Published:Updated:

கார்த்திகை மார்கழி நைவேத்தியங்கள்

உருளைக்கிழங்குப் பாயசம்
பிரீமியம் ஸ்டோரி
News
உருளைக்கிழங்குப் பாயசம்

அபிராமி

கார்த்திகையும் மார்கழியும் இணைந்த மாதம் டிசம்பர். கார்த்திகை சிவபெருமானுக்கு உரிய மாதமென்றால், மார்கழி திருமாலுக்குரிய மாதம். இதனாலேயே கார்த்திகையும் மார்கழியும் ஹரிஹரசுதனான ஐயப்பனுக்கு உரிய அற்புத மாதமானது. டிசம்பர் மாதத்தில் திருக்கார்த்திகை தீப விழா, பரசுராம ஜயந்தி, திருப்பாவை, திருவெம்பாவை, பகல் பத்து உத்ஸவ ஆரம்பங்கள், அனுமன் ஜயந்தி, சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை நாள் என அநேக விழாக்களும் விரதங்களும் வருகின்றன.

கார்த்திகை மார்கழி நைவேத்தியங்கள்

வழிபாட்டுக்கு உகந்த இந்த மாதத்தில் சிறப்பான நைவேத்தியங்களைச் செய்து கடவுளர்களுக்குப் படைத்து சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வோம்.சுவையும் ஆரோக்கியமும் கலந்த வித்தியாசமான நைவேத்தியங்களை நமக்காகச் செய்து காண்பித்து அசத்துகிறார் சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வாசகி அபிராமி. வாருங்கள்... நாமும் செய்து படைத்து பலன் பெறுவோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கார்த்திகை மார்கழி நைவேத்தியங்கள்

பொரி உருண்டை

தமிழர்களின் ஆதித் திருநாளாம் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவன்று மாவிளக்கும் பொரி உருண்டையும் வைத்து படைப்பது வழக்கம். வீடுதோறும் மாலையில் தீபமேற்றி, சொக்கப்பனையும் ஓலை வெடிகளும் வெடித்து முடித்ததும் விரதம் முடித்து உணவு உட்கொள்ளுவார்கள். அப்போது உணவுக்கு முன்னதாக பொரி உருண்டை இனிப்பாகப் பரிமாறப்படும். அவல் பொரியும், நெல் பொரியும், பொரி உருண்டைகளும் இல்லாத கார்த்திகை தீப விழா சிறக்காது என்பார்கள். இந்தப் பொரி உருண்டையைக் கடையில் வாங்குவதைவிட வீடுகளில் செய்வதே கிராமத்து வழக்கம். கடும் குளிரும் நோய்த்தாக்குதலும் அதிகமான கார்த்திகையில் சுக்கு, ஓமம் சேர்த்து செய்யப்படும் பொரி உருண்டைகள் சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

தேவையானவை:

 • அரிசி பொரி - 4 கப்

 • பாகு வெல்லம் - ஒரு கப்

 • தண்ணீர் - அரை கப்

 • அரிசி மாவு - 2 டீஸ்பூன்

 • சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • ஓமம் - ஒரு டீஸ்பூன்

 • நெய் - ஒரு டீஸ்பூன்

கார்த்திகை மார்கழி நைவேத்தியங்கள்

செய்முறை:

அடுப்பில் அடிகனமான ஒரு பாத்திரம் வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டியில் வடித்து சுத்தமாக்கவும். இதை மீண்டும் கொதிக்கவைத்து ஒரு கம்பி பாகு பதத்தில் காய்ச்சி, நெய் சேர்த்து இறக்கவும். இதில் சுக்குத்தூள், ஓமம் கலக்கவும். அரிசி பொரி மீது சிறிது சிறிதாக வெல்லக் கரைசலைக் கொட்டிக் கிளறி சூடாக இருக்கும்போதே, அரிசி மாவைக் கையில் தொட்டு, பொரிக் கலவையை உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும். ஆறியதும் படையலிட்டுப் பரிமாறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உருளைக்கிழங்குப் பாயசம்

டிசம்பர் 10-ம் தேதி சிவபெருமானுக்குரிய திருக்கார்த்திகை தீப நாள் என்றால், டிசம்பர் 12-ம் தேதி பெருமாளுக்குரிய விஷ்ணு தீபத் திருநாள். பஞ்சராத்திர தீப விழா எனப் போற்றப்படும் இந்நாளில் சகல விஷ்ணு ஆலயங்களிலும் தீபமேற்றிக் கொண்டாடுவார்கள். அக்கார அடிசலும் பாயசங்களும் பிரமாதப்படும் இந்த நாளில் கண்ணனைக்கொண்டாட ஒரு வித்தியாசமான உருளைக்கிழங்குப் பாயசத்தைச் செய்து மகிழ்வோம். கண்ணனுக்கு மட்டுமில்லாமல் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் இந்த இனிப்பான நைவேத்தியம் மிகவும் பிடித்துப்போகும் என்பது உறுதி.

தேவையானவை :

 • உருளைக்கிழங்கு - 4 (நடுத்தர அளவு)

 • காய்ச்சிய பால் - அரை லிட்டர்

 • நெய் - 50 கிராம்

 • சர்க்கரை - 200 கிராம்

 • கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்

 • முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 10

 • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

கார்த்திகை மார்கழி நைவேத்தியங்கள்

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு குழைய வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும். கொஞ்சம்கூட திப்பியில்லாமல் வெண்ணெய் போல மசிக்க வேண்டும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி, திராட்சை, பாதாமை வறுத்தெடுத்துக்கொள்ளவும். அதே கடாயில் உருளைக்கிழங்கு மசியலைப் போட்டு, சர்க்கரை சேர்த்து அதில் மீதமுள்ள நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். நன்கு சுருண்டு வரும்போது இதில் பாலை விட்டு மீண்டும் கிளறவும். கொஞ்ச நேரத்தில் கெட்டியாகி குழம்பு பதத்துக்கு வரும். அப்போது கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறவும். நல்ல வாசனையோடு கொதிக்கும் இந்தப் பாயசத்தில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்கிவைத்து இறைவனுக்குப் படையலிட்டு எல்லோருக்கும் விநியோகிக்கலாம்.

பாசிப்பருப்பு அல்வா

மார்கழி, மாலவனுக்குரிய மாதம். அதிலும் மார்கழி முதல் நாள் விடியலில், வாசலில் வண்ணக் கோலமிட்டு, பூஜை அறையெங்கும் தூபதீபங்கள் கமழ, திருப்பாவை ஒலிக்க அந்த மாதவனை வரவேற்கும் மறக்கமுடியாத இன்பத்திருநாள். `மாதங்களில் நான் மார்கழி’ என்று அந்தக் கண்ணனே விரும்பிச் சொன்ன காலமானதால் அந்த நாளில் சுவையும் அநேக சத்துகளும் கொண்ட இந்த வித்தியாசமான பாசிப்பருப்பு அல்வாவைச் செய்து கண்ணனுக்குப் படைத்து மகிழ்வோம்.

தேவையானவை :

 • தோல் நீக்கி உடைத்த பாசிப்பருப்பு - ஒரு கப்

 • நெய் - அரை கப்

 • சர்க்கரை - ஒன்றரை கப்

 • கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்

 • தண்ணீர் - 2 கப்

 • முந்திரி, திராட்சை போன்ற உலர் பழங்கள் அல்லது விதைகள் - தலா 10

கார்த்திகை மார்கழி நைவேத்தியங்கள்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பைச் சுத்தம் செய்து இரண்டு கப் நீரில் வேகவைத்து எடுக்கவும். நீரை வடித்துவிட்டு மீண்டும் நீரில் அலசி சுத்தமாக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் பருப்பைக் சேர்த்துக் கிளறவும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டுக் கிளறவும். நெய்யை வேண்டிய அளவுக்குப் பார்த்து ஊற்றவும். நன்கு சுருளக் கிளறினால் பருப்பும் நெய்யும் பிரியும் பதத்துக்கு வரும். இப்போது சர்க்கரையைச் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து பாகாக வரும்வேளையில் கண்டன்ஸ்டு மில்க் ஊற்றி கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பக்குவத்தில் இந்த அல்வா திரண்டு வரும். நல்ல மணமும் சுவையும் பெருகிய இந்தத் தருணத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை கொண்டு இந்த அல்வாவை அலங்கரித்து, ஆனந்தம் அளிக்கும் ஆதிகேசவனுக்குப் படைத்து மகிழலாம்.

ஜவ்வரிசி வடை

அஞ்சனை மைந்தன் ஆபத்பாந்தவன் அனுமனின் ஜன்ம தினமான இந்த நாளில் அவருக்கே உகந்த உளுந்து வடை மாலை சாத்துவதே அவருக்கு விருப்பமானது என்று அறிந்திருக்கலாம். ஆனால், பெரும்பாலும் அவை கோயில்களில் கிடைத்துவிடுவதாலும் செய்வது கொஞ்சம் சிரமம் என்பதாலும் இந்த ஜவ்வரிசி வடையை வீட்டில் எளிதாகச் செய்து அனுமனுக்குப் படைத்து பலன் பெறலாம். நல்ல சுவையான இந்த நைவேத்தியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையானவை :

 • ஜவ்வரிசி - ஒரு கப்

 • உருளைக்கிழங்கு - 2 (நடுத்தர அளவு)

 • கோதுமை மாவு - ஒரு டீஸ்பூன்

 • பச்சை மிளகாய் - 3

 • சோம்பு - அரை டீஸ்பூன்

 • தோல் நீக்கிய இஞ்சி -

 • ஒரு இன்ச் துண்டு

 • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கார்த்திகை மார்கழி நைவேத்தியங்கள்

செய்முறை:

ஜவ்வரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைத்து வடித்து வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி எடுத்து வைக்கவும். ஊறிய ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, சோம்பு எல்லாம் சேர்த்து மசித்துக்கொள்ளவும். (மசியாவிட்டால் மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்) இந்தக் கலவையைக் கொஞ்சமாக எடுத்து உள்ளங்கையில் வைத்து சிறிய சிறிய வடைகளாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுத்தெடுக்கவும். சுவையான இந்த ஜவ்வரிசி வடை, உங்கள் பண்டிகையை மேலும் சிறப்பாகும்.

விசேஷ எள் சாதம்

இந்த ஆண்டு வரும் டிசம்பர் 28-ம் நாள் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை நாளாக வருகிறது. இந்நாளில் திருநள்ளாறு, குச்சனூர் போன்ற சனீஸ்வர பரிகாரத்தலங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். இந்நாளில் அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று அங்குள்ள சனீஸ்வர பகவானை எள் தீபமிட்டு, கறுப்பு வஸ்திரம் சாத்தி, எள் சாதம் நைவேத்தியம் செய்து வணங்கினால் சனி தோஷங்கள் விலகி, காரிய ஸித்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. நல்லெண்ணெயும் எள்ளும் கலந்த இந்தப் பிரசாதத்தை உண்டால் உடலில் இருக்கும் நச்சுகள் நீங்கி நலம் உண்டாகும் என்பதும் பெரியோர்கள் வாக்கு.

தேவையானவை:

 • பச்சரிசி - ஒரு கப்

 • எள் - 150 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 6

 • மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

 • நல்லெண்ணெய் - தேவையான அளவு

 • கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு

விசேஷ எள் சாதம்
விசேஷ எள் சாதம்

செய்முறை:

பச்சரிசியை உதிரியாக வேகவைத்து ஆறவைத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விடாமல் எள்ளை வறுத்து, பொரியும்போது எடுத்து வைக்கவும். அடுத்து அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு மிளகாயை வறுத்து, எள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். (அரைபடுவதற்காகக் கொஞ்சம் உப்பு போதும்) மீண்டும் கடாயில் நல்லெண்ணெய்

விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதில் உதிரியாக வடித்த சாதத்தைச் சேர்த்துக் கலக்கவும். இதில் இப்போது தேவையான உப்பு, எள் பொடியைத் தூவிக் கலந்து இறக்கவும். இந்த எள் சாதத்தை சனீஸ்வர பகவானுக்குப் படைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கலாம்.