
ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: நளினி
``என் அம்மா அருமையாகச் சமைப்பார்கள். 1978-ல் திருமணமானபோது என் அம்மாவின் அனைத்துச் சமையல் குறிப்புகளையும் எழுதிக்கொண்டு வந்தேன். அது இப்போது ஏடு ஏடாக இருந்தாலும் அதை ஒரு பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன். என் அம்மாவின் குறிப்புகளைப் பார்த்து நான் செய்யும் மோர்க்குழம்பு, பருப்பு உருண்டைக் குழம்பு, வற்றல் குழம்பு, சூப் வகைகள், பாசிப்பருப்பு உருண்டை, சோமாஸ், முறுக்கு, ஓமப்பொடி போன்றவற்றுக்கு ரசிகர்கள் ஏராளம். ரெஸ்ட்டாரன்ட் ஸ்டைலில் பன்னாட்டு உணவு முறைகளைக் கற்றுக்கொண்டு என் பேரக்குழந்தைகளுக்குச் சமைத்து கொடுப்பதுதான் இப்போது என் பொழுதுபோக்கு.


வாசனைப் பொருள்கள் மட்டுமே உணவுக்கு மணத்தைக் கொடுத்துவிடாது. மற்றவர்கள் அனுபவித்துச் சாப்பிட வேண்டும் என்கிற ஆர்வத்துடன் சமைக்கும்போதுதான் உணவில் ருசியும் மணமும் கூடும். நான் கற்றவை மற்றவர்களுக்குச் சென்றடைய ஒரு நிரந்தரப் பதிவாக இருக்கட்டும் என்று `சமையலும் சகலமும்’ என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளேன்’’ என்கிற சமையற்கலைஞர் நளினி தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்து 2013-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவர். நளினியின் காளான் ரெசிப்பிகள் இங்கே இடம்பெறுகின்றன.
காளான் வறுவல்
தேவையானவை:
காளான் - 200 கிராம்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பட்டை - 4 துண்டு
கிராம்பு - 4
பிரியாணி இலை - ஒன்று
சோம்புத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
முந்திரிப்பருப்பு - 6
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு
காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சோம்புத்தூள், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, நசுக்கிய இஞ்சி, பூண்டு தாளித்து வெங்காயம், தக்காளி, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் நீளவாக்கில் பாதியாக நறுக்கிய காளான் சேர்த்து சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வதக்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றி காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். நன்றாக சுருண்டு வரும்போது மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காளான்கள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
காளான் லசாகினியா
தேவையானவை:
காளான் - 200 கிராம் (மிகவும் சிறிதாக நறுக்கவும்)
நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்
தக்காளி - 6 (நறுக்கவும்)
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஒரிகானோ - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் செதில் (சில்லி ஃப்ளேக்ஸ்) - அரை ஸ்டீபூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு - 6 பல் (நறுக்கவும்)
பீட்சா சாஸ் - 8 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
மயோனைஸ் - 3 டேபிள்ஸ்பூன்
துருவிய சீஸ் - 3 கப்
உப்பு - ஒன்றேகால் டேபிள்ஸ்பூன்
லசாகினியா ஷீட் தயாரிக்க:
மைதா - ஒன்றரை கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெஜிடபிள் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - ஒரு கப்
அலங்கரிக்க:
ஒரிகானோ - சிறிதளவு

செய்முறை :
மைதா மாவை எண்ணெய், வெண்ணெய், அரை டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து பால் ஊற்றி பரோட்டா மாவைப் போல் நன்றாக அடித்து மாவு மென்மையாகும் அளவுக்குப் பிசையவும். மாவின் மேற்பரப்பில் எண்ணெய் தடவி ஒரு ஈரத் துணியால் மூடி வைக்கவும். ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய காளான், தக்காளி, குடமிளகாய், பூண்டு, வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து மிளகுத்தூள், ஒரிகானோ, மிளகாய் செதில், காஷ்மீரி மிளகாய்த்தூள், முக்கால் டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து ரொம்பவும் வதக்காமல், கிரிஸ்பியாக இருக்கும்படியாக லேசாக வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.
மைதா மாவை மூன்று பிரிவுகளாகப் பிரித்து நம்மிடம் உள்ள பேக்கிங் பான் (pan) வடிவத்துக்கு மெல்லிய ஷீட்களாக உருட்டி சற்றே காற்றில் உலர வைக்கவும்.
இப்போது பேக்கிங் பான் (baking pan) மேற்பரப்பில் வெண்ணெய் தடவி அதன் மேல் ஒரு 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ் பரப்பவும். அதன் மேல் ஒரு பிரஷ்ஷினால் ஆலிவ் ஆயில் தடவவும். அதன் மேல் நாம் தயாரித்த மூன்று ஷீட்களில் ஒன்றைப் பரப்பி ஒரு டேபிள்ஸ்பூன் மயோனைஸ், 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ், ஒரு லேயர் நாம் கடாயில் தயாரித்த ஃபில்லிங், அதற்கு மேல் ஒரு கப் துருவிய சீஸ் போடவும். மீண்டும் இரண்டு ஷீட் லேயர்களையும் இதே வரிசையில் பரப்பி கடைசியில் உள்ள சீஸ் லேயர் மேல் ஒரிகானோ தூவவும். இதை 180 டிகிரி செல்ஷியஸுக்கு பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) வைக்கவும். 200 டிகிரி செல்ஷியஸில் 20-ல் இருந்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
பாக்கெட்டில் பேக்கிங் செய்யப்பட்ட காளான்களை இரண்டு நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஃபிரீஸரில் வைக்கக் கூடாது.
காளான் பாஸ்தா
தேவையானவை :
காளான் - 200 கிராம்
பாஸ்தா - 100 கிராம்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - ஒரு கப்
நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
நறுக்கிய தக்காளி - ஒரு கப்
நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்
துருவிய சீஸ் - ஒரு கப்
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் செதில் (சில்லி ஃப்ளேக்ஸ்) - அரை டேபிள்ஸ்பூன்
ஒரிகானோ - ஒரு டீஸ்பூன்

செய்முறை :
பாஸ்தாவுடன் 2 கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து, தண்ணீர் வற்றும்வரை வேகவைக்கவும். ஒரு கடாயில்
2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய காளான், குடமிளகாய், வெங்காயத்தாள், தக்காளி சேர்த்து, மிளகாய் செதில், ஒரிகானோ, மிளகுத்தூள், அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து சற்றே கிரிஸ்பியாக இருக்கும் வரை வதக்கவும். இறக்கும்போது வெதுவெதுப்பான பால் கலந்து நாம் வேகவைத்து எடுத்துவைத்திருக்கும் பாஸ்தாவையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலந்து இறக்கவும்.
பேக்கிங் பானில் (baking pan) அடிப்பரப்பில் வெண்ணெய் தடவி அதன் மேல் பாஸ்தா கலவையை ஊற்றவும். அதன் மேல் துருவியச் சீஸைப் பரப்பவும். இதை அவனில் (oven) 20 நிமிடங்கள் 200 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் வைத்து எடுக்கவும்.
கண்ணுக்குத் தெரியாஹ முட்டை வடிவக் காளான்கள் முதல் பெரிய அளவு காளான்கள் வரை பல வகைகள் உள்ளன.
காளான் பெப்பர் மசாலா
தேவையானவை:
காளான் - 200 கிராம்
ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 3 (நறுக்கவும்)
நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு
பட்டை - 4 துண்டு
கிராம்பு - 4
பிரியாணி இலை - 2
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் செதில் (சில்லி ஃப்ளேக்ஸ்) - அரை டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:
ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி பட்டை, கிராம்பு பிரியாணி இலை, சோம்புத்தூள், நசுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், காளான், குடமிளகாய், மிளகுத்தூள், மிளகாய் செதில் ஆகியவற்றைச் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றாமல் சிறுதீயில் எண்ணெயிலேயே வறுத்து எடுக்கவும். இறக்கும்போது கொத்தமல்லித்தழை தூவவும்.
2,000-க்கும் மேற்பட்ட காளான் வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன.
காளான் பீட்சா
தேவையானவை :
ஈஸ்ட் - ஒன்றரை டீஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
காளான் - 200 கிராம்
மைதா - 200 கிராம்
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
வெஜிடபிள் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
குடமிளகாய் - 2 (நறுக்கவும்)
தக்காளி - 2 (நறுக்கவும்)
வெங்காயம் - 2 (நறுக்கவும்)
பீட்சா சாஸ் - 4 டேபிள்ஸ்பூன்
துருவிய சீஸ் - 2 கப்
வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை:
முதலில் சர்க்கரை, ஈஸ்ட் ஆகியவற்றை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து ஈஸ்ட்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் இதை மூடிவைத்தால் நன்கு நுரைத்து வந்திருக்கும். மைதா மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், சேர்த்து ஈஸ்ட் கலந்த நீரை ஊற்றி பரோட்டா மாவு பிசைவது போல் நன்றாக அடித்துப் பிசைய வேண்டும் மாவின் மேற்பரப்பில் எண்ணெய் தடவி ஈரத் துணியால் மூடி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மீண்டும் நன்றாகப் பிசைந்து பேக்கிங் பான் (baking pan) மேற்புறத்தில் வெண்ணெய் தடவி பான் சைஸுக்கு மாவை சீராகப் பரப்பிவிடவும். அதன் மேல் பீட்சா சாஸ் ஊற்றி சீராகப் பரப்பவும். ஒரு கப் துருவிய சீஸ் பரப்பவும். அதன் மேல் நறுக்கிய வெங்காயம், காளான், குடமிளகாய், தக்காளியை பாங்காக அடுக்கி, அதன் மேல் ஒரு கப் துருவிய சீஸை அடர்த்தியாகப் பரப்பவும். இதை பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 250 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 25 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
காளான் பிசுபிசுப்பாக மாறிவிட்டால் பயன்படுத்தக் கூடாது.
காளான் பஃப்ஸ்
தேவையானவை :
மைதா - 2 கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - அரை கப்
வெதுவெதுப்பான பால் - ஒரு கப்
நறுக்கிய காளான் - 200 கிராம்
நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பனீர் துண்டுகள் - ஒரு கப்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை :
மைதா மாவில் வெண்ணெய், எண்ணெய், உப்பு கலந்து வெதுவெதுப்பான பால் ஊற்றி பரோட்டா மாவுக்குப் பிசைவது போல் அடித்துப் பிசைந்து மேற்பரப்பில் எண்ணெய் தடவி, ஈரத் துணியால் மூடி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய காளான், வெங்காயம், வெங்காயத்தாள், குடமிளகாய், பனீர் துண்டுகளைச் சேர்த்து, காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து அதிகம் வதக்காமல் சற்றே கிரிஸ்பியாக இருக்கும்போது அடுப்பை அணைத்து ஒரு கப் கொத்தமல்லித்தழையை தூவி நன்றாகக் கலக்கவும்
பிசைந்துவைத்த மாவை மீண்டும் நன்றாக அடித்துப் பிசைந்து மீண்டும் மீண்டும் நான்காக எட்டாக மடித்து மடித்து பலகையின் மேல் உருட்டுக் கட்டையால் உருட்டவும். இப்போது உள்ளுக்குக்குள் நிறைய லேயர்கள் உருவாகியிருக்கும். மொத்த மாவையும் நன்கு பாகங்களாகப் பிரித்து செவ்வக வடிவில் உருட்டவும். ஒரு பாகத்தின் நடுவில் நாம் தயாரித்துவைத்த ஃபில்லிங்கை நிரப்பி விளிம்புகளைச் சேர்த்து நன்றாக அழுத்தவும். இதே போல் நான்கு பாகங்களையும் செய்து மேற்பரப்பில் நெய் தடவி பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 200 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 25 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
சரும ஒவ்வாமை பிரச்னைகள் இருப்பின் காளான் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
காளான் ஸ்பெகட்டி
தேவையானவை:
காளான் - 200 கிராம்
ஸ்பெகட்டி - 100 கிராம்
ஆலிவ் ஆயில் - 4 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 5
காய்ந்த மிளகாய் - ஒன்று
ஒரிகானோ - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 6 பல் (நறுக்கவும்)
வெங்காயம் - 2 (நறுக்கவும்)
உப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
சீஸ் துருவல் - 2 கப்
அலங்கரிக்க:
ஒரிகானோ, மிளகாய் செதில்கள் - சிறிதளவு

செய்முறை :
முதலில் ஸ்பெகட்டியை 2 கப் தண்ணீர், ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில், முக்கால் டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை (சுமார் 10 நிமிடங்கள்) வேகவைக்கவும். ஒரு குக்கரில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி தக்காளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்
ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய காளான், பூண்டுப் பல், வெங்காயம் ஆகியவற்றை வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்த தக்காளி - மிளகாய் கலவையை ஊற்றி சுருண்டு வரும் வரை வதக்கி, மிளகுத்தூள், ஒரிகானோ, முக்கால் டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும்
பேக்கிங் பானில் (baking pan) அடிப்புறத்தில் வெண்ணெய் தடவி ஸ்பெகட்டியை முதல் லேயராகப் பரப்பவும். அதன் மேல் தக்காளி - காளான் ஃபில்லிங்கை சீராகப் பரப்பவும். அதன் மேல் ஒரு கப் துருவிய சீஸ் பரப்பவும். அதன் மேல் தக்காளி - காளான் ஃபில்லிங்கை பரப்பி அதற்கும் மேல் ஒரு கப் துருவிய சீஸை அடர்த்தியாகப் பரப்பவும் அதன் மேல் ஒரிகானோ, மிளகாய் செதில்களைத் தூவி, பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 180 செல்ஷியஸ் வெப்பத்தில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
உலகச் சந்தையில் இந்தியாவின் காளான் ஏற்றுமதி அளவு 1.7 சதவிகிதம். இது அடுத்த ஆண்டுகளில் 4 சதவிகிதமாக உயரலாம்.
காளான் ஸ்டஃப்டு பராத்தா
தேவையானவை:
மைதா 2 - கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - அரை கப் + 2 டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - ஒரு கப்
நறுக்கிய காளான் - 200 கிராம்
நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்
நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
நறுக்கிய பனீர் துண்டுகள் - ஒரு கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
சுட்டெடுக்க:
நெய், எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
மைதா மாவுடன் வெண்ணெய், எண்ணெய், முக்கால் டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து பால் ஊற்றி நன்றாக அடித்துப் பிசையவும். சுமார் 10 நிமிடங்கள் நன்கு பிசைந்து மேல் பரப்பில் எண்ணெய் தடவி ஈரத்துணியால் மூடி வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய காளான், வெங்காயத்தாள், குடமிளகாய், காஷ்மீரி மிளகாய்த்தூள், முக்கால் டேபிள்ஸ்பூன் உப்பு, சாட் மசாலாத்தூள், பனீர் துண்டுகள் சேர்த்து அதிகம் வதக்காமல் சற்றே கிரிஸ்பியாக இருக்கும்படி சிறு தீயில் வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கவும்
மாவைத் திரும்பவும் நன்றாக அடித்துப் பிசைந்து மீண்டும் மீண்டும் இரண்டாக நான்காக மடித்து மடித்து பலகையின் மேல் உருட்டுக்கட்டையால் உருட்டவும். பின்னர் மாவை நான்கு பாகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் மெல்லிய வட்ட வடிவில் உருட்டி இடது பக்க விளிம்பையும் வலது பக்க விளிம்பையும் ஒன்றோடு ஒன்றாக சேராமல் சற்றே மடித்து நடுவில் நாம் தயாரித்த ஃபில்லிங்கை ஒரு டேபிள்ஸ்பூன் வைக்கவும். இறுதியாக மேல் பக்க விளிம்பையும் கீழ்ப்பக்க விளிம்பையும் ஒன்றோடு ஒன்றாக இணையும்படி இழுத்து ஃபில்லிங்கை மூடி நன்றாக அழுத்தவும். இரண்டு பக்கமும் நெய் தடவி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சிறு தீயில் இருபுறமும் பொன்னிறமாக வரும்வரை சுட்டெடுக்கவும்.
சந்தையில் விற்கப்படுகிற காளான்கள் பெரும்பாலும் பண்ணைகளில் வளர்க்கப்பட்டவை.