Published:Updated:

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

நங்கநல்லூர் பத்மா

பிரீமியம் ஸ்டோரி
நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

பால் பாயசம்

தேவை: பால் - ஒரு லிட்டர், அரிசி - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 10, நெய் - ஒரு டீஸ்பூன்.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: அரிசியை ரவை பதத்துக்கு உடைத்து குக்கரில்வைத்து ஒரு பங்கு அரிசிக்கு ஐந்து பங்கு தண்ணீர்விட்டு ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். சாதம் நன்கு குழைந்தவுடன் பாலுடன் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். கொதித்து நன்றாகக் கெட்டியானதும் சர்க்கரையைச் சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்த்து ஏலக்காய்த்தூளும் சேர்த்துக் கலக்கவும்.

நெய் அப்பம்

தேவை: கோதுமை ரவை - 100 கிராம், அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் - 100 கிராம், தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 மில்லி.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: கோதுமை ரவை, அரிசி இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். ஊறவைத்த அரிசி, கோதுமையைத் தண்ணீர்வடித்து, வெல்லத் தண்ணீர்விட்டு தேங்காய்த்துருவலும் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லில் நெய்விட்டு மாவைச் சிறு கரண்டியால் ஒவ்வொரு குழியிலும் விட்டு இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மாவு அரைக்கும்போது சிறிய வாழைப்பழத் துண்டுகள் சேர்த்து அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேங்காய் சாதம்

தேவை: பாசுமதி அரிசி - 200 கிராம், தேங்காய் - ஒரு மூடி, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர்விட்டு குக்கரில் இரண்டு விசில்விட்டு இறக்கவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு உளுத்தம்பருப்பையும் சேர்த்து வறுத்து, தேங்காய்த்துருவலையும் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அகலமான பாத்திரத்தில் சாதத்தைச் சேர்த்து வறுத்த தேங்காய்த்துருவல், பெருங்காயத்தூள், உப்பு, வறுத்த முந்திரி, கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: முந்திரிப் பருப்புக்குப் பதிலாக வேர்க்கடலையையும் வறுத்துப்போடலாம்.

எலுமிச்சை சாதம்

தேவை: பாசுமதி அரிசி - 200 கிராம், எலுமிச்சைப்பழம் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: அரிசியைக் களைந்து குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, பொட்டுக்கடலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் சாதத்துடன் உப்பைச் சேர்த்து தாளித்ததைக் கொட்டி, எண்ணெய்விட்டு எலுமிச்சைச்சாறு பிழிந்து நன்றாகக் கிளறிக் கலக்கவும்.

குறிப்பு: வறுத்த வேர்க்கடலை, முந்திரிப்பருப்பும் சேர்த்துக்கொள்ளலாம்.

பாஸந்தி

தேவை: பால் - 500 மில்லி, சர்க்கரை - 200 கிராம், குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: பாலைக் கொதிக்கவைத்து மேலே படியும், பாலாடைகளை எடுத்துவிட்டு, பிறகு சர்க்கரையைச் சேர்த்து 300 மில்லி வரும் வரை கிளறி இறக்கி, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பருப்பு வடை

தேவை: கடலைப்பருப்பு - 150 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், தோல் சீவி நறுக்கிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 250 மில்லி.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக சிறிது கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் வடைகளைத் தட்டிப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபுறமும் வடைகளைத் திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: வாழைப்பூ, முட்டைகோஸ், கேரட் என ஏதாவது ஒரு காயைப் பொடியாக நறுக்கிப்போட்டும் வடை தயாரிக்கலாம்.

தேங்காய் அரிசி பாயசம்

தேவை: அரிசி - 100 கிராம், தேங்காய்த்துருவல் - ஒரு கப், வெல்லம் - 200 கிராம், முந்திரிப்பருப்பு - 10, நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 250 மில்லி.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: அரிசியை ரவை பதத்துக்கு உடைத்து 500 மில்லி தண்ணீரைக் கொதிக்கவைத்து உடைத்த அரிசியைச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். அரிசி கொதித்து நன்கு வெந்ததும் தேங்காயைத்துருவல் சேர்க்கவும். வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அரிசி, தேங்காயுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துச் சேர்த்துக் கிளறி ஏலக்காய்த்தூள், பால் கலந்து இறக்கவும்.

குறிப்பு: பாயசத்தை இறக்கிவைத்தவுடன் வாழைப்பழம் அல்லது பலாச் சுளையைச் சிறு துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி பாயசத்துடன் சேர்க்கலாம்.

எள்ளு சாதம்

தேவை: பாசுமதி அரிசி - 200 கிராம், கறுப்பு எள் - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: அரிசியைக் களைந்து குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர்விட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெறும் வாணலியில் எள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து வைத்துக்கொள்ளவும். வறுத்த உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். சாதத்தை அகலமான பாத்திரத்தில் சேர்த்து பொடித்த எள், தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணெய்விட்டு நன்றாகக் கலக்கவும்.

தயிர் வடை

தேவை: உளுத்தம்பருப்பு - 200 கிராம், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 300 மில்லி, புளிப்பில்லாத தயிர் - 200 மில்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை, உப்பு - தேவையான அளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து மிளகு, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை நன்கு பிசைந்து சிறிதாக உருட்டி ஒரு வாழையிலையில் வைத்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தண்ணீரை லேசாக சூடாக்கி வடைகளைப் போட்டு உடனே எடுத்து, தயிரில் சேர்க்கவும். தயிரில் சேர்த்து ஒரு தட்டில்வைத்து வடைகளின் மேல் கடுகு தாளித்து, பரவலாக கேரட் துருவல் தூவி, மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி தூவிப் பரிமாறவும்.

வடைகளின் மேல் காராபூந்தி சேர்த்து வழங்கினால் சுவை மேலும் அதிகரிக்கும்.

அவல் கேசரி

தேவை: அவல் - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு - 20 நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: அவலை வெறும் வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஒரு பங்கு பொடித்த அவல் ரவைக்கு இரு பங்கு தண்ணீர்விட்டு தண்ணீர் கொதித்தவுடன் கேசரி பவுடர், ரவையைக் கொட்டி கிளறி வேகவிடவும். ரவை நன்கு வெந்து உதிரியாக வந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும். நன்கு வெந்து கெட்டியானதும் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

ராஜ்மா சுண்டல்

தேவை: ராஜ்மா - 200 கிராம், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: ராஜ்மாவைத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் தண்ணீர்விட்டு ஊறவைத்த ராஜ்மாவுடன் உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து கடுகு சிறிது வெடித்ததும் இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்க்கவும். வேகவைத்த ராஜ்மாவைத் தண்ணீர் வடித்துவிட்டுச் சேர்த்து அத்துடன் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

வெள்ளைக்கொண்டைக்கடலை சுண்டல்

தேவை: வெள்ளைக்கொண்டைக்கடலை - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: கொண்டைக்கடலையை நான்கு மணி நேரம் ஊறவைத்து தேவையான உப்பு சேர்த்து குக்கரில்வைத்து இரண்டு விசில்வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாயை கிள்ளிபோட்டு, வேகவைத்த கொண்டைக்கடலையைத் தண்ணீர் வடித்துச்சேர்க்கவும். இதில் தேங்காய்த்துருவல், துருவிய கேரட், நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

வெள்ளைக்காராமணி சுண்டல்

தேவை: வெள்ளைக்காராமணி - 200 கிராம், தேங்காய்த்துருவல், பெருங்காயத் தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: காராமணியை வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் தண்ணீர்விட்டு தேவையான உப்பு சேர்த்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு பெருங்காயத்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து, பின்னர் வேகவைத்த காராமணியைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

பாசிப்பயறு சுண்டல்

தேவை: பாசிப்பயறு - 100 கிராம், பொடித்த வெல்லம் - 400 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: பாசிப்பயறை லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் சேர்த்து தண்ணீர்விட்டு மூன்று விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தைக் கரையவிட்டு வடிகட்டி கெட்டியாக பாகு காய்ச்சவும். வெல்லப்பாகைச் சிறிது தண்ணீரில்விட்டு பார்த்தால் உருட்டுப்பதம் வர வேண்டும். அதுதான் சரியான பதம். வேகவைத்த பயிறை நன்றாக வடித்து பாகுடன் சேர்த்து தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

கடலைப்பருப்பு சுண்டல்

தேவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: கடலைப்பருப்பை தண்ணீர்விட்டு குக்கரில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்துத் தாளித்து, பொடியாக நறுக்கிய மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு சேர்த்து, வேகவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்துச் சேர்த்து, நன்றாகக் கிளறி தேங்காய்த்துருவலையும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

மொச்சை சுண்டல்

தேவை: காய்ந்த வெள்ளை மொச்சை - 200 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: மொச்சையை நான்கு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து கடுகு வெடித்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வேகவைத்த மொச்சையைத் தண்ணீர் வடித்துச் சேர்க்கவும். இத்துடன் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: தனியா (மல்லி), கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்துப்பொடித்து, இதில் கலந்தால் மேலும் சுவையாக இருக்கும்.

கல்கண்டு பாத்

தேவை: அரிசி - 200 கிராம், கல்கண்டு - 300 கிராம், முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - சிறிதளவு, நெய் - 100 மில்லி, பால் - 500 மில்லி.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: அரிசியுடன் பால் கலந்து குக்கரில் ஐந்து விசில்விட்டு இறக்கவும். சாதம் நன்கு குழைவாக வெந்துவிடும். கல்கண்டில் சிறிது தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து வேகவைத்த சாதத்துடன் கலக்கவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: தனியாக 250 மில்லி பாலை நன்றாகக் காய்ச்சி சிறிது கெட்டியானதும், கல்கண்டு பாத்துடன் கலந்தால் மேலும் சுவையாக இருக்கும்.

கறுப்புக்கொண்டைக்கடலை சுண்டல்

தேவை: கறுப்புக்கொண்டைக்கடலை - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: கறுப்புக்கொண்டைக்கடலையை நான்கு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் சிறிது தண்ணீர்விட்டு தேவையான உப்பும் சேர்த்து மூன்றிலிருந்து நான்கு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வேகவைத்த கொண்டைக்கடலை, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

பட்டாணி சுண்டல்

தேவை: பட்டாணி - 200 கிராம், பொடியாக நறுக்கிய மாங்காய் - ஒரு கப், துருவிய கேரட் - 4 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

'வறுத்துப் பொடிக்க: தனியா (மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: வறுத்துப்பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக்கொள்ளவும். பட்டாணியை மூன்று மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில்வைத்து அடுப்பில் ஏற்றி மூன்று விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு தாளித்து துருவிய கேரட், பொடியாக நறுக்கிய மாங்காய், நறுக்கிய மல்லித்தழை, தேங்காய்த்துருவல் சேர்த்து, வேகவைத்த பட்டாணியும் சேர்த்து, வறுத்துப்பொடித்ததையும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: தேங்காயைப் பொடியாகவும் நறுக்கிப் போடலாம். வெள்ளரித் துண்டுகள் சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.

வேர்க்கடலை சுண்டல்

தேவை: பச்சை வேர்க்கடலை - 200 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: வறுத்துப்பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக்கொள்ளவும். வேர்க்கடலையை ஐந்து மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, வேகவைத்த கடலையைத் தண்ணீர் வடித்துச்சேர்க்கவும். இத்துடன் வறுத்த பொடி, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

ஜீரா போளி

தேவை: வறுத்த ரவை - 200 கிராம், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 500 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: வறுத்த ரவையுடன் சிறிது தண்ணீர், கேசரி பவுடர், சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து மூடிவைக்கவும். சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து பாகு காய்ச்சவும். சர்க்கரை கொதித்து கெட்டியானதும் இறக்கவும். மாவைச் சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி கல்லில் வைத்து சிறிய அப்பள வடிவில் இட்டு, வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் ஒவ்வொன்றாகப் போட்டு, இருபுறமும் புரட்டிப் பொரித்து, ஜீராவில் போட்டு நன்கு புரட்டி ஒரு பெரிய தட்டில் வரிசையாக அடுக்கவும். ஆறியவுடன் மேலே சிறிதளவு ஜீரா சேர்க்கவும். ஜீராவில் அப்படியே ஒடித்துப்போட்டும் சாப்பிடலாம்.

குறிப்பு: பண்டிகைக்கு முதல் நாள் பொரித்து ஜீராவில் சேர்த்து மறுநாள் பாலை சூடாகக் காய்ச்சிவிட்டால் நன்றாக ஊறி ருசியாக இருக்கும்.

நட்ஸ் பக்கோடா

தேவை: கடலை மாவு - 100 கிராம், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 100 கிராம், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, பிஸ்தா பருப்பு - 10, பாதாம்பருப்பு - 10, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1, பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், பொடித்த முந்திரிப்பருப்பு, பொடியாக உடைத்த பாதாம்பருப்பு, வறுத்த வேர்க்கடலையையும் சிறிது உடைத்து, மிக்ஸியில் சேர்த்து பிஸ்தா பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவைப் பக்கோடா போடுவதுபோல் சிறியதாக கிள்ளிப்போட்டு இருபுறமும் திருப்பி நன்கு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: இந்த பக்கோடா மாவுடன் வெங்காயம் சேர்த்தும் தயாரிக்கலாம்.

பால் கொழுக்கட்டை

தேவை: பச்சரிசி - 200 கிராம், பொடித்த வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பால் - 200 மில்லி.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து, தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் அரைத்த மாவைச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். தண்ணீரைச் கொதிக்கவைத்து உருண்டைகளைச் சேர்த்து நன்றாக வேகவிடவும். வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டி, வேகவைத்த உருண்டைகளுடன் சேர்க்கவும். இதில் ஏலக்காய்த்தூள், பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

பருப்புக் குணுக்கு

தேவை: துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 4, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, பொடியாக நறுக்கிய புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்துக்கொள்ளவும். இதில் தோல் சீவி நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். இவற்றுடன் சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

முந்திரி பாதாம் தேங்காய் பர்பி

தேவை:பாதாம்பருப்பு - 20, சர்க்கரை - 250 கிராம், முந்திரி - 100 கிராம், துருவிய தேங்காய் - ஒரு மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 200 மில்லி.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: பாதாம்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் இவற்றுடன் பால் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை எடுத்துவைத்து அரைத்த விழுது ஒரு பங்குக்கு இரண்டு பங்கு சர்க்கரை சேர்க்கவும். ஒரு கனமான வாணலியில் இவற்றைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி இறக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் தூவி நன்றாகக் கிளறி கெட்டியாக பர்பி பதம் வந்ததும், ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய பர்பியைக் கொட்டி ஆறியதும் துண்டு துண்டுகளாகப் போடவும்.

குறிப்பு: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் சுவை சேர்த்தும் தயாரிக்கலாம்.

கலர் பூந்தி

தேவை: கடலை மாவு - 400 கிராம், புதினா - இரண்டு கைப்பிடி அளவு, கேரட் - 2, இஞ்சி - 2 பெரிய துண்டுகள், பீட்ரூட் - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 500 மில்லி, பெருங்காயத்தூள் - கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: கடலை மாவை நான்கு பகுதிகளாகப் பிரிக்கவும். புதினாவைத் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து நன்றாக வடிகட்டி, அந்தத் தண்ணீரில் 100 கிராம் மாவுடன் சிறிது உப்பு சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். கேரட்டை தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். 100 கிராம் மாவுடன் கேரட் சாற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைத்து தனியாக வைக்கவும். பீட்ரூட்டைத் தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் சிறிது தண்ணீர்விட்டு பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து 100 கிராம் மாவுடன் சிறிது உப்பு சேர்த்து, பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைத்து தனியாக வைக்கவும். இஞ்சியைத் தோல் சீவி நறுக்கி அரைத்து வடிகட்டி சாறு எடுத்து, மீதமுள்ள 100 கிராம் மாவில் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். எல்லா கலர் மாவும் ரெடியாக உள்ளது. வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், மிதமான தீயில் வைத்து பூந்தி கரண்டியில் ஒவ்வொரு கலர் மாவையும் தனித்தனியாக ஊற்றி பூந்தி தயாரிக்கவும். அகலமான பாத்திரத்தில் எல்லா கலர் பூந்திகளையும் சேர்த்து மிளகுத்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து சேர்த்து நன்றாகக் குலுக்கிக் கலக்கவும்.

கர்ச்சிக்காய்

தேவை: அரிசி மாவு - 200 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பொடித்த வெல்லம் - 100 கிராம், தேங்காய்த்துருவல் - ஒரு மூடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அகலமான பாத்திரத்தில் சிறிதளவு அரிசி மாவு, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சூடான நீரை கைபொறுக்கும் சூட்டில் சேர்த்துப் பிசைந்து, சிறிய கிண்ணம் போல் சொப்பு செய்துகொள்ளவும். தேங்காயைப் பொன்னிறமாக வறுத்து, பொட்டுக்கடலையும் சிறிது சூடுபடுத்தி வெல்லம் சேர்த்து மிக்ஸியில் பொடித்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். சிறிய கிண்ணம் வடிவத்தில் செய்த மாவின் உள்ளே சிறிது பூரணத்தை வைத்து இரு முனைகளையும் பிரியாமல் ஒட்டி மூடவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மூடி வைத்திருக்கும் கர்ச்சிக்காய்களை ஒன்று அல்லது இரண்டைப் போட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிசைந்துகொண்டு ஓரம் பிரியாமல் கவனமாக ஓட்ட வேண்டும்.

எள்ளுப்பொடி

தேவை: கறுப்பு எள் - 100 கிராம், பொடித்த வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் வறுத்து, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொண்டு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

சிவப்புக்காராமணி இனிப்பு சுண்டல்

தேவை: சிவப்புக்காராமணி - 200 கிராம், வெல்லம் - 400 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: காராமணியை லேசாக வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இதை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு நான்கு விசில் வந்ததும் எடுத்து தண்ணீரை வடிக்கவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி கெட்டியாக பாகு காய்ச்சி வேகவைத்த காராமணி, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

வெல்லப்புட்டு

தேவை: பச்சரிசி - 250 கிராம், பாகு வெல்லம் - 500 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 200 மில்லி, தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் - சிறிதளவு.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

செய்முறை: அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் அரிசி நன்றாக பதமுள்ள மாவாகி விடும். இதைச் சலித்துக்கொள்ளவும். சலித்து மாவு தயாரித்ததும் வெறும் வாணலியில் மாவை இரண்டு கைப்பிடி அளவு போட்டு பொன்னிறமாக வறுக்கவும். தண்ணீரை லேசாக சூடுபடுத்தி வறுத்த மாவில் கலந்து சூடான நீரில் கேசரி பவுடர் சேர்த்து மாவில் தெளித்து பிசிறி, ரவை சல்லடையில் போட்டு சலித்துக்கொள்ளவும். ஒரு மெல்லிய துணியை நனைத்துப் பிழிந்து, பிசிறிய சலித்த மாவை துணியில் வைத்து மூடி இட்லி பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைத் தண்ணீர்விட்டு சிறிது கொதிக்கவைத்து வடிகட்டி மீண்டும் அடுப்பில்வைத்து பாகாக உருட்டுப் பதம் வரும் அளவு காய்ச்சி இறக்கவும். அகலமான பாத்திரத்தில் வேகவைத்த புட்டை நன்றாக உதிர்த்து பாகைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: தேங்காய் சேர்க்காமல் தனியாக எடுத்துவைத்தால், நான்கு நாள்கள்கூட வைத்துச் சாப்பிடலாம். தேவையானபோது தேங்காய்த்துருவல் சேர்க்கலாம்.

பெண் தெய்வங்களைப் போற்றும் நவராத்திரி, பெண்களுக்கும் முக்கியமான பண்டிகை. நவராத்திரியின் ஒன்பது நாள்களும் உறவுகளையும் நண்பர்களையும் அழைத்து விருந்தோம்பி மகிழும் அந்த உற்சாகம், நவராத்திரி ஆரம்பிப்பதற்கு முன்பே அவர்களைத் தொற்றிக்கொள்ளும். ஒவ்வோர் ஆண்டும் புதிது புதிதாக கொலு பொம்மைகள் வாங்குவது, விருந்தினர்களுக்குப் பார்த்துப் பார்த்து அன்பளிப்புகளைத் தேர்வுசெய்வது, ஒன்பது நாள்களுக்கும் விதவிதமான பூஜைகள், நைவேத்தியங்கள் என கொண்டாட்டங்களுக்குக் குறையே இருக்காது.

நவராத்திரி ஸ்பெஷல்... 30 வகை பாரம்பர்ய ரெசிப்பிகள்

சில மாநிலங்களில் ஒன்பது நாள்களாகவும் சில மாநிலங்களில் பத்து நாள்களாகவும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முப்பெரும் தேவிகளான மலைமகள் (பார்வதி), அலைமகள் (லட்சுமி), கலைமகள் (சரஸ்வதி) ஆகிய பெண் தெய்வங்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மூதாதையர்களின் சில பாரம்பர்ய பழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அற்புத விழா நவராத்திரி. கொரோனா அச்சுறுத்தல் இந்த வருடம் எல்லா பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களிலும் பிரதிபலித்தாலும், கொலு வைப்பதிலோ, தினமும் மாலையில் செய்யும் சுண்டல் மற்றும் பிரசாதங்களுக்கோ எந்தக் குறையும் வைக்கவேண்டியதில்லை.

அந்த வகையில் நவராத்திரிக்குச் செய்து அன்போடு சேர்த்து பரிமாறக்கூடிய 30 வகை கொலு பட்சணங்கள் தயாரிக்கும் முறைகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் நங்கநல்லூர் பத்மா. பல நூல்களை எழுதிய அனுபவம் வாய்ந்த இவரின் பாரம்பர்ய நவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பிகள் இந்த இணைப்பிதழில் இடம்பிடித்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு