Published:Updated:

மார்ச் மாத பிரசாதங்கள்

கறுப்பு உளுந்து உருண்டை
பிரீமியம் ஸ்டோரி
News
கறுப்பு உளுந்து உருண்டை

இனிப்பு காரடையான் அடையோடு உப்பு அடையும் செய்து படைப்பது பலரது வழக்கம். இனிப்பு அடையைவிட உப்பு அடையே சிறந்தது என்று சொல்வோரும் உண்டு.

மார்ச் மாத பிரசாதங்கள்

மாசியும் பங்குனியும் இணைந்த மாதம் மார்ச். மாசி ஈசனுக்குரிய மாதம் என்றால், பங்குனி சூரியனுக்கு உகந்த மாதம். கல்யாண வரமருளும் தெய்விக மாதம் இதுவென்று பெரியோர் கூறுவார்கள். மாசி மகம், ஹோலி பண்டிகை, காரடையான் நோன்பு, யுகாதி பண்டிகை என விழாக்களும் விரதங்களும் அதிகம் வரும் இந்த மாசி - பங்குனி நாள்களில் அந்தந்த விசேஷங்களுக்குரிய நைவேத்தியங்களைப் படைத்து இறையருளைப்பெற வழிகாட்டுகிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த வாசகி விஜயசாந்தி இளங்கோ. படித்து, படைத்து இன்புறுவோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காரடையான் நோன்பு இனிப்பு அடை

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் கடைப்பிடிக்கப்படுவது காரடையான் நோன்பு. சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக இந்த நோன்பை அனுஷ்டிப்பார்கள். இந்த ஆண்டு மார்ச் 14-ம் நாள் பங்குனி 1-ம் தேதி காலை 10:50 மணி முதல் 11:45 மணி வரை இந்த நோன்பு நோற்கப்படவுள்ளது. இந்த நாளில் பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து செய்யப்படும் இந்தக் காரடையான் அடை அம்பிகைக்கு விருப்பமான நைவேத்தியம்.

தேவையானவை:

  • பச்சரிசி மாவு - ஒரு கப்

  • காராமணி - கால் கப்

  • மண்டை வெல்லம் (பொடித்தது) - முக்கால் கப்

  • தேங்காய்த் துருவல் - அரை கப்

  • ஏலக்காய் - 4

காரடையான் நோன்பு இனிப்பு அடை
காரடையான் நோன்பு இனிப்பு அடை

செய்முறை:

பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீர் வடித்து உலர வைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த மாவைப் போட்டு வறுக்கவும். வறுத்த பின் சல்லடையில் போட்டு சலித்துக்கொள்ளவும். காராமணியை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு, அதை தண்ணீரில் போட்டு குழைய வேக வைக்கவும். காராமணியில் உள்ள தண்ணீரை வடித்து வைக்கவும். 2 கப் தண்ணீரில் தூளாக்கி உள்ள மண்டை வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லக் கரைசலைக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதிவந்ததும் குழைய வேகவைத்த காராமணி, தேங்காய்த் துருவல், பொடித்த ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின் பச்சரிசி மாவைச் சிறிது சிறிதாக கலவையில் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். மாவுக் கலவை நன்கு சுருண்டு வரும்போது இறக்கி மிதமான சூடு இருக்கும்போது கைகளில் எண்ணெயைத் தடவிக்கொண்டு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடை போல் தட்டவும். இந்த வடைகளை எண்ணெய் தடவிய இலையில் வைத்து, அதை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும். இனிப்பான இந்த அடை உடலுக்கும் நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காரடையான் நோன்பு உப்பு அடை

இனிப்பு காரடையான் அடையோடு உப்பு அடையும் செய்து படைப்பது பலரது வழக்கம். இனிப்பு அடையைவிட உப்பு அடையே சிறந்தது என்று சொல்வோரும் உண்டு.

தேவையானவை:

  • பச்சரிசி மாவு - ஒரு கப்

  • காராமணி - கால் கப்

  • இஞ்சி - ஒரு இன்ச் துண்டு

  • பச்சை மிளகாய் - 4

  • நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

  • கடுகு - அரை டீஸ்பூன்

  • உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

  • உப்பு - சிறிதளவு

காரடையான் நோன்பு உப்பு அடை
காரடையான் நோன்பு உப்பு அடை

செய்முறை:

காராமணியை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு அதைத் தண்ணீரில் போட்டு குழைய வேகவைத்து, தண்ணீரை வடிக்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் அரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதில் அரைத்த இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் இதில் குழைய வேகவைத்த காராமணி, வதக்கிய இஞ்சி - பச்சை மிளகாயைச் சேர்க்கவும். இதில் பச்சரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு நன்கு சுருண்டு வரும்போது இறக்கி மிதமான சூடு இருக்கும்போது மாவில் கொஞ்சமாக எடுத்து வடை போல் தட்டவும். இந்த வடைகளை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும்.

குஜராத் ஹோலி லட்டு

வண்ணங்களால் கோலாகலமாகும் இந்த ஹோலிப் பண்டிகை ஸ்ரீகிருஷ்ணருக்கு உகந்த கோலாகலத் திருவிழா. மார்ச் 9 அன்று மாசி மாத பௌர்ணமியன்று ஹோலிப் பண்டிகை வரவுள்ளது. இரண்யகசிபுவின் தங்கை ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்ற மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். அன்று மக்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்தப் பொடி காற்றில் பறந்து தேவர்களை மகிழ்விப்பதாக ஐதிகம். இந்நாளில் வடநாட்டில் இந்த ஹோலி லட்டுக்களை (குஜராத் பேஷன் லட்டு) படைத்துக் கொண்டாடுவர்.

தேவையானவை:

  • கடலை மாவு - 2 கப்

  • நெய் - அரை கப்

  • பொடித்த சர்க்கரை - ஒன்றரை கப்

  • உடைத்த முந்திரி - கால் கப்

  • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

  • உப்பு - ஒரு சிட்டிகை

அலங்கரிக்க:

  • உடைத்து வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கேற்ப

குஜராத் ஹோலி லட்டு
குஜராத் ஹோலி லட்டு

செய்முறை :

கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு முந்திரியை வறுத்தெடுத்து வைக்கவும். அதே கடாயில் மீதியுள்ள நெய் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடலை மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கைவிடாமல் கறுகாமல் வறுக்கவும். இதில் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். பிறகு உப்பு போட்டுக் கலந்து சிறிது ஆறியதும் சர்க்கரைத்தூள் சேர்த்து லட்டு பிடிக்கவும். மேலே முந்திரி, திராட்சையால் அலங்கரித்துப் பரிமாறவும். மாவு சிறிது சூடாக இருந்தால்தான் லட்டு பிடிக்க வரும்.

கறுப்பு உளுந்து உருண்டை
கறுப்பு உளுந்து உருண்டை

கறுப்பு உளுந்து உருண்டை

மார்ச் மாதம் 8-ம் தேதி, மாசி மாதம் 25-ம் நாள் மாசி மகம் விழா நடைபெறவுள்ளது. அதே நாளில் நடராஜருக்கான விசேஷ அபிஷேகமும் நடைபெறும். மாசி மக நீராட்டு பிறவிச் சுமையை நீக்கவல்லது என்பர் பெரியோர். தமிழர்களின் தொன்மையான இந்த நீராட்டு நாளில் எல்லோரும் தீர்த்தங்களில் நீராடி பித்ருக்களை வேண்டிக்கொள்வர். சந்திரன் மக நட்சத்திரத்தில் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் நாளே மாசி மகம். இந்நாளில் விரதமிருந்து நீராடி வழிபடுவது விசேஷம். இந்நாளில் உளுந்தால் ஆன நைவேத்தியங்களைச் செய்து பித்ருக்களை வழிபடுவது வழக்கம். உளுந்து ராகு பகவானுக்கான தானியம் என்பதால் சகல தோஷங்களும் நீங்கி சிறப்படைவர் என்பதும் விசேஷம்.

தேவையானவை:

  • கறுப்பு உளுந்து - ஒரு கப்

  • கருப்பட்டி - 50 கிராம்

  • தேங்காய்த் துருவல் - கால் கப்

கறுப்பு உளுந்து உருண்டை
கறுப்பு உளுந்து உருண்டை

செய்முறை :

உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து வடித்து குக்கரில் சேர்த்து வேகவைக்கவும். வெந்த உளுந்தை வடிகட்டி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதில் கருப்பட்டி, தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைக்கவும். பின்னர் இதை உருண்டையாகப் பிடித்து வைத்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யலாம்.

ய்யா வைகுண்டர் ஆலயத்தில் மாசி மாதத்தின் அனைத்து நாள்களும் விசேஷமானவை. கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் - அதாவது 1833-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு வெள்ளிக்கிழமை அன்று அய்யா வைகுண்டர் இவ்வுலக மக்களின் மேன்மைக்காக தெய்விக அவதாரமாக மாறினார் எனப்படுகிறது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் அய்யாவின் அவதார தினம் மாசி மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அங்கு அரிசி அப்பம், முந்திரிக்கொத்து ஆகிய நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.

அரிசி அப்பம்

தேவையானவை :

  • அரிசி - ஒரு கப்

  • வெல்லம் - 50 கிராம்

  • பூவன் அல்லது செவ்வாழை (பெரியது) - ஒன்று

  • ஏலக்காய் - 4

  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

அரிசி அப்பம்
அரிசி அப்பம்

செய்முறை :

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்து எடுத்துக்கொள்ளவும். இதில் வாழைப்பழம், பொடித்த வெல்லம், பொடித்த ஏலக்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இட்லி மாவு பதத்தில் இருக்கும் இந்த மாவை 8 முதல் 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். இந்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். சுவையான இந்த அரிசி அப்பம் அய்யா வைகுண்டருக்கு படைக்கப்படும் முக்கிய நைவேத்தியம்.

முந்திரிக்கொத்து

தேவையானவை:

  • பச்சைப்பயறு - அரை கிலோ

  • வெல்லம் - அரை கிலோ

  • ஏலக்காய் - 4

  • அரிசி மாவு - 2 கப்

  • தேங்காய் - அரை மூடி

  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

  • உப்பு - 2 சிட்டிகை

முந்திரிக்கொத்து
முந்திரிக்கொத்து

செய்முறை :

பச்சைப்பயற்றை வறுத்து மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவி பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும். மாவுடன் தேங்காயைக் கலந்துகொள்ளவும். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடி செய்து போட்டுக் கரைத்து சூடாகக் காய்ச்சிக்கொள்ளவும். பாகு பதம் தேவையில்லை. வெல்லத்தை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். மாவுடன் உப்பு, ஏலக்காய்ப் பொடி போட்டுக் கலந்து இதில் வெல்லக் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் பிசையவும்.

அரிசி மாவைத் தண்ணீர், கொஞ்சம் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைத்துக் கொள்ளவும். பருப்பு, வெல்லம் சேர்ந்த மாவில் கொஞ்சம் எடுத்து உருட்டி அரிசி மாவுக் கரைசலில் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். சலங்கைக் கொத்து என்றும் சொல்லப்படும் இந்தப் பலகாரம் அய்யா வைகுண்டர் ஆலயத்தில் விசேஷமானது.