Published:Updated:

இருட்டுக்கடை அல்வா: கொரோனா அச்சத்தால் உயிரிழந்த ஹரிசிங்கின் முதலாமாண்டு நினைவு நாள்... கடை திறப்பு!

ஹரிசிங் - இருட்டுக்கடை அல்வா
ஹரிசிங் - இருட்டுக்கடை அல்வா

நெல்லையின் அடையாளங்களுள் ஒன்றாக இருப்பது, இருட்டுக்கடை அல்வா. கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் இருட்டுக்கடை திறக்கப்பட்டதால் மாலை நேரங்களில் உள்ளூரைச் சேர்ந்த அல்வா பிரியர்கள் அங்கு உற்சாகமாகக் கூடுகிறார்கள்.

நெல்லையப்பர் கோயிலின் எதிரில் எந்தவிதமான விளம்பரப் பலகையும் இல்லாமல் 40 வாட்ஸ் குண்டு பல்ப் வெளிச்சத்தில் பரபரப்பாக இயங்கி வந்தது இருட்டுக் கடை. நெல்லையில் எத்தனையோ அல்வா கடைகள் இருந்தபோதிலும் இருட்டுக்கடை அல்வாவுக்கு தனி சுவை உண்டு.

இருட்டுக்கடை அல்வா (பழைய படம்)
இருட்டுக்கடை அல்வா (பழைய படம்)

மாலை 5 மணிக்கு திறக்கப்படும் இருட்டுக்கடையின் வியாபாரம் 8 மணிக்குள் முடிந்துவிடும். நூற்றாண்டு கண்ட இந்தக் கடையின் உரிமையாளர் சுலோச்சனா பாய். ஆனால், இவரது உறவினரான ஹரிசிங்தான் மேற்பார்வை செய்து வந்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவர், கிலோ கணக்கில் அல்வா வாங்குவோரையும், இலையில் 50 அல்லது 100 கிராம் மட்டுமே வாங்கி அங்கேயே சாப்பிடும் உள்ளூர் மக்களையும் சமமாகவே கவனிப்பார்.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை பரவியபோது ஹரிசிங்குக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தன்னால் வாடிக்கையாளர்களுக்கும் கொரோனா நோய்த் தொற்று பரவியிருக்குமோ என்கிற ஆதங்கத்தில் மனமுடைந்த அவர் கடந்த ஆண்டு இதே தினத்தில் (ஜூன் 25) தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் கடையை அவரது பேரன் சூரஜ் நிர்வகிக்கத் தொடங்கினார். ஆனால், மீண்டும் இரண்டாவது அலையின் காரணமாக கடை மூடப்பட்டது.

மீண்டும் திறக்கப்பட்ட இருட்டுக்கடை
மீண்டும் திறக்கப்பட்ட இருட்டுக்கடை

இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் இருட்டுக்கடை திறக்கப்பட்டுள்ளது. அதனால் நெல்லை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கடையில் அல்வா வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். “கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வியாபாரத்தை நடத்துகிறோம். நூறு ஆண்டுகளாக அதே தரத்துடன் அல்வா விற்பனை செய்வதால் மக்களிடம் எங்கள் கடைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது" என்றார் சூரஜ்.

நெல்லையப்பர் கோயில் வாசலில் அமைந்திருக்கும் இருட்டுக்கடையின் அல்வா ருசிக்குப் பழகிப் போன நெல்லை வாசிகளுக்கு தற்போது கடை திறக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு