Published:Updated:

``வயசானவங்களுக்குத்தான் இங்கே வேலை... ஏன் தெரியுமா?'' இட்லிக்கடை பாட்டி பிரேமா சொல்லும் காரணம்!

Idly Shop Grandma Prema
Idly Shop Grandma Prema

திருநெல்வேலியில் முதியவர்களுக்கு மட்டுமே வேலை தரும் இட்லிக் கடை பாட்டி.

"பாட்டிக் கடைக்குப் போலாமா?" என்று என் தோழி கூப்பிட்டதும், மறுக்காமல் கிளம்பினேன். அதற்கு இரண்டு காரணம், பாட்டியின் சுவையான உணவு. அடுத்தது, ரொம்பவே குறைவான விலை. இந்த இரண்டையும் கடந்து ஒரு விஷயம் பாட்டியின் கவனிப்பு. ஆமாம். நம் வயிற்றை மட்டுமல்ல, மனதையும் நிரப்பி அனுப்புவதில் பிரேமா பாட்டிக்கு ஈடு யாருமில்லை. ரொம்ப பில்டப் கொடுக்கிறீங்க... யார் அந்தப் பாட்டி என்றுதானே கேட்கிறீர்கள்? வாங்க பாட்டி கடைக்கே உங்களை அழைச்சிட்டு போறேன்.

Idly Shop
Idly Shop

பரபரப்பான திருநெல்வேலி, முருகன்குறிச்சி பகுதி கடைத்தெரு. இரவு 7 மணி பிரேமா பாட்டி கடையின் சாம்பார் வாசம் நம்மை அந்தக் கடைக்கு இழுத்துச் சென்றது. பாட்டி பம்பரமாகச் சுற்றி, வாடிக்கையாளர்களுக்கு டிபன் பரிமாறிக்கொண்டிருந்தார். இன்னொரு பாட்டி இட்லி அவித்துக்கொண்டிருக்க, மற்றொரு தாத்தா அவருக்கு உதவிக்கொண்டே டிபனைப் பரிமாறிக்கொண்டுமிருந்தார். புதிதாக வருபவர்களுக்கு இவர்களில் யார் முதலாளி, யார் வேலை செய்பவர் என்று தெரியாத அளவுக்கு எவ்வித அதிகாரமும் வேறுபாடு இல்லாமல் வேலைகளைப் பகிர்ந்து செய்துகொண்டிருந்தனர்.

"என்ன கண்ணு, சாப்பிடவா, பார்சலா?" என்று கேட்ட பிரேமா பாட்டியிடம், "இங்கேயே சாப்பிடுறோம் பாட்டி" என்று சொல்லிவிட்டு, கையைக் கழுவிவிட்டு உட்கார்ந்தோம். தாத்தா, வாழையிலையும் தண்ணீர் டம்பளரையும் வைத்தார். பிரேமா பாட்டி, தோசைக் கல்லில் சுடச் சுட தோசைச் சுட்டுக் கொண்டு வந்தார். அவருக்கு எப்படியும் வயது 50 - 55-க்குள் இருக்கும். ஆனால், இளவயதினரைப் போல, சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

"இந்தக் கடை வைக்கிறதுக்கு முன்னாடி வீட்டு வேலைதான் செஞ்சேன். வருமானம் பத்தலங்கிறதது ஒரு பக்கம். நாலு பேர்ட்ட வேலை செய்யறதைவிட, நாம நாலு பேருக்கு வேலைகொடுக்கற மாதிரி இருக்கணும்னு நினைப்பு ஒரு பக்கம். முதல்ல, வீட்டு வேலை செஞ்சுகிட்டே வடை மட்டும் சுட்டு வித்துட்டு இருந்தேன். அதுல 200 ரூபா வருமானம் வந்துச்சு. அதுக்கப்பறம் கடையை கொஞ்சம் கொஞ்சமா வளர்த்துட்டேன்" என்றவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவருக்கு இட்லி வைத்துவிட்டு வந்தார்.

Idly Shop
Idly Shop

"நம்ம கடையில தோசை 10 ரூபா, இட்லி 6 ரூபாதான். எப்படிக் கட்டுபடியாகுதுன்னு பல பேரு கேட்பாங்க. ரோட்டுக்கடையில பெரிய பணக்காரங்களா வரப்போறாங்க. வயத்துப் பசி தீர்ந்தா போதும்னு நினைக்கிறவங்கதான் வருவாங்க. அதனால, லாபத்தை ரொம்ப வெச்சிக்காம, அதேநேரம் நஷ்டமும் ஆயிடாம சிக்கனமா பொருள்களைப் பயன்படுத்துறோம். அதனாலதான் இந்த விலைக்கு விற்க முடியுது. முன்னாடியெல்லாம் எங்க தள்ளுவண்டி மட்டுதான் இந்தத் தெருவுல இருக்கும். இப்ப நிறைய கடைங்க வந்துருச்சு. போட்டியும் அதிகமாயிருச்சு. மழைக்காலத்துல வியாபாரம் அதிகம் இருக்காது. சில நாள் நஷ்டமாயிடும். அப்பெல்லாம் இன்னும் அதிகமா உழைப்பைப் போடணும்னுதான் தோணும். சில நாளு கடன் வாங்கி சமாளிச்சாலும் அடுத்தடுத்த நாள்ல லாபம் பார்த்து கடனை அடைச்சிடுவேன். வியாபாரத்துல கடன் கொடுக்க மாட்டேன்" என்று வழியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே தொடர்ந்து பேசுகிறார் பாட்டி.

"எந்த இடத்துலயுமே வயசானவங்க வேலை கேட்டுப்போனா, ஏதாச்சும் காரணம் சொல்லி தட்டிக் கழிச்சிடுவாங்க. வீட்டுச் சூழல் சரியில்லன்னுதான் வேலை தேடி இவங்க போவாங்க. வேலை கிடைக்கலன்னா ரொம்ப கஷ்டம் இல்லையா? அதனாலதான் என் கடையில் வயசானவங்களுக்கு மட்டும் வேலை கொடுக்கணும்னு முடிவு பண்ணினேன். இட்லி சுடுறவங்களுக்கு 55 வயசு இருக்கும். பரிமாற இவருக்கு 60 வயசுக்கு மேல இருக்கும். சம்பளம் நாளைக்கு 200 ரூபா. வேலைகள இழுத்துப்போட்டு எல்லோரும் சேர்ந்து செய்ஞ்சுடுவோம். அரசாங்கம் இப்ப பிளாஸ்டிக் பை வெச்சிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டதால, பார்சல் வாங்க வர்றவங்கள தூக்குச் சட்டி எடுத்து வரச் சொல்லிடுவேன். எங்க கடை சாம்பார்ன்னா எல்லோருக்கும் பிடிக்கும். அதுக்கு காரணம், தேங்காய் எண்ணெய்லதான் தாளிப்பேன்" என்று பாட்டிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, காரிலிருந்து ஒரு குடும்பம் இறங்கி, பார்சல் வாங்கிக்கொண்டு சென்றது.

Idly Shop
Idly Shop

"ஏம் பாட்டி, வயசான காலத்துல ஏன் இப்படி வேலை செஞ்சி கஷ்டப்படணும்?" என்று கேட்டதற்கு, "இதிலென்ன கண்ணு கஷ்டம் இருக்கு. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே என் வீட்டுக்காரர் இறந்துட்டாரு. ரெண்டு புள்ளைகளையும் இந்தக் கடை வருமானத்துலதான் கட்டிக்கொடுத்தேன். அவங்ககூட கடையெல்லாம் திறக்காதீங்க. நாங்க உதவுறோம்னு சொல்றாங்க. நான்தான் கடைசி வரைக்கும் சொந்தக் கால்ல நிக்கணும்னு உறுதியா இருக்கேன். சாயங்காலம் 6 மணிக்கு கடையைத் திறந்தா, வியாபாரம் முடிஞ்சு, பொருள் எல்லாம் எடுத்து வைக்க ராத்திரி ஒரு மணியாயிடும். என்கிட்ட வேலை பார்த்த சிலரு தனியாகக் கடை போட்டுருக்காங்க. அதுல எனக்கு வருத்தம் இல்ல. அவங்களால ஒரு கடைய நடத்த முடியும்னு நினைச்சா, நல்லபடியா செய்யட்டும். எனக்குனு வர்றவங்க நிச்சயம் வருவாங்க" என்கிறார் நம்பிக்கையுடன்.

"நைட் கடை என்றால் சில பிரச்னைகள் வருமே பாட்டி" என்றதற்கு, "வராம எப்படி இருக்கும்? நிச்சயம் வரும்" என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். "குடிச்சிட்டு சில பேரு வருவாங்க. அவங்களைப் பார்த்தாலே கொஞ்சம் கவனமாக இருக்க ஆரம்பிச்சிடுவேன். ஒண்ணு ரெண்டு பேர் சண்டை போடுவாங்க. 'நானே வயசான காலத்துல கஷ்டப்பட்டுக் கடைய நடத்திட்டு இருக்கேன். எங்கிட்ட ஏம்பா சண்டைக்கு வர்றீங்க'னு அமைதியா சொல்வேன். அதுக்கப்புறம் சாதுவா போய்டுவாங்க. நாம நடந்துக்கிற முறையிலதான் இருக்கு" என்கிறார் தன்மையாக.

Prema
Prema

கடன் யாருக்கும் தர மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லும் பாட்டியிடம், பிச்சைக் கேட்டு வருபவர்களுக்கு பணம் வாங்காமல், சாப்பாடு போடும் இரக்கக் குணம் இருக்கிறது. ஓய்வெடுக்கும் வயதில் ஓய்ந்துவிடாமல், தன்னைப் போன்றவர்களுக்கு வேலையும் அளித்துவரும் பாட்டியின் நமக்குமே ஒரு நம்பிக்கையைத் தருகிறது. சாப்பிட்டதற்கு பணத்தைத் தந்துவிட்டு வந்தோம்.

அடுத்த கட்டுரைக்கு