரொம்ப கம்மி.''

`அசைவத்துல 30 வகை; விரும்பி சாப்பிட வெளியூர்ல இருந்து வருவாக!'- இது சின்னமனூர் `ஜோதிஸ் ஹோட்டல்' ருசி

``ஃபிரஷ்ஷான நண்டு, மீனை எல்லாம் ஆத்துலயும் வயல்கள்லயும் பிடிக்க சம்பளத்துக்கு ஆள்விட்ருக்கோம். வயல்நண்டு சாப்பிடவே எங்க கடையைத் தேடி நிறைய பேர் வர்றாக. சாப்பாடு அன்லிமிட்டட்தான், போதும்னு சொன்னாலும் விடமாட்டோம். மத்த கடைகளவிட எங்க கடையில ரேட்டும் ரொம்ப கம்மி.''

Published:Updated:
அசைவம்

தேனி மாவட்டம், சின்னமனூர் பக்கத்துல மார்க்கையன்கோட்டைக்கே அடையாளமா இருக்கு ஒரு ஹோட்டல். ஆட்டுக்கறினா மட்டன் சுக்கா, எலும்புக் குழம்பு, சிக்கன் ஐட்டத்துல 65, சிக்கன் கிரேவி, மீன்ல வறுவல், குழம்பு... இம்புட்டுத்தானே வழக்கமா ஹோட்டல்ல இருக்கும்? அதையும்கூட கேட்டு வாங்கினாத்தான் கண்ல காட்டுவாங்க. இதுலதாங்க வித்தியாசப்படுது மார்க்கையன்கோட்டையில இருக்குற `ஜோதிஸ் ஹோட்டல்.'

அப்படி என்ன வித்தியாசம்னு கேட்குறீங்களா? வழக்கமான வகைகள் மட்டுமல்லாம புறாக்கறி, காடை முட்டை, வாத்துக்கறி, உயிரோட இருக்குற வயல் நண்டுகளப் பிடிச்சு உடனே உடனே வறுத்துக் கொடுக்குறது, உயிரோட இருக்குற அயிர மீன அள்ளிப்போட்டு அப்பப்போ வைக்குற ருசியான குழம்புனு 30 அசைவ ஐட்டங்கள் இங்க தினம் தினம் கிடைக்குது. அதையெல்லாம், ஹோட்டல்ல நுழையும்போதே வரிசை கட்டி அடுக்கி வெச்சுருக்கிறதப் பாக்கும்போதே நாக்குல எச்சி ஊருது.

ஹோட்டல்
ஹோட்டல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தள்ளுவண்டிக் கடையா ஆரம்பிச்சு இன்னைக்குத் `தரமான கடை'னு பேரு வாங்கியிருக்குற `ஜோதிஸ் ஹோட்டல்'ல தேனி மக்கள் மட்டுமல்லாம மேகமலை, குமுளி, மூணாறுக்கு சுத்திப்பார்க்க வர்றவங்கனு பலரும் கால்வைக்காமப் போறதில்ல.

நாம போன நேரம், ஹோட்டலுக்கு முன்னாடி அசைவப் பிரியர்கள் வரிசையா நிக்க, அதுல பலர் சுற்றுலா பயணிகள். கூட்டத்தை விலக்கிட்டு உள்ள போனா, ஹோட்டல் உரிமையாளர் சின்னசாமி அண்ணே நண்ட வறுத்துக்கிட்டு இருந்தாரு. ``அண்ணே... உங்கள பேட்டியெடுக்க வந்திருக்கோம்"னு சொல்ல, ``அட என்னப்பா... கொஞ்சம் வெள்ளன வந்திருக்கக் கூடாதா? இப்போ வேல கெடக்கே...''னு யோசிச்சவரு, ``சரி வாங்க...''னு தன் ஹோட்டல் தொழில் பத்தி பேச ஆரம்பிச்சாரு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எங்க தாத்தா காலத்துல இங்க சின்னதா டீக்கடை நடத்தியிருக்காங்க. எங்க அப்பா காலத்துல, நான் கொஞ்சம் சேட்ட பண்ணினேன்னு என்னயக் கடை பக்கம் விடல. நான் கோவிச்சுக்கிட்டு வெளியேறிட்டேன். கடுமையான உழைப்பு, பாக்காத வேலையில்ல. என் மனைவி சுசிலா வந்ததும், ஒரு தள்ளுவண்டிக் கடையைப் போட்டோம். மொதல்ல, இட்லி மட்டும் கொடுத்தோம். அப்புறம் தோசை, கறிக்குழம்பு, மீன்குழம்புனு கொடுக்க ஆரம்பிச்சு, 5 வகை அசைவ டிஷ்களை கொடுத்தோம்.

சின்னசாமி
சின்னசாமி

எங்க வாடிக்கையாளர்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சுச்சு. பிறகுதான், ஒரு சின்னக் கடையை வாடகைக்குப் பிடிச்சு ஹோட்டலை ஆரம்பிச்சோம். 5 ஐட்டங்க, 25 ஐட்டங்களா ஆச்சு. காடை, காடை முட்டை, நண்டு, மூளை, ஈரல், புறாக்கறி, முயல்கறினு இதையெல்லாம் வாடிக்கையாளர்கள் விரும்பிக் கேட்கத் தொடங்கிட்டாங்க. சமையல் வேலை எல்லாமே என்னோடதுதான். என் மனைவி ஒத்தாசைக்கு மட்டும் இருப்பாங்க. என் மகன் கேட்டரிங் படிச்சுட்டு, ஹோட்டல் கணக்கு, வழக்குகளைப் பார்த்துக்கிட்டு இருக்கான்''னு சொல்றவரு, தங்களோட ஹோட்டலுக்குத் தேவையான இறைச்சிக்கான ஏற்பாடு பத்தி சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எங்க வீட்டுல புறா, கோழி, காடையெல்லாம் வளர்க்குறோம். ஃபிரஷ்ஷான நண்டு, மீனை எல்லாம் ஆத்துலயும் வயல்கள்யும் பிடிச்சுட்டு வந்து கொடுக்க சம்பளத்துக்கு ஆள்விட்ருக்கோம். வயல்நண்டு சாப்பிடுறதுக்காகவே எங்க கடையைத் தேடி நிறைய பேரு வர்றாக. சாப்பாடு அன்லிமிட்டட்தான், போதும்னு சொன்னாலும் விடமாட்டோம். மத்த கடைகளவிட எங்க கடையில ரேட்டு ரொம்பக் கம்மிதான்.

சாப்பாடு
சாப்பாடு

புறா, முயல், வாத்து, காடை, வான்கோழி, கின்னிக்கோழி, மட்டன், ஈரல், மூளை, தலைக்கறி, ரத்தம், வயல்நண்டு, கடல் மற்றும் கண்மாய் மீன், அயிரை மீன், இறால், காடை முட்டை, சிக்கன், லாலிபாப், சில்லி சிக்கன், செட்டிநாடு சிக்கன், குடல் உள்ளிட்ட சைடு டிஷ்களை 100 ரூபாய், 200 ரூபாய்வரைதான் கொடுக்குறோம். சில கடைகள்ல, பிரியாணினு மொத்தமா போட்டு, அதுல சிக்கன் துண்டுகள எடுத்துவெச்சு சிக்கன் பிரியாணினும், மட்டன துண்டுகள எடுத்துவெச்சு மட்டன் பிரியாணினும் கொடுப்பாங்க. நாங்க பிரியாணிகளத் தனித்தனியா அந்தந்தக் கறியப் போட்டு சமைக்கிறதால சுவை அசலா இருக்கும்''னு சொல்ற அண்ணன், சமையல் வேலைகளப் பத்தி சொன்னாரு.

``மசாலா எல்லாத்தையும் என் வீட்டுக்காரம்மாதான் ரெடி பண்ணுவாங்க. காலையில 3 மணிக்கெல்லாம் சமையலைத் தொடங்கிருவேன். 11 மணிக்கெல்லாம் ஹோட்டல்ல எல்லா ஐட்டங்களும் ரெடி ஆகிடும். ராத்திரி 10 மணி வரை கடை இருக்கும். மதியம் 3 மணிக்குள்ள வந்துட்டா விரும்புனதைச் சாப்பிட்டுப் போகலாம். அதுக்கு அப்புறம் ஒரு சில ஐட்டங்கள் தீர்ந்துபோயிரும். திங்கக்கிழமை கடைக்கு லீவு விட்ருவேன். மத்த எல்லா நாளும் கடை இருக்கும்''னு சொன்ன சின்னசாமி அண்ணனுக்கு 52 வயசு.

ஜோதிஸ்
ஜோதிஸ்

வாடிக்கையாளர்கள வரவேற்று பக்குவமா பேசி உக்காரவெச்சிட்டு இருந்தாரு, சின்னசாமி அண்ணனோட மகன் ஜோதிஸ். அவர்கிட்ட பேசினோம். ``எங்க அப்பா தன்னோட உழைப்பால படிப்படியா உருவாக்குன ஹோட்டல, நான் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகணும்னு நினைக்கிறேன். அதுக்காகத்தான் கேட்டரிங் படிச்சேன். காலேஜ்ல படிச்சதைவிட எங்க அப்பாகிட்ட கத்துக்கிட்டதுதான் அதிகம். தேனி மட்டுமில்லாம சென்னை பக்கம் இருந்தெல்லாம் எங்க ஹோட்டலைத் தேடி வர்றாங்க. தேடி வர்றவங்களுக்கு வயிறும் மனசும் நிறைய சாப்பாட்ட போட்டு அனுப்பணும்னு சொல்ற அப்பா, லாபத்துலயெல்லாம் குறியா இருக்க மாட்டாரு. ருசி ருசியா, வகை வகையா அசைவ சாப்பாடு சாப்பிடணும்னு நினைக்கிறவங்களுக்கு சட்டுனு நம்ம கடைதான் ஞாபகத்துக்கு வரணும்னு சொல்லிட்டே இருப்பார். அவர் மனசுபோலவே ஓடிக்கிட்டிருக்கு எங்க ஹோட்டல்''னு சொல்லிட்டே துள்ளுற அயிரமீனை அள்ளிப் பார்த்தாரு.

30 வகை அசைவ ஐட்டங்களையும் கண்ணால ஒரு ரவுண்ட் வந்ததுக்கே பாதி ஆவுட் ஆகிட்டோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism