Published:Updated:

கலப்படம் இல்லை... கைப் பக்குவம்..!- தீபாவளியைக் கடந்து அசத்தும் செட்டிநாடு பலகாரம்

செட்டிநாடு பலகாரத்தை தீபாவளி முடிந்து ஒரு மாதம் வரை சாப்பிடுவோம்.

மாவுருண்டை
மாவுருண்டை ( சாய்தர்மராஜ் )

செட்டிநாடு பகுதியில் செய்யப்படும் பலகாரம் அதிக சுவைகொண்டது. தென் தமிழ்நாட்டு சமையல் விருந்தில் செட்டிநாட்டு சமையலுக்குத் தனி மவுசு உண்டு.

செட்டிநாடு அதிரசம்
செட்டிநாடு அதிரசம்
சாய்தர்மராஜ்

மேற்கத்தியப் பண்டங்களைச் சாப்பிடப் பழகி இருந்தாலும் விசேஷ தினங்களில் பழைமையான பலகாரங்களையே விரும்பிச் சாப்பிட நினைப்பது அனிச்சையே. அப்படியான தீனியில் செட்டிநாடு பலகாரங்களில் பல சுவையையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரக் கூடியதாகும்.

செட்டி நாடு பலகாரம் பற்றி காரைக்குடி அழகு ஸ்நாக்ஸ் உரிமையாளர் அலமேலு, ``செட்டிநாடு பலகாரங்கள் தற்போது வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. முன்பெல்லாம் நகரத்தார் வீடுகளில் பலகாரம் செய்வதை ஒரு சடங்காகவே செய்வார்கள். பலகாரம் செய்யப்படாத வீடுகள் இருக்காது. தற்போது காலச் சூழல் மாறியதால் இதை ஆர்டர்கள் எடுத்துச் செய்துகொடுக்கிறோம்.

மணக்கோலம்
மணக்கோலம்
சாய்தர்மராஜ்

செட்டிநாடு பலகாரங்களில் குறிப்பிட்ட சில பண்டங்களைத் தவிர மற்ற அனைத்துப் பண்டங்களும் 25 முதல் 30 நாள்கள் வரை தாங்கக்கூடியது. நகரத்தார்கள் கடல் கடந்து வணிகம் செல்வார்கள். அப்போது அவர்களுக்கு வழியில் உணவு கிடைக்காத சமயத்தில் தாங்கள் கொண்டுவந்த பண்டத்தையே சாப்பிட்டுப் பசியாற்றிக் கொள்வார்கள்.

அதனாலே என்னவோ பல பலகாரங்கள் நீண்ட நாள்கள் தாங்குகிறது. அதற்காக எந்தக் கலப்படமும் செய்வதில்லை. ஒரே முறை பயன்படுத்தப்படும் எண்ணை, செய்யப்படும் தரமான பொருள், செய்யும் பக்குவம் உள்ளிட்ட காரணங்களாலே செட்டிநாடு பலகாரம் தாங்குகிறது. பனியாரம், பால்பனியாரம் உள்ளிட்ட சில பண்டங்கள் மட்டுமே விரைவாகக் கெடும் தன்மை கொண்டது. "முறுக்கு, அதிரசம், சீடை, சீப்பு சீடை, இனிப்பு சீடை, சின்ன சீடை, கை முறுக்கு, தேன் குழல், மாவுருண்டை, மணக்கோலம் உள்ளிட்ட பல தின்பண்டங்கள் நீண்ட நாள்கள் தாக்குப்பிடிக்கும்.

சீப்புச் சீடை
சீப்புச் சீடை
சாய்தர்மராஜ்

கொண்டு செல்லும் பொட்டலங்களைப் பிரிக்காமல் வைத்திருந்தால் மொறு மொறுப்பு கூட குறையாது. தீபாவளி முடிந்தாலும் பலகாரத்தைச் சீர் பெற்ற புதுமண தம்பதிகளும் அவர்களின் உறவினர்களும் வைத்துச் சாப்பிட்டு அன்பை வெளிப்படுத்துவார்கள். செட்டிநாடு பலகாரத்திற்கு எப்போதும் தனி மவுசு உண்டு. காரைக்குடி பகுதியில் செய்யப்படும் உணவு உள்ளூர்களிலிருந்து வெளிநாடுகள் வரை கொண்டு செல்லப்படுகிறது. நீண்ட நாள்கள் கெடாமல் இருப்பதால் செட்டிநாடு பலகாரங்களைக் கொண்டு செல்கின்றனர். உடலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுத்தாமல் மாறாக சுவையையும் ஆரோக்கியத்தையும் தரும். காரைக்குடி பகுதியில் செய்யப்படும் உணவு உள்ளூர்களிலிருந்து வெளிநாடுகள் வரை கொண்டு செல்லப்படுகிறது" என்றார்.

காரைக்குடி, கோட்டையூர், கானாடுகாத்தான், பள்ளத்தூர் செட்டிநாடு பகுதியில் செட்டிநாட்டுப் பலகாரம் அதிகளவு செய்யப்படுகிறது. காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதி பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பாய் அமைகிறது.

சின்ன சீடை
சின்ன சீடை

செட்டிநாடு பகுதியில் கிடைக்கும் தண்ணீர் சுவையில் முக்கியத்துவத்தைக் கொடுப்பதாக நம்புகிறார்கள். புதுமண தம்பதிகளின் தலை தீபாவளியை செட்டிநாடு பலகாரத்தோடு பாரம்பர்யமாகக் கொண்டாடுகிறார்கள் என்பதே நிதர்சனம். தீபாவளி முடிந்தாலும் அவர்கள் செய்த பலகாரம் விரைவாகத் தீர்ந்து போவதில்லை என்பதே உண்மை.