பிரீமியம் ஸ்டோரி

மார்கழியும் தையும் இணைந்த மாதம் ஜனவரி. மார்கழி திருமாலுக்குரிய மாதம் என்றால், தை சூரியனுக்குரிய மாதம் என்று ஆன்மிகம் சொல்லும். இதனாலேயே சூரியனை வணங்கும் தைப்பொங்கல் முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. உருவ வடிவிலான கடவுளர்களை வணங்குவதற்கு முன்பே மனிதன் இயற்கையை வணங்கியுள்ளான் என்பதற்கு அற்புத சான்றாகப் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. கி.மு 2-ம் நூற்றாண்டுக்கு முன்னரே பொங்கல் கொண்டாடப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் உண்டு. பொங்கலுக்கும் முன் ‘தை நீராடல்’ என்ற மங்கல நீராடல் பண்டிகையும் நம்மிடையே இருந்துவந்துள்ளது.

ஆர்.நந்தினி
ஆர்.நந்தினி

வழிபாட்டுக்கு உகந்த இந்த மார்கழி - தை மாதங்களில் பண்டிகைகளும் விரதங்களும் அநேகம். அந்தந்த விசேஷங்களுக்குரிய நைவேத்தியங்களைப் படைத்து இறையருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வோம். மண்மணம் மாறாத சுவையோடு இந்தப் பிரசாதங்களை நமக்காகச் செய்து காண்பித்து அசத்துகிறார் மதுரை சிலைமானைச் சேர்ந்த வாசகி ஆர்.நந்தினி.

மார்கழி - தை நைவேத்தியம்
மார்கழி - தை நைவேத்தியம்

இளநீர் பொங்கல்

ர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பழப் பொங்கல், பால் பொங்கல், வெறும் பொங்கல் என ஐந்து வகை பொங்கல்களைச் செய்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவது நம் வழக்கம். மக்களோடு கால்நடைகளும் பறவைகளும்கூட பொங்கல்களை ருசித்து உண்பது உண்டு. அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுக் கொண்டாடுவது சிறப்பானது. நகர நாகரிகத்தில் இது சாத்தியமில்லை என்றாலும், கூடுமானவரை பாரம்பர்யத்தோடு கொண்டாடுவது பலனைத் தரும். நெல்லை, குமரி வட்டாரங்களில் செய்யப்படும் இந்த இளநீர் பொங்கல் சுவையும் மணமும் உடையது. சூரிய பகவானுக்கு விருப்பமானது என்றும் சொல்வார்கள்.

இளநீர் பொங்கல்
இளநீர் பொங்கல்

தேவையானவை:

 • பச்சரிசி - 2 கப்

 • இளநீர் - 4 கப்

 • பாசிப்பருப்பு - அரை கப்

 • பொடித்த வெல்லம் - 2 கப்

 • முந்திரி - 10

 • திராட்சை - 10

 • பச்சைக் கற்பூரம் - 2 சிட்டிகை

 • தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்

 • ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

 • இளநீர் வழுக்கைத் தேங்காய் (மசித்தது) - ஒரு கப்

 • குங்குமப்பூ - 2 சிட்டிகை

செய்முறை:

கடாயில் பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து வைத்துக்கொள்ளவும். இந்த பருப்புடன் அரிசியைச் சேர்த்துக் கழுவி குக்கரில் போட்டு இளநீர், இளநீர் வழுக்கைத் தேங்காய், தேங்காய்ப்பால் சேர்த்து நான்கு விசில்விட்டு குழைய வேகவிடவும். சூடு தணிந்ததும் குக்கரைத் திறந்து பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறவும். இப்போது பொங்கல் இளகி வரும். கெட்டியாகும் வரை கிளறி வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து மீண்டும் கிளறவும். இறக்கி வைத்து ஆண்டவனுக்குப் படையலிட்டு விநியோகிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொங்கல் அவியல்
பொங்கல் அவியல்

பொங்கல் அவியல்

வெண்பொங்கலுக்கு சரியான தொடு கறி என்றால் அது இந்த அவியல்தான். காய்கறிகள் அதிகம் விளையும் இந்தப் பருவத்தில் கிடைக்கும் பல வகை காய்கறிகளைக்கொண்டு இந்த அவியல் செய்யப்படுகிறது. சுவையும் சத்தும் அதிகம்கொண்ட இந்த அவியல் 21 வகை யான காய்கறிகளைக்கொண்டு செய்யப்பட வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். நம்மால் முடிந்த அளவு காய்கறிகளைக்கொண்டு இந்த அவியலைச் செய்து பொங்கலைக் கொண்டாடுவோம்.

தேவையானவை:

 • துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, மாங்காய், கொத்தவரங்காய் மற்றும் மொச்சை (எல்லாம் சேர்த்து) - அரை கிலோ

 • பச்சை மிளகாய் - 6

 • தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • கெட்டித் தயிர் - ஒரு பெரிய கப்

 • தேங்காய்த் துருவல் - அரை மூடி

 • சோம்பு - 2 டீஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - ஒரு சிட்டிகை

 • கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சோம்பு, சீரகம் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். காய்கறிகளில் தண்ணீர் ஊற்றி அலசி வாணலியில் சிறு தீயில் வேகவிடவும். நன்றாக வெந்ததும் அரைத்த விழுது சேர்த்துக் கிளறிக் கொதிப்பதற்கு முன்னால் இறக்கவும். இதில் மேலாக தேங்காய் எண்ணெய், அடித்த தயிரை ஊற்றிக் கிளறவும். வேறொரு வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அவியலில் ஊற்றி, மேலாக கொத்தமல்லி இலை கலந்துகொள்ளவும். பொங்கலோடு இந்த அவியலையும் படையலிட்டு உண்ணலாம்.

 உருளைக்கிழங்கு ஓமப்பொடி மிக்ஸர்
உருளைக்கிழங்கு ஓமப்பொடி மிக்ஸர்

உருளைக்கிழங்கு ஓமப்பொடி மிக்ஸர்

ன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்று அழைக்கும் இந்தக் காணும் பொங்கல் திருவிழா அன்று உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல், அவர்களோடு சுற்றுலா செல்வது வழக்கம். முக்கியமாக ஆற்றங்கரை, கடற்கரைகளில் கூடி சிற்றுண்டிகள், பலகாரங்கள் உண்பது இன்றும் தொடரும் இன்ப நிகழ்ச்சி. ஐஸ்க்ரீம், சிப்ஸ், பாப்கார்ன் என இந்த நாளில் பலவற்றையும் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், இன்றும் காவிரிக்கரையோர மக்கள் வீட்டிலேயே பலகாரங்கள் செய்து கொண்டு போகும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். தேன்குழல், அதிரசம்... இவற்றோடு மிக்ஸர் வகைகளும் இதில் கட்டாயம் இருக்கும். இவை கடவுளுக்கான பலகாரங்களாக இல்லாமல் பண்டிகைக்கான பலகாரங்களாகவே செய்யப்படுகின்றன. அந்த வகையில் உருளைக்கிழங்கு ஓமப்பொடி மிக்ஸர் செய்வதை இங்கு காண்போம்.

தேவையானவை:

 • பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று

 • ஓமம் - ஒரு டீஸ்பூன்

 • கடலை மாவு - ஒரு கப்

 • அரிசி மாவு - அரை கப்

 • கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

 • சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

 • குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

 • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 • உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப

மிக்ஸருக்கான பொருள்கள்:

 • கொள்ளுப் பயறு - அரை கப்

 • வெள்ளரி விதை - 2 டீஸ்பூன்

 • வேர்க்கடலை - 50 கிராம்

 • உடைத்த கடலை (பொட்டுக்கடலை) - 50 கிராம்

 • பச்சைப் பட்டாணி - 50 கிராம்

 • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

காராபூந்தி செய்ய:

 • கடலை மாவு - ஒரு கப்

 • அரிசி மாவு - அரை கப்

 • மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 • குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸருக்கான காராபூந்தியைச் செய்துகொள்வோம். கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான நீர்விட்டுக் கரைத்து, பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி வடியும் பூந்திகளை எண்ணெயில் பொரித்தெடுத்துக்கொள்ளவும்.

அதேபோல் வேர்க்கடலை, உடைத்த கடலை, பச்சைப் பட்டாணி, கொள்ளுப் பயறு, வெள்ளரி விதை, கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி அதில் மொறுமொறுப்பாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

பிறகு, உருளைக்கிழங்கு ஓமப்பொடி மிக்ஸர் செய்ய, உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும். இதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், உப்பு, மசாலா பொடிகள் அனைத்தும் சேர்த்து, தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு அழுத்திப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து ஓமப்பொடி அச்சில் மாவை போட்டு பிழிந்தெடுக்கவும். நன்கு பொரிந்து சிவந்து கொரகொரப்பாக வந்ததும் எடுத்து வைக்கவும். இதில் காராபூந்தி, கடலை வகைகளைச் சேர்த்து கலக்கவும். காணும் பொங்கலுக்கு சுவை கூட்டும் பலகாரம் இது.

வேர்க்கடலை ஒப்புட்டு
வேர்க்கடலை ஒப்புட்டு

வேர்க்கடலை ஒப்புட்டு

தானியங்களை அதிகம் பயன்படுத்தி பலகாரங்கள் செய்வதில் கொங்கு மக்கள் சிறப்பானவர்கள். பொங்கல் திருவிழா நாளில் கூடும் சொந்த பந்தங்களுக்கு விதவிதமான பலகாரங்களைச் செய்து விருந்தளிப்பதில் இவர்களுக்கு அக்கறை அதிகம். குறிப்பாக, விதவிதமான ஒப்புட்டுகள் பொங்கல் விழாவைச் சிறக்கச் செய்யும். வடநாட்டு போளி போன்றே இவை இருந்தாலும் சுவையில் வேறுபட்டது. சத்தும் மணமும்கொண்ட ஒப்புட்டு, கொங்கு தேசத்தின் முக்கிய பலகாரம். காணும் பொங்கல் அன்று ஸ்வாமிக்கு இதைப் படையலிட்டு விருந்தினருக்கு விநியோகிக்கப்பார்கள்.

தேவையானவை:

 • கோதுமை மாவு - 200 கிராம்

 • வேர்க்கடலை - 100 கிராம்

 • பொடித்த வெல்லம் - 200 கிராம்

 • எள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • நெய் - 100 கிராம்

 • ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். எள்ளையும் மணம் வரும் வரை லேசாக வறுத்துப் பொடிக்கவும். வேர்க்கடலை, எள், ஏலக்காய்த்தூள், வெல்லம் சேர்த்துப் பிசைந்து பூரணக் கலவை செய்துகொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, 2 ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். இந்த மாவின்மீது நெய் தடவி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு மாவிலிருந்து பூரி அளவுக்கு மாவு எடுத்து நடுவில் குழி செய்து, அதில் 2 ஸ்பூன் பூரணக் கலவை வைத்து, மாவை இழுத்து மூடி உருட்டவும். அதை மெதுவாக சப்பாத்தி போல தேய்த்து, சூடான வாணலியில் சிறிதளவு நெய்விட்டு இரண்டு பக்கமும் வேகும்வரை சுட்டெடுக்கவும்.

அரவணைப் பாயசம்
அரவணைப் பாயசம்

அரவணைப் பாயசம்

யன் ஐயப்ப ஸ்வாமியின் அருள் பிரசாதம் அரவணைப் பாயசம். அக்காலத்தில் திருமுடியில் எடுத்துச் சென்று, ஐயப்பனுக்குச் செலுத்தும் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் போன்றவற்றைக்கொண்டே இந்த பிரசாதம் செய்யப்பட்டு ஐயப்பனுக்குப் படைக்கப்பட்டது. இப்போது தேவஸ்தானமே இந்த பிரசாதத்தைச் செய்து படைத்து பக்தர்களுக்கு விநியோகிக்கிறது. ஐயப்பனுக்கு மிகவும் பிரியமான இதை மண்டல பூஜை, மகர ஜோதி ஆகிய நாள்களில் வீட்டிலேயே செய்து படைத்து அருள்பெறலாம்.

தேவையானவை:

 • சிவப்பு அரிசி - 250 கிராம்

 • நெய் - 150 கிராம்

 • மண்டை வெல்லம் - 500 கிராம் (கறுப்பான வெல்லமே உகந்தது)

 • ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 • முந்திரி - 50 கிராம்

 • திராட்சை - 50 கிராம்

 • சுக்குத்தூள் - 2 சிட்டிகை

 • தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் பொடி செய்து போட்டு கெட்டியான பாகாகக் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். வேறொரு பாத்திரத்தில் சிறிதளவு நெய்விட்டு, அதில் சிவப்பு அரிசியை வறுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கைவிடாமல் கிளறி வேகவிடவும். அரை பாகம் வெந்ததும், அதில் வெல்லப் பாகைச் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். இதில் மீதியுள்ள நெய்விட்டுக் கிளறவும். நெய், வெல்லப் பாகுடன் சேர்ந்து மேலே திரண்டு வரும்போது, வறுத்த தேங்காய்ப் பல், முந்திரி, திராட்சை கலந்து இதோடு ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து இறக்கி வைக்கவும். சிறிது நேரத்தில் அரவணைப் பாயசம் கெட்டியாகிவிடும். அரிசி முழுவதும் வேகாமல் முக்கால் பாகம் வெந்து நறுக் நறுக்கென இருந்தால்தான் நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு