Published:Updated:

வயிறும் நிறையணும்; மனசும் நிறையணும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கெளரி விஸ்வநாதன்,  பிரேமா, கோமல் ஷர்மா
கெளரி விஸ்வநாதன், பிரேமா, கோமல் ஷர்மா

அன்னத்துடன் அன்பையும் பரிமாறும் பிரேமா மாமியின் `ராஜபோஜனம்’

பிரீமியம் ஸ்டோரி

சென்னை ராயப்பேட்டையிலுள்ள ரெஜென்ட்டா சென்ட்ரல் டெக்கான் ஹோட்டலின் ஒன்பதாவது மாடியையே அமர்க்களப்படுத்திவிட்டது, கும்பகோணம் பிரேமா மாமியின் `ராஜபோஜனம்’ உணவுத் திருவிழா! இந்தத் திருவிழா ஏழாவது ஆண்டாக இங்கே நடக்கிறது. அதோடு, கடந்த ஆண்டு இங்கே தொடங்கப்பட்ட `சென்னை ஃபேமஸ் மாமி சமையல் ரெஸ்ட்டாரன்ட்’டின் இரண்டாம் ஆண்டுக் கொண்டாட்டம் இது!

கெளரி விஸ்வநாதன்,  பிரேமா, கோமல் ஷர்மா
கெளரி விஸ்வநாதன், பிரேமா, கோமல் ஷர்மா

பத்து நாள்களாக நடந்த இந்தத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். வெள்ளி இரவு 7 மணி. லிஃப்ட் ஏறி ஏழாவது மாடியை அடைந்தோம். ஏதோ, ஆம்னி பஸ் ஏறி கும்பகோணம் சென்றுவிட்டது போன்ற மாயை. முழுக்கவே பாரம்பர்ய அலங்காரங்கள், தோரணங்கள். உள்ளே மண் பானைகள், மண் சட்டிகள் ‘இன்னிக்கு விருந்துதான் வாங்கோ’ என அழைத்துக்கொண்டிருந்தன. ஹோட்டல் நிர்வாகிகள், ரெஸ்ட்டாரன்ட் நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்களான நடிகை கோமல் ஷர்மா, நடிகை கௌரி விஸ்வநாதன் ஆகியோர் திருவிழாவை விளக்கேற்றித் தொடங்கிவைத்தனர்.

ஜாங்கிரி, காசி அல்வா, பானகம், நன்னாரி சர்பத், அப்பளம், முறுக்கு, தட்டை, வடகம், முருங்கைக் கூட்டு, கத்திரிக்காய் பொடி கறி, வாழைப்பூ உசிலி, தயிர் வடை, அரைத்துவிட்ட சாம்பார், மிளகுக் குழம்பு, சாதம், எலுமிச்சை ரசம், எள்ளு சாதம், அரிசி உப்புமா, சேவை, தயிர் சாதம், பயறு, அம்மணிக் கொழுக்கட்டை, வேர்க்கடலைச் சுண்டல், தயிர்ப்பச்சடி, கோசுமல்லி, பருப்புத் துவையல், பால் பாயசம்... ஆஹா! `காணும் இடமெங்கும் இன்பமடா’தான்!

ராஜபோஜனம்
ராஜபோஜனம்

எந்தப் பட்சணத்துக்கும் பாதக மில்லாமல், எல்லாவற்றையும் கொஞ்சம் எடுத்து தட்டில் நிரப்பிக்கொண்டோம். சுவை, அருமை!

அவசரம் தவிர்த்து நிதானமாகச் சாப்பிட்டால், ஆயுளுக்கும் நாவில் சுவை நிற்கும். மாமி கைப்பக்குவம் அத்தனை அட்டகாசம். அரைத்து ஊற்றும்சாம்பார், அவ்வளவாக எங்கேயும் கிடைக் காதது. அதையும் ஒருபிடி பிடித்தோம். பிறகென்ன, கிண்ணத்தில் காசி அல்வா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“எனக்கு 52 வயசு. கணவருக்கும் எனக்கும் 12 வயசு வித்தியாசம். என் கணவர், மொகலய உணவு விருதினைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் வாங்கி யிருக்கார். என் வீட்டுக்காரங்க, என் கணவரின் வீட்டுக்காரங்க, என் கணவர்... இப்படி என்னைச் சுத்தியிருந்த எல்லோரும் சமையல் கில்லாடிகள். அதனால எனக்கு அது ஒட்டிக்கிச்சு” என்கிறார் பிரேமா மாமி.

 பிரேமா
பிரேமா

மசாலாவை வெளியில் வாங்காமல் அங்கேயே அரைத்துத் தயாரிக்கிறார்கள். அந்த தனிச்சுவை, ‘சுள்’ளென்று தெரிகிறது. உணவில் உப்பை அளவாகத்தான் சேர்க்கிறார்கள். தேவைப்படுகிறவர்கள், சாப்பிடும்போது உப்பு சேர்த்துக்கொள்ளலாம். சமையல் பதார்த்தங்களில் பெருமளவு தக்காளியின் பங்கு இருக்கிறது. வெங்காயம், பூண்டு, புளி சேர்த்துச் சமைப்பதுதானே நமது சமையல் சம்பிரதாயம். இவற்றைத் தன் சமையலில் ஒப்புக்குக்கூடச் சேர்க்கவில்லை. ஆனாலும், ருசி பிரமாதம்!

“மனசும் வயிறும்தானே முக்கியம். வர்றவங்க வயிறும் நிறையணும்; மனசும் நிறையணும். எதெல்லாம் நம்ம ஆரோக்கியத்துக்குச் சரிபடாதோ, அதையெல்லாம் கவனமா தவிர்க்கணும். அதற்கு மாற்றுமுறையும் அவசியம். அதை நான் செய்றேன். உடம்புக்கு ஒப்புக்காத எதையும் சமையலில் சேர்க்கவே மாட்டேன். என் சமையல் பத்தி ஒரு வரியில சொல்லணும்னா, தைரியமா சாப்பிடலாம்!” என்கிறார். உண்மைதான். அவர் தயாரித்த எந்த உணவும் நம் வயிற்றைத் திணறடிக்கவில்லை.

தொடக்க விழாவில்...
தொடக்க விழாவில்...
சமையலுக்கான மண்பாண்டங்கள்...
சமையலுக்கான மண்பாண்டங்கள்...

விருந்து சாப்பிட்டுக் கொண்டி ருந்தவர்கள்மீது மாமி அப்படியும் இப்படியுமாக பார்வை வீசியபடியே இருந்தார். அவ்வப்போது அருகே வந்து, ‘ஏன் இவ்வளோ கம்மியா சாப்பிடுறீங்க. நல்லா சாப்பிட வேண்டியதுதானே...’ என மூச்சு முட்டும் அளவு அன்பையும் அன்னத்தையும் பரிமாறுகிறார். வந்திருந்தவர்கள் முகங்களில் அத்தனை ஆனந்தம்; எதிலும் செயற்கைத் தன்மை இல்லை.

“சாப்பிடுறவங்களோட முகத்தைப் பார்ப்பேன். அவங்க ரசனையை உள்வாங்கிப்பேன். சொல்றவங்களோட கருத்துக்கேற்ப சமையல் செய்வேன். அப்போதான் புதுசா செய்ய ஐடியா கிடைக்கும். அடுத்தடுத்து வர்றவங்களுக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சியும் ருசியும் கிடைக்கும்’’ என்கிறார். தினமும் மதிய சாப்பாட்டோடு மாமி சமையல் ரெஸ்ட்டாரன்ட் தொடங்கும். 11 பட்சணங்களோடு போஜனம், 22 பட்சணங்கள் நிறைய ராஜபோஜனம்!

வயிறும் நிறையணும்; மனசும் நிறையணும்!

வந்திருப்பவர் சாப்பிடுவதைக் கவனித்து உடம்புக்கு ஏதும் பிரச்னையா என விசாரித்து, அதற்கேற்ற பட்சணம் தருகிறார்கள். “அங்காயப் பொடி வெச்சிருக்கோம். ‘நீங்க அங்காயப்பொடியெல்லாம் வெச்சிருக்கீங்களா... எங்கேயும் கிடைக்கலை இப்போவெல்லாம்’னு எல்லோரும் சொல்லிட்டுப் போவாங்க” என்கிறவர் முகமெங்கும் பெருமிதம்.

வயிறும் நிறையணும்; மனசும் நிறையணும்!

“இப்போ இருக்கிற நெட், வீடியோ எதையும் பார்க்க மாட்டேன். எனக்கு யூடியூப்லாம் தெரியாது. கத்துக்கிட்ட சமையல், அதுமட்டும்தான் தெரியும்” என்கிற மாமியிடம், ``இந்தச் சமையல் காதல் எப்படி, எங்கிருந்து வந்தது?’’ எனக் கேட்டோம். “அம்மாக்கிட்டயிருந்து வந்த கலை. கணவர் நம்பிராஜா அருமையான சமையற்கலைஞர். பத்து வயதிலேயே சமையல் பணிக்காக வெளிநாடு போயிட்டார். ஐந்து ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தார். நியூஜெர்சி, மஸ்கட்ல சமையல் வேலைகளுக்காகவும் நிகழ்ச்சிகளுக்காகவும் போயிட்டு வந்தவர். அவர்தான் என்னுடைய வாழ்க்கைன்னு இருந்தேன்” என்று உடைந்து உருகுகிறார். ஆசுவாசப்பட நேரம் எடுத்துக்கொண்டார்.

வயிறும் நிறையணும்; மனசும் நிறையணும்!

கல்லீரல் பிரச்னையால் சில ஆண்டு களுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். அப்போதும்கூட, தனக்காக எல்லாமும் செய்து கொடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார் என நெகிழ்ந்து தெரிவிக்கிறார். “இந்த ஹோட்டல் உரிமையாளரும் என் கணவரும் நண்பர்கள். அப்படித்தான் முதன்முதல்ல `மாமி சமையல் திருவிழா’ நடத்தத் தொடங்கினேன். அப்புறம், இந்தத் தளத்துல ரெஸ்ட்டாரன்ட் வைக்க என் கணவர் அனுமதி கேட்க, அவரும் ஒப்புக்கிட்டார். அப்படித்தான் இந்த ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பித்தது. எனக்கான ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொடுத்துட்டுத்தான் என்னைவிட்டுப் போயிருக்கிறார், என் கணவர்” என்று தெம்பாகப் புன்னகைக்கிறார்.

``கணவன் மனைவி காதலுக்குள் சமையலுக்கும் பங்குண்டுதானே?’’ என்றோம். “நிச்சயமா! சமையல் செய்து எல்லோரையும் திருப்திப்படுத்துறது ரொம்ப சிரமமான காரியம். பல வீடுகள்லயும் மனைவி சமையலைக் கணவன் குறை சொல்றதுதான் நடக்குது. கருத்தைச் சொல்றது தப்பில்லை. ஆனா, மனைவியின் இடத்திலிருந்து அதை யோசிக்கணும்... அவள் மனம் எவ்வளவு புண்படும்னு. மனைவி சமையலை விமர்சிக்க ஓர் ஐடியா சொல்றேன். சமையல் நல்லாயிருந்தா ஒண்ணும் சொல்ல வேண்டாம். பிடிக்கலைன்னோ, நல்லா சமைக்கலைன்னோ கணவன் நினைச்சா, ‘சமையல் நல்லாயிருக்குமா’ன்னு பாசிட்டிவா சொல்லிடுங்க. `நல்லாயில்லாததை நல்லாயிருக்குன்னு சொல்றாரே’ன்னு மனைவிக்குக் குற்ற உணர்வு உறுத்தும். இனிமேல் கவனமா நல்லா சமைக்கணும்னு மனைவி நினைப்பாங்க!’’

அழகான நிறைவுரை சொல்லி நம்மை வழியனுப்பினார்... “சமையல் ஒரு கொண்டாட்டம். மகிழ்ச்சி மட்டும்தான் அதுல நிறைந்து இருக்கணும். வாய் வாழ்த்தாவிட்டாலும், வயிறு வாழ்த்துமே. அது போதும், சமையல் பண்றவங்களுக்கு!”

மாமி சமையலை மறக்காதீங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு