Published:Updated:

`ஒரு ரூபாய் விலை; `ஓஹோ'ன்னு சுவை!' - மங்கா அக்காவின் கடை சூடான போண்டா கதை

ஒரு ரூபாய்க்கு போண்டா விற்பனை செய்யும் மங்கா அக்கா

``நிறைய பேர் கார்ல வருவாங்க சாப்பிடுவாங்க, போண்டா நல்லா இருக்குன்னு சொல்லி சாப்பிட்டு, பார்சலும் கட்டிக்கிட்டுப் போவாங்க. ஒரு சினிமா டைரக்டர்கூட வந்து சாப்பிட்டுப் போனாரு. அவரு பேரெல்லாம் தெரியாது, சாப்பிட்டதும் நல்லா இருக்குன்னு சொல்லி அதிகமாக காசு குடுத்துட்டுப் போனாரு."

`ஒரு ரூபாய் விலை; `ஓஹோ'ன்னு சுவை!' - மங்கா அக்காவின் கடை சூடான போண்டா கதை

``நிறைய பேர் கார்ல வருவாங்க சாப்பிடுவாங்க, போண்டா நல்லா இருக்குன்னு சொல்லி சாப்பிட்டு, பார்சலும் கட்டிக்கிட்டுப் போவாங்க. ஒரு சினிமா டைரக்டர்கூட வந்து சாப்பிட்டுப் போனாரு. அவரு பேரெல்லாம் தெரியாது, சாப்பிட்டதும் நல்லா இருக்குன்னு சொல்லி அதிகமாக காசு குடுத்துட்டுப் போனாரு."

Published:Updated:
ஒரு ரூபாய்க்கு போண்டா விற்பனை செய்யும் மங்கா அக்கா

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் குளக்கரை பக்கத்துல இருக்கு அந்தச் சின்ன கூரைக் கடை. 20 வருஷமா அந்தக் கடையை நடத்திவர்ற மங்கா, அப்பகுதி மக்களின் ஃபேவரைட், குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு. மங்கா அக்கா கடையின் வெங்காய போண்டாவுக்குதான் அத்தனை ரசிகர்கள். கடைக்கு ஒரு போர்டுகூட கிடையாது. முதலியார் அம்மா கடைன்னுதான் பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆரம்ப காலத்துல 25 பைசாவுக்கு போண்டா விக்க ஆரம்பிச்சவங்க, 50 பைசாவா உயர்த்தி, இப்போ ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யுறாங்க.

மங்கா அக்கா
மங்கா அக்கா

காலைல 7 மணிக்கெல்லாம் சூடா போண்டா ரெடியாகிடும். உளுந்து மாவை பொசு பொசுன்னு அரைச்சு அதுல உப்பு, மிளகெல்லாம் சேர்த்து எண்ணெயில பொரிச்சு சுடச்சுட தட்டுல வெச்சுக் கொடுப்பாங்க.

கூடவே தொட்டுக்க காரச் சட்னி, தேங்காய் சட்னி வேற. சுவை... சொல்லவா வேணும். ஒண்ணு ரெண்டெல்லாம் சாப்பிட்டு இடத்தைக் காலி பண்ண முடியாது. அஞ்சாறு உள்ள போனாதான் ஆத்ம திருப்தி கிடைக்கும். சாயங்காலம் 3 மணி வரை கடையில எண்ணெய் கொதிச்சு போண்டா போட்டுக்கிட்டேதான் இருப்பாங்க.

போண்டா மட்டுமல்ல, அங்க இட்லி 3 ரூபாய், வடை 5 ரூபாய், தோசை 5 ரூபாய், முட்டை தோசை 10 ரூபாய்னு எல்லாமே பாக்கெட் ஃபிரெண்ட்லி உணவுகள்தான். கடையில ஆள் நடமாட்டம் குறைஞ்ச நேரத்துல பேச்சுக் குடுத்தோம். ``நாங்க ஏழைக் குடும்பம்தான். பொழைப்புக்காகத்தான் சின்ன குடிசைபோட்டு இந்தக் கடையை ஆரம்பிச்சேன். குறைஞ்ச விலைக்கு விற்பனை செஞ்சாலும் சாப்பிடுற பொருள் இல்லையா, அதனால தரமான பொருள்களை வாங்கி சுத்தமான முறையில தயார் செய்யுறோம். ஸ்கூல் பசங்க நிறைய பேரு சாப்புடுறதால இன்னும் கூடுதல் கவனிப்போட செய்யுறோம்.

மங்கா அக்காவின் கூரைக்கடை
மங்கா அக்காவின் கூரைக்கடை

கஷ்ட ஜீவனம் நடத்துனாலும் லாப நஷ்டம் பார்க்காமதான் இந்த விலைல வித்துகிட்டு இருக்கேன். காய்கறி, மளிகை சாமான்லாம் விலை ஏறும் இறங்கும். அதுக்காக விலைய ஏத்தினா நம்மள நம்பி வந்து சாப்பிட்டுப் போறவங்களுக்கு கஷ்டமாயிடும். இது எல்லாத்தையும்விட ஒரு ரூபாய்க்கு போண்டா குடுக்கிறதுல எனக்கு ஒரு மனதிருப்தி. வெறும் 2 ரூபாய் இருந்தாகூட ரெண்டு போண்டாவைச் சாப்பிட்டு வயிறு நிறைஞ்சு போயிடலாம் பாருங்க”ன்னு பாசமா சொன்னாங்க. அவங்க கடைக்கு முன்னாடி காருங்க வரிசைகட்டித்தான் நிக்கும் எப்பவும்.

``நிறைய பேர் கார்ல வருவாங்க சாப்பிடுவாங்க, போண்டா நல்லா இருக்குன்னு சொல்லி சாப்பிட்டு, பார்சலும் கட்டிக்கிட்டுப் போவாங்க. ஒரு சினிமா டைரக்டர்கூட வந்து சாப்பிட்டுப் போனாரு. அவரு பேரெல்லாம் தெரியாது, சாப்பிட்டதும் நல்லா இருக்குன்னு சொல்லி அதிகமாக காசு குடுத்துட்டுப் போனாரு.

ஒரு ரூபாய் போண்டா
ஒரு ரூபாய் போண்டா

பள்ளிக்கூட குழந்தைங்க நிறைய பேரு இங்க வருவாங்க. எல்லாம் என் குழந்தைங்க மாதிரிதான். வருவாங்க... நல்லா சாப்பிடுவாங்க... கொஞ்ச நேரம் என்கூட சந்தோஷமா பேசி சிரிச்சிட்டுதான் போவாங்க”ன்னு சொல்ற மங்கா அக்காவுக்கு, கால்நடை மருத்துவமனைல உதவியாளரா இருந்து ரிட்டையர்டு ஆன அவங்க வீட்டுக்காரர்தான் உதவியா இருக்காரு. ``வயசானாலும் யாரோட உதவியும் இல்லாமலே நாங்க ரெண்டு பேரும்தான் கடைய நடத்துறோம்”

இந்தக் கடை பத்தி நாஸ்டால்ஜியா பகிர்ந்துகிட்ட சிலர், ``நான் ஸ்கூல் படிக்கும்போது காலைல வீட்ல சாப்பிடலன்னா, மங்கா அக்கா கடைலதான் சாப்பிடுவேன். காலைல செம கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டத்துலயும் அடிச்சு புடிச்சு வாங்கி சாப்பிட்டு லேட்டா ஸ்கூலுக்கு போன நாள்களெல்லாம் இருக்கு.

ஒரு ரூபாய் போண்டா
ஒரு ரூபாய் போண்டா

படிச்சு வேலைக்கு வந்துட்டாலும் கடையையும் போண்டாவையும் மறக்க முடியல பாஸு"ன்னு சொன்ன முன்னாள் மாணவர் ஒருத்தர் ரெண்டு போண்டாவை வாங்கி சாப்பிட்டுக் கிளம்பினார்.

திருவள்ளூர் ஏரியா பக்கம் வந்தீங்கன்னா... அக்கா கடை போண்டாவை மிஸ் பண்ணிடாதீங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க!