தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

கும்பகோணம் டிகிரி காபி
பிரீமியம் ஸ்டோரி
News
கும்பகோணம் டிகிரி காபி

25 வருடங்களுக்கு முன்னதாக சிறிய அளவிலான டிகிரி காபி கடையைத் தொடங்கினோம்.

கடல் கடந்து மணம் பரப்பும் கும்பகோணம் டிகிரி காபி!

கோயில் நகரமான கும்பகோணத்தில் பக்தி மணத்துக்கு இணையாக டிகிரி காபியும் மணம் பரப்பி வருகிறது. தரமான பால், பக்குவமாக அரைக்கப்பட்ட காபித்தூள் பயன்படுத்துவதால் சுவையிலும் மணத்திலும் கும்பகோணம் டிகிரி காபி தனித்தன்மையுடன் விளங்குவதாகப் பெருமைகொள்கிறார்கள் ஊர் மக்கள்.

மடத்துத் தெருவில் ‘முரளி கபே’ ஹோட்டல் நடத்தி வருகிற முரளியிடம் பேசினோம். ‘‘25 வருடங்களுக்கு முன்னதாக சிறிய அளவிலான டிகிரி காபி கடையைத் தொடங்கினோம். காபி தந்த அடையாளத்தில் இப்போது எங்கள் கடை ஹோட்டலாக வளர்ந்துள்ளது. நாங்கள் பாலில் தண்ணீர் கலந்திருக்கிறதா அல்லது சுத்தமான பாலா என்பதை டிகிரி கருவி (பாலின் தன்மையை அளக்கும் லாக்டோ மீட்டர்) மூலமாக அறிந்துவிடுவோம். தண்ணீர் கலக்காத பாலில்தான் டிகிரி காபி தயாரிக்க முடியும். அந்த காபிதான் ருசியாக இருக்கும். அதனால்தான் எங்கள் ஊரில் தயாரிக்கப்படும் காபிக்கு முன்னால் `டிகிரி' சேர்ந்து, அது `டிகிரி காபி' என்றானது.

கும்பகோணம் டிகிரி காபி
கும்பகோணம் டிகிரி காபி

காபி கொட்டைக்கு பெயர்பெற்ற கர்நாடகா மாநிலத்திலிருந்து முதல்தரமான கொட்டைகளை மொத்தமாக வாங்குகிறோம். பின்னர் அவற்றைப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதிக நேரம் வறுத்தால் கொட்டைகள் கருகிவிடும். காபியின் மணமும் மாறிவிடும். வறுத்த கொட்டைகளை மென்மையாக அரைக்க வேண்டும். ஃபில்டர் கொண்ட பித்தளை அல்லது சில்வர் பாத்திரத்தில் தேவையான அளவு காபித்தூளைப் போட்டு, அத்துடன் சிறிதளவு சர்க்கரை, வெந்நீரை ஊற்ற வேண்டும். காபித்தூள் வெந்து, அதில் இருந்து வடியும் டிகாக்‌ஷன் ஸ்டிராங்காக நல்ல மணத்துடன் இருக்கும். பாலின் தரம், காபித்தூள் தயாரிக்கப்படும் பக்குவம்... இவைதாம் டிகிரி காபியின் சுவைக்கு முக்கிய காரணம்.

ஒரு கிலோ காபித்தூள் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் நம் மக்களால் இந்த காபித்தூள் வாங்கிச் செல்லப்படுகிறது. இதனால் கடல்கடந்தும் மணம் வீசி, சுவை பரப்பி வருகிறது கும்பகோணம் டிகிரி காபி!

வீட்டு உபயோக துணிகளில் கொடிகட்டி பறக்கும் கரூர்!

மிழகத்தின் மத்தியில் இருக்கும் மாவட்டமான கரூர், தொழில் நகரமாக ஜொலிக்கிறது. குறிப்பாக, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில், புகழ்பெற்ற மாவட்டமாக கரூர் விளங்கிவருகிறது. டெக்கரேட்டிவ் குஷன்கள், திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள், டவல்கள், டேபிள் மேட்கள், மிதியடிகள், கைக்குட்டைகள், துணிப்பைகள் என்று இங்கே தயாராகும் அனைத்து வகையான வீட்டு உபயோக ஜவுளிகளும் மிகவும் பிரபலம். சிறியதும் பெரியதுமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கரூரில் இயங்கி வருகின்றன. அனைத்துத் துணிவகைகளும் முழுக்க முழுக்க காட்டன் பயன்படுத்தியே தயாரிக்கப்படுவதால், பயன்பாட்டாளர்களை கரூர் காந்தமாக ஈர்த்து வருகிறது.

வீட்டு உபயோக ஜவுளி
வீட்டு உபயோக ஜவுளி

தமிழகத்திலேயே முதன்முதலில் 1890-ம் ஆண்டு, கரூரில்தான் கைத்தறி நெசவு தொடங்கப்பட்டது. அதனால், கரூர் மாவட்டம் முழுக்கவே, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, இப்போது இந்தத் தொழில் பல்கிப் பெருகி நிற்கிறது.

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

கடந்த 20 ஆண்டுகளாக கரூரில் ‘ஹோம்லைன் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற பெயரில், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திவரும் ஸ்டீபன் பாபுவிடம் பேசினோம். “கரூர் காட்டன் துணிகளுக்கு எப்போதும் ஏக கிராக்கிதான். இங்கு தயாராகும் ஜவுளிகள், இந்தியா முழுக்க பல மாநிலங்களுக்கும் செல்கின்றன. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் ஏற்றுமதியாகின்றன. அந்த வகையில், கரூர் ஏற்றுமதியாளர்கள் ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் வரை டர்ன் ஓவர் செய்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் வீட்டு உபயோகத் துணிகள் 60 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 3,000 ரூபாய் வரையிலும் தரத்துக்கேற்ற விலையில் விற்கப்படுகின்றன” என்கிறார் ஸ்டீபன் பாபு.