Published:Updated:

கிச்சன் கிளாஸிக்ஸ்: தினம் தினம் சிறுதானியம்!

சிறுதானியம்
பிரீமியம் ஸ்டோரி
சிறுதானியம்

கீதா இளங்கோவன்

கிச்சன் கிளாஸிக்ஸ்: தினம் தினம் சிறுதானியம்!

கீதா இளங்கோவன்

Published:Updated:
சிறுதானியம்
பிரீமியம் ஸ்டோரி
சிறுதானியம்

‘சிறுதானியங்களை அன்றாட சமையலுக்குப் பயன்படுத்த முடியுமா? இவற்றில் சுவையான உணவுகளைச் சமைக்க முடியுமா?’ என்பது ஆரோக்கியம் விரும்பும் பல பெண்களின் கேள்வி.

‘‘நிச்சயம் முடியும்!’’ என சத்தான பதில் தருகிறார், சென்னை, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஊடக தகவல் அலுவலர் கீதா இளங்கோவன்.

கிச்சன் கிளாஸிக்ஸ்
கிச்சன் கிளாஸிக்ஸ்

தனது முகநூல் பக்கத்தில் சிறுதானிய உணவுகளைப் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் தினமும் பதிவு செய்துவரும் கீதா, ‘‘சிறுதானிய உணவுகளைத் தினமும் சமைக்கக் கொஞ்சம் திட்டமிடலும், மெனக்கெடலும் இருந்துவிட்டால் போதும்... அரிசி உணவுக்கு மாற்றாக சிறுதானியங்களைப் பயன்படுத்தி வெரைட்டியான, சுவையான உணவு வகைகளைச் சமைக்க முடியும். நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவர்களுக்கும் சிறுதானிய உணவுகள் ஏற்றவை. சிறுதானியங்களில் உள்ள நுண்ணூட்டச் சத்துகளும் நார்ச்சத்தும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். சில மூலிகைகளையும் இவற்றுடன் சேர்த்து சமைத்து உண்டால், என்றும் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க முடியும். சிறுதானிய உணவுகளைச் சமைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால்... சிறிய அளவில் சமைத்துப் பக்குவம் பழகிய பிறகு அதிகளவில் சமைக்கலாம்’’ என்ற கீதா,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீதா இளங்கோவன்
கீதா இளங்கோவன்

‘‘பொதுவாக, ‘இன்றைக்கு என்ன சமைப்பது?’ என்று தினமும் ஒவ்வொருவருக்கும் ஒரு மனப்போராட்டமே நடக்கும். அவர்களுக்கு ஒரு எளிய தீர்வு... நாற்பது பக்க நோட்டில், ஒரு நாளைக்கு மூன்று வேளை, ஏழு நாட்களுக்கு 21 வேளைகள் என்று மெனு ரெடி செய்து எழுதி வைத்துவிட்டால், ஒரு வார மெனு கிடைத்துவிடும். தவிர, சரிவிகித உணவையும் சாப்பிட முடியும். மெனு ரிப்பீட் ஆகாமல், வெரைட்டியாகவும் இருக்கும்’’ என்று சூப்பர் டிப்ஸும் தந்தார்.

இனி, சுவையான, சத்தான சிறுதானிய ரெசிப்பிகள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொழுக்கட்டை

தேவையானவை:

 • கம்பு, சோளம், ராகி, குதிரைவாலி அரிசி, சாமை, வரகு, தினை எல்லாம் சேர்த்து - ஒரு கப்

 • துவரம்பருப்பு - ஒரு கப்

 • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

 • தக்காளி - 2

 • காய்ந்த மிளகாய் - 5

 • பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

 • எண்ணெய் - 4 டீஸ்பூன்

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்

 • கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

 • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

கொழுக்கட்டை
கொழுக்கட்டை

செய்முறை:

அனைத்து தானியங்கள் மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றைக் கழுவி, இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். இவற்றுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக, அதிகம் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும், அரைத்த மாவை ஊற்றிக் கிளறவும். மாவு கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி மறுபடியும் கிளறி, சற்று சூடாக இருக்கும்போதே கொழுக்கட்டை பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சத்தான இந்தக் கொழுக்கட்டையை மூலிகைச் சட்னியுடன் சாப்பிட்டால்... சுவையோ சுவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோள தக்காளி ஊத்தப்பம்

தேவையானவை:

 • வெள்ளைச் சோளம் - ஒரு கப்

 • உளுந்து - கால் கப்

 • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

 • பழுத்த தக்காளி - 2

 • சீரகம் - கால் டீஸ்பூன்

 • எண்ணெய் - தேவையான அளவு

சோள தக்காளி ஊத்தப்பம்
சோள தக்காளி ஊத்தப்பம்

செய்முறை:

வெள்ளைச் சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் கழுவி, நான்கு மணி நேரம் ஊற விடவும். பின் தக்காளி, சீரகம் சேர்த்து மாவாக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி ஒரு மணி நேரம் புளிக்க விடவும். தோசைக்கல்லைச் சூடாக்கி கனமான ஊத்தப்பமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

சோளப் பணியாரம்

தேவையானவை:

 • சுத்தம் செய்த நாட்டுச்சோளம் - ஒரு கப்

 • இட்லி அரிசி - கால் கப்

 • உளுந்து - 3 டீஸ்பூன்

 • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

 • பச்சை மிளகாய் - 3

 • எண்ணெய் - 2 டீஸ்பூன்

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு

சோளப் பணியாரம்
சோளப் பணியாரம்

செய்முறை:

நாட்டுச்சோளம், இட்லி அரிசி, உளுந்து அனைத்தையும் அலசி, ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து, மூன்று மணி நேரம் புளிக்க விடவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதக்கியவற்றையும், கொத்தமல்லியையும் மாவில் கொட்டிக் கலக்கி, பணியாரக்கல்லில் ஊற்றி சுட்டெடுத்தால், சூப்பரான சோளப் பணியாரம் தயார். கறிவேப்பிலை சட்னி இதற்கேற்ற சைடிஷ்.

வரகு வெண்பொங்கல்

தேவையானவை:

 • உமி நீக்கி சுத்தம் செய்த வரகு - ஒரு கப்

 • பாசிப்பருப்பு - கால் கப்

 • எண்ணெய் - 3 டீஸ்பூன்

 • மிளகு - ஒரு டீஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - 3 சிட்டிகை

 • இஞ்சி - சிறிய துண்டு

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • முந்திரிப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • வறுத்த வேர்கடலை - ஒரு டீஸ்பூன்

 • நெய் - ஒரு டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

வரகு வெண்பொங்கல்
வரகு வெண்பொங்கல்

செய்முறை:

வரகு, பாசிப்பருப்பு இரண்டையும் அலசி, 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி, கரண்டியால் குழைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து, பொங்கலில் சேர்த்துக் கலக்கவும். சிறிய கிண்ணத்தில் நெய் தடவி, பொங்கலை நிரப்பி தட்டில் கொட்டிப் பரிமாறவும். சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

சாமையிலும் இதேபோல் வெண்பொங்கல் செய்யலாம்.

சாமை வெஜிடபிள் கிச்சடி

தேவையானவை:

 • உமி நீக்கி சுத்தம் செய்த சாமை - ஒரு கப்

 • பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து - ஒரு கப்

 • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப்

 • பச்சை மிளகாய் - 3

 • பெரிய தக்காளி - ஒன்று

 • இஞ்சி - ஒரு சிறிய துண்டு

 • தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்

 • எண்ணெய் - 3 டீஸ்பூன்

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு

சாமை வெஜிடபிள் கிச்சடி
சாமை வெஜிடபிள் கிச்சடி

செய்முறை:

சாமையைக் கழுவி தனியே வைக்கவும். சட்டியில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, உப்பு, காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். இதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் வரகைச் சேர்த்துக் கிளறவும். அடுப்பைத் தணித்து வேகவிடவும். வெந்ததும் கொத்தமல்லி, தேங்காய்த் துருவல் தூவி பரிமாறவும். இதற்குத் தொட்டுக்கொள்ள புதினா சட்னி நன்றாக இருக்கும்.

தயிர் ராகி சேமியா

தேவையானவை:

 • உலர்ந்த ராகி சேமியா - ஒரு கப்

 • பச்சை மிளகாய் - ஒன்று

 • இஞ்சி - ஒரு சிறிய துண்டு

 • உப்பு - தேவையான அளவு

 • தயிர் - 4 கப்

 • எண்ணெய் - 3 டீஸ்பூன்

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு

தயிர் ராகி சேமியா
தயிர் ராகி சேமியா

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் ராகி சேமியாவைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து சரியாக ஒரு நிமிடம் ஊறவைக்கவும் (நேரம் கூடிப்போனால், சேமியா கூழாகிவிடும், கவனம்). பிறகு, சல்லடை தட்டில் கொட்டி நீரை வடியவிட்டு இட்லித் தட்டில் வைத்து, ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைக்கவும். சட்டியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, வெந்த சேமியாவை இதில் சேர்த்துக் கிளறி, உப்பு சரிபார்த்து இறக்கி ஆறவிடவும். நன்கு ஆறியதும் தயிர், கொத்தமல்லி சேர்த்து கிண்ணத்தில் இட்டுப் பரிமாறவும்.

கம்பங்கூழ்

தேவையானவை:

 • உமி நீக்கிய கம்பு - 2 கப்

 • உப்பு - தேவையான அளவு

 • மோர் - 4 கப்

கம்பங்கூழ்
கம்பங்கூழ்

செய்முறை:

கம்பை கழுவி, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். இதை அகலமான பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும். பிறகு, அடுப்பில் வைத்து, அளவான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். கட்டியாகிவிடாமல் இருக்க, நிறைய நீர் ஊற்றுவதும், கிளறிக்கொண்டே இருப்பதும் அவசியம். மாவு கொதித்து, ஓரளவு கெட்டியானவுடன், தணலைக் குறைத்து வைக்கவும். நன்கு வெந்தவுடன் இறக்கி ஆறியதும் மோர் சேர்த்துக் குடிக்கலாம்.

இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம் சூப்பர் காம்பினேஷன். இரவே கூழைக் காய்ச்சி வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டால், சற்றுப் புளித்த சுவையுடன் நன்றாக இருக்கும்.

தினை தோசை

தேவையானவை:

 • தினை மாவு - ஒரு கப்

 • தோசை அல்லது இட்லி மாவு - 4 கப்

 • பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

 • சீரகம் - கால் டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

தினை தோசை
தினை தோசை

செய்முறை:

வழக்கமாக இட்லி அல்லது தோசை செய்வதற்கு அரைத்திருக்கும் மாவில் தினை மாவு, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி, மெல்லிசாக பொன்னிறத்தில் தோசை சுட்டெடுத்தால், தினை தோசை தயார். தினை மாவு கிடைக்காவிட்டால் தினையை மிக்ஸியில் அரைத்துப் பொடித்துச்சேர்க்கலாம். இதேபோல், கம்பு மாவு, ராகி மாவு, மக்காச்சோள மாவு ஆகியவற்றைக் கலந்தும் தோசை செய்யலாம்.

கேழ்வரகு மினி இட்லி

தேவையானவை:

 • கேழ்வரகு - ஒரு கப்

 • உளுந்து - கால் கப்

 • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

 • கேரட் துருவல் - கால் கப்

கேழ்வரகு மினி இட்லி
கேழ்வரகு மினி இட்லி

செய்முறை:

கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் சுத்தம் செய்து நான்கு மணி நேரம் ஊறவிடவும். பிறகு கிரைண்டரில் போட்டு, நைசாக அரைத்து உப்பு சேர்த்துக் கலக்கி எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பிறகு அதனுடன் கேரட் துருவல் சேர்த்து கலந்து மினி இட்லித் தட்டில் மாவாக ஊற்றி, எட்டு நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால், கேழ்வரகு மினி இட்லி தயார். சாம்பார், சட்னியுடன் இதைப் பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism