Published:Updated:

``கடைக்கு ஏன் அப்படிப் பெயர் வெச்சேன் தெரியுமா..?" - `எங்க அப்பா கடை' ஹரி

``அப்பாவோட இறப்புக்குப் பிறகு கடையில சில மாற்றங்கள் நடந்தது. அந்த நேரம்தான் என் மக பிறந்திருந்தா. அவ சொல்ற மாதிரி இருக்கணும்னு, `எங்க அப்பா கடை - ஐஸ்வர்யா'னு பேரை மாத்திட்டோம்.’’

எங்க அப்பா கடை
எங்க அப்பா கடை

சென்னை, கோடம்பாக்கம் பிரதான சாலைக்கெனப் பல லேண்ட்மார்க்குகள் இருந்தாலும், 'எங்க அப்பா கடை' டீ ஸ்டாலுக்குத் தனி இடம் உண்டு. 'பெயர் வித்தியாசமாக இருக்கிறதே' எனக் கடைக்கு விசிட் அடித்தால், இளையராஜா படங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன. கூடவே, அவர் இசையில் பாடிய, பாடல் வரிகள் எழுதியவர்களுடைய படங்களும். 'என்ன சார் எல்லாமே வித்தியாசமா இருக்கு' என்று கடை உரிமையாளர் ஹரி நாராயணனிடம் கேட்டால், அத்தனைக்கும் காரணமான தன் மகள் பாசத்தைச் சொல்லி நெகிழவைத்தார் மனிதர்.

Enga appa kadai
Enga appa kadai

``இந்தக் கடை எங்க அப்பா ஆரம்பிச்சது. தொழில் தொடங்கி 40 வருஷமாச்சு. ஆரம்பத்துல இதன் பெயர் `சுமதி டீ ஸ்டால்'னு இருந்துச்சு. சுமதி, என் தங்கச்சி பெயர். அப்பாவோட இறப்புக்குப் பிறகு கடையில சில மாற்றங்கள் நடந்தது. அந்த நேரம்தான் என் மக பிறந்திருந்தா. அவ சொல்ற மாதிரி இருக்கணும்னு, `எங்க அப்பா கடை - ஐஸ்வர்யா'னு பேரை மாத்திட்டோம். வழக்கமா எல்லாரும் கேட்கிறதுதான்... அப்படியென்ன மக மேல அவ்வளவு பாசம்னு. எட்டு வருஷம் தவமிருந்து பெத்த புள்ள அவ, பாசம் எவ்வளவு இருக்கும்!'' - ஆனந்தக் கண்ணீர் அரும்புகிறது ஹரி நாராயணனுக்கு.

``கல்யாணத்துக்கு அப்புறம் எட்டு வருஷமா எங்களுக்குக் குழந்தை இல்ல. எல்லா கோயில்ளுக்கும் போய் வந்தோம், டாக்டர்களையும் சந்திச்சோம். எதுவும் பலனில்ல. சுபகாரியங்கள்ல ஒதுக்கப்பட்டோம். நண்பர்கள், உறவினர்கள் யாரும் மதிக்கல. கேள்விகளால மன உளைச்சலுக்கு ஆளானோம். என் மனைவி சிரிப்பையே மறந்துபோயிட்டாங்க. அந்தக் கொடுமையான காலகட்டத்துல, இளையராஜா சாரோட இசைதான் எனக்கு மருந்தா, ஆறுதலா இருந்துச்சு. அதுதான் என்னை ஆசுவாசப்படுத்துச்சு. அது மட்டும் இல்லையினா, என் நிலைமை ரொம்ப மோசமாகியிருக்கும்'' என்றவர், தன் மகள் பிறந்தது பற்றிச் சொன்னார்.

Hari Narayanan's family
Hari Narayanan's family

``எங்க வீட்டுலயும் ஒரு தொட்டில் கட்டிட மாட்டோமான்னு ஏங்கிக்கிடந்தோம். அந்த அதிசயம் நடந்தது. 2005-ம் வருஷம் என் மனைவி கருவுற்றாங்க. ஐஸூ குட்டி பொறந்தா. அதுக்கு அப்புறம்தான் நானும் என் மனைவியும் மறுபிறவி எடுத்து வாழ ஆரம்பிச்சோம். எங்களையும் சக மனுஷங்களா மதிக்க ஆரம்பிச்சாங்க. எங்க வாழ்க்கைக்கே அர்த்தம் கிடைச்சது. எங்களை எல்லோரும் 'ஐஸு அம்மா', 'ஐஸு அப்பா'னு கூப்பிட ஆரம்பிச்சப்போ, நாங்க அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல.

என்னைவிட அதிக மனஅழுத்தத்துல இருந்த என் மனைவி, ஐஸு வந்ததுக்கு அப்புறம்தான் இருள்ல இருந்து மீண்டு வந்தாங்க. இத்தனை மாற்றங்களுக்கும் காரணமான எங்க ஐஸு பேரை கடைக்கு வைக்கலாம்னு நினைச்சோம். 'அப்பா'னு என்னைக் கூப்பிட ஒரு குழந்தைக்காக எத்தனை வருஷம் காத்திருந்தேன்?! அதனால, கடை பெயரை, 'எங்க அப்பா கடை - ஐஸ்வர்யா'னு என் மக சொல்ற மாதிரி வெச்சோம். கடை நுங்கம்பாக்கத்துல இருந்தாலும், எங்க வீடு முகப்பேர்ல இருக்கு'' என்ற ஹரி நாராயணன், சந்தோஷத்தில் பாட ஆரம்பிக்கிறார்...

Enga appa kadai
Enga appa kadai

"தாயும் நானே தங்க இளமானே, தாலாட்டு பாடும் தாயும் நானே, வண்ணப்பூந்தேனே..." - இசை ஞானியின் பாடல், சூழலைத் தாலாட்டுகிறது.

"மறுபடியும் இதை நான் சொல்லணும்னு தோணுது. யாருமே துணையா இல்லாத காலத்துல, இளையராஜா சாரோட பாடல்கள்தான் எங்க வெறுமையை விரட்டுச்சு. அவர் பாட்டு எனக்கு நண்பன் மாதிரி. அவர் மட்டுமல்ல, அவரோட கைகோத்து எங்களுக்கு இசை சிகிச்சை கொடுத்தது, அவர் இசையில் பாடிய பாடகர்களும், பாடல் ஆசிரியர்களும்தான். அதனாலதான், அவங்க படங்களையும் கடைமுழுக்க ஒட்டிவெச்சிருக்கேன்'' என்கிறார் பரவசத்துடன்.

Enga appa kadai
Enga appa kadai

இளையராஜாவுடன், வாலி, வைரமுத்து தொடங்கி எஸ்.பி.பி, சுசீலா, ஜானகி வரை 'என் அப்பா கடை'க்குள் சிரிக்கிறார்கள்.

''என் மகளும், ராஜா சாரும் இல்லையினா..." - சிரித்துக்கொண்டே பெருமூச்சுவிடுகிறார் ஹரி நாராயணன்.
Vikatan