லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

அட்டவணை சமையல்
பிரீமியம் ஸ்டோரி
News
அட்டவணை சமையல்

கிட்ஸ் ஸ்பெஷல்

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

திங்கள் - காலை... தேங்காய் அரிசி தோசை

தேவை: பச்சரிசி - 200 கிராம், தேங்காய் – ஒன்று (துருவிக்கொள்ளவும்), தோல் நீக்கிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் இத்துடன் தேங்காய்த் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அதிகம் தண்ணீர் சேர்க்காமல் தோசை மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இத்துடன் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். மாவை மிதமான தீயில் தோசைகளாகச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: மிளகாயின் காரமும் தேங்காயின் இனிப்பு சுவையும் சேர்ந்த இந்த தோசை மிகவும் ருசியாக இருக்கும். இட்லிப்பொடி இதற்குச் சிறந்த சிறந்த காம்பினேஷன்.

திங்கள் - பகல்... பிஸிபேளாபாத்

தேவை: பச்சரிசி – 250 கிராம், நெய் - 100 மில்லி, புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு, துவரம்பருப்பு - 200 கிராம், சாம்பார் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கொப்பரைத் தேங்காய் - பாதி, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

காய்கறிகள்: பீன்ஸ் - 4, உருளைக்கிழங்கு - 4, பறங்கிக்கீற்று - சிறியது, கேரட் - ஒன்று, புதினா - ஒரு கைப்பிடி அளவு, முருங்கைக்காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - ஒன்று.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: வெறும் வாணலியில் தனியா, காய்ந்த மிளகாய், நறுக்கிய கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடித்து எடுத்துக் கொள்ளவும். புதினாவைச் சிறிது எண்ணெயில் வதக்கி எடுத்துக்கொள்ளவும். புளியைத் தேவையான அளவுக்குக் கரைத்துக்கொள்ளவும். அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு பங்குக்கு நான்கு பங்கு தண்ணீர் அளந்து விட்டு குக்கரில் ஐந்து விசில் விட்டு இறக்கவும்.

காய்களை நடுத்தர அளவில் நறுக்கி வாணலியில் எண்ணெய்விட்டு வதக்கவும். இத்துடன் தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு வேகவைக்கவும். காய்கள் சிறிது வெந்ததும் இத்துடன் புளிக்கரைசலைச் சேர்க்கவும். பிறகு இதில் சாம்பார் பவுடர், பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை நன்கு கொதித்து, காய்கள் வெந்ததும் வறுத்துவைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கிளறவும். பிறகு வதக்கிய புதினாவையும் போட்டுக் கிளறவும். பின்னர் வேகவைத்த சாதம், பருப்புடன் இக்கலவையைச் சேர்த்து நன்றாக மசித்து நெய்விட்டு கிளறவும்.

குறிப்பு: சூடாகச் சாப்பிட இது மிகவும் ருசியுடன் இருக்கும். காய்கள், அரிசி, பருப்பு, புளித் தண்ணீர், சாம்பார் பவுடர், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ரைஸ் குக்கரில்கூட வைத்து இந்த உணவை எளிதாகச் செய்யலாம்.

திங்கள் - மாலை... மணிக்காராபூந்தி

தேவை: அரிசி மாவு - ஒரு கிண்ணம், கடலை மாவு - 4 கிண்ணம் (அரிசி மாவு அளந்த அதே கிண்ணத்தால் அளந்தது) மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 மில்லி, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: அரிசி மாவையும் கடலை மாவையும் சிறிது தண்ணீர்விட்டு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக பஜ்ஜி மாவுப் பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பூந்திக் கரண்டியில் மாவைப் பரவலாக ஊற்றினால் முத்து வடிவத்தில் மாவு எண்ணெயில் இறங்கும். அடுப்பை மிதமான தீயில்வைத்து பூந்திகளை வேகவிட்டு எடுக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து பூந்தியுடன் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும்.

குறிப்பு: இதேபோல மாவில் உப்பு, காரம் சேர்க்காமல் பூந்தி செய்து வெல்லப் பாகில் போட்டு உருண்டைகள் பிடித்து லட்டாகச் சாப்பிடலாம்.

திங்கள் - இரவு... கார்ன் காளான் கதம்ப தோசை

தேவை: பச்சரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், காளான் - 10, பேபி கார்ன் - 2, இஞ்சி - பொடியாக நறுக்கியது சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: பச்சரிசி, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்து பச்சை மிளகாய் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். காளானை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பேபி கார்னையும் நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் தேவையான எண்ணெய்விட்டு சூடாக்கி நறுக்கிய காளான், பேபி கார்ன், இஞ்சி, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இதை தோசை மாவில் சேர்த்து நன்கு கலந்து தோசைகளாகச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: இட்லிப்பொடி இதற்குச் சிறந்த காம்பினேஷன்.

செவ்வாய் - காலை வெஜிடபிள் ஊத்தப்பம்

தேவை: இட்லி அரிசி - 250 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய குடமிளகாய் - ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, இட்லி மிளகாய்ப்பொடி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் மைய அரைக்கவும். மாவுடன் தேவையான உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்னர் கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில்வைத்து கல் சூடானதும் தீயைக் குறைத்து வைத்து மாவை சிறிய ஊத்தப்ப வடிவத்தில் ஊற்றி இருபுறமும் எண்ணெய்விட்டு நன்கு வேகவிடவும். பின்னர் தோசையின் மேல் இட்லி மிளகாய்ப்பொடி ஒரு டீஸ்பூன் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: இதற்கு சைடிஷ் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

செவ்வாய் - பகல்... எள்ளு சாதம்

தேவை: அரிசி - 200 கிராம், எள்ளு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: அரிசியைக் களைந்து ஒரு பங்கு அரிசிக்கு மூன்று பங்கு தண்ணீர் அளந்துவிட்டு குக்கரில் வைத்து மூன்று விசில் விட்டு இறக்கவும். எள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து அதில் பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். சாதத்தை அகலமான பாத்திரத்தில் போட்டு தேவையான எண்ணெய்விட்டு எள்ளுப்பொடி சேர்த்துக் கலந்தால் எள்ளு சாதம் தயார்.

குறிப்பு: சுட்ட அப்பளம், தயிர்ப்பச்சடி இதற்குச் சிறந்த காம்பினேஷன்.

செவ்வாய் - மாலை... மசாலா பொரி

தேவை: அரிசிப் பொரி - 200 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், தோலுரித்து நசுக்கிய பூண்டுப் பற்கள் - 10 , வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், வறுத்த முந்திரி - 20, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பின்னர் இதில் நசுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் பொரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரி, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் வறுத்த பொருள்கள், மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் குலுக்கி காற்றுப் புகாத டப்பாவில் மூடி வைக்கவும்.

குறிப்பு: மாலை நேரத்தில் இதைச் சாப்பிட்டு தேநீர் அருந்தலாம்.

செவ்வாய் - இரவு... மேத்தி பனீர் சப்பாத்தி ரோல்

தேவை: கோதுமை மாவு - 200 கிராம், வெந்தயக்கீரை - ஒரு சிறிய கட்டு, பனீர் துண்டுகள் - 10 (துருவிக்கொள்ளவும்), கேரட் துருவல் - ஒரு கிண்ணம், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: வெந்தயக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வெந்தயக்கீரையை வதக்கி எடுத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் வதக்கிய வெந்தயக்கீரை, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பின்னர் மாவுக் கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்துகொள்ளவும். பின்னர் மாவை சப்பாத்திகளாக இட்டு அதன் இருபுறத்தையும் நெய்விட்டு சுட்டெடுக்கவும். பின்னர் சப்பாத்தியின் மேல் பகுதியில் கேரட் துருவலையும், பனீர் துருவலையும் தூவி சப்பாத்தியை அப்படியே சுருட்டவும்.

குறிப்பு: வரிசையாக எல்லா சப்பாத்திகளையும் இதே முறையில் சுருட்டிவைத்தால் சாப்பிடுவது எளிது. அதேபோல ஜாம் அல்லது சாஸ் அல்லது வெண்ணெய் தடவியும் இதுபோலச் சுருட்டிச் சாப்பிடலாம்.

புதன் - காலை... கோதுமை ரவை கிச்சடி

தேவை: கோதுமை ரவை - 200 கிராம், தோலுரித்த பச்சைப்பட்டாணி, பீன்ஸ் - தலா 100 கிராம், சிறிய குடமிளகாய், கேரட் - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - சிறியது ஒன்று, கொத்தமல்லி - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, எண்ணெய் - 100 மில்லி, நெய், உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: கோதுமை ரவையை இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு வறுக்கவும். ஒரு பங்கு ரவைக்கு நான்கு மடங்கு தண்ணீர்விட்டு குக்கரில் வைத்து நான்கு விசில்விட்டு இறக்கவும். பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். குடமிளகாயையும் பொடியாக நறுக்கவும். கேரட் தோல் சீவி பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பச்சைப்பட்டாணி, நறுக்கிய காய்களைச் சேர்த்து பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிப்போட்டு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வேகவைத்த எடுத்த கோதுமை ரவையுடன் வதக்கிய காய்களைச் சேர்த்து நன்கு கலந்து நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். இதில் எலுமிச்சையைப் பிழிந்து, வறுத்த முந்திரி போட்டுக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய்ச்சட்னி இதற்குச் சிறந்த காம்பினேஷன்.

புதன் - பகல்... புதினா கோவைக்காய் சாதம்

தேவை: பாஸ்மதி அரிசி - 200 கிராம், புதினா - ஒரு கட்டு, மெலிதாக நறுக்கிய கோவைக்காய் - 200 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, நெய் - 100 மில்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: பாஸ்மதி அரிசியுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரு மடங்கு தண்ணீர் அளந்துவிட்டு குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கவும். புதினாவை ஆய்ந்து பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பொட்டுக்கடலை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய கோவைக்காயையும் சேர்த்து உப்புப் போட்டு வதக்கவும். வேகவைத்த சாதத்தை அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் வதக்கிய கோவைக்காய், வதக்கிய புதினா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். புதினா கோவைக்காய் சாதம் தயார்.

குறிப்பு: இதற்கு சிப்ஸ் சிறந்த காம்பினேஷன்.

புதன் - மாலை... கடற்கரை சுண்டல்

தேவை: தேங்காய் - ஒரு மூடி (பொடியாக நறுக்கவும்), பச்சைப்பட்டாணி - 200 கிராம், கேரட் துருவல் - ஒரு கிண்ணம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் - ஒரு கிண்ணம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சை - பாதி அளவு, உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: பச்சைப்பட்டாணியை மூன்று மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில்விட்டு இறக்கவும். வேகவைத்த பட்டாணியை தண்ணீர் வடித்து அதனுடன் கேரட் துருவல், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தேங்காய்த்துண்டுகள், மாங்காய்த்துண்டுகள், கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்க்கவும். இத்துடன் எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கிளறவும். கடற்கரை சுண்டல் இதோ உங்கள் கைகளில்.

குறிப்பு: வெள்ளைப் பட்டாணியிலும் இந்த சுண்டலைச் செய்யலாம்.

புதன் - இரவு... அரிசி மாவு கேக்

தேவை: இட்லி அரிசி - 200 கிராம், ஓரளவு புளித்த தயிர் - 100 மில்லி, மோர் மிளகாய் - 6.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மில்லி, இட்லி மிளகாய்ப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தோசை மாவுப் பதத்துக்கு மைய அரைக்கவும். அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், புளித்த தயிர் ஆகியவற்றைச் சேர்த்து சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் இதில் மோர்மிளகாயை கிள்ளிப்போட்டுத் தாளித்து கலந்த மாவை அதில் ஊற்றிக் கெட்டியாகக் கிளறி, அதன் மீது இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஒரு குழிவான தட்டில் சிறிது எண்ணெய் தடவி கிளறிய மாவைக் கொட்டி ஆற விடவும். நன்கு ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு: இதற்கு சைடிஷ் தேவையில்லை. புளிப்பு, உப்பு, காரம் சேர்ந்த இந்த கேக் மிகவும் ருசியானது.

வியாழன் - காலை... கோதுமை இனிப்பு தோசை

தேவை: கோதுமை ரவை - 100 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், வெல்லம் பொடித்தது - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - ஒரு கிண்ணம், நெய் - 100 மில்லி.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: கோதுமை ரவையுடன் அரிசி சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் இதில் பொடித்த வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும். பின்னர் மாவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் தோசை மாவை பரவலாக ஊற்றி இருபுறமும் நெய்விட்டு நன்கு வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு: கோதுமை ரவையுடன் இதே முறையில் மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து வெங்காயம் சேர்த்தும் தோசை தயாரிக்கலாம்.

வியாழன் - பகல்... பூண்டு கத்திரிக்காய் ரைஸ்

தேவை: பாஸ்மதி அரிசி - 200 கிராம், பூண்டு - 100 கிராம், பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் - 4, நெய் - 100 மில்லி. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை - தாளிக்க சிறிதளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: பூண்டை வாணலியில் நெய்விட்டு பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு கத்திரிக்காயையும் தனியாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பின்னர் அதில் பச்சை மிளகாய், பொட்டுக்கடலையையும் சேர்த்து வறுத்து எடுக்கவும். பாஸ்மதி அரிசிக்கு ஒரு பங்குக்கு இரு மடங்கு தண்ணீர் அளந்துவிட்டு குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கவும். சாதத்தை அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் வதக்கிய பூண்டு, வதக்கிய கத்திரிக்காய், தாளித்தது ஆகிய எல்லாவற்றையும் சேர்க்கவும். கூடவே தேவையான உப்பையும் சேர்த்து கலவையை நன்றாகக் கிளறவும்.

குறிப்பு: ஆனியன் ரைத்தா இதற்கு நல்ல காம்பினேஷன்.

வியாழன் - மாலை... ரிப்பன் பக்கோடா

தேவை: கடலை மாவு - 250 கிராம், அரிசி மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி விழுது, பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி விழுது, பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், வெண்ணெய் ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு மாவைக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் தீயைக் குறைத்து பிசைந்த மாவை ரிப்பன் அச்சில் போட்டு பரவலாகப் பிழியவும். பின்னர் ரிப்பனை இருபுறமும் திருப்பி எண்ணெய் ஓசை அடங்கியதும் எடுக்கவும்.

குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் வைத்து மூடினால் ஒரு வாரம் வரை உபயோகப்படுத்தலாம். காரம் குறைத்து சிறிது பொட்டுக்கடலை மாவு சேர்த்துத் தயாரித்தால் குழந்தைகள் திரும்பி சாப்பிடுவார்கள்.

வியாழன் - இரவு... மினி மசால் பூரி

தேவை: கோதுமை மாவு, ரவை, மைதா மாவு - தலா 100 கிராம், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, புதினா விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 500 மில்லி.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: கோதுமை மாவு, ரவை, மைதா, வெண்ணெய், கரம் மசாலாத்தூள், புதினா விழுது, இஞ்சி விழுது, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். பின்னர் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி குட்டி சப்பாத்திகளாகத் தேய்த்துக்கொள்ளவும். பின்னர் இவற்றை எண்ணெயில் பூரிகளாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: உருளைக்கிழங்கு மசாலா இதற்குச் சிறந்த காம்பினேஷன். மசாலா வுடன் மொறுமொறுப்பான மினி பூரியைச் சாப்பிட்டுவிட்டு ஒரு கிளாஸ் மோர் குடிப்பது நல்லது.

வெள்ளி - காலை... மல்டி ரவை வெஜிடபிள் உப்புமா

தேவை: ரவை, கோதுமை ரவை, சோளக்குருணை, கம்புக்குருணை - தலா ஒரு கிண்ணம், மிளகு, சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 100 மில்லி, பொடியாக நறுக்கிய கேரட் - ஒன்று, பொடியாக நறுக்கிய குடமிளகாய் (சிறியது) - ஒன்று, பச்சைப்பட்டாணி - 100 கிராம், பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 5, பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு கிண்ணம், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கிண்ணம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: ரவை, கோதுமை ரவை, சோளக்குருணை, கம்புக்குருணை எல்லாவற்றையும் வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு லேசாக வறுக்கவும். பின்னர் இதில் ஒரு பங்குக்கு மூன்று மடங்கு தண்ணீர்விட்டு உப்பு சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி அதில் பொடியாக நறுக்கிய குடமிளகாய், கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, கோஸ், காலிஃபிளவர், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் தேவையான உப்பு, மிளகு, சீரகத்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கிளறி வெந்ததும் இறக்கவும். பிறகு வதக்கிய காய்களை வேகவைத்த ரவை கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வெள்ளி - பகல்... ஓட்ஸ் வெஜ் ரைஸ்

தேவை: பாஸ்மதி அரிசி - 200 கிராம், முந்திரி - 20, உலர்ந்த திராட்சை - 20, சாரப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய குடமிளகாய் - ஒன்று, பேபி கார்ன் பொடியாக நறுக்கியது - ஒரு கிண்ணம், பச்சைப்பட்டாணி - 100 கிராம், பூண்டு பற்கள் - 10 (தோல் உரிக்கவும்), சோம்பு - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், உப்பு - தேவையான அளவு, நெய் - 100 மில்லி.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு மடங்கு தண்ணீர் அளந்து ஊற்றி குக்கரில் இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டு சூடாக்கி நறுக்கிய குடமிளகாய், பச்சைப்பட்டாணி, நறுக்கிய பேபி கார்ன், பூண்டு, சோம்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி எடுக்கவும். அதேபோல முந்திரியையும் திராட்சையையும் தனியாக நெய்விட்டு வறுக்கவும். வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சாரப்பருப்பையும் தனியாக நெய்விட்டு வறுக்கவும். வேகவைத்த சாதத்துடன் வதக்கிய காய்கள், வறுத்த நட்ஸ் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

குறிப்பு: மிகவும் எனர்ஜி தரும் ரைஸ் இது. சைடிஷ் தேவை இல்லை. அதேபோல பிஸ்தா, வெள்ளரி விதைகள் போன்றவற்றையும் இதில் சேர்க்கலாம்.

வெள்ளி - மாலை... வாழைப்பூ வடை

தேவை: துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 150 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, வாழைப்பூ - 4 மடல், பெரிய வெங்காயம் - 2, எண்ணெய் - 500 மில்லி, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய அனைத்தையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் களைந்து தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் இத்துடன் நறுக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து கலவையைக் கொரகொரப்பாக அரைக்கவும். வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். பின்னர் இதை அரைத்த மாவுடன் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் மாவுடன் சேர்க்கவும். கூடவே பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி மாவை வடைகளாகத் தட்டிப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: இதற்கு கொத்தமல்லிச் சட்னி சிறந்த காம்பினேஷன்.

வெள்ளி - இரவு... குழல் புட்டு

தேவை: சிவப்பு அரிசி புட்டு மாவு - 200 கிராம், நேந்திரம்பழம் - 2, தேங்காய்த்துருவல் (ஒரு தேங்காயைத் துருவிக்கொள்ளவும்).

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: புட்டு மாவுடன் தண்ணீரை லேசாகச் சூடாக்கி தெளித்துப் பிசிறவும். பிசிறிய மாவுடன் நேந்திரம்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும். பிறகு இதில் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலந்து புட்டுக் குழலில் நிரப்பி வேகவிட்டு ஒரு குச்சியில் தள்ளினால் புட்டு, குழல் போல் வெளியில் வரும்.

குறிப்பு: மாவு ஒரு லேயர், பழம் ஒரு லேயர், தேங்காய்த்துருவல் ஒரு லேயர் என்று மாறி மாறியும் குழலில் நிரப்பி வேகவிடலாம். கடலை கறி இதற்குப் பொருத்தமான சைடிஷ்.

சனி - காலை.. சாமை அரிசிப் பொங்கல்

தேவை: சாமை அரிசி - 200 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 100 மில்லி, பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி பொடியாக நறுக்கியது - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு, முந்திரிப்பருப்பு - 10.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: வெறும் வாணலியில் சாமை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் லேசாக வறுக்கவும். குக்கரில் அரிசி, பருப்புக்கு ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்கிற அளவில் தண்ணீர் அளந்து ஊற்றி கலவையை ஐந்து விசில்விட்டு இறக்கவும். சிறிதளவு நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும். மிளகு, சீரகத்தை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, உடைத்த மிளகு, சீரகத்தை அதில் சேர்க்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும். பின்னர் இதை வேகவைத்து எடுத்துவைத்திருக்கும் பொங்கலில் சேர்க்கவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பையும் தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: சிறுதானிய அரிசி குருணைகளிலும் இதே முறையில் பொங்கல் தயாரிக்கலாம்.

சனி - பகல்... மிளகு சீரக ரைஸ்

தேவை: பாஸ்மதி அரிசி - 250 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, நெய் - 100 மில்லி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: பாஸ்மதி அரிசியை ஒரு பங்குக்கு இரு பங்கு தண்ணீர் அளந்து ஊற்றி குக்கரில்வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். முந்திரிப்பருப்பையும் நெய்யில் வறுத்துக் கொள்ளவும். வேகவைத்த சாதத்துடன் மிளகு, சீரகப்பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு, தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

குறிப்பு: தக்காளி வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி இதற்குச் சிறந்த காம்பினேஷன்.

சனி - மாலை... பிரெட் சேமியா பக்கோடா

தேவை: பிரெட் - 4 ஸ்லைஸ், சேமியா - 100 கிராம், பெரிய வெங்காயம் - 2, பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 250 மில்லி, புதினா பொடியாக நறுக்கியது - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: பிரெட்டை உதிர்த்துக்கொள்ளவும். சேமியாவைப் பொடியாக உடைத்து அதில் சேர்க்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய புதினா, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதில் சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி பிசைந்த மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மாலை தேநீர் அல்லது காபியுடன் சாப்பிட இந்தச் சூடான பக்கோடா சிறந்த காம்பினேஷன்.

சனி - இரவு... முருங்கைக்கீரை அடை

தேவை: முருங்கைக்கீரை ஆய்ந்தது - 2 கைப்பிடி அளவு, இட்லி அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, பூண்டுப்பல் - 4, சிறிய தக்காளி - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 100 மில்லி.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: அரிசியைத் தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒன்றாக ஊறவைக்கவும். பூண்டுப்பற்களைத் தோல் உரிக்கவும். அரிசியைத் தனியாக காய்ந்த மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். ஊறவைத்த பருப்புகளுடன் பூண்டுப்பற்கள், நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி, மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் இதை அரைத்துவைத்துள்ள அரிசி மாவுடன் முருங்கைக்கீரையையும் பொடியாக நறுக்கிப்போட்டுக் கலக்கவும். அடைக்கல்லை அடுப்பில்வைத்து கல் சூடானதும் மாவை ஊற்றி இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: வெண்ணெய், வெல்லம், இட்லிப்பொடி, அவியல் ஆகியவை அடைக்குச் சிறந்த காம்பினேஷன்கள்.

ஞாயிறு - காலை... மசாலா ஃப்ரை இட்லி

தேவை: இட்லி மாவு - 500 கிராம், இஞ்சி விழுது, பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், இட்லி மிளகாய்ப்பொடி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 200 மில்லி.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: சிறிய குழி உள்ள இட்லி தட்டில் எண்ணெய் தடவவும். பின்னர் இட்லி மாவை ஒரு சிறிய ஸ்பூனால் எடுத்து குழிகளில் ஊற்றி இட்லிகளாக வேகவைத்து எடுக்கவும். பின்னர் பூண்டு விழுது, இஞ்சி விழுது, இட்லி மிளகாய்ப்பொடி ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்து இட்லியில் நன்கு தடவவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி இந்த இட்லிகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சூடாகச் சாப்பிட்டால் மொறுமொறுப்பாக ருசியுடன் இருக்கும்.

ஞாயிறு - பகல்... மாம்பழ மோர்க்குழம்பு

தேவை: ஓரளவு புளித்த மோர் - 500 மில்லி, மாம்பழம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 4, வெந்தயம், அரிசி - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - ஒரு கிண்ணம்.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: மாம்பழத்தைச் சிறிது தண்ணீரில் வேகவைத்து தோல் கொட்டைகளை நீக்கிவிட்டு சதைப் பகுதியை மட்டும் எடுத்து மோர் விட்டு நன்கு மசித்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசி, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை வறுத்து அவற்றை தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் மோருடன் மசித்த மாம்பழம், வறுத்து அரைத்த விழுது, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் கடுகு தாளிக்கவும். பின்னர் இதை மோர்க்கலவையில் சேர்க்கவும். பின்னர் மோர்க்கலவையை லேசாகச் சூடுபடுத்தி இறக்கவும். மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.

ஞாயிறு - மாலை... மிளகு போண்டா

தேவை: உளுத்தம்பருப்பு - 200 கிராம், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள் - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பொடியாக நறுக்கியது ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 500 மில்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: உளுத்தம்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தேவையான உப்பு சேர்த்து கெட்டியாகத் தண்ணீர்விடாமல் அரைக்கவும். பிறகு மாவுடன் பொடித்த மிளகு, சீரகத்தைச் சேர்க்கவும். பிறகு இத்துடன் நறுக்கிய தேங்காய், நறுக்கிய இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி மாவை சிறு உருண்டைகளாக உருட்டிப்போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு தேங்காய்ச் சட்னி சிறந்த காம்பினேஷன்.

ஞாயிறு - இரவு... இடியாப்பம் தேங்காய்ப்பால்

தேவை: இட்லி அரிசி - 200 கிராம், தேங்காய்ப்பால் - 100 மில்லி, வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் களைந்து மைய அரைக்கவும். பின்னர் மாவை ஒரு கனமான வாணலியில் போட்டு கெட்டியாகக் கிளறி இறக்கவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். கிளறிவைத்திருக்கும் மாவை நன்கு பிசைந்து நீளவாக்கில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி அவற்றைக் கொதிக்கும் தண்ணீரில் போடவும். உருண்டைகள் நன்றாக வெந்ததும் வெளியே எடுத்து அவற்றை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து இட்லிப்பாத்திரத்தில் வேகவிடவும். பின்னர் கெட்டியான தேங்காய்ப்பாலுடன் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து லேசாக சூடாக்கி அதை வேகவைத்து எடுத்த இடியாப்பத்தின் மேல் பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.

விடுமுறை விருந்து பலாப்பழ போளி

தேவை: மைதா மாவு - 100 கிராம், கொட்டை எடுத்த பலாச்சுளை - 6, தேங்காய் - ஒரு மூடி, வெல்லம் பொடித்தது - 100 கிராம், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மில்லி, கேசரி பவுடர் - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: மைதா மாவுடன் நல்லெண்ணெய், சிறிது தண்ணீர், சிறிது கேசரி பவுடர், சிறிது தண்ணீர் சேர்த்து மாவை கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும். கடலைப்பருப்பை லேசாக வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வேக விடவும். கடலைப்பருப்பு நன்றாக வெந்ததும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். பலாச்சுளைகளைச் சிறிது நெய்யில் வதக்கவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் வெல்லக்கரைசலை தூசுதுகளின்றி வடிகட்டி மறுபடியும் வெல்லக்கரைசலை பாகு பதம் வரும்வரை கொதிக்கவிடவும். பின்னர் இதில் துருவிய தேங்காய், பலாச்சுளைகள், வேகவைத்த கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். பின்னர் வாணலியில் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி சிறு உருண்டைகளாக உருட்டிவைத்துக் கொள்ளவும். ஒரு வாழையிலையில் நெய் தடவவும். பிசைந்த மைதா மாவை வாழையிலையில் வைத்து பரவலாகக் கைகளால் தட்டவும். பின்னர் இதன் நடுவில் உருட்டி வைத்திருக்கும் பூரணத்தை வைத்து மூடி போளி களாகத் தட்டவும். நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு: பலாச்சுளை வாசனையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும் இந்த போளி.

நெல்லிக்காய் அல்வா

தேவை: பெரிய நெல்லிக்காய் - 10, சர்க்கரை - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மில்லி, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு - 10.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் மைய அரைக்கவும்.

வாணலியில் நெய்விட்டு நெல்லிக்காய் விழுதைப் போட்டு வதக்கவும். கலவை நன்கு வெந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறி, பின்னர் கேசரி பவுடர் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கடைசியில் நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து இதில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: நெல்லிக் காயுடன் உலர்ந்த பழங்களை யும் சேர்த்து அரைத்து இதே முறையில் அல்வா தயாரிக்கலாம்.

விதவிதமாக... புதுவிதமாக!

ள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு மட்டுமா அட்டவணை? இதோ சமையலுக்கும் ஓர்அட்டவணை!

ஒவ்வொரு நாளும் அலுவலக வேலைகளில் ஏற்படும் சவால்களை எதிர்நோக்கி ஓடி உழைத்து வீடு திரும்பியதும் `இன்று என்ன சமைப்பது...' என்பதுதான் இல்லத்தரசிகள் மனத்தில் எழும் கேள்வியே எதையுமே திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

திங்கள் முதல் ஞாயிறு வரை... அசத்தும் அட்டவணை சமையல்!

இதோ உங்களது கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக திங்கள் முதல் ஞாயிறு வரை - காலை, பகல், மாலை, இரவு என பட்டியலிட்டுத் தந்திருக்கிறார் சமையற்கலைஞர் நங்கநல்லூர் பத்மா. ஒரு வாரத்தின் 28 வேளைகளில் ஓர் உணவுகூட திரும்பவும் இடம்பெறாத சிறப்பான அட்டவணை இது. இதனால் தினம் தினம் நம் வீட்டில் வெரைட்டி சமையல்தான். டைம்டேபிள் போட்டதுபோல நேர்த்தியான பழக்க வழக்கங்கள் சிலருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு நங்கநல்லூர் பத்மா அளித்திருக்கும் இந்த உணவுகள் இன்னும் ஸ்பெஷல்!

அது மட்டுமல்ல... இவை பாரம்பர்யச் சிறப்புமிக்கவை; ஊட்டச்சத்துகள் நிறைந்தவை; குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடியவை! பிறகென்ன... ரிலாக்ஸ் சமையல் ஆரம்பமாகட்டும்!