தையும் மாசியும் இணைந்த மாதம் பிப்ரவரி. தை சூரியனுக்குரிய மாதம் என்றும், மாசி ஈசனுக்குரிய மாதம் என்றும் ஆன்மிகம் கூறுகிறது. தை கிருத்திகை, தைப்பூசம், தெப்ப உற்சவம், வராஹ துவாதசி, மகா சிவராத்திரி, மாசி பிரம்மோற்சவ விழா, மாசி அம்மன் திருவூஞ்சல் என இந்த மாதத்தில் விழாக்களும் விசேஷங்களும் ஏராளம். சிவபெருமான் மதுரையம்பதியில் திருவிளையாடல்களை நிகழ்த்தியதும் மாசி மாதத்தில்தான் என்கிறது திருவிளையாடல் புராணம். மாசி மாத பூச நட்சத்திரத் தினத்தில்தான் முருகப்பெருமான் ஈசனுக்கு பிரணவ உபதேசம் செய்து தகப்பன் சாமியானார்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கும்ப மாதம் எனப் போற்றப்படும் மாசி, மங்கல மாதம் எனப்படுகிறது. இந்த மாதம் குலதெய்வங்களை வழிபட உகந்த மாதம் என்றும் கூறப்படுகிறது. மகிமை மிகுந்த இந்த தை - மாசி மாதங்களில் வரும் அந்தந்த விசேஷங்களுக்குரிய நைவேத்தியங்களைப் படைத்து இறையருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வோம். இறையருளை வேண்டி தயாரிக்கப்படும் இந்த இன்சுவை பிரசாதங்களை நமக்காகச் செய்து காண்பித்து அசத்துகிறார் சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வாசகி துர்கா.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகோசுமல்லி
ராமநவமி, தெலுங்கு வருடப் பிறப்பு போன்ற நாள்களில் செய்யப்படும் இந்த கோசுமல்லி, வராஹ துவாதசி நாளிலும் நைவேத்தியமாகச் செய்து படைக்கப்படும். புவியை மீட்க வராஹ அவதாரமெடுத்த திருமாலுக்கு காய்கறிகள், தானியங்கள் கொண்டு செய்யப்படும் இந்த கோசுமல்லி புரதச்சத்து நிரம்பியது. நமது பாரம்பர்ய உணவும்கூட. செய்ய எளிமையானது; சுவை அலாதியானது.

தேவையானவை:
கேரட், மாங்காய், வெள்ளரி, பெரிய நெல்லிக்காய், குடமிளகாய் என உங்களுக்கு விருப்பமானது ஏதாவது இரண்டு - 2 கப்
பச்சைப் பயறு - 2 கப்
துருவிய தேங்காய் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைப்பழம் - 2
கொத்தமல்லித்தழை - அரை கப்
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
தோல் நீக்கிய பச்சைப் பயற்றை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து வடித்து எடுத்துவைக்கவும். இதில் கேரட் போன்ற காய்கறிகளைப் பூப்போல் துருவி சேர்க்கவும். துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்க்கவும். பச்சை மிளகாயைப் பொடிப் பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து எலுமிச்சைப்பழச் சாற்றைப் பிழிந்து நன்கு கலக்கவும். பச்சை மிளகாய்க்குப் பதிலாக மிளகுத்தூளையும் சேர்க்கலாம். இந்த எளிமையான பிரசாதத்தைப் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து விநியோகிக்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மோர்க்களி
மாசி மாதம் வேனிற்காலம் ஆரம்பிக்கும் பருவம். எனவே மோர், தயிர், வெண்ணெய் ஆகியவற்றின் பயன்பாடுகள் அதிகம் இருக்கும். நம் கிராமப்புறங்களில் உப்பு உருண்டை செய்வதைப்போலவே இந்த மோர் அல்வாவும் செய்யப்பட்டு அம்மனுக்கு மாசி மாத வெள்ளிக்கிழமைகளில் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு விநியோகிக்கப்படும். எளிமையான... ஆனால், சுவையான நைவேத்தியம் என்பதால் எல்லோருக்கும் இது பிடிக்கும்.

தேவையானவை:
பச்சரிசி மாவு - ஒரு கப்
புளித்த தயிர் - அரை கப்
மோர் மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் - 4
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
எண்ணெய் - கால் கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
தயிரில் உப்பு, கொஞ்சம் தண்ணீர், அரிசி மாவு சேர்த்துக் கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மோர் மிளகாய் தாளித்து இஞ்சி சேர்த்து வதக்கவும். இதில் கரைத்த மோர்க் கலவையை ஊற்றி மிதமான தீயில் சுருளக் கிளறவும்.
இந்தக் கலவை வெந்து சுருண்டு வந்ததும் எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி ஆறியதும் அல்வா துண்டுகள் போல வெட்டி நைவேத்தியம் செய்யவும். இதனுடன் இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கொடுத்தால் சுவை கூடுதலாகும்.
சம்பா சாதம்
சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு தினந்தோறும் காலையில் சம்பா சாதமும் கத்திரிக்காய் கொத்ஸுவும் நைவேத்தியம் செய்வது பல நூற்றாண்டுக்கால வழக்கம். சம்பா சாதம் என்றாலும் இது பச்சரிசி கொண்டே செய்யப்படும் ஒருவகை மிளகு சாதம்தான். மகா சிவராத்திரி நாளில் இந்த சாதம் பிரதான நைவேத்தியமாக ஆலயங்களிலும் வீடுகளிலும் செய்யப்படுவது உண்டு. சுவையும் சத்தும்கொண்ட இந்த பிரசாதம் உடலுக்கும் நன்மை பயக்கக்கூடியது.

தேவையானவை:
பச்சரிசி - ஒரு கிலோ
நெய் - 150 கிராம்
மிளகு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியைக் குழையாமல் நெத்து நெத்தாக வடித்து ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும். நெய்யைக் காயவைத்து மிளகு, சீரகப் பொடியை அதில் வறுத்து சாதத்தில் போட்டு, தேவையான உப்பையும் சேர்த்துக் கிளறவும் (நைவேத்தியத்துக்கு என்று இல்லாமல் இதைச் செய்யும்போது எள் பொடி அல்லது வேர்க்கடலைப் பொடியும் சேர்த்துக்கொள்ளலாம்). இந்த நைவேத்தியத்துடன் தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் கொத்ஸு அல்லது கத்திரிக்காய் பிரட்டல் சேர்த்துக் கொடுத்தால் சுவை கூடும்.
மகிழம்பூ முறுக்கு
தை பூசம் தமிழர்களின் பாரம்பர்யத் திருவிழாவாகும். இந்த நாளில் அனைத்து சிவாலயங்கள் மற்றும் முருகப்பெருமானின் ஆலயங்களில் தெப்போற்சவமும் திருவிழாக்களும் நடைபெறுவது வழக்கம். இந்நாளில்தான் பூவுலகம் படைக்கப்பட்டது என்பதை உணர்த்தவே தெப்ப விழா நடைபெறுவதாக ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. முருகப்பெருமான் சிவகுருநாதனாக அருள்பாலிக்கும் இந்த நாளில் மகிழம்பூ முறுக்கு செய்து நைவேத்தியம் செய்வது தென்மாவட்ட மக்களின் வழக்கம். இதைச் செய்து முருகனை வழிபட்டு விநியோகித்தால் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கிலோ
பாசிப்பருப்பு - கால் கிலோ
வெண்ணெய் - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - 2 கப்
டைமண்டு கற்கண்டு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும். புழுங்கல் அரிசியைச் சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, தேங்காய்த் துருவல், கற்கண்டு சேர்த்து நீர்விடாமல் கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் பாசிப்பருப்பு மாவு, தேவையான அளவு உப்பு, வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும். இந்த மாவை முள் முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து வெந்ததும் எடுக்கவும். மகிழம்பூ முறுக்கோடு இனிப்புத் தயிரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
ஓமம் சீரகம் சேவு
ஓமம், சீரகம், மிளகு போன்றவை நம் உடல்நலனுக்கு ஏற்ற மூலிகை உணவு என்றே ஆன்றோரால் கூறப்படுகிறது. பனி விலகி வேனிற்காலம் தொடங்கும் இந்த மாசி மாதப் பருவத்தில் இவை ஆரோக்கியத்துக்கு ஏற்றவை என்று பெரியோர்களால் நைவேத்தியத்தில் சேர்க்கப்பட்டன. இறைவனால் படைக்கப்பட்ட உணவுப் பொருள்களைக்கொண்டு இறைவனுக்கே படைக்கும் நைவேத்தியங்கள் தூய்மையானனவை; உடல்நலத்துக்குக் கேடு செய்யாதவை. மேலும், இறை அருள் நிறைந்தவை என்ற நம்பிக்கை உண்டாகிறது. அதனால் இந்த ஓமச் சேவு செய்து பலன் பெறுவோம்.

தேவையானவை:
கடலை மாவு - கால் கிலோ
அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 50 கிராம்
மைதா - 100 கிராம்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
பாதியாக உடைத்த மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம், ஓமம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மைதாவைப் பொன்னிறமாக வறுத்து, சலித்து ஆவியில் வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அரிசி மாவு மற்றும் கடலை மாவை சலித்து அவித்த மைதாவுடன் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். அகலமான தட்டில் 50 கிராம் எண்ணெய், சமையல் சோடா சேர்த்து விரலால் தேய்த்துக் கலக்கவும். எண்ணெய் மென்மையாகக் குழைந்ததும் உப்பு போட்டு தேய்த்து அதில் சிறிது சிறிதாக மாவுக் கலவையைச் சேர்க்கவும். மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், ஓமம், தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து காராசேவு தேய்க்கும் கண் கரண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக மாவை வைத்து அழுத்தித் தேய்க்கவும். பொன்னிறமாக வெந்து வரும்போது திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். முருகப் பெருமானுக்கு நைவேத்தியமாகப் படைத்து விநியோகிக்கலாம்.