Published:Updated:

1 கிலோ ஆட்டுக்கறி 360 ரூபாய்... காரணம் ஊர்க்கட்டுப்பாடு... அசத்தும் பனங்குடி!

ஆட்டுக்கறி
ஆட்டுக்கறி

1 கிலோ ஆட்டுக்கறி 1,000 ரூபாயைத்தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், ஒரு கிராமத்தில் 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காராணம் என்ன? கீழே வந்து படிங்க!

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் இருந்ததால் பலரும் தங்களுக்குப் பிடித்த உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டனர். கடைகளில் கிடைக்கும் பல வெரைட்டி உணவுகளையும் இணையம் உதவியால் சமைத்து ருசித்தனர். அதிலும் பலரும் அசைவங்களையே விரும்பிச் சாப்பிட்டனர். அசைவ உணவில் பிரதானமான ஆட்டுக்கறியின் விலை இடத்துக்குத் தகுந்தவாறு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா
கொரோனா

1 கிலோ ரூ.1,000 தாண்டும் அளவுக்கு விற்பனை சூடு பறக்கிறது. இந்நிலையில் கிராமக் கட்டுப்பாடு காரணமாக ஆட்டுக்கறி கிலோ 360 ரூபாய்க்கு பனங்குடி கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அசைவ பிரியர்கள் கறி வாங்குவதற்காக அந்தக் கிராமத்துக்கு வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் பாகனேரி அருகே உள்ளது பனங்குடி கிராமம். பெரிய அளவு போக்குவரத்து இல்லை. ஆனாலும், ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

கிராமத்தில் பல்வேறு மதத்தினர் இருந்தாலும் அனைத்து மதத்தினரும் எல்லா மத திருவிழாவிலும் கலந்துகொண்டு ஒற்றுமையையாகத் திருவிழா கொண்டாடுவதுதான் இந்த ஊரின் சிறப்பு. ஆண்டுதோறும் நிர்ணயம் செய்யும் விலையில்தான் கறி விற்பனை செய்ய வேண்டும் என்பது ஊர் கட்டுப்பாடு. இதனால்தான் ஊரடங்கு சமயத்திலும் ஆட்டுக்கறி 360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பனங்குடி கோயில் குளம்
பனங்குடி கோயில் குளம்

இது குறித்து கிராமத்தைச் சேர்ந்த அருள், "பனங்குடி நாடுனுதான் எங்க ஊரைச் சொல்லுவாங்க. ராணுவ வீரர்களுக்கு சிலை, பழைமையான தெப்பக்குளம், விரிந்து கிடக்கும் வீதிகள்னு இது பெரிய கிராமம். இந்து, கிறிஸ்துவர்னு மத வேறுபாடு இருக்காது. எல்லாரும் எல்லா சாமியையும் கும்பிடுவோம். இது எங்க ஊரோட முக்கிய பழக்கம். எங்க ஊர்ல கட்டுப்பாடுகளைக் கடுமையா பின்பற்றுவோம். இந்த நிலையில எங்க ஊருல ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும்.

அன்றைக்கு ஒரே ஒரு கறிக்கடை மட்டும்தான் இருக்கும். இந்த வருஷம் ஆட்டுக்கறி ரூ.360-க்கு ஏலம் நிர்ணயமாச்சு. அதுனாலதான் வெளிய அதிக விலை இருந்தாலும், அதே விலையில விற்பனை செய்றாங்க. அடுத்த வருஷம் ஏலத்தில 10 ரூபாய், 20 ரூபாய்னுதான் விலை ஏறும். பெரிய அளவுக்கு ஏலம் விடமாட்டோம். அதே சமயம் ஏலம் எடுத்தவங்க நஷ்டம் அடையக்கூடாதுல்ல. அதுனால வேற கடைகள் போட அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

கறிக்கடை
கறிக்கடை

பனங்குடியில் கறிக்கடை நடத்தும் அப்துல் ஹமீது, "கறிக்கடை தொழிலில 40 வருஷத்துக்கு மேல இருக்கேன். என்னோட நாலு மகன்களும் இதே தொழில்லதான் இருக்காங்க. 4 இடங்கள்ல கறிக்கடை வெச்சிருக்கேன். கடுமையாக உழைச்சு நல்ல நிலையில இருக்கிறேன். கல்லல், சொக்கநாதபுரம், குறுந்தம்பட்டி விலக்கு, பனங்குடினு 4 இடங்கள்ல நல்லபடியா வியாபாரம் நடக்குது. எல்லா இடத்திலயும் நல்ல வரவேற்பு இருக்குது.

இறைவனுக்கு பயந்து பணி செய்கிறோம். பனங்குடியில ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் கடைபோடுவோம். ஊர் கட்டுப்பாடு காரணமா ஊர் நிர்ணயம் செய்யும் விலையிலதான் கறி விற்பனை செய்வோம். தொழிலை சுத்தமா செய்றதால, 15 வருஷமா பனங்குடியில நாங்கதான் ஏலம் எடுக்கிறோம். ஏலம் எடுத்தவங்களத் தவிர வேற யாரும் கடை போடக்கூடாது. அதுக்காகக் கிராமத்துக்கு பணம் கட்டிவிடுவேன்.

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று வராமல் தடுப்பது எப்படி? மருத்துவர் கைடன்ஸ்!

என்னோட மற்ற கடைகள்ல 450 முதல் 500 ரூபாய் வரைக்கும் ஆட்டுக்கறி விற்பனை செய்றேன். இந்த ஊரடங்கு காலத்திலும் பல இடங்கள்ல 1,000 ரூபாய் வரைக்கும் வெள்ளாட்டுக் கறி விற்பனையாகுது. ஆனாலும், பனங்குடியில கறி விலையை நாங்க உயர்த்தலை. எங்ககிட்ட மொத்தம் 20 பேர் வேலை செய்றாங்க.

அவங்கள்ல சிலருக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் சம்பளம் கொடுப்போம். மத்த பசங்களுக்கு 1,000 ரூபாய் வரை கொடுப்போம். விலைவாசி அதிகமான சூழல்லயும் 360 ரூபாய்க்குக் கறி விற்பனை செய்றோம். ஆடு விலை அதிகமா இருந்தாலும் நாங்க இந்த விலைக்குத்தான் கொடுக்கிறோம்.

ஆட்டுக்கறி
ஆட்டுக்கறி

விற்பனை கையைக் கடிச்சாலும் பனங்குடி எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்குறதால தாராளமா விற்பனை செய்றோம். லாபத்தை எப்படி நாங்கள் ஏற்றோமோ, அதே போல நஷ்டத்தையும் நாங்கள்தான் ஏற்க வேண்டும். எங்க கடையில வந்து யாரும் பிரச்னை செய்ய மாட்டாங்க. அப்படிச் செய்தால் பனங்குடிக்காரங்க சும்மா இருக்க மாட்டாங்க. பனங்குடியில இந்து, கிறிஸ்துவர்கள் அதிகம். ஆனால், எல்லாரும் உறவுக்காரர்களாகத்தான் பழகுவாங்க. தொழிலை நேர்மையா செய்தால் போதும் அன்பை அனைவரிடமும் சம்பாரிக்கலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு