Published:Updated:

முதல் தடவை செய்ததே இவ்வளவு டேஸ்ட்டா? - மாமா சமைத்த `பச்சை மிளகாய் சாம்பார்’! | விருந்தோம்பல்

பச்சை மிளகாய் சாம்பார்

முதலில் குக்கரில் சாதத்தையும் பருப்பையும் வேகவைத்தார்கள். ‘சரி என்ன குழம்பு செய்யப் போகிறோம்’ என்று கேட்டேன். அதற்கு மாமா விளையாட்டாக ‘சொதி மாதிரி... ஆனால் சாம்பார்’ என்றார்கள். ‘அப்படி என்ன குழம்பு’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே, ‘பச்சை மிளகாய் சாம்பார்’ என்றார்.

முதல் தடவை செய்ததே இவ்வளவு டேஸ்ட்டா? - மாமா சமைத்த `பச்சை மிளகாய் சாம்பார்’! | விருந்தோம்பல்

முதலில் குக்கரில் சாதத்தையும் பருப்பையும் வேகவைத்தார்கள். ‘சரி என்ன குழம்பு செய்யப் போகிறோம்’ என்று கேட்டேன். அதற்கு மாமா விளையாட்டாக ‘சொதி மாதிரி... ஆனால் சாம்பார்’ என்றார்கள். ‘அப்படி என்ன குழம்பு’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே, ‘பச்சை மிளகாய் சாம்பார்’ என்றார்.

Published:Updated:
பச்சை மிளகாய் சாம்பார்

இன்றைய குழந்தைகள் முழு ஆண்டு விடுமுறை என்றாலும்கூட பெரும்பாலும் சம்மர் கிளாஸ், ஸ்விம்மிங் கிளாஸ்... அதோடு ஒரு வார அவுட்டிங் என்றே கழிக்கின்றனர். அன்றோ பாட்டி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று சொந்தங்களோடு சேர்ந்து நாட்கள் நகர்வதே தெரியாமல் வளர்ந்தோம். ஆமாம் 80'ஸ் & 90'ஸ் கிட்ஸைத்தான் சொல்கிறேன். அவையெல்லாம் நினைவில் அழியாத கதைகள். இப்போது சொந்த மண் விசேஷங்களைக்கூட வீடியோ காலில் பகிர்ந்து பார்க்கும் காலமாகி விட்டது.

ஐந்தாம் வகுப்பு ஆண்டு விடுமுறைக்கு என்னை தூத்துக்குடியில் ஆச்சி (பாட்டி) வீட்டில் விட்டுவிட்டு, அம்மா ஊருக்குத் திரும்பி விட்டார்கள். எங்கள் குடும்பத்தின் முதல் பேத்தி என்பதால், என் ஐந்து மாமாக்களுக்கும் சித்திக்கும் நானே செல்லப்பிள்ளை. தூத்துக்குடியில் கடற்கரை, கோவில்கள் என எங்கு சென்றாலும் என்னையும் சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வார்கள்.
அந்த வருடம் தாத்தா ஆச்சியோடு நான்காவது மாமா மட்டும் இருந்தார்கள். மற்றவர்கள் வேலை காரணமாக வெளியூரில் இருந்தார்கள். ஒரு நாள் ஆச்சிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. அப்போது மாமாவுக்கு எல்.ஐ.சி.யில் வேலை கிடைத்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.

Representational Image
Representational Image

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில்தான் இருந்தார். என்னிடம் அவர், ‘இன்னைக்கு நாம இரண்டு பேரும் சேர்ந்து சமைக்கப்போறோம். நான் போய் காய்கறி வாங்கிட்டு வரேன். பிறகு ஆரம்பிப்போம்’ என்றார். மாமா சொன்னதும் எனக்கு சிரிப்பாக இருந்தது... ‘எப்படி மதிய சமையல்லாம் செய்வது’ என்று. அவர் சும்மா விளையாட்டாக சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால், நிஜமாகவே ஒரு மஞ்சப்பையை எடுத்து காய் வாங்க கிளம்பியாச்சு.


மாமா வீட்டுக்கு வந்ததும் காய்கறிகளைப் பிரித்து தயார் செய்ய ஆரம்பித்தார்கள். முதலில் குக்கரில் சாதத்தையும் பருப்பையும் வேகவைத்தார்கள். ‘சரி என்ன குழம்பு செய்யப் போகிறோம்’ என்று கேட்டேன். அதற்கு மாமா விளையாட்டாக ‘சொதி மாதிரி... ஆனால் சாம்பார்’ என்றார்கள். ‘அப்படி என்ன குழம்பு’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே, ‘பச்சை மிளகாய் சாம்பார்’ என்றார். ‘நீ முதல்ல 'சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் உரித்துவிட்டு தேங்காயை துருவி வை... மற்ற வேலைகளை நானே செய்து கொள்கிறேன்’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாமாவுக்கு அன்றுதான் முதல் சமையல் அனுபவம். மாமா காய் நறுக்க ஆரம்பித்தார். நான் வெங்காயம் உரிக்க ஆரம்பித்தேன். குக்கரிலிலிருந்து விசில் வரும்போது பருப்பு வெளியே பொங்கி வருவதை கண்டு நானும் மாமாவும் முதலில் பயந்தோம். அடுத்து பொங்கும்போது சிரித்துக்கொண்டோம். காய்கறிகளை நறுக்கியதும் மாமா அலமாரியில் இருக்கும் டேப் ரிக்கார்டரை எடுத்து வந்து இளையராஜா கேசட்டை போட்டார். பாடல் கேட்டுக்கொண்டே சமைக்க ஆரம்பித்தோம்.
நாங்கள் சமையல் செய்யும்போது ஆச்சி நல்ல தூக்கம். தாத்தா செய்தித்தாள் படிக்க ஆரம்பித்ததால், ‘உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது’ என்பதே தெரியாமல் படித்துக் கொண்டிருந்தார்.

Representational Image
Representational Image

சாம்பாருக்கு காய்கறிகள் நறுக்கி, தேங்காய் அரைத்து, பருப்பு வேகவைத்து... இப்படி எல்லாம் தயார் செய்துவிட்டோம். பிறகு சைடு டிஷ் வாழைக்காய் புட்டு செய்ய வாழைக்காயை வேகவைத்து எடுத்தாச்சு. மாமா சாம்பாருக்கு வதக்கும்போது நான் வேகவைத்த வாழைக்காயை உரித்து துருவி தயார் செய்து கொடுத்தேன். சாம்பாருக்கு காய்கறிகள் வெந்து கொண்டிருக்கும்போது உப்பு சரியா உள்ளதா என்று இரண்டு பேரும் மாறி மாறி சுவை பார்த்தோம். பிறகு வேகவைத்த பருப்பு, தேங்காய் எல்லாம் சேர்ந்து கலந்து சாம்பார் கொதிக்கும் போது அருமையான மணம் வரத் தொடங்கியது. கடைசியாக கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு கலந்து மீண்டும் ருசி பார்த்தோம்.

சாம்பாருக்குத் தாளித்து முடித்ததும், வாழைக்காய் புட்டுக்கு சின்ன வெங்காயத்தை வதக்கி, துருவிய வாழைக்காய் சேர்த்து தேங்காய்ப்பூ சேர்த்தவுடன், நிமிடத்தில் வாழைக்காய் புட்டு ரெடியாகி விட்டது.

ஒருவழியாகச் செய்தித்தாளைப் படித்து முடித்ததும் தாத்தா மெல்ல சமையல் அறைக்கு வந்து மாமாவிடம் ‘பாலு மதியச் சாப்பாட்டுக்கு எலுமிச்சை சாதம் செய்கிறாயா?’ என்று கேட்டார். எனக்கும் மாமாவுக்கும் குபீர் என்று சிரிப்பு வந்தது. நான் தாத்தாவிடம் ‘மாமா எல்லாம் ரெடி செய்துட்டாங்க’ என்று சொன்னேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாமா கூறியது போல பச்சை மிளகாய் சாம்பாரின் சுவை சொதி மாதிரியும் இருந்தது; சாம்பார் மாதிரியும் இருந்தது. இதற்கு முன்பு ஆச்சி செய்வதை பார்த்து வளர்ந்த எனக்கு, அன்று மாமா செய்து பார்த்த பச்சை மிளகாய் சாம்பாரும் வாழைக்காய் புட்டும் மிகவும் ஆச்சரியம் அளித்தது.

‘எப்படி மாமா... முதல் தடவை செய்ததே இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு’ என்று கேட்டேன். ‘எந்த ஒரு வேலையையும் முழுமனதோடும் ஆர்வத்தோடும் செய்தால் அதன் பலன் நன்றாக இருக்கும்’ என்றார்.

அன்று மாமா என் வயதுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு சிறுசிறு வேலைகள் செய்யச் சொல்லி, நாங்கள் ஒரு டீமாக சேர்ந்து சமைத்தது நன்றாக இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை பச்சை மிளகாய் சாம்பார் செய்யும்போதெல்லாம் அந்த பசுமையான நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிடும். இவ்வாறு பல தனித்துவம் வாய்ந்தவர்களோடு நான் வளர்ந்தது எனக்கு மிகப்பெரிய கொடுப்பினைதானே!

பச்சை மிளகாய் சாம்பார்
பச்சை மிளகாய் சாம்பார்

விடுமுறை நாட்களில், பண்டிகை நாட்களில் இன்றைய தலைமுறையினருக்கு குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து பழகும் வாய்ப்பினை பெற்றோர் உருவாக்கி அளிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆடம்பரமான ஹோட்டலில் சாப்பிட்டாலும், நினைத்த நேரத்தில் ஆர்டர் செய்து சாப்பிட்டாலும் சரி... ஏனோ அன்றைய காலத்தில் இருந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளும் நிறைவும் இல்லை என்றே தோன்றுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த சாம்பார் போட்டியில் கலந்து கொண்டு இதைச் செய்தேன். தேர்வு செய்யப்பட்ட சிறந்த பத்து சாம்பார்களில் இந்த பச்சை மிளகாய் சாம்பாரும் ஒன்று. அன்று தேர்வு செய்ய வந்த நடுவர் ‘மெனு ராணி’ செல்லம் அவர்கள், ‘வழக்கமாகச் செய்யும் சாம்பாரில் இருந்து மாறுபட்ட ஒரு நல்ல வித்தியாசமான சாம்பார் இது. வெரி குட்’ என்று பாராட்டினார். நீங்களும் இந்த பச்சை மிளகாய் சாம்பாரை அளவுகள் ஏதும் மாற்றாமல் செய்து பாருங்களேன்.

செய்வோமா..
பச்சை மிளகாய் சாம்பார்!


என்னென்ன தேவை?
பாசிப்பருப்பு - 1/8 கப்
துவரம்பருப்பு - 1/8 கப்
முருங்கைக்காய் - பாதியளவு
கேரட் - 1 சிறியது
உருளைக்கிழங்கு - 1 சிறியது
கத்தரிக்காய் - 1
தக்காளி - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பற்கள் - 10
பச்சை மிளகாய் - 6
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 கப்
கடுகு உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சை பழம் - 1
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஸ்டெப் 1
வாணலியை சூடாக்கி, பாசிப்பருப்பை லேசாக வறுத்துக்கொள்ளவும். பின் துவரம் பருப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அதன் சூட்டிலேயே வைத்து சில நிமிடங்களுக்குப் பின் குக்கரில் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூன்று விசில் வரும் வரை வேகவைக்கவும்.

ஸ்டெப் 2
காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். புளியை சூடான நீரில் ஊறவைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டுப் பற்கள், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்து முருங்கைக்காய், கத்தரிக்காய், தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து 20 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும்.

ஸ்டெப் 4
காய்கறிகள் வேகும்போது தேங்காயை நைசாக அரைத்துக் கொள்ளவும். வேகவைத்த பருப்பை மசித்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 5
புளிக்கரைசலில் காய்கறிகள் வெந்ததும் நறுக்கிய தக்காளி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து மசித்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். அதோடு, பெருங்காயத்தூள் சேர்த்து சாம்பாரை ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் கொதிக்க வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சில நிமிடங்களுக்கு பின் எலுமிச்சைச் சாறு கலந்து விடவும்.

ஸ்டெப் 6
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்து, சூடான சாம்பாரில் கலந்து மூடி வைக்கவும்.

Muthulakshmi Madhavakrishnan
Muthulakshmi Madhavakrishnan

சாம்பாருக்கு ஏற்ற ஜோடி...

இந்த சாம்பாருக்கு கொஞ்சம் காரமான உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் வறுவல் வைத்து சூடாகப் பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...
* கிள்ளிப் போட்ட சாம்பாருக்கு பாசிப்பருப்பு பாதி, துவரம் பருப்பு பாதி சேர்க்க வேண்டும்.
* காரத்துக்கு பச்சை மிளகாயை வதக்கிச் சேர்க்க வேண்டும்.
* புளிப்புக்கு புளி, தக்காளி மற்றும் எலுமிச்சைச் சாறு எல்லாம் மிதமாகச் சேர்த்துக் கொள்ளவும்.
* தேங்காயை நைசாக அரைத்து சேர்க்கவும். அல்லது கடைசியாக சிறிது தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.

சென்ற விருந்தோம்பல் பகுதியில் வெளியான பரங்கிக்காய் புளிக்குழம்புக்கு நிறைய பேர் ரசிகர்களாகிவிட்டார்களாம். வேலைக்கு செல்வோர் இந்தக் குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருந்தது என்றும் கூறினார்கள். மிக்க மகிழ்ச்சி. அடுத்து ஓர் அறுசுவை அனுபவ உணவோடு சந்திப்போம்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism