Published:Updated:

ஜெர்மனுக்குச் சிறப்பு சேர்த்த செட்டிநாட்டு மசாலா!

 விகாஸ் கண்ணா
பிரீமியம் ஸ்டோரி
விகாஸ் கண்ணா

ஸ்டார் செஃப்

ஜெர்மனுக்குச் சிறப்பு சேர்த்த செட்டிநாட்டு மசாலா!

ஸ்டார் செஃப்

Published:Updated:
 விகாஸ் கண்ணா
பிரீமியம் ஸ்டோரி
விகாஸ் கண்ணா
மிர்தசரஸில் பிறந்து, தன் சுண்டியிழுக்கும் சமையலால் இப்போது அமெரிக்காவையே கைக்குள் வைத்திருக்கும் ‘மிச்செலின்’ செலிபிரிட்டி செஃப் விகாஸ் கண்ணா. கடந்த மாதம் சென்னை பல்லாடியம் மாலில் நூற்றுக்கணக்கான ரசிகர்களைச் சந்தித்து உரையாடினார் விகாஸ்.

விகாஸ் கண்ணா உலகப் புகழ்பெற்ற மிச்செலின் செஃப் மட்டுமல்லர்; ‘கிச்சன்ஸ் ஆஃப் கிராட்டிட்யூட்’ (Kitchens of Gratitude) உள்ளிட்ட சில ஆவணப்படங்களை இயக்கியுள்ள திரைப்பட இயக்குநரும்கூட. அவற்றில் சில, சர்வதேச ‘கேன்’ திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கின்றன.

சமையல் மீதுள்ள தீராத காதலால், ‘மியூசியம் ஆஃப் கிச்சன் ஆர்ட்ஸ்’ எனும் இந்தியாவின் முதல் சமையல் அருங்காட்சியகத்தை மணிப்பாலில் திறந்துள்ளார். உலக அளவில் ஏராளமான உணவு சார்ந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

வித்தியாசமான அரிசி பாயசத்தை செய்துகொண்டே நம்மோடு உரையாடினார் விகாஸ் கண்ணா.

`சரிசம அளவில் க்ரீம் மற்றும் பாலை எடுத்துக்கொண்டு, இரண்டையும் நன்கு அடித்து, அதோடு தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். இந்தக் கலவையோடு தேவையான அளவு அரிசி மாவைச் சேர்த்து, 10 நிமிடங்களுக்குக் கைவிடாமல் கலந்து கொள்ளவும்’ - பாயச ரெசிப்பியின் முதல் பகுதியைப் பகிர்ந்த விகாஸிடம்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் இன்ஸ்பிரேஷன் யார்?

“என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என் பாட்டிதான். பஞ்சாபி உணவு வகைகளைச் சமைப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. அவருடைய கைப்பக்குவத்தில் உருவான அத்தனை உணவு வகைகளும் என்னுடைய ஃபேவரைட். இன்றுவரை அவருடைய சமையலை என்னால் ரீ-க்ரியேட் செய்யவே முடியவில்லை.”

விகாஸ் கண்ணா
விகாஸ் கண்ணா

அடுத்த கேள்விக்கு முன்பு, `இந்தக் கலவையை நன்கு அடித்த பிறகு, சிறிதளவு குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளவும். பெரும்பாலான இந்திய வீடுகளில் அவர்களின் வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தால் மட்டுமே குங்குமப்பூவைக் கண்களால் பார்க்க முடியும். இல்லையென்றால் அதை உபயோகிக்கவே மாட்டார்கள்!’’ - குங்குமப்பூவைத் தூவிய விகாஸிடம் அடுத்த கேள்வியைத் தூவினோம்.

சமையல்மீது எப்போது ஆர்வம் வந்தது?

“பாட்டியின் சமையல்தான் என்னை ஹோட்டல் மேனேஜ்மேன்ட் படிக்கத் தூண்டியது. என்னுடைய இந்த முடிவை வீட்டில் சொன்னபோது யாருக்கும் விருப்பமில்லை. ஆனால், என்னை உற்சாகப்படுத்தியது பாட்டி மட்டும்தான். நான் படித்த காலகட்டத்தில் டாக்டர், இன்ஜினீயருக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் செஃப்களுக்கு இருந்ததில்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலைமை மாறிக்கொண்டு வருகிறது. சமீபத்தில் வெளியான அமெரிக்க நாளிதழில் ஒன்றில், திருமணத்துக்கு மிகவும் தகுதியான `புரொஃபஷன் செஃப்’ என்று வெளியிட்டிருந்தார்கள். எங்களைத் தாழ்த்திப்பேசியவர்களுக்கு நன்றி கூறவே விரும்புகிறேன். ஏனென்றால், என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல தூண்டியவை அவர்களுடைய எதிர் மறையான விமர்சனங்கள்தாம்” என்றவர்,

`இந்தக் கலவையில் இப்போது சிறிதளவு ஏலக்காய்ப்பொடி சேர்த்துக்கொள்ளவும். இதோடு ஒரு டீஸ்பூன் அல்லது 10 கிராம் அளவு அகர் அகர் சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும். அகர் அகர் பவுடர் ஃபார்மில் இருப்பது சிறந்தது. அப்போதுதான் சரியாக அளந்து போட முடியும்’ எனப் படபடத்தவரிடம் அடுத்த கேள்வியை முன்வைத்தோம்.

`மிச்செலின் ஸ்டார்’ பற்றி....

“ ‘மிச்செலின் ஸ்டார்’ உணவகங்களில் வேலை கிடைப்பது என்பது மிகவும் அரிது. இந்த உணவகங்களுக்கென்று தனித்துவம் இருக்கிறது. அதைப் பின்பற்றுவது மிகவும் கடுமையான விஷயம். திரைப்படங்களுக்கு ‘ஆஸ்கர்’ என்றால் சமையற்கலைஞர்களுக்கு ‘மிச்செலின்’ பட்டம்.

இந்த உலகம் சமையற்கலையில் நம் சருமத்தின் நிறத்தை வைத்து எடைபோட்ட காலம் இருக்கிறது. வெள்ளையாக உள்ளவர்கள் மட்டுமே சமைக்கத் தெரிந்தவர் களாகப் போற்றப்பட்டனர். அந்தத் தடைகளையெல்லாம் உடைத்து இப்போது உலகளவில் ஏராளமான இந்திய செஃப்கள் பல சாதனைகளைச் செய்துகொண்டு இருக்கின்றனர். நம் நாட்டின் ரெசிப்பிகளும் பலருக்கு இன்ஸ்பிரேஷன். உதாரணத்துக்கு, ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனித்துவமான ஒரு பேஸ்ட் செய்வது எப்படி என்று பிரத்யேகமாக விளக்கமளித்தனர். அந்த பேஸ்ட் வேறொன்றுமில்லை, நம்ம ஊரு செட்டிநாடு மசாலாதான்!”

சமீபத்தில் ராஷ்ட்ரபதி பவனில் ட்ரம்ப் வருகை யின்போது நீங்களும் அவர்களுடன் நேரம் செலவழித்தீர்கள். அந்த அனுபவம்...

“இந்தியாவின் முதல் குடிமகன், அமெரிக்காவின் முதல் குடிமகனைப் பார்த்து, ‘இவர் எங்களுடைய மகன்’ என்றார். அதற்கு ட்ரம்ப், ‘ஆமாம் அவர் நியூயார்க்கிலிருந்து வருகிறார்’ என்று கிண்டலாகக் கூறினார். ட்ரம்ப் அமெரிக்க அதிபராவதற்கு முன்பே அவருடைய நிகழ்ச்சிகளுக்கு நான் சமைத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த முறை அவர் இந்தியா வந்திருந்தபோது அவரைச் சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. பல நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டோம்” என்றவர்...

`அவ்வளவுதான்... சுடச்சுடப் பாயசம் தயார். இது நன்கு ஆறிய பிறகு ஃபிரிட்ஜில் வைத்து எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த வெயிலுக்குச் சில்லெனப் பாயசம் சாப்பிட முடியும்’ என்றபடி விடைபெற்றார் விகாஸ் கண்ணா.