திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்ட நான் கூட்டாஞ்சோறை பற்றி சொல்லாமல், ’அது என்ன மாடர்ன் கூட்டாஞ்சோறு’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புது டிஷ் செய்தா சூப்பராகத்தானே இருக்கும்? எப்போ பாருங்க சாம்பார், ரசம், புளிக்குழம்பு, லெமன் சாதம் என்று ஒரே மாதிரி சமைத்தால் போர் அடிக்கத்தானே செய்யும்? சரி புதுசா வேறெந்த மாதிரி ஈஸியா ரொம்ப நேரம் கிச்சன்ல்ல நிக்காமல் அரைமணி நேரத்தில் செய்து முடிக்கிற மாதிரி ஒரு சாதம் பார்ப்போமா!
இந்த சாதம் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு நவீனமாக அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த மாடர்ன் கூட்டாஞ்சோறு ரெசிப்பி என் மாமாவிடம் கற்றது. பாரம்பரிய கூட்டாஞ்சோறு செய்யவதற்கு சற்று நேரம் கூடுதல் செலவாகும். இந்த மாடர்ன் கூட்டாஞ்சோறை காய்கறிகள், பருப்பு, அரிசி சேர்த்து ஈஸியான ஒன் பாட் ரைஸ் ஆகச் செய்யலாம். அதுவும் முப்பதே நிமிடத்தில் பக்கா லஞ்ச் ரெடியாகிடும். இதை மிக்ஸ்டு வெஜிடபிள் பருப்பு சாதம் என்றும் சொல்லலாம். பெயர் வைப்பது நம்முடைய விருப்பம்தான்!
எங்கள் மாமாவுக்கு 1987-ம் ஆண்டில் பணியின் காரணமாக சொந்த ஊரான திருநெல்வேலியை விட்டு புதுதில்லி செல்ல நேரிட்டது. அது அதிக தூரம் என்பதால் வருடத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறைதான் ஊருக்கு வருவார்கள். புதுதில்லியில் லோதி காலனியில் வசித்து வந்தார்கள் அங்கு முதலில் சில மாதங்கள் சாப்பாட்டுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள். பின் குளிர் காலமான நவம்பர் முதல் மார்ச் வரை வெளியே சென்று சாப்பிட முடியாத சூழ்நிலை உருவானது. இப்படியே இருந்தால் சரி வராது என்று எண்ணி மாமா சமையல் களத்தில் இறங்கி சமைக்க ஆரம்பித்தார். மாமாவிற்கு ஏற்கனவே சின்ன சின்ன சமையல் வேலைகள் தெரியும் என்பதால் எந்த சிரமமும் இல்லாமல் சமைக்க ஆரம்பித்தார்.
இப்போது Googleல் பேச்சுலர்ஸ் சமையல் என்று தட்டினால் ஆயிரம் குறிப்புகளை காட்டும் அல்லது நினைத்தவுடன் ஆர்டர் செய்து சாப்பாடு வாங்கி சாப்பிடுகிறார்கள். அப்போது அதெல்லாம் கிடையாது இருக்கிற காய்கறிகளையும் மசாலா பொருட்களையும் வைத்து சமைத்து சாப்பிட்டார்கள். எப்படி ஆயினும் வீட்டில் சமைத்து சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான விஷயமே.
திருநெல்வேலி கூட்டாஞ்சோறு செய்ய வாழைக்காய், முருங்கைக்காய், மாங்காய் போன்ற நாட்டுக் காய்கறிகள் வேண்டும். புதுதில்லியில் அதெல்லாம் கிடைக்காது என்பதால் அங்கு கிடைக்கும் காய்கறிகளை சேர்த்து... வெந்தயம், சீரகம், சின்ன வெங்காயம், சேர்த்து... பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, அதோடு விருப்பமான காய்கறிகள் மற்றும் அரிசி சேர்த்து வேகவைத்து... பின் கடைசியாக நெய், கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து இறக்கினால் ஆரோக்கியமான சுவையான மாடர்ன் கூட்டாஞ்சோறு தயார்! டில்லியில் குளிர் அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் இதை இரவு டின்னர்க்குதான் செய்வார் மாமா. அவர் தங்கியிருந்த லோதி காலனியில் இந்த சாதத்துக்கு ஒரு பெரிய ரகிகர் கூட்டமே உண்டு. எங்கள் வீட்டில் இதை கார்த்தி மாமா சாதம் என்று சொல்லுவோம். சமையலில் மட்டும் அல்ல... ஓவியம், கவிதை எழுதுவது, நவராத்திரியின் போது தெர்மாகோலில்சுவாமிக்கு அலங்காரங்கள் செய்வது போன்று பல கலைகளிலும் மாமா வல்லுனர்!
நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது எனக்கு அழகாகவும் வட்டமாகவும் சப்பாத்தி போட கற்று கொடுத்தார் மாமா. எனக்கு சிறு வயதிலேயே சமையல் கலையில் ஆர்வத்தை உண்டாக்கியது இவர்தான். நாங்கள் எப்போது மாமா வீட்டிற்கு சென்றாலும் அரைமணி நேரத்தில் இந்த சாதம் செய்து அதற்கு சூப்பரான சாலட், சப்பாத்தி, ஆலூ கோபியும் செய்து விடுவார். மாமாவின் விருந்தோம்பல் தனித்தன்மை வாய்ந்தது.
இந்த மாடர்ன் கூட்டாஞ்சோறு எப்படி செய்வதென்று பார்ப்போமா!
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
கேரட் - 1
கத்தரிக்காய் - 4
பீன்ஸ் - 6
உருளைக்கிழங்கு - 1
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி தழை - 1/4 கப்
எலுமிச்சை பழம் - 1
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஸ்டெப் 1
முதலில் சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள். கேரட் மற்றும் உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக நறுக்கவும். பீன்ஸ் கத்தரிக்காயையும் நீளமாக நறுக்கவும். அரிசியை இரண்டு முறை களைந்து வைக்கவும்.
ஸ்டெப் 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
பின் நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி வரும் போது மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
ஸ்டெப் 3
பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்க வேண்டும். இவைகள் மிதமான சூட்டில் லேசாக வதங்கியதும் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு கப் புழுங்கல் அரிசிக்கு பொதுவாக மூன்று பங்கு தண்ணீர் ஊற்றினால் சரியாக இருக்கும். தங்களின் அரிசிக்கு ஏற்ப தண்ணீரின் அளவை மாற்றிக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 4
பின் தேவையான அளவு உப்பு, களைந்து வைத்துள்ள அரிசி, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலந்து குக்கரை மூடிப்போட்டு வேக வைக்கவும். குக்கர் 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பிரஷர் தானாக அடங்கும் வரை காத்திருக்கவும்.
ஸ்டெப் 5
பிரஷர் அடங்கியதும் நெய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கிளறி சூடாக பரிமாற வேண்டியது தான்.

இப்போது இந்த கூட்டாஞ்சோறுக்கு தொட்டுக்கொள்ள ஒரு அசத்தலான தயிர் பச்சடி பார்ப்போமா!
தேவையான பொருள்கள்
கெட்டியான தயிர் - 1 கப்
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - பாதியளவு
கடுகு & உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு கிண்ணத்தில் கெட்டியான தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய தக்காளி துண்டுகளை கலந்து விடவும்.
வதக்கிய வெங்காய கலவை ஆறியதும் கலந்து வைத்துள்ள தயிரில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
நீங்களும் இந்த சுலபமான மாடர்ன் கூட்டாஞ்சோறைச் செய்து பார்த்து அசத்துங்கள்!