Published:Updated:

உணவு உலா மயிலாப்பூர் - 2

சாந்தி சரவணனின் பஜ்ஜிக் கடை
பிரீமியம் ஸ்டோரி
சாந்தி சரவணனின் பஜ்ஜிக் கடை

பஜ்ஜி முதல் வெண்ணெய் வரை ருசிகள் பலவிதம்!

உணவு உலா மயிலாப்பூர் - 2

பஜ்ஜி முதல் வெண்ணெய் வரை ருசிகள் பலவிதம்!

Published:Updated:
சாந்தி சரவணனின் பஜ்ஜிக் கடை
பிரீமியம் ஸ்டோரி
சாந்தி சரவணனின் பஜ்ஜிக் கடை

யிலாப்பூர் உணவு நடையின் அடுத்த கட்டமாக, உணவு நடைக் குழுவினர் நின்ற இடம் தேரடிக்கு எதிரில் உள்ள முச்சந்தி! இங்குதானே புகழ்பெற்ற சாந்தி அக்கா பஜ்ஜிக் கடை இருக்கிறது!

உணவு உலா மயிலாப்பூர் - 2

25 ஆண்டுகளாக மயிலாப்பூரில் பஜ்ஜிக் கடை நடத்தி வருகிறார் சாந்தி சரவணன். கணவர் சரவணன் வாகன ஓட்டுநராகப் பணியாற்றுவதால், கடை முழுக்க முழுக்க சாந்தியின் மேற்பார்வையில்தான். உதவிக்கு ஒரு சிறுவன் மட்டுமே துணை. சாந்தி பிறந்தது, வளர்ந்தது, வாழ்க்கைப்பட்டது எல்லாமே மயிலாப்பூரில் தான். பஜ்ஜிக் கடை ஒன்றை நடத்திவந்த அவரது அண்ணன் நோய்வாய்ப்பட்டு இறக்கவே, அவர் செய்த தொழிலை கூடவே இருந்து பார்த்த சாந்தி, தேருக்கு அருகே தானும் ஒரு சிறிய கடையைப் போட்டார். நான்கு பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து ஆளாக்க வேண்டுமே என்கிற பயம் மனதைக் கரைக்க, கடை களை கட்டியது. ஆரம்பத்தில் குழந்தைகள் உதவினர். குட மிளகாய், மிளகாய், வெங்காயம், வாழைக்காய், உருளைக்கிழங்கு பஜ்ஜிகள் போட்டு விற்றவர், குழந்தைகளை ஈர்க்க வேண்டும் என்று காலிஃபிளவர், கத்திரிக்காய், பிரெட் என்று வித்தியாசமாக பஜ்ஜிகளை செய்து அடுக்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“எப்போதும் எல்லோரும் போடும் ஐட்டங்களாக இல்லாமல், குழந்தைகளுக்குப் பிடித்தது போல செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் கணிப்பு தவறவில்லை. குழந்தைகளுக்கு ஃபேவரிட் ஆகிவிட்டது என் கடை. தினமும் 3 முதல் 5 கிலோ வரை மாவு கொண்டு பஜ்ஜி போடுகிறேன். மாலை 4.30 மணி முதல் 9.30 மணி வரை கடை இயங்கும். முன்பு தேர் அருகே இருந்தபோது வியாபாரம் நன்றாக இருந்தது. அதற்கு எதிர்ப்புறம் மாறியதில் இருந்து கொஞ்சம் டல்லாகத்தான் இருக்கிறது . கோயில் விசேஷங்களின்போது நிறைய கூட்டம் வரும்.

ஜன்னல் கடை
ஜன்னல் கடை

25 ஆண்டுகளாக என்னிடம் தொடர்ந்து வாடிக்கையாளராக இருப்பவர்கள் உண்டு. மயிலாப்பூரிலிருந்து கல்யாணம் செய்து கொண்டு எங்கெங்கோ போனவர்கள் கூட வருடத்துக்கு ஒரு முறையாவது வந்து என்னிடம் பஜ்ஜி வாங்கிச் செல்கிறார்கள். முன்பெல்லாம் காய் வாங்க தினமும் கோயம்பேடு வரை சென்று வருவேன். இப்போது முடியவில்லை. தி.நகரில் வாங்கி விடுகிறேன்” என்று சொல்கிறார் சாந்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் தொழிலின் வெற்றிக்குக் காரணம் தான் அன்பாக வாடிக்கையாளரிடம் பழகுவதுதான் என்கிறார் சாந்தி. “ஒருவர் இரண்டு பஜ்ஜி வாங்கினாலும், அவருக்கு அதை அன்புடன் கொடுப்பது என் வழக்கம். வீடு எப்படியோ அப்படித்தானே வியாபாரமும்? தாயா, பிள்ளையாதான் எல்லாரிடமும் பேசுகிறேன். கபாலியின் அருளால் எனக்கு எந்தக் குறையும் இல்லை. நல்ல உடல்நலம் இருக்கும் வரை இந்த வேலையைச் செய்வேன்.

சாந்தி சரவணனின் பஜ்ஜிக் கடை
சாந்தி சரவணனின் பஜ்ஜிக் கடை

இரண்டு பஜ்ஜி 20 ரூபாய்க்குத் தருகிறேன். கொஞ்சமாக வாங்கி சுவைக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு இது வசதி.

20 ஆண்டுகளாக ஒரே செக்கில்தான் எண்ணெய் வாங்கிச் செய்கிறேன். சாப்பிடுபவர்கள் உடல்நலத்தில் நமக்கும் அக்கறை இருக்க வேண்டும் இல்லையா?” என்று கேட்கிறார்.

`பாதையில் கடை வைத்திருக்கிறீர்களே…போலீஸ், அதிகாரிகள் என்று யாரும் எதுவும் சொல்வதில்லையா, பிரச்னைகள் வருவதில்லையா…’ போன்ற கேள்விகளுக்கு விரக்தியாகச் சிரிக்கிறார். “என்னம்மா செய்வது? பழைய அதிகாரிகளுக்குத் தெரியும். புதிதாக வருபவர்கள் கூப்பிட்டு விரட்டினால், இரண்டு மூன்று நாள்களுக்கு கடை போட முடியாது. எப்படியாவது அவர்களைச் சந்தித்து, `நான்கு பெண் குழந்தைகள் சார்... கடை போட்டு உழைத்துப் பிழைக்கிறேன் சார். தயவுசெய்து அனுமதியுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டு நடத்துவேன். மீண்டும் பிரச்னை என்றால் சில நாள்களுக்கு கடை போட முடியாது. இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்தாகிவிட்டது. இன்னும் இரண்டு பேர்தான். எப்படியாவது அவர்களுக்கும் திருமணம் செய்துவைத்து விட்டால், என் கடமை முடிந்தது” என்று முடிக்கிறார் சாந்தி.

பாலீசுவரர் கோயிலின் முன் சற்று நேரம் இளைப்பாறுகிறோம். திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது மயிலாப்பூர். மாலை மங்கிக் கொண்டிருக்கிறது. நடை கோயிலைத் தாண்டித் தொடர்கிறது.

பாரதி மெஸ்
பாரதி மெஸ்

கோயிலை ஒட்டிய பொன்னம்பல வாத்தியார் தெருவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது `ஜன்னல் கடை’. சுற்றிலும் கூட்டம் மொய்த்துக்கொண்டிருக்க, சிறு ஜன்னல் ஒன்றின் வழியாக நடக்கிறது வியா பாரம். சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜியும், தொட்டுக்கொள்ள சட்னியும் தருகிறார்கள். கடையின் உரிமையாளர் கே.சந்திரசேகரன். பன்னிரண்டு ஆண்டுகளாக இந்த ஜன்னல் வழியாகவே வியாபாரம் செய்துவருவதாகச் சொல்கிறார். இவருடைய தந்தை காலத்தில் தொடங்கப்பட்ட கடையில், வெங்காய சட்னியுடன் வாழைக்காய், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு பஜ்ஜியுடன், கீரை வடை, கல்தோசை, இட்லி போன்ற உணவு வகைகளும் விற்பனையாகின்றன.

பாரதி மெஸ்ஸின் 
ஸ்பெஷல் சுமிதி பால்
பாரதி மெஸ்ஸின் ஸ்பெஷல் சுமிதி பால்

இப்போது சந்திரசேகரன் மற்றும் அவர் மனைவி கலா இருவரும் கடையை கவனித்துக்கொள்கிறார்கள். இவர்கள் கடையின் ஸ்பெஷல் உளுந்து போண்டா - வெங்காயச் சட்னி காம்பினேஷன்தான். பச்சை வெங்காயம், பச்சை மிளகாயைத் தனியே வதக்கி, உடைத்த கடலை, கல் உப்பு சேர்த்து அரைக்கப்படுகிறது இந்தச் சட்னி. “சுற்றியுள்ள கடைகள் எதிலும் எங்கள் வெங்காயச் சட்னி போல கிடைப்பதில்லை” என்று சொல்கிறார் சந்திரசேகரன். இங்கு வருபவர்கள் பெரும்பாலும் நிரந்தர வாடிக்கையாளர்கள்தாம். காலை 7.30 முதல் 10.00 மணி முதல், மாலை 5.30 மணி முதல் 9.00 மணி வரை இங்கு விற்பனை கனஜோராக நடக்கிறது. மொறுமொறுப்பான பஜ்ஜியை வெங்காயச் சட்னியுடன் விழுங்கிவிட்டு, ஜன்னல் பஜ்ஜிக்கடையின் எதிரே உள்ள பாரதி மெஸ்ஸுக்குள் நுழைகிறோம்.

“செயற்கைச் சுவையூட்டிகள், வனஸ்பதி, பாமாயில், சோடா உப்பு சேர்க்காத உணவகம்” என்றுதான் நம்மை வரவேற்கிறது கடையின் முன்பு உள்ள பெயர்ப்பலகை! “சோடா உப்பு சேர்க்காததால் பஜ்ஜி, போண்டா ஆறிப் போனால் கொஞ்சம் கெட்டி ஆகிவிடும்” என்ற டிஸ்கிளைமர் போர்டும் இருக்கிறது! கடைக்குள் ஐரோப்பியர் குழு ஒன்று அமர்ந்து தோசையைப் பிய்த்து சாம்பாரில் நனைத்து கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தது. கடையின் ஸ்பெஷல் என்று சொல்லப்பட்ட ராகி லட்டையும், சுமிதி பாலையும் ஆர்டர் தந்துவிட்டு அமர்ந்தோம். சுற்றிலும் பெயருக்கு ஏற்றாற்போல பாரதியின் புகைப்படங்கள், அவர் பாடல்கள், அவரது வாழ்க்கை நம் கண்முன் காட்சிகளாக விரிகிறது.

காரைக்குடியைச் சேர்ந்த எஸ். கண்ணன் மற்றும் எஸ்.சரவணன் சகோதரர்கள் 2012-ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் தொடங்கிய கடை பாரதி மெஸ். ஏன் திருவல்லிக்கேணி என்கிற கேள்விக்குப் பதில் தருகிறார் சரவணன்... “அண்ணன் தினமலர் நாளிதழில் வெகுகாலம் பணியாற்றி வந்தார். காரைக்குடியிலிருந்து இங்கு வந்த காலத்தில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் குடியிருந்தார். அங்குள்ள உணவகங்களில் சாப்பிட்டுப் பார்த்தவர், `வீட்டு உணவு போன்ற தரமான உணவை அந்தப் பகுதியில் இருக்கும் வேலைக்குச் செல்பவர்களுக்குத் தர வேண்டும்’ என்று முடிவெடுத்தார். சிறு வயது முதலே பாரதியார் மீது அண்ணனுக்கு கொள்ளைப் பிரியம் உண்டு. பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறார். அவரது ஆசையின்படியே ‘பாரதி மெஸ்’ பிறந்தது!”

மாமி டிபன் ஸ்டால், பனீர் பக்கோடா
மாமி டிபன் ஸ்டால், பனீர் பக்கோடா

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மயிலாப்பூரில் உள்ள இந்தக் கிளை செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் சகோதரர்களின் அம்மாதான் செஃப். சுவையான அதே நேரம் ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டில் பயன்படுத்தும் உணவுப் பொருள்களை மட்டுமே உணவு தயாரிக்கத் தொடங்கினார்கள். வீட்டில் பயன்படுத்தாத எந்தப் பொருளும் கடையிலும் பயன்படுத்துவதில்லை. வாடிக்கையாளர்களின் உடல்நலனில் அக்கறை கொள்வதால், சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். கம்பு லட்டு, ராகி லட்டு, ராகிக் கொழுக்கட்டை, ராகிக் கஞ்சி, உளுந்து கஞ்சி, சுக்கு-மிளகு-திப்பிலி கலந்த சுமிதி பால் என்று இங்கு வழங்கப்படும் உணவு வகைகள் அனைத்துமே வித்தியாசமானவை, ஆரோக்கியமானவை.

“அண்ணன் மனைவி, என் மனைவி இருவரும் தான் ஆரம்பத்தில் சமையலறையில் வேலை செய்து வந்தார்கள். இப்போது பெண்கள் சிலரை சமையற்கட்டில் வேலை செய்ய அமர்த்தியிருக்கிறோம். இன்னமும் வீட்டுப் பெண்கள்தாம் மேற்பார்வை செய்கிறார்கள். பெண்களின் கைப்பக்குவம் தான் சுவையான உணவுக்குக் காரணம் என்று திடமாக நம்புகிறோம். தரம் எந்த விதத்திலும் குறைந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் கொள்கிறோம்” என்கிறார் சரவணன். காலை முதல் இரவு வரை பரபரப்பு கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது கடை.

காளத்தி ரோஸ் மில்க்
காளத்தி ரோஸ் மில்க்

டுத்த நிறுத்தம்... பிச்சு தெருவில் உள்ள மாமி டிபன் ஸ்டால். 1969-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சியில் இருந்து ரயிலேறி சென்னை வந்தவர்கள் கே.எஸ்.கணேசன் ஐயர் - வசந்தா தம்பதி. அப்போது வசந்தாவுக்கு 19 வயதுதான். ஊரில் ஒரு கடையில் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் இருந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து மயிலாப்பூரில் கடை தொடங்கிவிட்டார் வசந்தா. ஆரம்பத்தில் முறுக்கு மற்றும் இதர பட்சணங்கள் செய்தவர், பெண்களின் அமோக வரவேற்பால் சிற்றுண்டி வகைகள் செய்யத் தொடங்கினார். கல் தோசை, இட்லி என்று வீட்டில் செய்யும் பக்குவத்தில் செய்துதர, மளமளவென வளர்ச்சி காணத்தொடங்கியது வசந்தா மாமியின் கடை.

இப்போது கடையை நிர்வகித்து வருபவர் மாமியின் மகன் கபாலீசுவரன். இவர்களது 14 வகை சாதங்கள் மிகவும் பிரசித்தம். அன்றைய ஸ்பெஷல் உணவு வகை என்ன என்பதை வாசலில் எழுதிப் போட்டு விடுகிறார்கள். ``சுவை மாறாமல் இருக்க ஆத்மார்த்தமாகச் சமைக்க வேண்டும்; நல்ல பொருளாக வாங்கிச் சமைக்க வேண்டும்’’ என்று சொல்கிறார் கபாலீசுவரன். சாம்பார் பொடி, ரசப்பொடி முதற்கொண்டு எல்லா பொடிகளையும் சொந்தமாகவே தயாரிப்பதால் சுவை குன்றாமல் இருக்கிறது உணவு. அன்றைய ஸ்பெஷல் ஸ்வீட்டான கோதுமை அல்வாவை வாழை இலையில் சுடச்சுட வாங்கிச் சுவைத்தோம். கூடவே பனீர் பக்கோடாவும்!

பாலாடைக் கட்டியை மனிதன் 3,200 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தத் தொடங்கிவிட்டதற்கான ஆதாரங்கள் இப்போது கிடைத்துள்ளன. எகிப்தின் மெம்ஃபிஸ் நகர மேயராக 3,200 ஆண்டு களுக்கு முன்பு இருந்தவர் தாமஸ். இவரது கல்லறை கெய்ரோ நகருக்கு அருகே 1885-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், மணல் புயல் ஒன்றில் மறைந்து போனது தாமஸின் கல்லறை. மீண்டும் 2010-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைக்குள் உடைந்துபோன ஜாடி ஒன்றில் வெள்ளை கெட்டிப் பொருள் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். இந்தப் பொருளை ஆராய்ந்த கடானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் என்ரிக்கோ கிரீக்கோ, இதுவரை கண்டெடுக்கப்பட்ட உலகின் பழைமையான பாலாடைக்கட்டி தாமஸின் கல்லறையில் எடுக்கப்பட்டதுதான் என்று உறுதி செய்தார். வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டின் பாலுடன், ஆப்பிரிக்க எருமையின் பாலும் கலந்து செய்யப் பட்டிருந்தது அந்த பாலாடைக்கட்டி. சற்றே தளர்ந்த நிலையில் இருந்த பாலாடைக்கட்டி இன்று நாம் பயன் படுத்தும் வெண்ணெய் போன்ற பரப்பக் கூடிய நிலையில் பாதுகாக்கப்பட்டு இருந்தது.

3,200 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள பாலாடைக்கட்டி, பாரசீகர் மூலம் இந்தியாவுக்குள் மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் நுழைந்திருக்கிறது. பாரசீக மொழியில் `பனீர்’ என்றால் பாலாடைக் கட்டியே!

அல்வாவும் பனீர் பக்கோடாவும் உண்டபிறகு தள்ளாடித் தான் கிழக்கு மாடவீதி காளத்தி செய்தித்தாள் கடையை அடைந்தோம். செய்தித்தாள் கடையில் சாப்பிட என்ன கிடைக்கும் என்று யோசிக்கிறீர்களா? குடிக்க அருமையான ரோஸ் மில்க் கிடைக்கும். மயிலாப்பூரின் ஸ்பெஷல் இந்த காளத்தி ரோஸ்மில்க். கடையின் உரிமையாளர் மணி. 1927-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிற இந்தக் கடையில், 1952-ம் ஆண்டு முதல் ரோஸ்மில்க் விற்கப்படுகிறது, அதே மாறாத சுவையுடன்!

மயிலாப்பூர் கணபதி’ஸ்... விற்பனைக்குத் தயாராகும் ஊத்துக்குளி வெண்ணெய்
மயிலாப்பூர் கணபதி’ஸ்... விற்பனைக்குத் தயாராகும் ஊத்துக்குளி வெண்ணெய்

ரோஸ் மில்க் கான்சென்ட்ரேட் சர்க்கரை சேர்த்து வீட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்த ரோஸ் மில்க்குக்கு அலாதி சுவை தருவது இந்த கான்சென்ட்ரேட்தான். `இதை எப்படிச் செய்வது, என்ன இருக்கிறது என்பதை யாருக்கும் சொல்வதில்லை’ என்று கூறி ரகசியம் காக்கிறார்கள். ரோஸ் மில்க் குடிக்கலாம்; கான்சென்ட்ரேட் வேண்டு பவர்கள் அதை வாங்கியும் செல்லலாம். ஒரு லிட்டர் பாட்டில் நூறு ரூபாய். சரியான விகிதத்தில் நிறைய ஐஸ்ஸும், பாலும், கான்சென்ட்ரேட்டும் கலந்து தரப்படும் இந்த ரோஸ் மில்க், காலை 9.30 மணி முதல் இரவு 10 மணி வரை கிடைக்கிறது.

90 ஆண்டுகளைத் தாண்டிய இந்தக் கடையின் சமீபத்திய கஸ்டமர்கள் பள்ளிக்குழந்தைகள்தாம்! ரசாயனப் பொருள்கள் எதுவும் பயன்படுத்தாமல், சுத்தமான பால் கொண்டு செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் வாங்கித் தருகின்றனர் பெற்றோர். இன்னோர் ஆச்சர்யம், இந்த கடைக்குள் செல்ல கதவே இல்லை! மேசை மேல் ஏறிக் குதித்துதான் உள்ளே செல்கிறார் உரிமையாளர். வெளியே சிறிய ஷட்டர் மட்டுமே உண்டு. 15 ரூபாய்க்குக் கிடைக்கும் இந்த ரோஸ் மில்க்கின் சுவை அலாதியானது! ஒரு பாட்டில் கான்சன்ட்ரேட் வாங்கிக் கொண்டு நடையின் இறுதிகட்டத்துக்கு வந்தோம்.

சித்திரக்குளம் மேற்கு வீதியில் இயங்கி வரும் மயிலாப்பூர் கணபதி’ஸ் வெண்ணெய் மற்றும் நெய்க்கடை, 1942-ம் ஆண்டு முதல் சுவையான நெய் மற்றும் வெண்ணெய் விற்பனை செய்துவருகிறது. நாகப்பட்டினம் எஸ். கணபதி பிள்ளை தொடங்கிய கணபதி அன்ட் கோ பெயர் மாற்றம் பெற்று அவர் பேரன் எஸ்.சரவணனால் நிர்வகிக்கப்படுகிறது. தரமான வெண்ணெய் தினமும் ஊத்துக்குளியில் இருந்து வருகிறது.

“இதில் மட்டும் ஸ்டாக் எதுவும் வைத்துக் கொள்வதில்லை. அன்றாட தேவை என்னவோ அதை மட்டுமே ஆர்டர் செய்து பெற்று விற்கிறோம். அதனால் தரம் குறைவதே இல்லை” என்று சொல்கிறார் கடையின் மேலாளர். இந்த வெண்ணெயைக் கொண்டே நெய் உருக்கிக்கொள்கிறார்கள். 60 கிலோ வெண்ணெயை உருக்கினால் 45 கிலோ நெய் கிடைக்கிறது.

ஒரு காலத்தில் சொந்தமாக வீட்டில் 40 பசுக்களை வைத்து பால் கறந்து வெண்ணெய் எடுத்திருக்கிறார்கள். தேவை அதிகரிக்க, சரவணனின் தாத்தா காலத்திலிருந்தே ஊத்துக்குளியில் இருந்து வெண்ணெய் தருவிக்கிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஊறுகாய், பொடிகள், அப்பளம், வடாம் என்று விற்பனையைப் பெருக்கிக் கொண்டவர்கள், ஸ்வீட் காரமும் செய்து விற்கத் தொடங்க, பரபரப்பாக இயங்குகிறது கடை. கணபதி’ஸ் கடை வடுமாங்காய் மற்றும் ஆவக்காய் ஊறுகாய்க்கு ரசிகர்கள் உண்டு. 50 வகை ஊறுகாய்கள் இப்போது இங்கே விற்பனை செய்யப்படுகின்றன. ஆன்லைனில் ஆர்டர் செய்ய வசதியாக விற்பனைக்கென தனி வலைதளமும் உண்டு. மினி ஜாங்கிரி, லட்டு, பாதுஷா என்று ஸ்வீட்களை தட்டில் அடுக்கி ருசி பார்த்துவிட்டுக் கிளம்பினோம். கோயில் வண்ண விளக்குகளுடன் ஒளிர்ந்து கொண்டிருக்க, கலைநிகழ்ச்சிகள் களை கட்டியிருந்தன. சாமி திருவீதியுலா வந்து கொண்டிருந்தார். நமக்கு இன்னொரு நாள்; இன்னொரு உலா!!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism