Published:Updated:

சேலம் போறீங்களா... இலை பரோட்டா, கல்டா பரோட்டா சாப்பிட மறக்காதீங்க மக்கா!

இலை பரோட்டா
இலை பரோட்டா

இலையைப் பிரித்தால், பஞ்சு மாதிரி குழம்பில் ஊறி வெந்திருக்கிறது பரோட்டா. சிக்கன், மட்டன் குழம்புகளில் கலந்து வெரைட்டியான டேஸ்ட். சைடிஷெல்லாம் தேவையேயில்லை.

'உடம்புக்குக் கேடு', 'பைல்ஸ் வரும்', 'செரிமானம் ஆகாது'... என என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனாலும் நம் மக்களுக்கு பரோட்டா என்றால் கொண்டட்டம்தான். எந்த ஊருக்குப் போனாலும் தெருவுக்கு நான்கு பரோட்டா கடைகள். முட்டை முட்டையாக மாவை உருட்டி அடுக்கி வைத்துக்கொண்டு, எண்ணெயில் வழுக்கி வீசி விளையாடுகிற லாவகமென்ன... நான்கைந்து பரோட்டாக்களை அப்படியே வைத்து இரண்டு கைகளாலும் 'பளார்' 'பளார்' என அடித்து மென்மையாக்குகிற யுத்திதான் என்ன?

மதுரைக்காரர்களுக்கு உணவு விஷயத்தில் எப்போதும் கிரியேட்டிவிட்டி அதிகம். தோசையை கறிதோசையாக்கி அசத்துகிறார்கள். பரோட்டாவை பன் பரோட்டாவாக்கி விட்டார்கள். மேலூரில் ஒரு உணவகம் இருக்கிறது, பரோட்டாவோடு கருக வறுத்த சுக்கா சைடிஷாக தருகிறார்கள். சுக்கா பரோட்டா!

இப்போது சேலத்துக்காரர்கள் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார்கள். அவர்களது கண்டுபிடிப்பு, 'இலை பரோட்டா'. கேரளாவிலும் இலை பரோட்டா உண்டு. ஆயினும் சேலத்து பரோட்டா மாஸ்டர்கள் செய்கிற மாயவித்தைகள் சுவாரஸ்யம். வழக்கமான பரோட்டாவைத் தின்று அலுத்தவர்களுக்கு இலை பரோட்டா, ஸ்பெஷல்.

மதுர ருசி: நாட்டுக்கோழி கிரேவி, மட்டன் கிரேவி, குடல் குழம்புடன் பன் பரோட்டா! அப்படி என்ன ஸ்பெஷல்?

அதென்ன இலை பரோட்டா?

தஞ்சாவூர் பக்கம் 'ஆயங்கலைச் சோறு' என்று ஒன்று உண்டு. மாட்டுப்பொங்கலன்று, கிடையில் ஊரே கூடி வெண்பொங்கல் வைப்பார்கள். ஒரு மரத்தைத் சாமியாக்கி, அதற்கு எதிரில் படையல் போடுவார்கள். பச்சைத் தட்டியைப் போட்டு, அந்த பொங்கலை ஒரு லேயர் அள்ளி வைப்பார்கள். அதற்கு மேல் வாழைப்பழம் அடுக்குவார்கள். அதற்கு மேல் இன்னொரு லேயர் பொங்கல். அதற்கு மேல் பலாப்பழம். இதேமாதிரி, உலர் திராட்சை, பேரிச்சை, தேங்காய்ப்பூ, வெல்லம்... எல்லாம் போட்டு நான்கு புறமும் நான்கு பேர் அமர்ந்து பிசைந்து உருண்டை உருட்டி எல்லோருக்கும் தருவார்கள். அடுத்த பொங்கல் வரைக்கும் தித்திக்கும்.

இலை பரோட்டாவும் அப்படியான ஒரு லேயர் வெரைட்டிதான். அகன்ற வாலையிழையை எடுத்து, முதலில் மட்டன் குழம்பை ஊற்றி விரவுகிறார்கள். அது மேலே பூ மாதிரி ஒரு பரோட்டா. அதற்குமேல் எலும்பில்லாத சிக்கனை கிரேவியோடு அள்ளி வைத்துப் பரப்புகிறார்கள். மேலே வெங்காயம், மிளகுத்தூள், மல்லித்தழை தூவி அதற்கு மேல் ஒரு பரோட்டா வைத்து தளும்ப சிக்கன் குழம்பு ஊற்றுகிறார்கள். அப்படியே இலையை சதுரமாக மடித்துக் கட்டி பரோட்டா கல்லில் வைத்து பத்து முதல் பதினைந்து நிமிடம் வேக வைக்கிறார்கள். வாழையிலையும் பரோட்டாவும் சங்கமித்து வெளிவருகிற சுகந்தமான வாசனைதான் வெந்ததற்கு அடையாளம். அப்படியே பாதி கருகிய இலையோடு சூடுபறக்க கொண்டு வந்து வைக்கிறார்கள்.

இலையைப் பிரித்தால், பஞ்சு மாதிரி குழம்பில் ஊறி வெந்திருக்கிறது பரோட்டா. சிக்கன், மட்டன் குழம்புகளில் கலந்து வெரைட்டியான டேஸ்ட். சைடிஷெல்லாம் தேவையில்லை. வேண்டுமானால் சிறுக வெங்காயம் வெட்டிப்போட்ட ஆம்லேட் ஓகே.

சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கம், அஞ்சல் நிலையத்துக்கு எதிரில் இருக்கிறது அசோக் பரோட்டா கடை. 20 வருடங்களுக்கு முன்பு பாலகுமாரும் மனோகரனும் ஆரம்பித்த கடை. 'இலை பரோட்டா' சாப்பிட இந்த உணவகம் நல்ல சாய்ஸ். இலை பரோட்டா சாப்பிட விரும்புபவர்கள் குறைந்தது 20 நிமிடமாவது உட்கார்ந்திருக்க வேண்டும். அந்த இடைவெளியில் சாப்பிட, கல்டா பரோட்டா, கோதுமை பரோட்டோ என சில வெரைட்டியான பரோட்டா வகைகள் வைத்திருக்கிறார்கள். கல்டா பரோட்டாவுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் செமையாக இருக்கிறது. பரோட்டாவை முறுக வேகவைத்து, பிய்த்துப்போட்டு குழம்பில் ஊறவைத்துத் தருகிறார்கள்.

அடுத்தமுறை சேலம் போனால், எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஒரு இலை பரோட்டா, ஒரு கல்டா பரோட்டா சாப்பிட்டுவிட்டு ரயிலேறுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு