Published:Updated:

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: எஸ்.லெட்சுமி ஸ்ரீனிவாசன்

பிரீமியம் ஸ்டோரி

`முதன்முதலில் ரொட்டியைத் தயாரித்த பண்டைய எகிப்தியர்களே கேக்கையும் உருவாக்கியிருக்க வேண்டும்’ என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். காலப்போக்கில் மாவில் சுவை கூட்ட தேன் கலந்திருக்கிறார்கள். அந்த இனிப்பு ரொட்டியையே உலகின் முதல் கேக் எனலாம். பிறகு பழங்கள், உலர்பழங்கள், பருப்பு வகைகள் என்று ஒவ்வொன்றும் கேக்குடன் இணைந்துகொண்டன.

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

பழங்காலப் பண்டமாக இருந்தாலும் இன்றைய குழந்தைகளையும் கவரும் தன்மை கேக்குக்கு உண்டு. கூடவே குக்கீஸ், ஐஸ்க்ரீம்களுக்கும்தாம். இந்தச் சுவை உணவுகளை ஆரோக்கியமான வழியில் எளிதாக வீட்டிலேயே செய்ய கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் எஸ்.லெட்சுமி ஸ்ரீனிவாசன்.

எஸ்.லெட்சுமி ஸ்ரீனிவாசன்
எஸ்.லெட்சுமி ஸ்ரீனிவாசன்

2020 புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்க அடுத்தடுத்த பக்கங்கள் உதவும்!

ரெட் வெல்வெட் கேக் வித் க்ரீம் சீஸ் ஐசிங்

தேவையானவை - கேக் செய்ய:

  • மைதா - 150 கிராம்

  • கோகோ பவுடர் - 10 கிராம்

  • பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

  • உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

  • உப்பு இல்லாத வெண்ணெய் - 50 கிராம்

  • சர்க்கரை - 150 கிராம்

  • முட்டை - ஒன்று

  • சூரியகாந்தி எண்ணெய் - 100 கிராம்

  • வினிகர் - 5 மில்லி

  • வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

  • தயிர் - 100 மில்லி

  • ராஸ்பெர்ரி ஃபுட் கலர் - ஒரு டீஸ்பூன்

க்ரீம் சீஸ் செய்ய:

  • க்ரீம் சீஸ் - 250 கிராம்

  • விப்பிங் க்ரீம் - 150 கிராம்

  • வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

  • ஐசிங் சுகர் - 75 கிராம்

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

செய்முறை:

வெண்ணெயை நன்றாக அடித்து சர்க்கரை சேர்த்து நுரைபொங்க அடிக்கவும். முட்டையைச் சேர்த்து க்ரீமாக வரும்படி அடிக்கவும். பின்னர் சூரியகாந்தி எண்ணெய், வினிகர் சேர்த்து அடிக்கவும். வெனிலா எசென்ஸையும் தயிரையும் இத்துடன் சேர்த்து அடிக்கவும். மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், ராஸ்பெர்ரி ஃபுட் கலர், உப்பை நன்றாகக் கலந்து மூன்று முறை சலித்து வைக்கவும். அடித்துவைத்த கலவையுடன் இதைச் சேர்க்கவும். வெண்ணெய் தடவிய கேக் தட்டில் ஊற்றவும்.

அவனை (oven) 180 டிகிரி செல்ஷியஸுக்கு பிரீஹீட் செய்யவும் 10 நிமிடங்கள் கழித்து கேக் தட்டை வைத்து 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கேக் தயாரித்தவுடன் சிறிது நேரம் ஆறவிடவும். இரண்டு அல்லது மூன்று அடுக்காக குறுக்கில் வெட்டவும்.

க்ரீம் சீஸ் செய்யும் முறை:

க்ரீம் சீஸை நன்றாக அடித்து அதனுடன் கெட்டியாக அடித்த விப்பிங் க்ரீமை சேர்க்கவும். அதனுடன் வெனிலா எசென்ஸ், ஐசிங் சுகர் சேர்த்து கெட்டியாக வரும்வரை அடித்து கேக் லேயரில் தடவவும். எல்லா பக்கமும் தடவிய பின் ஸ்டார் நாசில் (nozzle) பயன்படுத்தி டிசைன் செய்யவும். கொஞ்சம் ரெட் வெல்வெட் கேக் துகள்களை அலங்கரிக்க உபயோகிக்கவும்.

இதே கேக்கை குக்கரில் செய்யும் முறை:

குக்கரின் அடியில் 2 இன்ச் அளவுக்கு உப்பு போடவும். 10 நிமிடங்கள் அதிக தீயில் இருக்க வேண்டும் பின்னர் உப்பின் மேல் ஒரு ஸ்டாண்டு வைத்து அதில் கேக் தட்டை வைத்து மிதமான தீயில் 25 முதல் 30 நிமிடங்கள் சமைக்கவும். குக்கரில் ரப்பர் (கேஸ்கட்), விசில் போட வேண்டாம். ரெட் வெல்வெட் கேக் தயார்

கோகோ ஒரு நிழல் விரும்பிப் பயிர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிவி மூஸ்

தேவையானவை:

  • கிவிப்பழம் - 2

  • விப்பிங் க்ரீம் - 150 கிராம்

  • வடிகட்டிய தயிர் (hung curd) - 15 கிராம்

  • வெஜ் ஜெலெட்டின் - 3 கிராம்

  • ஃப்ரெஷ் க்ரீம் - 100 மில்லி

  • சர்க்கரை - 10 கிராம்

  • எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன்

  • எலுமிச்சைத் தோல் துருவல் - ஒரு டீஸ்பூன்

  • டைஜஸ்டிவ் பிஸ்கட் - 6

ஜெல்லி தயாரிக்க:

  • கிவி ஜூஸ் / கிவி கிரஷ் - 100 மில்லி

  • வெஜ் ஜெலெட்டின் - 2 கிராம்

அலங்கரிக்க:

  • ஸ்கூப் செய்த கிவிப்பழம் - சிறிதளவு

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

செய்முறை:

ஆறு கண்ணாடி டம்ளர்களில் பிஸ்கட்டை முதலில் வைக்கவும். கிவிப்பழத்தைத் துண்டுகளாக்கி கண்ணாடி டம்ளரின் பக்கவாட்டில் வைக்கவும். வடிகட்டிய தயிருடன் விப்பிங் க்ரீம், ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை சேர்த்து அடிக்கவும். ஜெலெட்டினை தண்ணீரில் சேர்த்து உருக்கவும். இதை தயிர்க்கலவையுடன் சேர்க்கவும். எலுமிச்சைத் தோல் துருவலைச் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து அதை பிஸ்கட்டையும் கிவியையும் வைத்த டம்ளரில் நிரப்பவும். ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் செட் செய்யவும். கிவி கிரஷ் அல்லது ஜூஸை ஜெலெட்டினுடன் சேர்த்து தயிர்க் கலவையை மேலே மெதுவாக ஊற்றவும். பின்னர் கிவிப் பழத்தை ஸ்கூப் செய்து அதன் மீது அலங்கரிக்கவும்

`பசலிப்பழம்’ என்று தமிழில் அழைக்கப்படுவது கிவிப்பழமே!

பவுன்ட்டி சாக்லேட் பால்ஸ்

தேவையானவை

  • கொப்பரைத் தேங்காய் - 75 கிராம்

  • கண்டன்ஸ்டு மில்க் - 125 கிராம்

  • வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்

  • காம்பவுண்டு டார்க் சாக்லேட் - 200 கிராம்

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (காம்பவுண்டு டார்க் சாக்லேட் தவிர) கலந்து ஃபிரீசரில் வைத்து எடுக்கவும். அதைத் துண்டுகளாகவோ, உருண்டைகளாகவோ செய்ய வேண்டும். காம்பவுண்டு டார்க் சாக்லேட்டை உருக்கி அதில் இந்த பால்ஸை அல்லது துண்டுகளைப் புரட்டியெடுத்து வைக்கவும். பவுன்ட்டி சாக்லேட்ஸ் தயார்.

தேங்காய், இந்தோனேசியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தது.

கிராண்டுபெர்ரி பிஸ்தா குக்கீஸ்

தேவையானவை:

  • வெண்ணெய் - 125 கிராம்

  • பொடித்த சர்க்கரை - 80 கிராம்

  • மைதா - 200 கிராம்

  • பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

  • வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

  • பால் - ஒரு டீஸ்பூன்

  • உலர்ந்த கிராண்டுபெர்ரி - 75 கிராம்

  • பிஸ்தா (உடைத்தது) - 60 கிராம்

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

செய்முறை:

மைதாவையும் பேக்கிங் பவுடரையும் கலக்கவும். இதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்துப் பிசைந்து வைக்கவும். அதில் வெனிலா எசென்ஸ், உலர்ந்த கிராண்டுபெர்ரி, பிஸ்தா சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் பால் சேர்க்கலாம். இந்தக் கலவையை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் சம அளவு உருண்டைகளாக எடுத்து பேக்கிங் தட்டில் வைத்து, 180 டிகிரி செல்ஷியஸில் பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 15 முதல் 20 நிமிடங்கள் பேக் செய்யவும். ஆறியதும் பரிமாறவும்.

வெண்ணெய் 35 டிகிரி செல்ஷியஸில் உருகி நெய்யாகும்.

வால்நட் டேட் மஃபின்ஸ்

தேவையானவை:

  • துண்டுகளாக்கப்பட்ட பேரீச்சை - அரை கப்

  • துண்டுகளாக்கப்பட்ட வால்நட்ஸ் - கால் கப்

  • இன்ஸ்டன்ட் காபி பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • வெண்ணெய் - அரை கப்

  • கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்

  • மைதா - அரை கப்

  • பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

  • பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

  • வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

  • வெதுவெதுப்பான நீர் - ஒரு டேபிள்ஸ்பூன்

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

செய்முறை:

இன்ஸ்டன்ட் காபி பவுடரை வெதுவெதுப் பான நீரில் கரைத்துவைக்கவும். நறுக்கிய பேரீச்சைத் துண்டுகளை ஒரு கப்பில் சூடான நீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

வெண்ணெயை நன்றாக அடித்து கண்டன்ஸ்டு மில்க் கலந்து அடித்து வைக்கவும். மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரைக் கலந்து மூன்று முறை சலித்து வைக்கவும். பேரீச்சையை நன்றாகப் பிசைந்து நறுக்கப்பட்ட வால்நட்ஸ் சேர்க்கவும். இத்துடன் வெனிலா எசென்ஸ், காபி கலவையையும் சேர்க்கவும். அனைத்தையும் கலந்து ஃப்ரிட்ஜில் 30 நிமிடங்கள் வைக்கவும். கப் கேக் கப்பில் அதை ஊற்றி அவனில் (oven) 180 டிகிரி செல்ஷியஸில் 20 முதல் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.

பேரீச்சை பெர்சியாவில் தோன்றியிருக்கக்கூடும் எனக் கருதுகிறார்கள் வரலாற்றாளர்கள்.

கேக் சிக்கில்

தேவையானவை

  • கேக் துகள்கள் - ஒரு கப்

  • விப்பிங் க்ரீம் - தேவையான அளவு

  • டார்க் சாக்லேட் - தேவையான அளவு

  • ஐஸ் குச்சி, ஸ்பிரிங்கிள்ஸ், உண்ண தகுந்த பூக்கள் (ஃபோண்டன்ட்) - தேவைக்கேற்ப

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

செய்முறை:

கேக்கை நன்றாக உதிர்க்கவும். அதனுடன் அடித்த விப்பிங் கிரீம் சேர்த்து நன்கு கிராக் இல்லாமல் சாஃப்ட்டாக பிசையவும். அதை கேக் சிக்கில் மோல்டில் வைத்து ஐஸ் குச்சி வைத்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும். டார்க் சாக்லேட்டை உருக்கி ஒரு கிளாஸில் எடுத்துக்கொள்ளவும். நன்றாக செட் செய்த கேக்கை இதில் டிப் செய்து வைக்கவும். அதன் மீது அலங்கரிக்க ஸ்பிரிங்கிள்ஸ், குட்டி குட்டியான ஃபோண்டன்ட் ஃப்ளவர்ஸ், க்ளிட்டர்ஸ் வைக்கலாம்.

கேக்குக்கு `அணிச்சல்’ என்பது தமிழ்ப் பெயர்.

ஸ்ட்ராபெர்ரி பனக்கோட்டா

தேவையானவை:

  • ஃப்ரெஷ் க்ரீம் - 2 கப்

  • பால் - ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது)

  • சர்க்கரை - கால் கப்

  • ஜெலெட்டின் - 3 டீஸ்பூன்

  • வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

  • ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி பவுடர் - ஒரு பாக்கெட்

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் (ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி பவுடர் தவிர) நன்றாகக் கலந்து ஒரு கண்ணாடிக் குடுவையில் ஊற்றிவைக்கவும். இதை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி பவுடரை 300 மில்லி தண்ணீரில் கலந்து இந்தக் கலவையின் மீது ஊற்றவும். இதை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

ஸ்ட்ராபெர்ரியின் தாயகம் ஐரோப்பா.

நோ பேக் பிரௌனி

தேவையானவை:

  • சாக்லேட் (உருக்கியது) - அரை கப்

  • சாக்லேட் பிஸ்கட் - 10 (பொடிக்கவும்)

  • பொடித்த மாரி பிஸ்கட் - 16 (பொடிக்கவும்)

  • நறுக்கிய பாதாம், முந்திரி, வால்நட்ஸ் - அரை கப்

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் கலந்து ஒரு கப்பில் செட் செய்யவும். சிறிதளவு நட்ஸை அதன்மேல் அலங்கரிக்க உபயோகிக்கவும். ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும். பின்னர் கப்பில் இருந்து வெளியே எடுத்துப் பரிமாறவும்.

சாக்லேட் என்பது செவ்விந்தியர் மொழியிலிருந்து உருவான வார்த்தை.

பான் ஐஸ்க்ரீம்

தேவையானவை:

  • வெற்றிலை - 2

  • பான் எசென்ஸ் - 4 சொட்டுகள்

  • குல்கந்து - ஒரு டீஸ்பூன்

  • வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு கப்

  • ரோஜா இதழ்கள் - தேவைக்கேற்ப

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

செய்முறை:

வெனிலா ஐஸ்க்ரீம் உடன் குல்கந்து, மிகவும் பொடிதாக நறுக்கிய வெற்றிலை சேர்த்து அடித்துவைக்கவும். இதனுடன் பான் எசென்ஸ் சேர்க்கவும். இதை ஃப்ரீசரில் 12 மணி நேரம் வைக்கவும். பின்னர் ஐஸ்க்ரீம் கரண்டியால் ஸ்கூப் செய்து ரோஜா இதழ்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.

வெற்றிலையின் தாயகம் மலேசியா.

ரசமலாய் ஜார் கேக்

தேவையானவை:

  • விப்பிங் க்ரீம் - ஒரு கப்

  • மைதா - ஒரு கப்

  • வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • சூடான பால் - அரை கப்

  • பொடித்த சர்க்கரை - ஒரு கப்

  • முட்டை - 2

  • பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

  • ரசமலாய் எசென்ஸ் - அரை டீஸ்பூன்

  • உப்பு - அரை டீஸ்பூன்

  • ரசமலாய் - 6

  • மஞ்சள் ஃபுட் கலர் - 4 சொட்டு

  • பிஸ்தா - 6-10 (உடைக்கவும்)

  • குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

செய்முறை:

மைதா, பேக்கிங் பவுடர், உப்பைச் சலித்து வைக்கவும். வெண்ணெயைப் பாலுடன் கலந்து வைக்கவும். முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து அத்துடன் சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை அடிக்கவும். பின்னர் சலித்து வைத்த மாவு பொருள்களை சேர்த்துவிடவும்.வெண்ணெய் - பால் கலவையையும் ரசமலாய் எசென்ஸையும் இத்துடன் சேர்த்து, பேக்கிங் ட்ரேயில் வைத்து, 180 டிகிரி செல்ஷியஸுக்கு பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.

கேக் ஆறியவுடன் அதை உதிர்த்து எடுத்துக் கொள்ளவும். ஒரு ஜாரில் முதலில் கேக் துகள்களைப் போடவும். அதன் மேல் ஃபுட் கலர் கலந்த விப்பிங் க்ரீம் வைக்கவும். இதை மூன்று அல்லது நான்கு முறை அடுக்காக செய்யவும். இறுதியாக ஒரு ரசமலாய் வைத்து பிஸ்தா, குங்குமப்பூவால் அலங்கரிக்கவும்.

அனைத்து கேக் துகள்களிலும் இதே போல செய்துகொள்ளவும்.

உலகின் 7.5 கோடி மக்கள் பால் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு