Published:Updated:

கரூரில் வாங்கிய ரஸ்க்குக்குள் `இரும்பு நட்'!-கஸ்டமர் வீட்டுக்கே வந்த பிரபல பிஸ்கட் நிறுவன அதிகாரிகள்

நட் உள்ள ரஸ்க்குடன் விவேகானந்தன்
நட் உள்ள ரஸ்க்குடன் விவேகானந்தன் ( நா.ராஜமுருகன் )

நான் பின்வாங்கப் போறதில்லை. அந்த நட்டு இருந்த ரஸ்க்கை என் மகன் முழுங்கி இருந்தா, என்ன ஆகி இருக்கும்.. ஆனா, பொறுப்பா பதில் சொல்ல வேண்டிய கம்பெனி என்னை ஆஃப் பண்ண பார்க்குது. தக்க நடவடிக்கை இல்லைன்னா, அந்த கம்பெனி மீது வழக்கு தொடுக்கலாம்னு இருக்கேன்.

கரூரைச் சேர்ந்த கஸ்டமர் ஒருவர் வாங்கிய பிரபல கம்பெனி தயாரிப்பான ரஸ்க்கில், இரும்பு நட் ஒன்று இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தைப் பெரிதாக்காமல் இருக்க, அந்த கஸ்டமருக்கு சம்பந்தப்பட்ட கம்பெனி சார்பில் பரிசுப்பொருள் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

`உணவில் எதையோ கலக்கிறார்கள்!' -புழல் சிறைக்கு மாற்றக்கோரி முருகன் மீண்டும் உண்ணாவிரதம்
நட்டு உள்ள ரஸ்க்குடன் விவேகானந்தன்
நட்டு உள்ள ரஸ்க்குடன் விவேகானந்தன்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள பொரணியைச் சேர்ந்தவர், விவேகானந்தன். கரூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர் தன் மகனுக்கு பிரபல பிஸ்கட் கம்பெனியான பிரிட்டானியா கம்பெனி தயாரிக்கும் ரஸ்க்கு பாக்கெட் ஒன்றை, கடந்த 16-ம் தேதி, கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் வாங்கியிருக்கிறார். அதை தன் மகனிடம் கொடுத்து உண்ண வைத்திருக்கிறார்.

புகார் கடிதம்
புகார் கடிதம்
நா.ராஜமுருகன்

இரண்டு ரஸ்க்குகளை சாப்பிட்ட அவர் மகன், மூன்றாவது ரஸ்க்கைப் பிரித்தபோதுதான், அந்த ரஸ்க்குக்குள் இரும்பு நட் ஒன்று இருந்ததைப் பார்த்து, விவேகானந்தன் அதிர்ச்சியாகி இருக்கிறார். உடனே, அந்த ரஸ்க்கு பாக்கெட்டில் இருந்த இமெயில் முகவரிக்கு, அந்த நட்டுடன் கூடிய ரஸ்க்கை போட்டோ எடுத்து புகாராக அனுப்பியுள்ளார். பதறிப்போன அவர்கள், `ரஸ்க்கு பாக்கெட்டை திருப்பிக் கொடுத்துடுங்க. நாங்க நடவடிக்கை எடுக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், அதை ஏற்க மறுத்த விவேகானந்தன், பின்னர் நடந்தவற்றை நம்மிடம் பகிர்ந்தார். `` அந்த ரஸ்க்கு பாக்கெட்டில் இருந்த பேக்கேஜிங் கோட் நம்பரை நிறுவன அதிகாரிகள் கேட்டாங்க. நான் சொன்னதும், `அது மதுரைக் கிளையில் தயாரிக்கப்பட்டது. உடனே நடவடிக்கை எடுக்கிறோம்'னாங்க. ஆனா, மறுநாளே பிரிட்டானியா கம்பெனியின் மதுரை தயாரிப்பு பிரிவின் மேலாளர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு காரில் என் வீட்டுக்கே வந்துட்டாங்க. அவங்களும், `நட் உள்ள ரஸ்க்கை கொடுங்க. விசாரிச்சு சொல்றோம்'னாங்க. உடனே நான் கோபமா, `அதை என் பையன் சாப்பிட்டிருந்தா, அவன் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். இவ்வளவு சாதாரணமா கேட்கிறீங்க?. வேணும்னா இந்த ரஸ்க்கை போட்டோ, வீடியோ எடுத்துக்கொள்ளுங்கள். இல்லைன்னா, தவற்றை ஒத்துக்கிட்டு, அந்த ரஸ்க்கை நான் வாங்க செலவழித்த 10 ரூபாயை செக்கா போட்டுக் கொடுங்க'னு கேட்டேன். ஆனா அவங்க, `அதுக்குப் பதில் வேற ரஸ்க்கு பாக்கெட் வேண்டுமானாலும் கொடுக்கலாம். பணத்தை திரும்பத் தர்றது எங்க கம்பெனி பாலிஸி இல்லை'னு ரூல்ஸ் பேசினாங்க. `அப்படினா, நான் அதை திருப்பித் தரமாட்டேன்'னு சொல்லிட்டேன். `எங்க கம்பெனியில் மெட்டல் ஸ்கேனர் இருக்கு. இப்படியெல்லாம் நட்டு வர வாய்ப்பில்லை. நட்டு வந்திருந்தால், மெஷின் வேலை செய்யாது'னு சப்பைக்கட்டு கட்டுனாங்க. அதோட, `இதைப் பெருசு பண்ணாதீங்க. இந்தாங்க எங்க கம்பெனி சார்பில் உங்களுக்கு பரிசுப் பொருள்'னு ஒரு பெட்டியைக் கொடுத்தாங்க.

நட்டு உள்ள ரஸ்க்குடன் விவேகானந்தன்
நட்டு உள்ள ரஸ்க்குடன் விவேகானந்தன்
நா.ராஜமுருகன்

நான் அதை வாங்க மறுத்துட்டேன். ஆனா, எங்க வீட்டுல இருந்த மேஜை மேல வச்சுட்டு, போன் பேச வெளியே போனாப்புல போன அவங்க, கார்ல ஏறி விருட்டுனு கிளம்பிட்டாங்க. அதன்பிறகு, `பிரிட்டானியா கம்பெனியின் சென்னை பிரிவிலிருந்து கஸ்டமர் கேர் மேனேஜர் பேசுறேன்'னுட்டு ஒருத்தர் தினமும் போன் பண்ணி, `நீங்க அந்த ரஸ்க்கை கொடுத்தா, உடனே நடவடிக்கை எடுப்போம்'னு அவங்க தப்பை மறைக்கவே பார்த்தார். `கலெக்டர் ஆபிஸுல மனு கொடுக்கப் போறேன்; மீடியாவுல ப்ளாஷ் பண்ணப் போறேன்'னு எச்சரிச்சேன். அவங்க தங்கள் தவற்றை ஒத்துக்க முன்வரவே இல்லை. அதனால், அவங்களுக்கு தக்க பாடம் புகட்டணும்னு, கடந்த 18-ம் தேதி கரூர் கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தேன். ஃபுட் சேஃப்டி அலுவலர்கள் வந்து விசாரிச்சாங்க. தங்கள் துறையின் மதுரை மாவட்ட அதிகாரிகளை வைத்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கறதா சொல்லியிருக்காங்க. நான் பின்வாங்கப் போறதில்லை. அந்த நட்டு இருந்த ரஸ்க்கை என் மகன் முழுங்கி இருந்தா, என்ன ஆகி இருக்கும்? ஆனா, பொறுப்பா பதில் சொல்ல வேண்டிய கம்பெனி என்னை ஆஃப் பண்ண பார்க்குது. தக்க நடவடிக்கை இல்லைன்னா, அந்த கம்பெனி மீது வழக்கு தொடுக்கலாம்னு இருக்கேன்" என்றார் சூடாக.

கரூரில் வாங்கிய ரஸ்க்குக்குள் `இரும்பு நட்'!-கஸ்டமர் வீட்டுக்கே வந்த பிரபல பிஸ்கட் நிறுவன அதிகாரிகள்

இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறையின், கரூர் மாவட்ட நியமன அலுவலர் சசிதீபாவிடம் பேசினோம். "ஆமாம், பிரிட்டானியா ரஸ்க்கில் நெட்டு இருந்தது பற்றி எங்களுக்கு புகார் வந்தது. அதை சாம்பிள் எடுத்து, பாளையங்கோட்டைக்கு ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். இதுசம்பந்தமாக, சம்பந்தப்பட்ட பிஸ்கட் கம்பெனி தலைமைக்கு விளக்கம் கேட்டு, கடிதம் அனுப்பியுள்ளோம். அதேபோல், அந்த ரஸ்க்கு பாக்கெட்டை தயாரித்த, அந்த கம்பெனியின் மதுரை பிரிவிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். இந்த மூன்று விஷயங்கள் கைக்கு வந்ததும், அதை வைத்து, தவறு நடந்திருக்கும்பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

கம்பெனி சார்பாக பேச முயன்றோம். ஆனால், நம்மிடம் அவர்கள் பேசுவதை தவிர்த்தனர். தங்கள் தரப்பு விளக்கத்தை அவர்கள் தரும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்!

அடுத்த கட்டுரைக்கு