Published:Updated:

அருவிக் குளியலும் ஆனியன் தூள் பஜ்ஜியும் | விருந்தோம்பல்

குற்றாலம் அருவி

டைரக்டர் ஷங்கருக்கும் மணிரத்னத்துக்கும் பிடித்தமான லொக்கேஷனில் எங்கள் ஊரும் ஒன்று. இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஊர் என்றே சொல்லலாம். சீஸன் நேரத்தில் அந்த அழகு இன்னும் பன்மடங்காகவே காட்சியளிக்கும்!

அருவிக் குளியலும் ஆனியன் தூள் பஜ்ஜியும் | விருந்தோம்பல்

டைரக்டர் ஷங்கருக்கும் மணிரத்னத்துக்கும் பிடித்தமான லொக்கேஷனில் எங்கள் ஊரும் ஒன்று. இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஊர் என்றே சொல்லலாம். சீஸன் நேரத்தில் அந்த அழகு இன்னும் பன்மடங்காகவே காட்சியளிக்கும்!

Published:Updated:
குற்றாலம் அருவி

சிறு வயதில் ஒவ்வோர் ஆண்டும் ஜீலை அல்லது ஆகஸ்ட் மாதம் திருச்சியில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாள் பயணமாக குற்றால சீஸனுக்குச் செல்வோம். அதிகாலையில் தென்காசி ஜங்ஷனில் இறங்கியதும் அப்பா புன்னகையோடு `சொர்க்கமே என்றாலும் எங்க ஊரைப் போல வருமா' என்று பாட ஆரம்பித்து, `எங்க ஊரு சாரல் காற்று எப்படி இருக்கு’ என்று ரசித்துக் கொண்டே வருவார்கள். `சில்லென்று வீசும் அந்த சாரல் காற்றும் லேசான மழைச்சாரலும்’ எங்களை வரவேற்கும்.

தென்காசியில் இருந்து இலஞ்சிக்கு பெரியப்பா வீட்டுக்குச் சென்ற உடனே மொட்டை மாடியிலிருந்து மெயின் அருவியில் தண்ணீர் விழுவதைப் பார்ப்போம். காலை காபி குடித்ததும் முதலில் ஐந்தருவிக்குக் கிளம்புவோம். ஐந்தருவிக்குச் செல்லும் பாதையில் இருபுறமும் அமைதியான மாந்தோப்புகள், தென்னை தோப்புகள், பலா மரங்கள், அங்குள்ள செடிகளின் நறுமணங்கள், பறவைகளின் ஒலிகள் என எல்லாமே ஐம்புலன்களுக்கும் இன்பத்தைத் தரும். டைரக்டர் ஷங்கருக்கும் மணிரத்னத்துக்கும் பிடித்தமான லொக்கேஷனில் எங்கள் ஊரும் ஒன்று. இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஊர் என்றே சொல்லலாம். அதுவும் சீசன் நேரத்தில் அந்த அழகு இன்னும் பன்மடங்காகவே காட்சியளிக்கும்.

ஐந்தருவிக்கு அருகே சென்றதும் தண்ணீர் விழும் சத்தத்தை கேட்பதற்கே இனிமையாக இருக்கும். பாறைகளில் சூரிய ஒளி படும்போது அவை லேசாக மின்னுவது போலவே காட்சியளிப்பது மிக அழகாக இருக்கும். அருவியை நெருங்கும்போது ஈரமான சாரல் முகத்தில் படுகையில் உற்சாகம் கொப்பளிக்கும். குளிக்க ஆரம்பித்ததும் சில நொடிகளுக்கு நடுங்க ஆரம்பிக்கும். பின் வெளியே வருவதற்கே மனதில்லாமல் கண்கள் சிவக்கும் வரை, குறைந்தது ஒரு மணி நேரமாவது குளித்து விட்டு வருவோம்.

வெளியே வந்ததும் அந்த குளிருக்கு சூடான பஜ்ஜியும் இஞ்சி டீயும் குடித்து விட்டு வீட்டிற்கு செல்வோம். ஐந்தருவியில் இருந்து வரும் வழியில் பம்பிளிமாஸ், மங்குஸ்தான், ரம்புட்டான், டுரியான், ஸ்டார் ஃபரூட் என பல வண்ணங்களில் பலவிதமான பழங்கள் காட்சியளிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீட்டுக்கு வந்ததும் ஆச்சி ‘என்ன நல்ல குளியலா?’ என்று கேட்பார்கள். உடல் சூடு தணியும் வரை குளிக்க வேண்டும். ஒரு குளியல் எல்லாம் பத்தாது’ என்பார்கள். ‘மதியம் மெயின் அருவிக்கு போய் நல்ல குளிச்சிட்டு வாங்க’ என்பார்கள். மெயின் அருவிக்குச் செல்வதற்குள் லேசான மழை பெய்ய ஆரம்பித்து சாரலில் நனைந்து கொண்டே செல்வோம்.

குற்றால அருவிகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் குளிக்கலாம். சளி, தும்மல், இருமல் போன்ற எந்த பிரச்னைகளும் வராது.

மெயின் அருவியை பார்ப்பதற்கு பிரமாண்டமாகத் தோன்றும். குற்றாலத்துக்கு புதிதாக வருபவர்களானாலும் சரி... காலம் காலமாக குற்றாலச் சாரலை அனுபவிப்பதற்காகவே வரும் பயணிகளானாலும் சரி... யாரும் வயது வித்தியாசம் இன்றி பேரருவியின் கம்பீரமான அழகை ரசிக்க தவறுவதில்லை.

அருவிநீர் சுமார் 260 அடி உயரத்திலிருந்து விழுவதால் நேராக ஒரு சுனையில் விழுந்து அந்த நீர் பொங்கிப் பேரருவியாகப் பிராவாகமெடுத்து நம்மை எல்லாம் பரவசத்தில் ஆழ்த்தும். இந்தச் சுனைதான் பொங்குமாங்கடல் என்று அழைக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருக்குற்றாலக் குறவஞ்சியில் குறத்தி குற்றால மலையின் வளங்களை அழகாகக் கூறும் வரிகள் இவை...

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்

கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்

தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்

குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்துப் பெண் குரங்குகளுக்குக் கொடுத்துத் தழுவுகின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறச் செய்கின்றன. அந்தப் பழங்களைத் தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைத் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் செல்லவல்ல சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரைகளுடைய கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகளை உடையது குற்றால மலை என விளக்குகிறாள் அவள்.

மெயின் அருவியில் இதமான குளிரோடு மூலிகைகளின் குணத்தோடு சுமந்து வரும் நீரில் குளிப்பதற்கு அவ்வளவு சுகமாக இருக்கும். இங்கும் நன்கு குளித்து முடித்ததும், வெளியே வரும் பாதையில் குற்றால நாதர் கோவில் அமைந்துள்ளது. குற்றால நாதரை வணங்கி விட்டு வீட்டிற்கு கிளம்புவோம். போகும் வழியெல்லாம் தேங்காய் எண்ணெயில் பொரிக்கும் நேந்திரம் சிப்ஸ் கடைகளும் பஜ்ஜி கடைகளும் நிறைந்து காணப்படும். அதில் ஒரு கடையில்தான் இன்று நாம் பார்க்கப்போகும் வெங்காய தூள் பஜ்ஜி இருக்கும். ஒவ்வொரு முறையும் குற்றாலம் செல்லும்போதெல்லாம் அப்பா தூள் பஜ்ஜி வாங்காமல் இருக்க மாட்டார்கள். தூள் பஜ்ஜியை பஜ்ஜிக்கும் பக்கோடாவிற்கும் இடைப்பட்ட ஒரு (ஸ்நாக்) பண்டம் என்று சொல்லலாம். அதைப் பொட்டலமாக கட்டி விற்பார்கள். கையில் பொட்டலத்தை வைத்துக்கொண்டு பேருந்திற்கு காத்திருக்கும் வேளையில் சாப்பிட்டது இப்போதும் சுவையாக நினைவில் உள்ளது.

மறுநாள் காலை புலியருவி மற்றும் பழைய குற்றாலத்துக்குச் சென்று அடுத்த குளியல். பழைய குற்றாலத்தில் குளித்து விட்டு வரும் பாதையில் நொங்கு போட்ட பதநீர் குடித்து விட்டு வீட்டுக்குத் திரும்புவோம்.

சில நேரங்களில் செண்பகாதேவி அருவிக்கும் செல்வோம். கடந்த சில ஆண்டுகளாக செண்பகாதேவி அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு பொதுவாக அனுமதி வழங்கப்படுவதில்லை. சிறப்பு அனுமதி பெற்றே செல்ல முடியும். இப்படி எத்தனையோ அருவிகள் இருந்தாலும் என்னுடைய முதல் சாய்ஸ் எப்போதுமே ஐந்தருவிதான்!

திருச்சிக்கு கிளம்பும் முன் இலஞ்சி குமார் கோவில் சென்று முருகனை தரிசனம் செய்வோம். குமாரர் கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் உயரமான தென்னை மரங்கள் காற்றில் மெல்ல அசைவதும், வயல்வெளியில் நெற்கதிர்கள் லேசான சத்தத்தோடு சாய்ந்து காட்சியளிப்பதும் மிக அழகாக இருக்கும். வாழ்வில் சில நாட்களாவது இது போன்ற கிராமத்தில் கழித்தவர்களுக்கு பசுமையான நினைவுளை அசை போடுவதே ஆனந்தம்தான்!

தென்காசி ஸ்டேஷனில் ரயிலுக்கு நிற்கும் போது பொதிகை மலையிலிருந்து வரும் அந்த லேசான ஈரக் காற்றை விட்டு விடை பெற மனமில்லாமல் கிளம்புவோம். நிறைய அனுபவங்களை கூறி உங்களை குற்றாலத்திற்கே அழைத்து சென்று விட்டேன் என்று நினைக்கிறேன். நீங்களும் வாய்ப்பு கிடைக்கும்போது குற்றாலத்துக்குச் சென்று இந்த ஆனந்தத்தை அனுபவித்து வாருங்கள்.

இப்போது வெங்காய தூள் பஜ்ஜி செய்முறையைப் பார்ப்போம்...

வெங்காய தூள் பஜ்ஜி
வெங்காய தூள் பஜ்ஜி

வெங்காய தூள் பஜ்ஜி செய்ய...

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 3

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - கால் கப்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

ஆப்ப சோடா - 1/8 டீஸ்பூன்

தோசை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

ஸ்டெப் 1

பெரிய வெங்காயத்தை தோலுரித்து மேல் பக்கத்தில் இருக்கும் காம்பை நீக்கிக் கொண்டு லேயர் லேயராக (தனித்தனியாக) நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

ஸ்டெப் 2

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், ஆப்ப சோடா, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் தோசை மாவு சேர்த்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3

பின் தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து, கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் வெங்காயத்தோடு மாவு ஒட்டாமல் இருக்கும்.

ஸ்டெப் 4

இப்போது நீளமாக நறுக்கிய வெங்காயத்தை ஒரு கை சேர்த்து மாவில் நன்றாக பிரட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு பதமாகக் காய்ந்ததும், அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு, கலந்து வைத்துள்ள வெங்காயத்தை உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...

வெங்காயத் துண்டுகள் எளிதாகப் பொரிந்து விடும். அதனால் எண்ணெயில் ரொம்ப நேரம் விடாமல், எல்லா பக்கமும் ஆரஞ்சுக்கும் சிவப்புக்கும் நடுவே உள்ள கலர் வந்ததும் இறக்கவும். அதிக நேரம் பொரிந்தாலும் நிறம் கருகி சுவையை மாற்றி விடும்.

சமையற்கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன்
சமையற்கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism