Published:Updated:

பெருமாளுக்குப் படைக்கப்படும் சம்பாதோசை... செய்வது எப்படி? #Video

சம்பாதோசை
சம்பாதோசை

தினமும் பெருமாளுக்கு மாலை வேளையில் சம்பாதோசை நைவேத்தியம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 6.30 முதல் 7.30 வரை சம்பா காலபூஜை நடைபெறும். அப்போதுதாம் பெருமாளுக்கு உகந்த சம்பா தோசையை நைவேத்யமாகப் படைப்பர்.

கோயிலுக்கு இறைவனை வழிபடச் செல்கிறோம். இறைவனின் தரிசனம் மனதை நிறைத்து ஆத்ம திருப்தி தரும். அதேநேரம் அங்கு வழங்கப்படும் பிரசாதமோ நாவுக்கும் வயிற்றுக்கும் திருப்தியளிக்கும். சுண்டல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் எனப் பொதுவான பிரசாதங்கள் பல இருந்தாலும் சில ஆலயங்களில் பிரத்யேகமான பிரசாதங்களும் உண்டு.

Alagar Koil
Alagar Koil

அவை அந்த ஆலயங்களின் அடையாளமாகவும் திகழும். திருப்பதி என்றால் லட்டு, காஞ்சிபுரம் என்றால் இட்லி, ஶ்ரீவில்லிபுத்தூர் என்றால் அக்கார வடிசல் எனச் சிறப்பு நைவேத்தியங்களின் பட்டியல் பக்தர்களின் கவனத்தைக் கவர்பவை. அப்படி ஒரு சுவைமிக்க தனித்துவமான பிரசாதம்தான் அழகர்கோயில் சம்பா தோசை.

பெருமாள் பக்தர்களுக்கு முக்கியமான திருத்தலமாகத் திகழ்வது அழகர்மலை. அழகர் கோயில் வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான தலம். 'ஆக்னேய புராணம்', 'ஹாலாஸ்ய (மதுரை) மஹாத்மியம் போன்ற பல்வேறு புராணங்களிலும், இந்தத் தலத்தின் கதையை அறிந்துகொள்ள முடியும். அதில் மகிமை சொல்லப்பட்டிருக்கிறது.

Alagar Koil
Alagar Koil

ஆழ்வார்கள், 123 பாசுரங்களில் இந்தத் தலத்தின் மகிமையைப் பாடியிருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில், முக்திதரும் இந்தத் தல மகிமைகள் குறித்து கவுந்தியடிகள், கோவலன் கண்ணகிக்கு எடுத்துக் கூறுகிறார். பிற்கால இலக்கியங்களான, 'அழகர் கலம்பகம்', 'அழகர் அந்தாதி', 'அழகர் கிள்ளை விடுதூது', 'சோலைமலைக் குறவஞ்சி' ஆகிய நூல்கள் அழகர் கோயிலின் சிறப்பைப் போற்றுகின்றன.

இத்தனை சிறப்புகளை உடைய இந்த அழகர் கோயிலில்தான் தினமும் பெருமாளுக்கு மாலை வேளையில் சம்பாதோசை நைவேத்தியம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 6.30 முதல் 7.30 வரை சம்பா காலபூஜை நடைபெறும். அப்போதுதாம் பெருமாளுக்கு உகந்த சம்பா தோசையை நைவேத்யமாகப் படைப்பர்.

Vikatan

ஐம்பொன்னாலான ஓர் அகண்ட சட்டியில் சமைக்கப்படும் மிகப்பெரிய சம்பா தோசைகள் சுவாமிக்கு நிவேதனம்செய்து பூஜைகளானதும் பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் விநியோகிப்பார்கள். பிரசாதத்துக்குப் பக்தர்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்ததால் பின்னாள்களில் அவையே நாள்முழுவதும் விற்பனைசெய்ய ஏற்பாடுசெய்யப்பட்டது. தனியார் குத்தகையில் இருந்த இந்தப் பிரசாதப் பணிகளைத் தற்போது கோயில் நிர்வாகமே பொறுப்பேற்று நடத்திவருகிறது.

சம்பாதோசையை எப்படிச் செய்கிறார்கள்?

பச்சரிசி, தோல் நீக்கப்படாத உளுந்து, மிளகு, சீரகம், சுக்குப்பொடி, கறிவேப்பிலை, உப்பு, நெய். இவைதான் சம்பா தோசைக்கான மூலப்பொருள்கள். பச்சரிசியை மாவாக அரைத்துப் பொடியாக்கி எடுத்து வைத்துக்கொள்கிறார்கள். உளுந்தை ஆட்டித் தனியாக எடுத்து வைத்துக்கொள்கின்றனர். தோசை செய்வதற்குச் சற்று நேரத்துக்கு முன்பு அனைத்தையும் கலக்குகின்றனர்.

இதில், குறிப்பிட வேண்டியவை இரண்டு. ஒன்று நூபுரகங்கைத் தீர்த்தம், மற்றொன்று ஆவின் நெய். இந்தப் பிரசாதம் தயாரிக்க முழுக்கவே நூபுரகங்கைத் தீர்த்தத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். தோசையின் ருசிக்கு மூலக்காரணம், இந்தத் தீர்த்தமே என்கின்றனர். அடுத்தது, நெய். நல்ல சுத்தமான தரமான நெய்தான் தோசைக்கான மொறுமொறுப்பும் சுவைக்கும் காரணம்.

அகலமான கடாயில் நெய் கொதிக்கும்போது மாவை ஒரு கிண்ணத்தில் அள்ளி மாஸ்டர், தனக்கே உரிய கைப்பக்குவத்தோடு ஓர் அளவான வட்டக்கணக்கு வைத்துக்கொண்டு கடாயின் ஓரத்தில் மாவை ஊற்றுகிறார். இப்படி ஊற்றிக்கொண்டே வர கடாய் நிரம்பியதும் சற்றே தடித்திருந்த சின்ன மரத்துண்டைக் கொண்டு தோசைகளைப் புரட்டிப்போடுகிறார். மாஸ்டர் தன் அனுபவத்தில் வேகாத தோசைகளைக் கண்டுபிடித்து அவற்றை லேசாகக் குச்சிகளால் குத்திவிடுகிறார். இதனால் நெய்யில் மூழ்கும் இந்தத் தோசைகள் சில நொடிகளில் தயாராகிவிடுகின்றன. தோசை மொறுமொறுப்பாக இருந்தால்தான், வெளியூர்களுக்கு வாங்கிச் செல்பவர்கள் நீண்டநேரம் வைத்திருந்து சாப்பிட முடியும் என்பதால் பதத்தை உறுதி செய்த பிறகே எடுக்கிறார்கள்.

Alagar Koil
Alagar Koil

ஒருதோசையின் எடை, 160 கிராம். நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் தோசைகள் தயாரிக்கிறார்கள். விஷேச நாள்களில் இன்னும் எண்ணிக்கை பலமடங்கு விற்பனையாகிறது. லட்டு, முறுக்கு உள்ளிட்ட பிரசாதத் தயாரிப்புகளுக்கென 6 பெண்கள் இங்கு வேலை செய்கிறார்கள். ஆனால், தோசை செய்ய மாஸ்டர் கண்ணன் என்பவர் மட்டுமே உள்ளார். கண்ணனிடம் பேசினோம்.

“என் பெயர் எம்.கே.கணேசன். சின்ன வயசுலேர்ந்து இந்தக் கோயிலைச் சுற்றிச் சுற்றிதான் வளர்ந்தேன். சொல்லப்போனா பெருமாள் பக்தர்கள்தாம் என்னை வளர்த்தாங்கன்னே சொல்லலாம். இங்க இருந்த பெருமாள் பக்தர்கள் என்னைக் 'கண்ணா கண்ணா'ன்னு பாசமாகக் கூப்பிடுவாங்க. அதுவே என்பேராகி கண்ணனே ஆயிடுச்சி. இந்தத் தோசை சமைக்கிறதையும் அவங்கிட்டதான் கத்துக்கிட்டேன்.

Vikatan

எல்லாமே கண்பார்த்துக் கத்துக்கிட்டதுதான். ஆனா, ரொம்ப நுணுக்கமாகக் கத்துக்கிட்டேன். 35 வருஷமா தோசை மட்டுமே செஞ்சுக்கிட்டு இருக்கேன். வேற எதுவும் எனக்கு சமைக்கத் தெரியாது. இதுவும் எனக்குப் பெருமாள் கொடுத்த வரம்னுதான் சொல்லுவேன்'' எனக் கூறி மேற்கே கோபுரத்தைப் பார்த்துக் கைகூப்புகிறார் கண்ணன் என்ற கணேசன்.

அடுத்த முறை அழகர்கோயில்போனா மறக்காம கண்ணன் செய்த சம்பாதோசையைச் சாப்பிட மறக்காதீங்க!
அடுத்த கட்டுரைக்கு