Published:Updated:

ஐப்பசி கார்த்திகை நைவேத்தியங்கள்

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் இந்த மாதத்தில் இவற்றைக் கடவுளருக்குச் சமர்ப்பித்து வேண்டிய வரங்களைப் பெறுவோம்.

பிரீமியம் ஸ்டோரி
ஐப்பசி கார்த்திகை நைவேத்தியங்கள்
ஐப்பசி கார்த்திகை நைவேத்தியங்கள்
 வாசகி தீபா
வாசகி தீபா

ப்பசியும் கார்த்திகையும் கலந்துவரும் இந்த நவம்பர் மாதத்தில் ஏகப்பட்ட பண்டிகைகளும் விரதங்களும் இடம்பெற்றுள்ளன. குளிரும் மழையும் அதிகமிருப்பதால், இந்த மாதங்களில் அநேக நோய்கள் தாக்கும் ஆபத்தும் அதிகமுள்ளது. அதனாலேயே ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பல விரதங்களை உருவாக்கியுள்ளனர் நம் முன்னோர். சிவலாயங்களில் நடைபெறும் பௌர்ணமி அன்னாபிஷேகம், ஐப்பசி சதயம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளும் சஷ்டி விரதம், ரம்பா திருதியை, பத்ரி கௌரி விரதம், திந்திருணி கௌரி விரதம், கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணியும் விரத நாள் தொடக்கம் எனப் பல்வேறு சிறப்புகள் இந்த மாதங்களில் உண்டு. இந்த விழாக்களில் படைக்கப்படும் நைவேத்தியங்களை சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வாசகி தீபா நமக்காகச் செய்து காண்பிக்கிறார். ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் இந்த மாதத்தில் இவற்றைக் கடவுளருக்குச் சமர்ப்பித்து வேண்டிய வரங்களைப் பெறுவோம்.

தட்டை
தட்டை

தட்டை

ளுந்தும் எள்ளும் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பவை. சஷ்டி விரதம் முடித்த பிறகு முருகப்பெருமானுக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்களில் தட்டையும் ஒன்று. நெல்லை சுற்றுவட்டார மாவட்டங்களில் சஷ்டிக்குத் தட்டைகள் படைப்பது விசேஷமாக உள்ளது.

தேவையானவை:

  • புழுங்கல் அரிசி மாவு - 2 கப்

  • உளுந்து மாவு - ஒரு கப்

  • பொட்டுக்கடலை மாவு - அரை கப்

  • மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

  • கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

  • எள் - 2 டீஸ்பூன்

  • கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

  • பெருங்காயத்தூள் - சிறிதளவு

  • நெய் - சிறிதளவு

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். எள்ளை வறுத்துக்கொள்ளவும். அரிசி மாவு, உளுந்து மாவு, பொட்டுக்கடலை மாவைச் சேர்த்து அத்துடன் மிளகாய்த்தூள் சேர்த்து, பிறகு வறுத்த எள்ளைச் சேர்த்து ஊறவைத்த கடலைப்பருப்பையும் சேர்க்கவும். பிறகு உப்பு, பெருங்காயத்தூள், கேசரி பவுடர் சேர்த்துக் கலந்து, உருக்கிய நெய் சேர்க்கவும். இந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக நீர்விட்டு முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசையவும். ஒரு வாழையிலையில் நெய்தடவி சிறிது மாவை வைத்து அழுத்தி வட்டமாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு சிவக்க வறுத்தெடுத்து நைவேத்தியம் செய்யவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மைசூர் வேர்க்கடலை முறுக்கு
மைசூர் வேர்க்கடலை முறுக்கு

மைசூர் வேர்க்கடலை முறுக்கு

முறுக்கு வகையில் எத்தனையோ உண்டு. இது வேர்க்கடலையைக்கொண்டு செய்யப்படும் சுவையான, சத்தான முறுக்கு வகை, குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் ருசியும் மணமும் கொண்டது. அநேக பட்சணங்களை நைவேத்தியமாகப் படைக்கும் ஐப்பசி அன்னாபிஷேக நாளில் இந்த முறுக்கையும் படைத்து ஈசனின் அருளைப்பெறலாம்.

தேவையானவை:

  • வேர்க்கடலை – கால் கப்

  • அரிசி மாவு – ஒரு கப்

  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

  • பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

  • வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

  • உப்பு – தேவையான அளவு

  • எண்ணெய் - பொரித்தெடுக்கத் தேவையான அளவு

செய்முறை:

வேர்க்கடலையைத் தோல் நீக்கி மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விட்டு வழுவழுப்பாக அரைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில், அரிசி மாவு, அரைத்த வேர்க்கடலை விழுது, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு, கொஞ்ச கொஞ்சமாக தேவையான தண்ணீர் தெளித்து, மாவாகப் பிசையவும். சிறிய துவாரம்கொண்ட முறுக்கு அச்சில் போட்டு, ஒரு தட்டில் சிறிய சிறிய முறுக்காக செய்துவைத்து, எண்ணெயில் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.

குறிப்பு:

எண்ணெய் நன்கு காயாவிட்டால் முறுக்கு பிரிந்துவிடும்.

சிவப்பு அவல் புட்டு
சிவப்பு அவல் புட்டு

சிவப்பு அவல் புட்டு

ஐப்பசி அன்னாபிஷேகத்தில் சிவனாருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து அதையே அலங்காரமாகவும் செய்வது வழக்கம். அப்போது வடை, பாயசம், அவியல் என ஏகப்பட்ட நைவேத்தியங்களைப் படைப்பார்கள். அதில் திருவாதிரைக் களியும் சிவப்பு அவல் புட்டும் அவசியம் இடம்பெறும். நமக்கு ஆரோக்கியம் அளிக்கும் சிவப்பு அவல் புட்டு, கார்த்திகை மாத நைவேத்தியங்களில் முக்கியமானது.

தேவையானவை:

  • சிவப்பு அவல் – ஒரு கப்

  • வெல்லம் – கால் கப்

  • தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்

  • நெய் – 2 டீஸ்பூன்

  • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

  • முந்திரி - 10

செய்முறை:

அவலைச் சுத்தப்படுத்தி நெய்யில் நன்றாக வறுக்கவும். வெல்லத்தைத் தூளாக்கி, அவலுடன் சேர்த்து, மிக்ஸியில் கொர கொரவெனப் பொடிக்கவும். இதை ஆவியில் வேகவைத்து எடுத்து, இதோடு தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி, நெய்யில் வறுத்த முந்திரியைச் சேர்த்து நைவேத்தியமாகப் படைக்கலாம்.

பேரீச்சைப் பணியாரம்
பேரீச்சைப் பணியாரம்

பேரீச்சைப் பணியாரம்

கார்த்திகை மாத முதல் நாள், இந்தியாவெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்காக மாலை அணிந்து விரதம் தொடங்கும் நாள். இனிப்பு நைவேத்தியங்களைப் பிரியத்தோடு ஏற்றுக்கொள்ளும் சபரிகிரிவாசனுக்கு இந்தப் பேரீச்சைப் பணியாரத்தைப் படைத்து அருளைப்பெறலாம்.

தேவையானவை:

  • ஊறவைத்து அரைத்த அரிசி மாவு – 2 கப்

  • பழுத்த பேரீச்சம்பழம் – 25

  • உலர்திராட்சை – 10

  • தேங்காய்த் துருவல் – கால் கப்

  • உடைத்த முந்திரி – 5

  • வெல்லம் – 1/5 கப்

  • உப்பு – சிறிதளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பேரீச்சம்பழத்தைக் கொட்டை நீக்கி, அத்துடன் உலர்திராட்சை சேர்த்து 10 நிமிடங் கள் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதோடு அரிசி மாவையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்தெடுத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், முந்திரி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து இட்லி மாவுப் பதத்தில் கரைத்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும் மாவை ஊற்றி வேகவிடவும். பணியாரம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். நைவேத்தியம் செய்து படைக்கவும்.

வாழைப்பழப் பாசிப்பருப்பு பாயசம்
வாழைப்பழப் பாசிப்பருப்பு பாயசம்

வாழைப்பழப் பாசிப்பருப்பு பாயசம்

பாயசன்னப் பிரியன் என்றே வணங்கப்படும் ஹரிஹரசுதன் ஐயப்பனுக்குப் பிடித்தமான கதலிப்பழம் (வாழை) சேர்த்துச் செய்யப்படும் வாழைப்பழப் பாசிப் பருப்பு பாயசம் கார்த்திகை மாதம் முழுக்க நைவேத்தியம் செய்ய பயன்படுகிறது. மாலை அணிந்துகொண்டு விரதமிருக்கும் பக்தர்களின் படி பூஜை, இருமுடி பூஜைகளில் இந்தப் பாயசம் வெகு பிரசித்தம்.

தேவையானவை:

  • சிறிய வாழைப்பழத் துண்டுகள் - ஒரு கப்

  • பாசிப்பருப்பு - ஒரு கப்

  • பால் - அரை கப்

  • கெட்டித் தேங்காய்ப்பால் - 2 கப்

  • வெல்லம் - ஒரு கப்

  • ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • முந்திரி, திராட்சை - தேவையான அளவு

  • நெய் - தேவையான அளவு

செய்முறை :

பாசிப்பருப்பை சுத்தம் செய்து நன்றாகக் குழைய வேகவைத்து மசித்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்தெடுத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். மசித்த பாசிப்பருப்பில் வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

வாழைப்பழத் துண்டுகளை நெய்யில் நன்றாக வதக்கி கொதிக்கும் பாசிப்பருப்பு - வெல்லக்கரைசலில் போட்டுக் கிளறவும். இத்துடன் பால், தேங்காய்ப்பால் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். இறுதியாக ஏலக்காய்த்தூள், திராட்சை, வறுத்த முந்திரி சேர்த்து, ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்யவும்.

மிளகு சாதம்
மிளகு சாதம்

மிளகு சாதம்

இந்த மாதத்தில் குளிரின் தாக்கத்தால் காய்ச்சலும் சளியும் வருவது வழக்கம். இதை சரிப்படுத்த மிளகு உதவும். அதனால் திருமாலுக்கு உகந்த மிளகு சாதத்தை வைஷ்ணவ ஏகாதசி நாளில் செய்து நைவேத்தியமாகப் படைத்துச் சாப்பிட்டால், உடலும் ஆரோக்கியம் பெறும்; திருமாலின் அருளும் கிடைக்கும்.

தேவையானவை:

  • அரிசி - ஒரு கப்

  • மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்

  • சீரகம் - 2 டீஸ்பூன்

  • நெய் - சிறிதளவு

  • கடுகு, வேர்க்கடலை - சிறி்தளவு

  • கறிவேப்பிலை - தேவையான அளவு

  • காய்ந்த மிளகாய் - 5

  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

அரிசியைக் கழுவி வேகவைத்து உதிரியாக வடித்துக்கொள்ளவும். கடாயில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாக வறுத்தெடுத்து பொடித்துக்கொள்ளவும். பின்னர் கடாயில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும். இதில் வேகவைத்த சாதம், பொடித்த மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, சிறிது நேரம் மூடிவைத்துவிட்டு இறக்கவும்.வேண்டுமானால், வேர்க்கடலைக்குப் பதிலாக முந்திரிப்பருப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

மாம்பழ அல்வா
மாம்பழ அல்வா

மாம்பழ அல்வா

திந்திரிணீ கௌரி விரதம் கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் துவிதியை திதியில் அனுஷ்டிக்கப்படும். அன்னை பார்வதி கௌரியாக பூவுலகில் ஈசனை அடைய அநேக விரதங்கள் அனுஷ்டித்தார். அதில் ஒன்றுதான் இந்த விரதம். மகிழமரத்தடியில் அன்னை விரதமிருந்ததால் இந்நாளில் அம்பிகைக்கு மகிழம்பூக்களைக்கொண்டு அர்ச்சிக்கலாம். புளிப்பான நைவேத்தியங்களை செய்து வழிபடுவது இந்நாளில் வழக்கம். அந்த வகையில் இந்த மாம்பழ அல்வாவும் விசேஷம்.

தேவையானவை:

  • பெரிய, ரொம்பவும் பழுக்காத மா‌ம்பழ‌ம் – ஒன்று

  • சர்க்கரை – ஒரு கப்

  • பால் – 2 கப்

  • ஏல‌க்கா‌ய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • நெய் – தேவையான அளவு

  • முந்திரி – 10 (சின்னதாக உடைத்துக்கொள்ளவும்)

செ‌ய்முறை :

மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்கி துண்டுகளாக்கி அதை மிக்ஸியில் மசித்துக்கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு நெய்விட்டு உருகியதும் மாம்பழக்கூழைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். இதில் சர்க்கரை, பிறகு பால்விட்டு கலக்கி கைவிடாமல் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரியைச் சேர்த்துக் கிளறவும். அடிக்கடி நெய் சேர்த்து கிளறினால் கலவை ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும். அப்போது ஏல‌க்காய்த்தூள் சேர்த்துக் கிளறி நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி ஆறவைக்கவும். பிறகு துண்டுகளாக வெட்டிப்படைக்கவும்.

கதம்ப இட்லி
கதம்ப இட்லி

கதம்ப இட்லி

விரத நாள்களில் இரவு வேளையில் சாதம் எடுத்துக்கொள்ளாமல் சிற்றுண்டிகள் உண்பது நம் வழக்கம். காலையில் உபவாசம் இருந்து மதியம் கடவுளுக்குப் படையலிட்டு அந்த உணவை உண்போம். இரவில் ரொம்பவும் எளிதாக ஜீரணிக்கும் சிற்றுண்டிகளை மட்டுமே நைவேத்தியமாகப் படைத்து உண்பது ஐதிகம் மட்டுமல்ல... உடல் நலத்துக்கும் உகந்தது என்பர். வழக்கமான இட்லி, தோசை என்றில்லாமல் இந்தக் கதம்ப இட்லியை எடுத்துக்கொண்டால் உடலுக்கு ஆரோக்கியம், நாவுக்கு தனிச்சுவையை அளிக்கும்.

தேவையானவை:

  • இட்லி அரிசி, கடலைப்பருப்பு, ரவை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா 100 கிராம்

  • சமையல் சோடா - ஒரு சிட்டிகை

  • எலுமிச்சைப்பழம் - ஒன்று

  • உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

  • நல்லெண்ணெய் - தேவையான அளவு

  • கடுகு - அரை டீஸ்பூன்

  • உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்.

  • முந்திரி - 10 (பாதியாக உடைத்துக்கொள்ளவும்)

  • காய்ந்த மிளகாய் - 3

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

  • தேங்காய்த் துருவல் - அரை கப்

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை :

அரிசி, பருப்பு வகைகளைச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் ரவை போல் அரைத்துக்கொள்ளவும். பிறகு இரண்டு மணி நேரம் புளிக்கவிடவும். இதில் ரவையைச் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து தாளிக்க வேண்டிய எல்லாவற்றையும் தாளித்து மாவில் சேர்க்கவும். இதில் எலுமிச்சைச்சாறு, சமையல் சோடா, உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். எண்ணெய் தடவிய கிண்ணத்தில் மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவும். இதை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து விநியோகிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு