Election bannerElection banner
Published:Updated:

`ஃப்ரீஸர்லாம் கிடையாது.. இயற்கையாகவே குளிரூட்டுறோம்’ – மதுரை ஹெல்தி ரோஸ்மில்க்!

மதுரை ஸ்பெஷல் ரோஸ்மில்க்
மதுரை ஸ்பெஷல் ரோஸ்மில்க்

பெரியார் பஸ் ஸ்டாண்ட்டையொட்டி ஹயத்கான்சாகிப் தெருவில் அமைந்துள்ள இந்தக் கடையில் பால் அயிட்டங்கள் எல்லாமே கிடைக்கும். ரோஸ்மில்க், கடையின் ஹைலைட்!

நள்ளிரவு. நகரத்துக்கே உரிய அரைகுறை இருட்டு. பகலின் பரபரப்பை மொத்தமாக விழுங்கி நித்திரைகொள்ளும் முக்கிய சாலை. இந்நேரத்துக்கு ஆவி பறக்கும் டீயைத்தான் மனசு தேடும். ஆனால், மதுரைக்காரர்களுக்கு, கை கடுக்காத குளிர் பதத்தில் ரோஸ்மில்க்கும் தேடும்.

மதுரை ஸ்பெஷல் ரோஸ்மில்க்
மதுரை ஸ்பெஷல் ரோஸ்மில்க்

மதுரையில் பகல், இரவு என எந்நேரமும் திறந்தேயிருந்தாலும் நள்ளிரவுக் கூட்டத்துக்குப் பெயர்போன கடையாகிவிட்டது 'லட்சுமி கிருஷ்ணா பாலகம்'. ஒரிஜினல் பெயர் இதுதான். ஆனால், 'மதுரை ரோஸ்மில்க் கடை' என்பதுதான் நின்று நிலைத்திருக்கும் பெயர். பெரியார் பஸ் ஸ்டாண்ட்டையொட்டி ஹயத்கான்சாகிப் தெருவில் அமைந்துள்ள இந்தக் கடையில் பால் அயிட்டங்கள் எல்லாமே கிடைக்கும். ரோஸ்மில்க், கடையின் ஹைலைட்!

கிராமத்திலிருந்து கறந்து கொண்டுவந்த பசும்பாலைத் தண்ணீர் சேர்க்காமல் அப்படியே காய்ச்சி எடுத்து, எசென்ஸ் உள்ளிட்ட சேர்மானங்கள் இட்டு, டின்களில் மூடிவைக்கின்றனர். அவற்றைக் குளிர்விப்பதற்கு ஓர் உத்தியைக் கையாள்கின்றனர். டின்கள் வைக்கப்பட்டிருக்கும் பெரிய பெட்டிகளோடு மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. அது, டின் பகுதியில் உலவும் காற்றை உறிஞ்சி வெளியேற்றுகிறது. இந்த இயற்கை முறை குளிரூட்டலும் கலப்படமற்ற பசும்பால் தயாரிப்பும்தான் ரோஸ்மில்க்குக்கு தனிச்சுவையைத் தருகின்றன. ரோஸ்மில்க் 25 ரூபாய்க்கும் பாதாம்பால் 35 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

ரோஸ் மில்க் குடுக்கும் சிறுமி.
ரோஸ் மில்க் குடுக்கும் சிறுமி.

அடிக்கொரு தடவை பால் வண்டிகள் வருகின்றன. கனஜோராகப் பால்பொருள்கள் விற்பனை நடக்கிறது. ஆனால், கடை ஊழியர்கள் நான்கு பேர் மட்டுமே. பால்பொருள்களை ஒருவர் விற்பனை செய்கிறார். இன்னொருவர் குடோன் ஏரியாவைப் பார்த்துக்கொள்கிறார். அடுத்தவர், வண்டியில் வந்த பொருள்களை இறக்கி வைக்கிறார். மற்றொருவர் ரோஸ்மில்க், பாதாம் பால் பகுதியில் நிற்கிறார். கல்லாவில் இருக்கிறார் கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன். அவரிடம் பேசினோம்.

“எங்க பூர்வீகம் தங்கலாச்சேரி கிராமம். பரம்பரையா எங்களுக்குப் பால் வியாபாரம்தான். வீடு இங்கதான் இருக்கு. 15 வருஷமா கடை நடத்திட்டு வர்றேன். இந்தத் தயாரிப்புகளுக்குப் பாக்கெட் பால் எதுவும் பயன்படுத்த மாட்டோம். இயற்கையாகவே குளிரூட்டுறோம், ஃப்ரீஸர் எல்லாம் கிடையாது. எல்லாமே இங்க நல்ல சுவையில இருக்குன்னு வாடிக்கையாளர்கள் சொல்றாங்க. தகுதியான விலையில தரமான சுவை தரணும். அதுக்காக உழைக்கிறோம்” என்றார்.

கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன்
கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன்

இரவுக் குளிருக்கு கம்பெனி கொடுத்து ரோஸ்மில்க் சுவைத்துக்கொண்டிருந்தவரிடம் பேசினோம். “பேரு கவுதம். ஊரு, தோப்பூர். இப்போ சென்னையில வேலைபார்க்கிறேன். சின்ன வயசிலயிருந்து எப்ப தியேட்டருக்கு, வெளியூருக்குப் போயிட்டு வந்தாலும், இங்க ரோஸ்மில்க் குடிச்சிட்டுத்தான் வீட்டுக்குப் போவேன். லீவுக்கு ரெண்டுநாள் மதுரை. அதன் கடைக்கு வந்தேன். பஸ் ஸ்டாண்ட் வேலை நடக்கிறதால, கடை இருக்குமோன்னு பயந்துட்டே வந்தேன். ரொம்ப நாள் கழிச்சு ரோஸ்மில்க் குடிக்கிறேன். டேஸ்ட் மாறவே இல்ல” என்றார்.

மிட்நைட் கூட்டத்தை அனுப்பி வைக்கும் ரயில்வே ஜங்ஷன், தியேட்டர்கள், பஸ் ஸ்டாண்ட் என அத்தனையும் நிறைந்த சிட்டி ஸ்பாட் இது. எனவே, 'ரயில்/பஸ்லயிருந்து இறங்கின கையோட ஒரு ஆல்ட்டு', 'படம் பாத்துட்டு அப்புடியே லேசா இங்கிட்டு ஒரு எட்டு', 'போற வழியில ஒரு எட்டு', 'வீட்டுலயிருந்து மெனக்கெட்டு புறப்பட்டு' என்று மதுரைக்காரர்கள் இந்த ரோஸ்மில்க் கடைக்கு வருவதற்கு கூடை நிறைய காரணங்கள் வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது, போலீஸாரின் இரவு நேரக் கெடுபிடிகளுக்கு ஆளாவதுதான் இவர்களுக்குக் குறையாகயிருக்கிறது.

ஸ்ரீ லட்சுமி கிருஷ்ணா பால் வியாபாரம்
ஸ்ரீ லட்சுமி கிருஷ்ணா பால் வியாபாரம்

“சாராயம் குடிக்கப் போறவங்களுக்கும், குடிச்சிட்டு வர்றவங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கிற போலீஸ்காரங்க, நிம்மதியா ரோஸ்மில்க், பாதாம்பால் குடிச்சுட்டுப் போகலாம்னு வர்ற எங்களை விரட்டுறாங்க'' என்றனர் புலம்பலாக.

மடக்கு மடக்குன்னு ரோஸ்மில்க் குடிச்சா, கண்ணுக்குள்ள ஏ.சி வெச்சாப்புல உள்ளுக்குள்ள குளிரும்!

அட, கெளம்பி வாங்க பாஸு!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு