Published:Updated:

ஆஹா... சொல்ல வைக்கும் அழகர்கோயில் சம்பா தோசை!

பாரம்பர்யமாக அழகர்கோயிலில் செய்யப்படும் சம்பா தோசையை வெளிநாட்டுப் பயணிகளும் வாங்கிச் செல்கின்றனர்.

அழகர்கோயில் சம்பா தோசை
அழகர்கோயில் சம்பா தோசை ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மதுரை அழகர்கோயில் பாரம்பர்ய திருக்கோயில். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாகும்.

சம்பா தோசை
சம்பா தோசை

இங்கு 18-ம் படி கருப்பு கோயில், சுந்தராஜ பெருமாள், பழமுதிர்சோலை முருகன், ராக்காயி அம்மன் என்று பல்வேறு வழிபாட்டு ஸ்தலங்கள் உள்ளன. அழகர்கோயில் மலையில் கிடைக்கும் ராக்காயி அம்மனின் நூபுர கங்கை தீர்த்தத்தை இப்பகுதி மக்கள் அரிய தீர்த்தமாகக் கருதி வீடுகளுக்குப் பிடித்துச் செல்கின்றனர்.

மேலும், அழகர்கோயிலில் மூலவருக்கு படைக்கும் நைவேத்தியம் சற்றே வித்தியாசமானது. சம்பா தோசை என்று சொல்லப்படும் நெய் பலகாரம்தான் இது. பச்சரிசி மாவுடன் உளுந்து, சீரகம், பெருங்காயம், சுக்கு, கறிவேப்பிலை, நூபுரகங்கை தீர்த்தம் இவற்றைக் குறிப்பிட்ட அளவு கலந்து நெய்யில் செய்யப்படும் தோசைதான் இது.

ராக்காயி அம்மன் கோயிலில் பக்தர்கள்
ராக்காயி அம்மன் கோயிலில் பக்தர்கள்

தற்போது பல இடங்களில் இந்த சம்பா தோசை விற்கப்பட்டாலும் அழகர்கோயிலில் கிடைக்கும் இந்த சம்பா தோசைதான் மக்கள் பிரசாதமாக வாங்கிச் செல்கின்றனர். தற்போது கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளும் இந்தத் தோசையைப் பிரசாதமாக வாங்குகின்றனர்.

ஆரம்ப காலகட்டத்தில் கரும்பு, கடலை, நெல், மிளகாய் உள்ளிட்ட பல பயிர்கள் நடவு செய்யும்போது நிறைய செல்வத்தை அள்ளித் தர வேண்டும் என வேண்டிக்கொண்டு சம்பா தோசையை வாங்கிச் சென்று நடவு நடக்கும்போது அனைவருக்கும் விபூதிகளிட்டு சம்பா தோசையை சிறிய சிறிய துண்டுகளாகப் பிட்டுக் கொடுப்பார்கள்.

சம்பா தோசை
சம்பா தோசை

விவசாயத்தில் நல்ல அறுவடை கிடைத்த பின் ஒரு மரக்கால் அளவுக்கு முதல் படியைக் கோயில் தானியக் கிடங்கில் கொட்டுவார்கள். இப்படிதான் சம்பா நெல் பயிரை விவசாயம் செழித்த பின் கொடுத்துவிடுவார்கள். அந்த அரிசியைக் கொண்டு சம்பா தோசை செய்துள்ளார்கள். அதனால்தான் இந்த தோசைக்கு 'சம்பா தோசை' என்ற பெயரும் வந்தது என்று சுற்றுப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் உறவுச் சண்டை, ஊர் சண்டை, பங்காளி சண்டை போட்டுக்கொண்ட நபர்கள் ஒன்று சேர விரும்பினால், மலையில் ராக்காயி அம்மன் தீர்த்தம் ஆடி சம்பா தோசையைப் பகிர்ந்து சாப்பிடுவார்கள். இதனால் காசு வெட்டிப் போட்டது, திட்டித் தீர்த்தது, சாமிக்கு மிளகாய் அரைத்தது என்று எல்லாம் கழிந்து சுகத்தை அள்ளித் தரும் என்று சுற்றுப்புற கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

கோயிலில் சம்பா தோசை சுடும் விதம்
கோயிலில் சம்பா தோசை சுடும் விதம்

அழகர்கோயில் வந்து சம்பா தோசையை வாங்கிச் சாப்பிட்டுச் செல்லுங்கள் சங்கடங்கள் தீரும் எனச் சொல்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.