Published:Updated:

கார வடையும் உருளைக்கிழங்கு குல்கந்தும் | விருந்தோம்பல்

கார வடை

நாங்குநேரியில் நடக்கும் பெரும்பாலான விருந்துகளில் காலை உணவுகளில் இந்த உருளைக்கிழங்கு குல்கந்தை சுடச்சுட வாழை இலையில் பரிமாறுவார்கள். இதைச் சாப்பிட்டுப் பார்த்தால் உருளைக்கிழங்கில் செய்த இனிப்பு என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது!

கார வடையும் உருளைக்கிழங்கு குல்கந்தும் | விருந்தோம்பல்

நாங்குநேரியில் நடக்கும் பெரும்பாலான விருந்துகளில் காலை உணவுகளில் இந்த உருளைக்கிழங்கு குல்கந்தை சுடச்சுட வாழை இலையில் பரிமாறுவார்கள். இதைச் சாப்பிட்டுப் பார்த்தால் உருளைக்கிழங்கில் செய்த இனிப்பு என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது!

Published:Updated:
கார வடை

ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு ஊருக்கு சென்றுவிட்டு பின் அங்கிருந்து அருகில் இருக்கும் ஊர்களுக்கு பிக்னிக் அல்லது ஒரு நாள் பயணமாக  செல்வது வழக்கம். இப்படித்தான் ஒவ்வொரு கோடை விடுமுறையையும் பயனுள்ளதாகவும் சுவாரசியமாகவும் கழிப்போம்.

ஒருமுறை எங்கள் தாத்தாவின் சொந்த ஊரான நாங்குநேரிக்கு செல்லலாம் என்று பிளான் போட்டோம். அங்கு  நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் தங்கத் தேரோட்டமும்,  சித்திரை மாதம் பெரிய தேர்த்திருவிழாவும் பத்து நாள் திருவிழாவாக சிறப்பாக நடக்கும். பல முறை தாத்தாவின் தம்பி லீவுக்கு வரும்போது, ’தேரோட்டம் இருக்கும்போது வாருங்கள்’ என்று அழைப்பார்கள். அதற்கான நேரம் அந்த வருடம்தான் அமைந்தது.

திருநெல்வேலியிலிருந்து மாமா பசங்க, சித்தி பசங்க, தாத்தா, ஆச்சி எல்லோரும் சேர்ந்து திட்டமிட்ட படி காலை 7 மணிக்கு கிளம்பினோம். திருநெல்வேலியிலிருந்து நாங்குநேரி செல்ல அப்போது எல்லாம் நான்கு வழிச்சாலை கிடையாது என்பதால் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆனது.

தேரோட்டம் என்பதால் ஊரே கோலாகலமாக காட்சி அளித்தது. எங்களைப் போல் பலரும் வீட்டின் வாசலிலும் கோயில் வாசலிலும் திரண்டு நின்றனர். பக்தர்கள் தேரில் கட்டியிருந்த பெரிய வடத்தை தங்கள் கரந்தொட்டு தேரை இழுத்த காட்சிகள், மேள வாத்தியங்கள் முழங்க தேர் மெல்ல மெல்ல அசைந்து வருவது ஆகிய அனைத்தும் வாழ்வில் மறக்க முடியாத காட்சிகள். 

தெற்கு வீதி, வடக்கு வீதி வழியாக எங்கள் வீதிக்கு  தங்கத்தேர் வந்ததும் பார்த்து விட்டு பின்னர் பிரசாதம் வாங்கினதும் வானமாமலை கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி விட்டு, பின் கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறை பார்த்தோம். இங்கு கருவறையில் அமைந்துள்ள பெருமாளுக்கு ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று எண்ணெய் காப்பு உற்சவம் சிறப்பாக நடைபெறும். பெருமாளுக்கு சாற்றப்படும் அந்த எண்ணெய் இங்குள்ள கிணற்றில் சேமிக்கப்பட்டு வருகிறது. திறந்த வெளியாக இருக்கும் இந்த எண்ணெய் எத்தனை மழை பெய்தாலும், எவ்வளவு வெயில் அடித்தாலும் கெட்டுப்போகாமல் இருப்பது விசேஷம். பின் வெளியே வந்து அங்குள்ள குளத்தை பார்க்க சென்றோம். குளத்தில் அங்குள்ள சிறு குழந்தைகள்கூட சர்வ சாதாரணமாக பயமில்லாமல் குளிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிற்பகல் 12 மணியளவில் வீடு திரும்பினோம். வீதிகளில் கிடைக்கும் ஓலைப்பெட்டியில் இருக்கும் சீனி மிட்டாய் வாங்கிக் கொண்டு, பால் ஜஸ் சாப்பிட்டுக்கொண்டே வந்தோம். வீட்டிற்குச் செல்லும்போது நல்ல உச்சி வெயில். ஆச்சி மதிய உணவு தயார் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் அங்கு பல காலமாக சாப்பாடு ஆர்டர் எடுத்து உணவு தயாரிப்பதும், மாலையில் விதவிதமாக ஈவினிங் ஸ்னாக்ஸ் (வடை, பஜ்ஜி, பருப்பு வடை, கார வடை மற்றும் சுக்கு காபி‌) செய்து வந்தார்கள். அவர்கள் செய்யும் அனைத்து உணவுகளும் சிறப்பாகவும் சுவையாகவும் இருக்கும். எங்களுக்கு அன்று மதிய உணவிற்கு எல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டாஞ்சோறு செய்தார்கள். எல்லோரும் விரும்பி சாப்பிட்டோம். 

அவர்கள் செய்யும் பருப்பு வடையும் கார வடையும் படு ஜோராக இருக்கும். அதற்கு சுவையான சிவப்பு நிற கெட்டி சட்னி வைத்து பரிமாறுவர்கள். பருப்பு வடைக்கு எப்போதும் ஆட்டு உரலில்தான் அரைப்பார்கள். அன்று மாலை எங்களுக்காக சுடச் சுட கார வடையும், உருளைக்கிழங்கு குல்கந்தும் செய்தார்கள். கார வடைக்கு பட்டாணி பருப்பு வைத்து செய்வார்கள். பட்டாணி பருப்பு பார்ப்பதற்கு கடலைப்பருப்பு போல்தான் இருக்கும். சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். பட்டாணி பருப்பு அடை, வடை போன்ற உணவுகளுக்கு நல்ல சுவையைத்தரும்.

  • கார வடைக்கு ஐந்து பங்கு பட்டாணிப்பருப்புக்கு ஒரு பங்கு உளுத்தம்பருப்பு சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு பொங்க பொங்க அரைக்க வேண்டும் என்று ஆச்சி கூறுவார்கள்.

  • கார வடைக்கு மிக்ஸியில் அரைத்தால் வடை மிருதுவாக இருக்காது என்பார்கள்.

பேரன், பேத்திகளுக்கு காரம் மட்டும் செய்தால் போதாதாம்... அதோடு வித்தியாசமான உருளைக்கிழங்கு குல்கந்தும் செய்தார்கள். உருளைக்கிழங்கு குல்கந்து அவர்கள் ஆர்டர் சாப்பாட்டிற்கு வழக்கமாகச் செய்யும் இனிப்பாகும். உருளைக்கிழங்கை வேகவைத்து பின் துருவி நெய்யில் தேங்காய்த்துருவலை வறுத்து  சர்க்கரை சேர்த்து கரைந்ததும் துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து ஒட்டாமல் வரும் வரை கிளறி நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால் தித்திப்பான உருளைக்கிழங்கு குல்கந்து தயார்.  இதை எங்கள் தாத்தா நான்குநேரியில் ஒருவரிடம் கற்றார்களாம். தேங்காய்ப்பூ சாப்பிடும்போது நரநரவென்று வருவதால் இதற்கு குல்கந்து என்று சொல்லுவார்களாம். இதைச் சாப்பிட்டு பார்த்தால் உருளைக்கிழங்கில் செய்த இனிப்பு என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது!

உருளைக்கிழங்கு குல்கந்தும் கார வடையும் அன்று டாப் கிளாஸ். நாங்குநேரியில் நடக்கும் பெரும்பாலான விருந்துகளில் காலை உணவுகளில் இந்த உருளைக்கிழங்கு குல்கந்தை சுடச்சுட வாழை இலையில் பரிமாறுவார்கள். ஆச்சி, தாத்தா இருவரும் மீண்டும் மீண்டும் உபசரித்து சாப்பிட வைத்து விடுவார்கள். இன்றும் கூட நாங்கள் நான்குநேரி செல்லும் போதெல்லாம் வித விதமாக உணவுகள் செய்து பரிமாறுவார்கள். நான் ஒவ்வொரு முறையும் தாத்தா, ஆச்சியிடம் குறிப்புகளை கேட்கும் போது அதனை  ஆர்வத்தோடும்  ரசனையோடும் அழகாக விளக்கும்போது என் உள்ளம் மகிழ்ச்சியடைகிறது. ஒவ்வொரு குறிப்புகள் சொல்லும் போது அதன் அளவுகளையும் மற்றும் எந்தெந்த பதத்தில் இருக்க வேண்டும் என்பதை சரியான முறையில் கூறுவார்கள். அவர்களிடம் கற்ற  பருப்பு வடை, கார வடை, கொள்ளு தோசை, டிபன் சாம்பார், காரக்குழம்பு,  காரச்சட்னி, உருளைக்கிழங்கு குல்கந்து என எல்லாமே நன்றாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காரவடை  செய்முறை

இப்போது கார வடையும் உருளைக்கிழங்கு குல்கந்தும் எப்படி செய்வதென்று பார்ப்போமா! 

தேவையான பொருள்கள்

பட்டாணிப்பருப்பு - ஒன்றேகால் கப்

உளுந்தம்பருப்பு - கால் கப்

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 4

கொத்தமல்லி‌தழை - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)

புதினா - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)

கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஸ்டெப் 1

முதலில் பட்டாணிப்பருப்பு, உளுந்தம்பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக மூன்று முறை கழுவிக் கொள்ளவும். அதன்‌ பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். 

ஸ்டெப் 2 

பட்டாணிப்பருப்பு மற்றும் உளுந்தம்பருப்பு நன்றாக ஊறியதும் தண்ணீரை நன்றாக வடித்து கிரைண்டரில் சேர்த்து பொங்க பொங்க அரைக்கவும். தண்ணீர் சிறிதளவு (2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் போதும்) தெளித்து 12 நிமிடங்கள் புசு புசுவென பொங்கி வரும் போது மாலை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். 

ஸ்டெப் 3

அரைத்த இந்த மாவுடன் தேவையான அளவு உப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கிய புதினா, கறிவேப்பிலை, அரிசி மாவு, பெருங்காயத்தூள்  எல்லாம் சேர்ந்து மாவை ஒன்றாக கலந்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 4

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக எண்ணையில் போட வேண்டும். பின் சில நிமிடங்களில் சிவந்து வரும் போது மெதுவாக திருப்பிப் போட்டு எல்லாப் பக்கங்களிலும் மொறு மொறுவென ஆனதும் எண்ணெயின் சல சலப்பு  சத்தம் நின்றதும் காரவடைகளை  எடுத்து விடுங்கள்.

கார வடை செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • கார வடைக்கு பட்டாணி பருப்பில்தான் செய்ய வேண்டும். கடலைப்பருப்பு பயன்படுத்தி செய்யக்கூடாது.

  • பட்டாணி பருப்பில்தான் நல்ல ருசியும் வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும் உள்ள பதம் கிடைக்கும்.

  • மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் உடனே பயப்பட வேண்டாம். அரிசி மாவை இன்னும் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • தேவைப்பட்டால் சிறிது நேரம் ஃபீரிசரில் வைத்து அதன் பின் எண்ணெயில் பொரிக்கலாம்.

இப்போது உருளைக்கிழங்கு குல்கந்து எப்படி செய்வதென்று பார்ப்போம்...

தேவையான பொருள்கள்

உருளைக்கிழங்கு - 5

தேங்காய்த்துருவல் - 1 கப்

சீனி - 500 கிராம்

ப்ரெவுன் ஃபுட் கலர் - சில துளிகள்

முந்திரிப்பருப்பு - 12

ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

நெய் - 100 கிராம்

செய்முறை

ஸ்டெப் 1

உருளைக்கிழங்கை நன்றாக கழுவிய பின் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளுங்கள். பின் ஆறவைத்து தோலுரித்து துருவிக் கொள்ளவும். 

ஸ்டெப் 2

கனமான கடாயை சூடாக்கி ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரிப் பருப்பை சேர்த்து வறுத்து தனியே வைக்கவும். பின் தேங்காய்ப்பூவை சேர்த்து சில நிமிடங்கள் மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ளவும். 

ஸ்டெப் 3

பின் சீனியை சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். சிறிதளவு ஃபுட் கலர் சேர்த்து மிதமான சூட்டில் சீனியை கரைய விடவும். 

ஸ்டெப் 4

சீனி நன்றாக கரைந்து சிறிது கெட்டியாகும் போது 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து சில நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும். உருளைக்கிழங்கு சீனியோடும் தேங்காயோடும் சேர்ந்து கெட்டியாகும் போது மேலும் நெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும். இடையிடையே  சிறிது சிறிதாக நெய் ஊற்றி கலந்து விடவும்.  பின் ஏலக்காய்த்தூள் மற்றும் நாம் ஏற்கெனவே நெய்யில் வறுத்த  முந்திரிப்பருப்பையும் சேர்த்து நன்றாக கெட்டியாகும் போது ஓரங்களில் நெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து அதன் சூட்டிலேயே சில நிமிடங்கள் வைத்து நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்... சுவையான உருளைக்கிழங்கு குல்கந்து ரெடி!

 முத்துலெட்சுமி மாதவகிருஷ்ணன்
முத்துலெட்சுமி மாதவகிருஷ்ணன்

உருளைக்கிழங்கு குல்கந்து செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • உருளைக்கிழங்கை குழையாமல் பதமாக வேகவைத்தால்தான் துருவுவதற்கு பதமாக இருக்கும்.

  • வேகவைத்த கிழங்கை மசிக்கவோ அரைக்கவோ கூடாது. 

  • துருவிய உருளைக்கிழங்கை அளந்து கொள்ளுங்கள். அதற்கு சம அளவு இனிப்பு சேர்த்தால் சரியாக இருக்கும். 

  • மெல்லிய தோல்கள் கொண்ட வெள்ளை நிற கிழங்குகள் இதற்கு சுவையாக இருக்கும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism